பி.பி.சி: இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேறியது
- 22 மார்ச், 2012 - இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மனித உரிமை கவுன்சிலில் மொத்தமாக உள்ள 47 உறுப்பினர்களில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. எதிராக 15 நாடுகள் இலங்கையை ஆதரித்திக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கின்றன. அமெரிக்காவின் பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டுமென்ற பிரச்சாரத்திலும் பேச்சுவார்த்தைகளிலும் இலங்கையின் பிரமுகர்கள் கடந்த பல வாரங்களாகவே தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், பிரேரணை நிறைவேறத் தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கையாக 24 நாடுகள் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரித்திருக்கின்றன.