"வட கிழக்கில் வாழும் தமிழ்மக்களது அரசியல் மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) 1990 இல் இருந்து இயன்றளவு உதவி வழங்கி வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தாயக மக்களது வாழ்வாதாரங்களை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அவர்களை மீண்டும் தங்கள் சொந்தக் காலில் நிற்க வைக்க வேண்டும். போர் காரணமாக வட கிழக்கில் கணவர்களை இழந்த 89,000 கைம்பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்" இவ்வாறு ததேகூ(கனடா) இன் இரண்டாவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் மருத்துவர் வி. சாந்தகுமார் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார். ஆண்டுப் பொதுக் கூட்டம் கடந்த பெப்ரவரி 23 காலை 11.00 மணி தொடக்கம் பிப 1.00 வரை ஸ்காபரோ பொது மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து பேசுகையில் "எமது அமைப்புக்குள் இளைஞர்களை உள்வாங்க வேண்டும். பல்கலைக் கழக மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். தமிழின விடுதலைப் போராட்டத்துக்கு நீண்ட கால - 60 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு. அவற்றை எமது இளைய தலைமுறையினரும் படித்து அறிந்து கொள்ள வழிவகைகள் செய்ய வேண்டும். மேலும் கனடா, பிரித்தானியா போல் வெளிநாடுகளில் ததேகூ இன் ஆதரவு அமைப்புக்களை உருவாக்க வேண்டும் " எனக் குறிப்பிட்டார்.
ஆண்டறிக்கை, ஆண்டு நிதி அறிக்கை வாசிக்கப்பட்டு ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
முகாமைத்துவ குழுவுக்கு கீழ்க் கண்டோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் - மருத்துவர் வி. சாந்தகுமார்
துணைத் தலைவர்கள் - திரு வீர. சுப்பிரமணியம், திரு வி.எஸ். துரைராசா
செயலாளர் - திரு சண். கதிரவேற்பிள்ளை
துணைச் செயலாளர் - திரு மு. தியாகலிங்கம்
பொருளாளர் - திரு சி.துரைராசா
காப்பாளர் - திரு. வே. தங்கவேலு
முகாமைத்துவ உறுப்பினர்கள் - 10 பேர்
ஆண்டுப் பொதுக் கூட்ட இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
(1) கடந்த ஆண்டு செப்தெம்பர் 21 ஆம் நாள் வட மாகாணசபைக்கு நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றிபெற வைத்த தமிழ் வாக்காளர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
(2) வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற ஆதரவு நல்கிய கனடிய அமைப்புக்கள், ஆதரவாளர்கள், ஊடகங்கள், பொது மக்கள் அனைவருக்கும் ததேகூ (கனடா) தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
(3) தமிழர் தாயகமான வட - கிழக்கில் வாழும் தமிழ் மக்களது வாழ்விடங்களையும் காணிகளையும் இராணுவம் அடாத்தாக சுவீகரித்து வருகிறது. அப்படிச் சுவீகரித்த நிலத்தில் இராணுவம் பாரிய தளங்கள், இராணுவ குடியிருப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள், உல்லாச விடுதிகள், விளையாட்டுத் திடல்கள், நெற்செய்கை, பழத்தோட்டங்கள், விகாரைகள் போன்றவற்றை நிறுவியுள்ளது. தொடர்ந்து நிறுவி வருகிறது. இவை தமிழ்மக்களது குடிப்பரம்பலை மாற்றி அவர்களது இருப்பைக் கேள்விக்குறியாக்கி வருகிறது.
குறிப்பாக
(அ) வலிகாம் வடக்கு - கிழக்கு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த 12,000 குடும்பங்களைச் சேர்ந்த 29,000 மக்கள் 23 ஆண்டுகள் கழிந்தும் ஏதிலிகளாகவே வாழ்கிறார்கள். அவர்களுக்கு சொந்தமான 6,382 ஏக்கர் காணியை சிங்கள இராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்தக் காணிப் பறிப்பால் தலைமுறை தலைமுறையாக தங்கள் சொந்த வீடுவாசல்களில் வாழ்ந்த மக்கள் நடுத்தெருவில் ஏதிலிகளாக விடப்பட்டுள்ளார்கள்.
(ஆ) மூதூர் கிழக்கு சம்பூர் பகுதியில் 2006 ஆம் ஆண்டு சிங்களப் படையெடுப்பின் போது இடம்பெயர்ந்த மக்களில் 1,400 தமிழ்க் குடும்பங்கள் இந்நாள் வரை மீள் குடியமர்த்தப்படவில்லை. அந்தப் பகுதி மக்களுக்கு சொந்தமான 15,000 ஏக்கர் காணி அரசினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
இப்படியான மண்பறிப்பைத் தடுத்து நிறுத்தவும் இழந்த காணிகளை மக்களுக்கு மீளப் பெற்றுக் கொடுக்கவும் ததேகூ காத்திரமான பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என ததேகூ(கனடா) கேட்டுக் கொள்கிறது.
(4) வட மாகாணசபையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களது வாழ்க்கைத்தரத்தைக் குறுகிய காலத்துக்குள் உயர்த்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பெரிய முதலீட்டில் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு காத்திருக்காமல் சிறிய முதலீட்டில் வீட்டுத் தோட்டம், கோழிப் பண்ணை, நல்லின ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, சிறு கைத்தொழில்கள் போன்றவை ஊக்கிவிக்கப்பட வேண்டும் என ததேகூ (கனடா) கேட்டுக்கொள்கிறது.
(5) ததேகூ, வட மாகாண சபை மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் ஆகியோருக்கு கடந்த காலம் போல் எதிர்காலத்திலும் ததேகூ (கனடா) இன் ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்ளுகிறது.
செயலாளர் திரு சண். கதிரவேற்பிள்ளை நன்றியுரை கூறினார்.
அனுப்பியவர்: நக்கீரன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.