செய்தி.காம்: மே 18ல் நாடுகடந்த அரசு - உலகத்தமிழர் பேரவையும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு உடன்பாடு! கூட்டறிக்கை.
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , உலகத் தமிழர் பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள் ஆகியோர் , இவ்விடயம் தொடர்பில் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர். ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் கடந்த 13, 14 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்க்கோ நகரில் ஒன்றுகூடி, பல விடயங்களை விரிவாக ஆராய்ந்ததோடு சில உடன்பாடுகளையும் எட்டியுள்ளனர் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.