11 ஆகஸ்ட், 2012 - மட்டுப்படுத்தப்பட்ட முறையிலேயே டெல்ருக்ஷனின் இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், யாழ் மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அவை மத அனுட்டானங்கள், இரங்கலுரைகள், பெருமளவு மக்கள் கலந்துகொண்ட இறுதி ஊர்வலம் என்பவற்றுடன் அவரது சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் பாஷையூரில் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு பொலிசார் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தனர். றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தபோது டெல்ருக்ஷன் இரு தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார். வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையடுத்து, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் சிலர் கைகால் முறிந்த நிலையில் றாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களில் கணேசன் நிமலரூபன் மற்றும் மரியதாஸ் நேவிஸ் டெல்ருக்ஷன் ஆகிய இருவரும் வேண்டுமென்றே அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பல தரப்பினரும் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.
இது தொடர்பில் சிறப்பு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், இத்தகைய மரணங்களைத் தடுப்பதற்குத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றும் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு உரையாற்றிய பலரும் தெரிவித்துள்ளனர்.
டெல்ருக்ஷனின் இறுதிக்கிரியைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய முன்னணி, தமிழர்விடுதலைக்கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மூலம்: http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/08/120811_dilrukshanfuneral.shtml