- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
சவுக்கு மரங்கள்
கொடைக்கானல் நகரின் பள்ளத்தாக்குகளில் இருந்து, மேலெழும் குன்றுகள் வழியாக, மேலேறி, இப்போது பார்வைக்கு மிக சிறியதாய் தோற்றம் தரும், கையளவிலான ஏரியும் பார்வையை விட்டகல, பூம்பாறை பாதை சடுதியாக கீழிறங்க தொடங்கும். பாதையின் இரு மருங்கிலும் அடர்ந்திருக்கும் சவுக்கு மரங்கள் பஸ் ஏதோ ஒரு சோலைக்குள் செல்வது போன்ற பரவச நிலையை உண்டு பண்ணும்.
சவுக்கு மரங்களோ, சூரிய ஒளியை மண்ணில் விழாதவாறு காப்பதற்கு திடசங்கற்பம் பூண்டவை போன்று, தமது கிளைகளாலும் வாதுகளாலும் ஒன்றையொன்று நெருக்கமாக பிண்ணி பிணைந்து விழும் சூரிய கதிர்களை தடுத்து, அம் முயற்சியின் வெற்றி களிப்பில், தலையை மெல்ல மெல்ல ஆட்டி, வீசும் காற்றில் புன்னகைப்பன – தத்தமது வெளிர் நிற மஞ்சள் மலர்களோடு.
சூரிய ஒளி படாததாலோ என்னவோ, அடர்ந்திருக்கும் அந்த குட்டை குட்டை மரங்களின் கீழ் காணப்படும் தரையும், அந்நிழலுக்கே ஏற்ற ஓர் கரிய நிறத்தில், கீழே கிடக்கும் சவுக்குகளின் உதிர்ந்த ஒடுங்கிய சவுக்கு இலைகளுடன், கரிய மெத்தை கிடப்பது போன்ற உணர்வினை பார்ப்பவர்க்கு தோற்றுவிக்கும்.
காலை நீட்டி “அப்பாடா” என்று இந்த கரிய கரிய மொரமொரப்பான மெத்தைகளில் படுத்து, வீசும், இந்த அருமையான சில்லிட்ட காற்றை உள்ளிழுத்து கிடந்தால் எவ்வளவு சுகமாயிருக்கும் என்பது போன்ற யோசனைகள் எல்லாம் மேலெழ, பஸ்ஸோ விரைந்து விரைந்து அந்த ஒடுங்கிய பாதையில், சவுக்கு மரங்களின் கிளைகள் சில சமயங்களில் பஸ் ஜன்னல்களை பலமாக தேய்த்து உரசி பெரும் சப்தம் எழுப்ப – படி படியாய் கீழ் இறங்கி சென்றுக்கொண்டிருக்கும், வளைந்து வளைந்து.
ஒரு வளைவில், ஒடித்து திரும்பும் போது, மலையடிவாரம் சார்ந்த ஓர் குன்றின் சரிவில் கிட்டத்தட்ட ஓர் வெட்டவெளி பொட்டலில் என்று கூட சொல்லலாம், அமைந்து கிடந்தது பூம்பாறை என்னும் அந்த மிக சிறிய நகரம். பெட்டி விடுகள். சிறிய சிறிய பெட்டி கடைகள். ஒரு கோயில், அதில் அலறும் ஒரு ஒலிப்பெருக்கி – போக, பஸ் நிறுத்தம் அப்படி இப்படி என்று ஏதும் இங்கு இருப்பதாக இல்லை. தேனீரோ சாப்பாடோ இந்த சிறிய பெட்டி கடைகளே தஞ்சம்.