மகிந்த இராசபக்சேயின் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க தமிழ் வாக்காளர்களுக்கு ஒராயிரம் காரணங்கள் உள்ளன!
வட மாகாண சபைத் தேர்தலுக்கான நாளை தேர்தல் ஆணையாளர் நீண்ட காத்திருக்குப் பின்னர் அறிவித்துள்ளார். தேர்தல் எதிர்வரும் செப்தெம்பர் மாதம் 21 ஆம் நாள் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டாலும் தேர்தல் அறிவித்த படி நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காவல்துறை, காணி அதிகாரங்களை நீக்கும் வரை அரசு வட மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாது என வலியுறுத்தியும் 13 ஆவது சட்ட திருத்தத்தையிட்டு இந்தியாவின் தலையீட்டுக்கு எதிராகவும் சிங்கள மக்களை அணிதிரட்டி, கொழும்பில் பெரும் போராட்டங்களை சிங்கள தேசியவாத அமைப்புகள் நடத்தி வருகின்றன. வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதை எதிர்த்து சிங்கள தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்றம் தேர்தல் நடைபெறுவதற்கான நாளை ஒத்திப் போடலாம்.