இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சியையும், குறிப்பாக அவ்விலக்கியத்தின் மக்கள் சார்பு ஆழ அகலப்பாட்டை வற்புறுத்தி அதற்காக செயற்பட்டதில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு முக்கிய இடமுண்டு. அவ்வகையில் இலங்கையில் முற்போக்கு இலக்கியத்தின் பரிணாமத்திலும், அப்பரிணாமம் ஆழமாகவும் அகலமாகவும் வளத்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் மூத்த முற்போக்கு எழுத்தாளர்களிரொருவரவரும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முத்த உறுப்பினராக காவலூர் ராஜதுரை முக்கியமான ஒருவர். வாழ்விலிருந்து அந்நியப்படாமல் இவர் தீட்டிய சிறுகதைகள் சமூக முக்கியத்துவம் உடையவைகளாகும். யாழ்பாணத்தில் ஊர்காவற்துறையில் கரம்பன் என்னுமிடத்தில் பிறந்த இவர் தமது சமூகம் சார்ந்த செயற்பாடுகளினூடாக முழு இலங்கை சார்ந்த புத்திஜீவியாக ஆளுமையாக திகழ்ந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் நீண்டகாலம் பணியாற்றிய இவர் தமக்கு கிடைத்த வாய்ப்பையெல்லாம் முற்போக்கு இலக்கியத்தின் செழுமைக்காக பயன்படுத்தியவர். இவரது கதைகள் நாடகங்களாகவும் தொலைக்காட்சி நாடகங்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது காலங்கள் என்ற தொலைக்காட்சி நாடகம் மலையக மக்களின் வாழ்வை பின்னணியாகக் கொண்டது. பொன்மணி என்ற இலங்கைத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதுடன் அதன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.
அன்னாரின் மறைவையொட்டி, அவரது படைப்புகள் மீள் பதிப்புகள் செய்யப்பட்டு அவை மககள் மத்தியில் கொண்டு செல்லப்படல் வேண்டும். அதற்கு அப்பால் அவர் பற்றிய ஆய்வுகள் காய்த்தல் உவத்தலற்ற நிலையில் வெளிவர வேண்டியுள்ளது. அவ்வாய்வுகள் பின்வரும் நான்கு நிலைககளில் இடம்பெறல் காலத்தின் தேவையாக உள்ளது. பண்பாட்டுத் தளத்தில் அவரது செயற்பாடுகள் வியப்பை அளித்த போதினும் அவர் மீதான வழிபாட்டுணர்வுக்கு இடந்தராமல் விமர்சித்து விளக்குவதே சமூக பயன்மிக்க அம்சமாக காணப்படும். அதேசமயம் அன்னாரின் ஒவ்வொரு துறைசார்ந்த பங்களிப்புகளும் பண்முக நோக்கில் வெளிக் கொணரப்படல் அவசியமானதாகும். அவ்வாய்வுகள் பின்வரும் நான்கு நிலைகளில் இடம்பெற வேண்டும். முதலாவது, காவலூர் ராஜதுரையை பல்துறைநோக்கில் அணுகி ஆராய்பவையாக இருத்தல் வேண்டும். சமூகவியல் நோக்கில் காவலூர் ராஜதுரையின் சமூக முக்கியத்துவம் வரலாற்றுக் கதியில் அவரது சிந்தனைகளும், போதனைகளும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்து ஆராய்தல் இதன் பாற்படும். இரண்டாவது, காவலூர் ராஜதுரையை பின்பற்றி எழுந்த மரபு அவரை பின்பற்றியும் அவரை மீறியும் எவ்வாறு வளர்ந்துள்ளது என்ற நோக்கில் ஆராயப்படல் வேண்டும். மூன்றாவது, வரலாற்றுப் பின்னணியில் காவலூர் ராஜதுரையை மதிப்பிடுதல் முக்கியமானவையாகும். நான்காவதாக காவலூர் ராஜதுரைகுறித்து வெளிவந்த ஆய்வுகள், மதிப்பீடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது பற்றியதாக இருத்தல் வேண்டும். இதுவே இறந்த மனிதருக்காக நாம் ஆற்றும் உண்மையான அஞ்சலி என இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் தலைவர் லெனின் மதிவானம் அவர்களும். பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் அவர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.