இலங்கையில் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, அனைத்து இன மாணவர்களும் எல்லா இனத்தவர்களதும் புனித ஸ்தலங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அண்மையில் பதுளை, கத்தோலிக்கத் திருச்சபையின் பாதிரியார் திரு.பிரியலால் அவர்களுடனான கலந்துரையாடலின் போது இலங்கையில் கல்வித் திட்டத்தில் நடைமுறையிலுள்ள பல விடயங்கள் குறித்து அவர் தெளிவுபடுத்தினார்.
நாம் காண்பதைத் தாண்டியும் ஏதோவொன்று எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறதென்பதை பாதிரியாரின் கருத்திலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது. அதாவது தமிழ் மொழி மூல மாணவர்கள் பௌத்த விகாரைகளை வழிபட வருவதென்பது கல்விச் சுற்றுநிருபம் மூலம் உருவாக்கப்பட்ட பலவந்தமான கட்டளையொன்றின் பிரதிபலன் எனலாம். வெசாக் உற்சவ வாரத்தினை முன்னிட்டு அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு, பௌத்த மத வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்படி சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டிருந்தன. எமது அரசியல் அதிகாரங்கள், பலவந்தமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் உருவாக்க முற்படும் இவ்வாறான சில நியமங்களின் காரணமாகவே, மத ஒற்றுமைக்கும் இன ஒருமைப்பாட்டுக்குமிடையில் விரிசல்களும், குழப்பங்களும், தடைகளும் ஏற்படுவதாக பாதிரியார் கூறுகிறார்.
மேலும் தற்காலத்தில் மத நல்லுறவு எதிர்நோக்கியிருக்கும் பிரதானமான சிக்கலென பாதிரியார் குறிப்பிடுவது, ஆட்சி அதிகாரங்கள் மீது பேராசை கொண்ட சிலரால் 'பலசேனா'க்கள் நிறுவப்பட்டு, மத நல்லுறவுக்கு சவால் விடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சினைகளை உண்டுபண்ணுவதாகும். 'We have a right to our own religion'. எமது மதத்தைப் பின்பற்ற எமக்கு உரிமை இருக்கிறது. அவ்வாறே அடுத்தவருக்கும் இதே உரிமைகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து அனைவரும் ஏனைய மதங்களையும் கௌரவமாக நடத்துவரெனில் இங்கு எந்தப் பிரச்சினைகளும் எழாது.
முன்னாள் ஜனாதிபதி டீ.பீ. விஜேதுங்க கூறிய ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது. 'பெரும்பான்மை இனமென அழைக்கப்படும் சிங்களவர் எனும் மரத்தை, சிறுபான்மை எனப்படும் ஏனைய இனத்தவர்கள் கொடி போல பற்றிக் கொண்டு வாழ வேண்டும்.' அழகான உவமைகள் கொண்டு சொல்லப்பட்ட வாக்கியமாக இது மேம்போக்காகத் தோன்றிய போதிலும், அதனுள்ளேயிருக்கும் அர்த்தமானது, சிறுபான்மையினரை ஒடுக்கும், அவர்களது சுதந்திரத்தையும் உரிமைகளையும் அடக்க முயலும் சிங்களவர்களது அபிப்பிராயங்களையே பிரதிபலிக்கிறதெனக் கூறலாம்.
அத்தோடு பாதிரியார் அவர்கள், இலங்கைக் கல்வித் திணைக்களத்தால் 7 ஆம் தரத்துக்கான சிங்களப் பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ள ஒரு வாக்கியத்தை உதாரணமாகக் குறிப்பிட்டார்.
'தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள்' என்பதே அது.
கல்வித் திணைக்கள அதிகாரிகளது கவனத்தைத் தாண்டி இவ்வாக்கியம் எவ்வாறு இடம்பெற்றது? எந்த நோக்கத்தில் புத்தகத்தில் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை எனினும் இவ் வாக்கியத்தின் உட்கருத்து பல அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது அல்லவா?
*பொதுவாகவே தமிழச்சிகள் அழகானவர்களில்லை.
* ஸ்ரீதேவி அழகானவள் என்பதற்காக மட்டுமே அவளை நேசிக்கலாம்.
* அழகற்ற தமிழச்சிகள் மத்தியில் ஸ்ரீதேவி தப்பிப் பிறந்தவள்.
போன்ற பல தப்பபிப்ராயங்களை சிங்கள மாணவர்களுக்குப் புகட்டுவதற்கு இவ்வரி காரணமாக அமையக் கூடும். இவ்வாறாக பல வரிகள் எல்லாப் பாடப் புத்தகங்களிலும் மறைமுகமாக ஒளிந்திருக்கலாம். இதனைச் செய்பவர்களது நோக்கம் என்ன?
அரசாங்கமானது விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துப் பெற்ற வெற்றியை, அதாவது ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி கொண்டாடப்படும் இவ்வெற்றியை, தற்போது தமிழர்களைத் தோற்கடித்துப் பெற்ற வெற்றியாகக் கொண்டாட சிங்களவர்கள் தூண்டப்பட்டிருக்கிறார்கள். நாடுமுழுவதும் கொண்டாடப்பட்ட இராணுவ வீரர்கள் தினமானது 'சிங்களவர்களது தின'மாக அர்த்தப்படுத்தப்படுவதானது ஆறி வரும் காயத்தினை மீண்டும் மீண்டும் கீறுவதற்கு ஒப்பானதன்றி வேறென்ன?
தகவல் உதவி - சமபிம
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.