அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன். ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை, மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று. எனது விடுமுறையில் இலங்கை வந்து தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர். மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும், சில நண்பர் மூலமாக கோரப்பட்ட உதவிகளை ஆராய்வதற்காகவும், நகரத்திற்கப்பால் எம்மவர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்பதை அறியும் ஆவலும் என்னை இங்கு அழைத்துவந்திருந்தது. ஆனால் விதிவசமாய் நான் சந்தித்த, புனர்வாழ்வு பெற்ற ஒரு சில முன்னாள் போராளிகளிகள் மற்றும் மனிதர்களின் சோகம் என்னை கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.
*விபச்சாரம் செய்யும் முன்னாள் பெண்போராளிகள்,
*ஏழ்மையினால் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கமுடியாது முகாம்களில் தவிக்கும் முதுகெலும்பு பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி,
*தொடைக்கு மேற் பகுதியுடனேயே காலை இழந்து மனைவிகுழந்தைகளை காப்பாற்றுவதற்காக வீதியோரத்தில் சுண்டல் விற்கும் முன்னாள் போராளி,
*திருமணமாகி பத்தே மாதத்தில் கடல் மோதலொன்றில் காணாதுபோன கேர்ணல் தரத்திலான தனது கணவன் இன்னும் உயிருடன் இருப்பார் என்னும் நம்பிக்கையுடன் தனது 4 வயதுப் பெண்குழந்தையுடன், வாழ்வாதாரம் இன்றி தம்பி தங்கையுடன் முகாமில் தவிக்கும் முன்னாள் பெண் போராளி்,
*இரு கைகளையும் தோள்மூட்டு்ன் இழந்த தனது முன்னாள் போராளியான மகனை பராமரிக்கும் வயதான தந்தை,
*இருகண்களையும் இழந்த முன்னாள் போராளி,
*குழந்தைப்போராளியாய் இயக்கத்தில் இணைக்கப்பட்டு இறுதிப் போரில் பெற்றோர் சகோதரர்களை இழந்த முன்னாள் போராளி
எனது கடந்த சில நாட்கள் இப்படியான சில மனிதர்களுடன் கடந்து போயிருக்கிறது. அவர்களின் கதைகளைக் கேட்டு கனத்துப்போயிருக்கிறது மனது. தன்னெதிரே துள்ளித்திரிந்த குழந்தையை அணைதவாறு அழும் பெண் போராளியிடம் ஆறுதலாக ஒரு வார்த்தையும் பேச முடியாது மௌனமாய் கடந்து போன கணங்கள் மிகவும் கொடுமையானவை. புனர்வாழ்வு பெற்றிருந்தாலும் அவர்களின் வாழ்வில் அமைதியில்லை மகிழ்ச்சி என்பது எள்ளளவும் இல்லை. எப்பொழுதும் கண்காணிக்கப்படுகிறார்கள். எவ்வித கொடுப்பனவுகளும் அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. தொழில் வாய்ப்புக்கள் குறைவு. கூலி வேலைகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. வயல் வேலைகள் அறுவடை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் குறைந்துள்ளது.
இவ்வாறு இருப்பவர்களிடம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துப்போகிறோம் என்று பணம் பிடுங்கும் மனிதர்களுக்கும் குறைவில்லை. அரசியல் பழிவாங்கல்கள், முன்பிருந்த இயக்கமோதல்கள், காட்டிக்கொடுப்புக்கள், பழிவாங்கல்கள் .... அப்பப்பா எப்படி இதையெல்லாம் கடந்து வாழ்கிறார்கள் என்று யோசிக்கத்தோன்றுகிறது. நான் சந்தித்திருப்பது ஒரு சிலரையே. இப்படியான போராளிகள் வடக்கு கிழக்கு எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.
2012 ம் ஆண்டிலும் மலசலகூடம், குடி நீர் வசதி இன்றி பல கிராமங்கள் இருக்கின்றன. வாகரைக்காடுகளில் உள்ள வேடுவர்களை சந்திக்க அழைத்துபோகிறேன் என்றிருக்கிறார் அவர்களுடன் தொடர்புடையவர் ஒருவர். கோயில் கொடுப்பனவாகிய 1500,- ரூபாயுடன் 20 குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஒரு ஆசிரியை, 350 ரூபாய் வருமானத்திற்காக ஒரு நாள் முழுவதும் விறகு பொறுக்கி, பல மைல்கள் சைக்கிலில் பயணித்து விறகு விற்பனை செய்யும் 70 வயது கடந்த முதியவர், பாவனையில் இல்லாத பழைய வீதிகளில் இருக்கும் கருங்கட்களை கல்லாலும், கைகளாலும் தொண்டி எடுத்து தனது மூன்றாவது மகளுக்கு திருமணம் நடாத்த முற்படும் ஒருவர், இவர்களை சந்தித்த போது வெட்கித் தலைகுனிந்திருந்தேன் புலம்பெயர்ந்த தமிழனாய். நாம் என்ன செய்திருக்கிறோம் இவர்களுக்கு? மனம் பொறுக்காது சில நண்பர்களிடம் அவசர உதவி தேவையானவர்களை அறிமுகப்படுத்தி அவர்களை நேரடியாகவே உதவுங்கள் என்று கேட்டுக்கொண்ட போது உடனேயே உதவிக்கரங்களை நீட்டிய நெஞ்சங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை என்னிடம். மக்கா ... ஊருக்கு போனன் அங்க ஒரு பிரச்சனையும் இல்லை என்று அறிக்கைவிடும் அறிவுஜீவிகளே!!
முக்கிய பெரு வீதிகளுக்கும், மாடிவீடுகளுக்கும் அப்பால் வாழ்பவர்களையும் சென்று அவர்களுடன் பேசி, உறவாடிப்பாருங்கள், அவர்களின் உயிரோசை உங்களுக்குக் கேட்கலாம்.