அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இவ்விழாவுக்காக இலங்கையிலிருந்து எழுத்தாளரும் ' ஞானம்' இதழின் ஆசிரியருமான மருத்துவர் தி. ஞானசேகரன், மொழிபெயர்ப்பாளரும் இலக்கிய ஆர்வலருமான திரு. மடுளுகிரியே விஜேரத்தன ஆகியோர் வருகை தருகின்றனர். எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி (06-05-2017) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மெல்பனில் விழா நடைபெறும் இடம்: Mulgrave Stirling Theological College Auditorium மண்டபம் ( 44-60, Jacksons Road, Mulgrave, Vic - 3170) அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடலாக எழுத்தாளர் விழா நடைபெற்றுவருகிறது.
கடந்த காலங்களில் மெல்பன், சிட்னி, கன்பரா, கோல்ட்கோஸ்ட் ஆகிய நகரங்களில் நடைபெற்றிருக்கும் தமிழ் எழுத்தாளர் விழா இந்த ஆண்ட, மீண்டும் மெல்பனில் சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெறவிருக்கிறது. குறிப்பிட்ட (மாநில) நகரங்களிலுமிருந்தும் சிலர் வருகைதரவுள்ளனர்.
சமீபத்தில் அல்லது முன்னர் தாம் படித்ததும் தமக்குப்பிடித்ததுமான ஒரு படைப்பிலக்கிய நூல் அல்லது மொழிபெயர்ப்பு, பயண இலக்கியம் முதலான துறைகளில் எழுதப்பட்ட ஒரு நூல் பற்றி பேசும் வகையில் வாசிப்பு அரங்கு நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. வாசிப்பு அரங்கிற்கு கலைஞரும் எழுத்தாளருமான திரு. மாவை நித்தியானந்தன் தலைமைதாங்குவார்.
இதுவரைகாலமும் இலங்கையில் தமிழிலிருந்து சிங்கள மொழிக்கும், சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பிலக்கிய நூல்கள் தொடர்பாகவும் மொழிபெயர்ப்பில் எதிர்நோக்கப்படும் சவால்கள் பற்றியும் இலங்கையின் பிரபல மொழிபெயர்ப்பாளரும் தமிழில் சரளமாகவும் சிறப்பாகவும் உரையாடக்கூடியவருமான இலக்கிய ஆர்வலர் திரு. மடுளுகிரியே விஜேரத்தின மொழிபெயர்ப்பு அரங்கில் உரையாற்றுவார்.
அத்துடன் படைப்பிலக்கியங்களில் மொழிபெயர்ப்பின் அவசியம் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறும். சிங்கள - தமிழ் மட்டுமன்றி இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் வெளிவரும் மொழிபெயர்ப்பு இலக்கியப்படைப்புகள் குறித்தும் இந்த அரங்கில் கலந்துரையாடப்படும்.
இலங்கையில் தொடர்ச்சியாக தங்கு தடையின்றி ஞானம் கலை, இலக்கிய மாத இதழை வெளியிட்டுவரும் அதன் ஆசிரியரும் எழுத்தாளருமான மருத்துவர் தி. ஞானசேகரன் " ஈழத்து இலக்கியத்தின் இன்றைய நிலை" என்னும் தலைப்பில் உரையாற்றுவார். ஆயிரம் பக்கங்களில் வெளியாகியிருக்கும் 'ஞானம்' 200 ஆவது சிறப்பிதழும் இவ்விழாவில் அறிமுகப்படுத்தப்படும்.
எழுத்தாளர் விழா நிகழ்ச்சிகள் ஆவணப்படக்காட்சியுடன் நிறைவடையும். இம்முறை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பற்றிய ஆவணப்படம் காண்பிக்கப்படும்.
அவுஸ்திரேலியாவிலும் இலங்கையிலும் தமிழகத்திலும் சமீபத்தில் வெளியான நூல்களும் இவ்விழாவில் விற்பனைக்குக் கிடைக்கும். இவ்விழாவை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு செயற்குழு ஏற்பாடு செய்துள்ளது. அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இணையத்தளம்: www.atlasonline.org
தகவல்: முருகபூபதி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.