வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' பற்றிய முனைவர் சு.குணேஸ்வரனின் உரை!
அஞ்சலி: கலை, இலக்கிய, சமூக நேசர் மருத்துவர் வாமதேவன் விடைபெற்றார்! - முருகபூபதி -
“ சொர்க்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா…?
அட என்னாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடாகுமா…?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா…? “
இந்தப்பாடலை கேட்டிருப்பீர்கள். கடந்த 28 ஆம் திகதி வடபுலத்தில் தெல்லிப்பழையில் தமது 99 வயதில் மறைந்த எமது கலை, இலக்கிய சமூக நேசர் மருத்துவர் தம்பிப்பிள்ளை வாமதேவன் அவர்களின் இறுதிநிகழ்வையும் அவரது இறுதி யாத்திரையையும் அவுஸ்திரேலியாவிலிருந்து காணொளி ஊடாக பார்த்துக்கொண்டிருந்தபோது, கண்ணீர் மல்க குறிப்பிட்ட அந்தப்பாடலைத்தான் நினைத்துக்கொண்டேன். அன்பர் வாமதேவன் எனது நீண்ட கால நண்பர். எனக்கு மட்டுமல்ல, இலங்கையில் கலை, இலக்கியம், ஊடகம் சார்ந்து இயங்கிய பலருக்கும் அவர் நல்ல நண்பராகவே திகழ்ந்தவர். மருத்துவர் வாமதேவன் மறைந்தார் என்ற துயரச்செய்தியை எமக்கு முதலில் தெரிவித்த கலை, இலக்கிய ஆர்வலர் நவரத்தினம் இளங்கோ அவர்களும் அன்னாரின் நெருங்கிய நண்பர்தான்.
வாமதேவன் தமது இளமைக்காலத்தில் மருத்துவம் படித்து மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று M R C P பட்டத்துடன் திரும்பியவர். அவர் நினைத்திருந்தால், இங்கிலாந்திலோ அல்லது வேறு மேலைத்தேய நாடுகளிலோ தமது மருத்துவத்துறையில் பணிகளை மேற்கொண்டு, தமது குடும்பத்தினரையும் அழைத்து வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவர் தமது ஊரான தெல்லிப்பழையிலிருந்து மருத்துவம் படிக்கச்சென்றபோது, அவரது தாயார் கூறிய அறிவுரையை கேட்டு, அதன்பிரகாரம் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். தான் கற்கும் மருத்துவம் மக்களின் சேவைக்குத்தானேயன்றி, தனியார் துறை மருத்துவமனைகளுக்கு அல்ல, என்ற மனிதநேயச்சிந்தனையுடன் அரச பொது மருத்துவமனைகளிலேயே இறுதிவரையில் நலிவுற்ற மக்களுக்காக பணியாற்றினார். அவரது புதல்விகள் இருவர் அவுஸ்திரேலியாவில் இரண்டு மாநிலங்களில் வசிக்கின்றனர். இறுதியாக அவர்களிடம் கடந்த ஆண்டு வந்தவர், தனது எஞ்சியிருக்கும் காலத்தில் ஊரோடு சென்று வாழவே விரும்புவதாக கூறி விடைபெற்றுச்சென்றார். இப்போது அவரது விருப்பத்தோடு, 99 ஆண்டுகாலம் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து நினைவுகளை எமக்கு தந்துவிட்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.
ஓவியர் 'செள' - ஒரு படைப்பாளியின் கதை! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
" இதை கொஞ்சம் பாருங்க..... எப்படி இருக்கு?"
"ச்சா! சோக்கா இருக்கு..... ஆச்சிய இன்னும் கொஞ்சம் வயசானவராக கீற முடியுமோ?"
"ஓ! அதுக்கென்ன..... ஏலும்."
சில கிறுக்கல்களில் பின்
"இப்ப இதை பாருங்க..... சரிதானே?"
"அட, இதுதான் என்ர ஆச்சி!"
"ஆச்சி பயணம் போகிறாள்" கதைக்கான கேலிச்சித்திரம் வரைவது பற்றி ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியானுக்கும் ஓவியர் "செள" என அழைக்கப்படும் கருணாகரன் செளந்தரராஜாவிற்கும் இடையே நடந்த உரையாடல் இது! இந்தப் புள்ளிதான் இரு படைப்பாளிகளின் எண்ணங்களும் சங்கமிக்கும் இடம். எழுத்தும் ஓவியமும் இலக்கியத்தின் இரு கண்கள். அவை ஒரு காட்சியை ஒருமித்து காணும் போது ஒரு தேடல் அங்கே நிறைவடைகிறது. ஒரு காட்சியைப் பற்றி படித்ததும் ஓவியன் மனதில் பதியும் சுவடுகளே அவன் வரைய இருக்கும் ஓவியத்தின் ஊற்றுப்புள்ளி. அருவம் உருவமாகும் உருமாற்றத்தின் முதல் படி இது. இங்கு எவரும் தம் படைப்புகளின் மேல் பீடமிட்டு அமர்வதில்லை. இரு கலைகளும் சமதரையில் சந்திக்கும் ஒரு ஞானநிலை அது! இது ஒன்றும் புதிதல்ல. ஒரு கவிஞனும் இசையமைப்பளனும் இந்தப் புள்ளியில் சந்திக்கும் போது ஒரு கானம் பிறக்கிறது. கவிஞனின் கருத்துள்ள பாடல் வரிகள். அவ்வரிகளுக்கு வழிவிடும் இன்னிசை. மமதைகள் விடைபெறும் இடம் இது! கர்வம் இங்கு கடை விரிப்பதில்லை!
வ.ந.கிரிதரனின் கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் – ஒரு பாா்வை! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
- ஜீவநதி வெளியீடான வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' பற்றி எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்பிரமணியத்தின் பார்வையிது. - பதிவுகள்.காம்-
அதிர்வுகளையும் திடீர் பாய்ச்சல்களையும் அதிகம் தராத, ஆனால் உணர்வுகளை ஊடுருவும் வார்த்தைகளைக் கொண்டு, புலம் பெயர்ந்த மனிதர்களின் மனப் போராட்டங்களைக் கூறும் செம்மையான படைப்பாக, வ.ந.கிரிதரனின் கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பினை இனம் காணலாம்.
புலம் பெயர்ந்த முதலாம் தலைமுறையினரின் உள்ளத்து உணர்வுகள் சிக்கலானவை. புதிய தாயகத்தில் காலூன்றித் தலையெடுக்கவும் கலாசார முரண்பாடுகளை எதிர்கொள்ளவும், மொழிவழக்கினை அறிவதற்கும், தனக்கோர் அடையாளத்தை நிலை நிறுத்துவதற்குமான முயற்சிகள் மிகமிகக் கடினமானவை. புலம்பெயராத வாசகர் ஒருவரால் இவற்றை உள்ளபடி உணர்வது சிரமமானது. எனினும் அந்த இலக்கினைப் படைப்பாளி வெற்றிகரமாக எட்டியுள்ளார் என்றே கூறலாம். புலம் பெயர்வாளனாகவும், அவனை உற்று நோக்கும் வேறொரு மனிதனாகவும் எதிர்நின்று தன் புதிய தாயகத்தின் உள்ளக பரிமாணங்களை, இழந்த தாயகத்துடன் எடைபோடும் அணுகுமுறையில் வாசகருக்குப் புதியதோர் வாசலைத் திறந்து விட்டிருக்கிறார் கதாசிரியர்.
சம்பவக் கோர்வைகளால் கதைகளின் போக்கை நிர்ணயிக்காமல், உணர்வுகளின் மிகச்சிறிய இழைகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட இருபத்தேழு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பு, ஜீவநதி பதிப்பகத்தின் 194 ஆவது வெளியீடாகும்.
கனடாவின் டொராண்டோ மாநகரத்தின் பெருவீதிகளில், தனக்குள் தத்துவார்த்த விசாரணைகளையும் விசாரங்களையும் நடாத்திக் கொண்டு, புலம்பெயர்ந்த பல்தேச மனிதர்களைத் தன் பயணப்பாதை எங்கும் காணும், ஈழத்துப் புலம்பெயர்வாளர் ஒருவர் கதைகளின் நாயகனாகப் பாத்திரமேற்க, அவரை அகக்கண்ணால் பின்தொடரும் வாசகர் காணும் காட்சிகள் சிறந்ததோர் தளத்தில் சிந்திக்க வைக்கின்றன. கதைமாந்தர் உதிர்க்கும் தத்துவச் சாரல்களால் மனம் இடையிடையே சிலிர்த்து வியக்கிறது. வந்தேறுதேசத்தின் முதலாம் தலைமுறையினரின், ஆரம்பகால சோகங்களில் இடையிடையே எட்டிப் பார்க்கும் அங்கதம் சிறு புன்னகையுடனான ஆறுதலை தருகிறது.
வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத்தொகுப்பு பற்றிய குறிப்புகள்! - கே.எஸ்.சுதாகர் -
ஜீவநதி பதிப்பகம் வெளியீடாக வெளியான வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத் தொகுப்பு பற்றி , எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் எழுதிய குறிப்புகளிவை. - பதிவுகள்.காம்-
இத்தொகுப்பில் உள்ள பல கதைகளை (ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை, மான்ஹோல், பொந்துப்பறவைகள், கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள், சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!, சுமணதாஸ் பாஸ்….) ஏற்கனவே வாசித்துவிட்டேன். இருப்பினும் தொகுப்பாக ஒருங்கு சேர்ந்து பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
`மனைவி’ , `கணவன்’, `யன்னல்’ போன்ற கதைகளின் ஆரம்பப்பகுதிகளின் அழகிய வர்ணனைகளை மிகவும் இரசித்தேன். மனைவி சிறுகதை ஒரு தீர்க்கமான முடிவை எட்டாத போதிலும், கணவன் சிறுகதை மன நிறைவைத் தருகின்றது. மனைவி மீது சந்தேகம் கொள்ளும் கணவன், திடீரென்று மனம் மாறுவது வியப்பைத் தருகின்றது. ஆனாலும் நல்லதொரு முடிவைச் சொல்லியிருக்கின்றீர்கள்.
`மனித மூலம்’ சற்றே பொறுமையைச் சோதிக்க வைக்கின்றது. இந்தக் கதை மூலம் என்னத்தைச் சொல்ல வருகின்றீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. `மான்ஹோல்’ அற்புதமான கதை. மூன்று அகதிகளின் சங்கமம் என்று சொல்லலாம். மான்ஹோலில் மீது குடியிருக்கும் சாமியார் அனாதைப்பிண்மாக இறக்கும் தறுவாயில், `ஒன்றாரியோ பாராளுமன்றத்தில் இருந்து அவர்கள் சட்டங்கள் இயற்றிக் கொண்டிருக்கின்றார்கள்’ என அவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. `சுண்டெலி’ சற்றே நகைச்சுவைப் பாங்கானதாகவும், வலிந்து முடிவைத் திணிக்காமல், கதையின் போக்கிலேயே முடிவை விட்டுவிடுவதும் சிறப்பு. `பொந்துப் பறவை’ சிறுகதை இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது. தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை எடை போட முடியாது என்பதைச் சொல்கின்றது. அதுவும் அந்த `எடை போடுதல்’ தவறானது என்பதை சுயநலத்தின்பால் கதையின் நாயகன் கண்டுகொள்ளும்போது வெட்கம் கொள்வதும் காட்டப்படுகின்றது.
உக்ரைன் மீது ரஸ்யாவின் ‘கைப்பர்சோனிக் ஏவுகணைத்’ தாக்குதல்! - குரு அரவிந்தன் -
துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை எண்ணுவது போல, ரஸ்ய – உக்ரைன் யுத்தத்தில் நாட்களை எண்ண வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது, கனடாவில் அந்தந்த நாட்டு ரசிகர்கள் தங்கள் நாட்டுக் கொடிகளைத் தங்கள் வண்டிகளில் பறக்கவிடுவது சாதாரண நிகழ்வாக இருக்கும். ஆனால் இம்முறை உக்ரைன் கொடிகளைப் பறக்க விட்டபடி செல்லும் பல வண்டிகளை வீதிகளில் காணமுடிகின்றது. இன்றுடன் யுத்தம் ஆரம்பித்து 27 நாட்களாகிவிட்டன. ரஸ்யா தனது ஆயுதப் பலத்தை மேற்கு நாடுகளுக்குக் காட்டுவதற்காக 18 ஆம் திகதி பரிட்சார்த்தமாக உக்ரைனில் மேற்கே உள்ள டெல்யாரின் என்ற கிராமத்தில் இருந்த இராணுவ ஆயுதக் களஞ்சியத்தை ‘கைப்பர்சோனிக் ஏவுகணை’ மூலம் தாக்கி அழித்திருக்கின்றது. இந்த ஏவுகணை ஒலியைவிட 5 மடங்கு வேகம் கொண்டதால், இந்த ஏவுகணையைத் தாக்கி அழிப்பது கடினமானது. அமெரிக்காவிடம் தற்போது இருக்கும் பாதுகாப்பு ராடர்களால் இதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம் என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது போன்ற ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கக்கூடிய இரும்புக் கவசங்கள் கொண்ட 3 கப்பல்கள் அமெரிக்காவிடம் இருந்தாலும், இன்னும் அவை வெள்ளோட்டம் விடப்படவில்லை.
இத்தகைய ஏவகணைகளில் அணுவாயுதம் இணைக்கப்பட்டால், தடுத்து அழிக்க முடியாத நிலை ஏற்படலாம். சென்ற டிசெம்பர் மாதம் தங்களிடம் இத்தகைய ஆயுதங்கள் இருப்பதாக ரஸ்ய அதிபர் புதின் தெரிவித்திருந்தார். அது வெறும் வாய் வார்த்தை அல்ல என்பதைச் செய்கையிலும் காட்டி இருக்கின்றார். முதலாவது ஏவுகணைத் தாக்குதலை நம்பாதவர்களுக்காக இரண்டாவது தடவையாகவும் கருங்கடலில் உள்ள கப்பலில் இருந்து அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இத்தடவை உக்ரேனிய கவசவாகனங்களைப் பழுதுபார்க்கும் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகின்றது. உக்ரைனின் எரிபொ
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் - ஒரு பார்வை. - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
-
- அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத்தொகுப்பு பற்றிய எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினத்தின் பார்வை. -
வ.ந.கிரிதரன் எழுதிய இந்த புனைகதை தொகுதியில் 25 சிறுகதைகளும் 2 குறுநாவல்களும் அடங்கியுள்ளன. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்பது விட்டு வந்த நாட்டின் வேர்களை நோண்டிக் கொண்டிருப்பதல்ல என்பது மட்டுமல்லாமல் வாழும் நாட்டின் கிளைகளுடன் பின்னிப் பிணைத்து இலக்கியம் படைப்பதே எனும் கருத்தை கதாசிரியரின் ஒவ்வொரு கதையும் சொல்லிப் போகிறது.
'எங்கட ஆட்கள்' எனும் சிறு வட்டத்தை உடைத்து, வாழும் நாட்டின், ஒட்டுமொத்த சமுதாயமும் எப்படி வாழ்கிறது எனும் புரிதலுடன் ஜீவனுள்ள கதைமாந்தர்களை இக்கதைகளில் உலாவ விட்டிருக்கிறார் கிரிதரன்.
முடிவிலியில் கூட முட்டிக்கொள்ளாத கலாச்சார விரிசல்களிலும் சிக்கல்களிலும் மாட்டிக் கொண்டு வாழும் மானுடர்களை எமக்கு அறிமுகப்படுத்துகிறார் கதாசிரியர். மாற்று நாட்டானைப் பார்த்து சிரித்து அவனை சிறுமைப்படுத்தும் மேட்டிமைத்தனம் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது மட்டுமல்லாமல் ஊக்குவிக்கப்பட வேண்டியதொன்று.
"அலஸ்காவை தந்து விடு!!" - கிறிஸ்டி நல்வரெத்தினம் -
ரஷ்யாவின் யுக்ரேன் மீதான ஆக்கிமிப்பு வலுவடைந்து வரும் இந்நாட்களில் ரஷ்யாவின் தரப்பில் இருந்து விசித்திரமான அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இவற்றிற்கு மகுடம் வைத்தாற்போல் ரஷ்ய பாராளுமன்ற அரசியல்வாதியான ஒலெக் மட்வேச்சேவா (Oleg Matveychev) கடந்த வாரம் "அமெரிக்கா, முன்னர் ரஷ்யாவிற்கு சொந்தமாய் இருந்த, அலஸ்காவையும் கலிபோர்னியா மாநிலத்தின் ஃபோட் றொஸ் (Fort Ross) குடியிருப்பையும் ரஷ்யாவிற்கு மீழத் தர வேண்டும்" எனும் கோரிக்கையை விடுத்துள்ளார். இது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கெதிராக அமெரிக்காவிடம் இருந்து பரிகாரம் தேடும் முயற்சி என்பது இவர் வாதம். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினின் பக்தரான ஒலெக்கிடம் இருந்து இப்படி ஒரு அபத்தமான கோரிக்கை விடுக்கப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! ஆனால் அலாஸ்கா எப்போது ரஷ்யாவின் வசம் இருந்தது என்பதை கண்டறிவோமா? இதை முழுவதுமாய் புரிந்து கொள்ள ரஷ்ய பேரரசின் 1700க்கு முந்திய ஆதிக்க கட்டமைப்பை காலக்கண்ணாடியில் நோக்கியே ஆகவேண்டும்.
1639ம் ஆண்டு. கடல் நீர் நாய்களின், (sea otters and beavera) கம்பளி போன்ற மிருதுவான, தோலின் (உரோமங்கள்) மவுசு சீனாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் உச்சம் தொட்ட நாட்கள் அவை. இத்தோலினால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் செல்வந்தர்களின் அடையாளச் சின்னமாகின. இவை ரஷ்யாவின் சைபீரியா மற்றும் அலாஸ்கா பிரதேசங்களில் வாழும் இப்பிராணிகளை வேட்டையாடியே பெற்றுக்கொள்ளப்பட்டன.
முதலில் சைபீரியா பிரதேசத்தில் இப்பிராணிகளை அவற்றின் தோலுக்காக வேட்டையாடி கொன்று குவித்த பின் ரஷ்யர்களின் கவனம் 1740களில் அருகே உள்ள தங்கள் அலஸ்கா மாநிலம் பக்கம் திரும்பியது.
வாழ்த்துகள்: எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு இந்திய மத்திய அரசின் சாகித்ய அகாதமி 'பெல்லோஷிப்' விருது! - வ.ந.கிரிதரன் -
அண்மையில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு இந்திய மத்திய அரசின் சாகித்ய அகாதமி 'பெல்லோஷிப்' விருது கிடைத்துள்ளது. வாழ்த்துகள். தனது 91 ஆவது வயதிலும் எழுதிக்கொண்டிருக்கின்றார். 'அமுதசுரபி' மற்றும் 'கணையாழி' சஞ்சிகைகளில் இவரது பக்கங்கள் தொடர்கின்றன. அவருக்கு என் வாழ்த்துகள்.எனக்கு என் பால்ய காலத்து வாசிப்பின் போது அறிமுகமான எழுத்தாளர்கள் பலர். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், இந்திரா பார்த்தசாரதி, நா.பார்த்தசாரதி, அகிலன், கல்கி, சாண்டில்யன், பி.வி.ஆர், அநுத்தமா, லக்சுமி, ர.சு.நல்லபெருமாள், உமா சந்திரன், ஜெகசிற்பியன், ஶ்ரீ வேணுகோபாலன்.. ... என்று பலர் அறிமுகமானது அப்பருவத்தில்தான். இந்திரா பார்த்தசாரதி முதன் முதலில் அறிமுகமானது அவரது சிறுகதையான 'அவள் என் மனைவி' என்னும் சிறுகதை மூலம். கல்கி 69இல் பெர்க்லி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை மேற்படி அவரது சிறுகதை. அதன் பின் கல்கியில் வெளியான அவரது ஆரம்ப காலத் தொடர்கதைகளான 'வேஷங்கள்' மற்றும் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன' மூலம் அவ்ர் மேலும் என் கவனத்தைக் கவர்ந்தார்.
பயனுள்ள மீள்பிரசுரம் (முகநூற் குறிப்புகள்) : இ.பா.வுக்கு சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப்! (மாபெரும் அகில இந்திய அங்கீகாரம்!) - - திருப்பூர் கிருஷ்ணன் -
- எழுத்தாளரும், 'அமுதசுரபி' சஞ்சிகையின் ஆசிரியருமான திருப்பூர் கிருஷ்ணன் தனது முகநூற் பக்கத்தில் அண்மையில் இந்திய மத்திய அரசின் சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப்! விருது பெற்ற எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றி எழுதிய கட்டுரையிது. இதன் பயன் கருதி இதனை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -
பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப் என்ற அகில இந்திய அளவிலான உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மார்ச் 29 அன்று அதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. சிற்பி பாலசுப்பிரமணியம், ம. ராஜேந்திரன், மாலன் போன்றோரோடு நானும் அந்த விழாவில் கலந்துகொண்டு இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துகள் குறித்துப் பேசினேன். விருதைப் பெற்றுக்கொண்டு விழா நிறைவடையும் வரையில் (மாலை 6 முதல் இரவு 8 மணி வரை) இ.பா. மேடையில் வீற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. (வயது 91.) இ.பா.வின் மிக முக்கியமான கருத்துச் செறிவு நிறைந்த ஏற்புரையை அவரது மாப்பிள்ளை ராமநாதன் தங்குதடையற்ற குரலில் பிசிறில்லாமல் வாசித்தார். விழாவுக்கு இ.பா.வின் புதல்வி திருமதி பத்மாவும் வந்திருந்தார். அரங்கம் சென்னையின் முக்கியப் பிரமுகர்களால் நிறைந்திருந்தது.
இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளை ஆய்வு செய்துதான் நான் முனைவர் பட்டம் பெற்றேன். அதன்பொருட்டு அவர் நாடகங்களையும் நாவல்களையும் சிறுகதைகளையும் பலமுறை மீண்டும் மீண்டும் படித்தேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிது புதிதான அனுபவங்களை அந்தப் படைப்புகள் கொடுத்ததுதான் ஆச்சரியம். இ.பா.வின் நாடகங்கள் மேடையேறும்போது பலமுறை பார்த்திருக்கிறேன். கே.ஏ. குணசேகரன், ராஜு, அ.ராமசாமி உள்ளிட்ட பலர் அவரது நாடகங்களை இயக்கியிருக்கிறார்கள். வசனம் இ.பா.வின் அதே வசனம்தான். ஆனால் இயக்குநரின் கண்ணோட்டத்தில் அதே வசனங்களால் ஆன அதே நாடகம் வேறு வேறு பரிமாணங்களைப் பெறுவதுதான் வியப்பு. நந்தன் கதையில் கோபாலகிருஷ்ண பாரதியார் பெரியபுராணத்தில் இல்லாத வேதியர் பாத்திரத்தைப் புகுத்தினார். அதுபோலவே நந்தன் கதையில் இ.பா. புகுத்திய புதிய பாத்திரம் அபிராமி என்ற நடனமணி. இ.பா.வின் நந்தன் கதை மேடையேறும்போது அதில் நடிக்க நடனம் தெரிந்த ஒரு நாடக நடிகை தேவைப்படுவார். ஒருமுறை நந்தன் கதை நாடகத்தில் அபிராமி பாத்திரமேற்று நடித்தவர் நடனமும் அறிந்தவரும் எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினத்தின் புதல்வியும் குமுதம் ப்ரியா கல்யாணராமனின் மனைவியுமான சகோதரி ராஜசியாமளா.
இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதொரு காவியம்: எழுத்தாளர் 'பண்டிதர்' மாவிட்டபுரம் க.சச்சிதானந்தனின் 'யாழ்ப்பாணக் காவியம்'! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் 'பண்டிதர்' மாவிட்டபுரம் க.சச்சிதானந்தன் கவிதை, சிறுகதை, நாவல் , கட்டுரை எனப்பன்முகத்திறமை வாய்ந்தவர். இவர் ஒரு மதுரைத்தமிழ்ச்சங்கப் பண்டிதர். கலாநிதி. வானியல் வல்லுநர். இவரது கல்வித்தகைமைகள் வருமாறு:B.A ( Hons.)London, M.Phil. London, PhD (Jaffna) & மதுரைப்பண்டிதர்). இவர் பாவித்த புனைபெயர்கள்: சச்சிதானந்த , ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி
இவரது 'யாழ்ப்பாணக் காவியம்' இலங்கைத் தமிழ்க் கவிதைப்பரப்பில் வெளியான மிகவும் முக்கியமான வரலாற்றுக் காவியம். இவரைப்போல் யாழ்ப்பாண வரலாற்றை மையமாகக்கொண்டு வெளியான இன்னுமொரு காவியம் கவிஞர் காரை.செ.சுந்தரம்பிள்ளையின் 'சங்கிலியம்'. ஈழநாடு பத்திரிகையின் பத்தாவதாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற காவியம்.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காஞ்சிரமோடை! - வ.ந.கிரிதரன் -
இதுவரை கால்கமும் காஞ்சிரமோடை எஞ்னும் இப்பகுதியை நான் காஞ்சிரமொட்டை என்றே அறிந்திருந்தேன். இப்பகுதியை நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் 'நாவலர் பண்ணை'த் தன்னார்வத் திட்டம். அப்பொழுது மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க வேண்டும். இத்தூரத்தைக் குறைப்பதற்காக காஞ்சிரமோடைக் காட்டினூடு பாதை அமைப்பதும் அத் தன்னார்வத்திட்டத்தின் ஓரம்சம். அத்திட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றவர்களில் நானுமொருவன். அப்பொழுது நான் என் படிப்பை முடித்து வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது அப்பகுதி மக்கள் அப்பகுதியைக் காஞ்சிரமொட்டை என்றே அழைத்தார்கள். அல்லது அவ்விதமே எனக்குக் கேட்டது. அதனால் அப்பகுதியின் பெயர் அவ்விதமே என் மனத்தில் படிந்து விட்டது. அண்மையில் எழுத்தாளர் 'பண்டிதர்' க.சச்சிதானந்தனின் 'யாழ்ப்பாணக் காவியம்'நூலின் முன்னுரையை படிக்கும் வரையில் அவ்விதமே எண்ணியிருந்தேன். படித்ததுமே அப்பகுதியின் பெயர் காஞ்சிமோடை என்றும் , அதன் வரலாற்று முக்கியத்துவம் பற்றியும் அறிந்துகொண்டேன்.
இலக்கியவெளி சஞ்சிகை நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 19 " புலம்பெயர்ந்தோரின் சிறுகதைத் தொகுப்புக்கள் சில... - உரையாடல் " - அகில் சாம்பசிவம் -
பயனுள்ள மீள்பிரசுரம்:தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள் Blank Verse ஆ?! - அ.ந.கந்தசாமி -
'அறிஞர் அ.ந.கந்தசாமி' என்று அவரது புலமையின் காரணமாக அழைக்கப்பட்டவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி. கலாநிதி க.கைலாசபதி அவர்களே தனது 'ஒப்பியல் இலக்கியம்'நூலை இவருக்குச் சமர்ப்பித்திருக்கின்றார். அச்சமர்ப்பணத்தின் பின்வருமாறு கூறியிருப்பார்:
"பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங் கொடுத்து வந்தவரும் இன்றைய ஈழத்து எழுத்தாளரின் முன்னோடிகளில் ஒருவரும் பிறர்மொழி இலக்கியங்களைக் கற்று மகிழ்ந்து அவற்றைத் தழுவியும் பெயர்த்தும் தமிழுக்கு அணிசெய்தவரும், பல துறை வல்லுநருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்"
அது ஒன்றே போதும் இவரது புலமையினை வெளிப்படுத்த. இவர் ஒரு பண்டிதரல்லர்; பட்டதாரியுமல்லர். ஆனால் கவிதை, கதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை என இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் திடமாகக் காலூன்றியவர். அவர் தனது நண்பரும், சக எழுத்தாளருமான சில்லையூர் செல்வராசன் அவர்களை விமர்சித்த ஒருவருக்குப் பதிலடியாக எழுதிய இக்கட்டுரை அவரது புலமையினை நன்கு வெளிப்படுத்துமொரு கட்டுரை.
அவர் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள "நமது நாட்டிலுள்ள 'மரபு'களில் ஒன்று, நாலு நூல்களை நெட்டுருப் போட்டு, நான்கு முறை நூன சித்தியும் ஐந்தாம் முறை மூன்றாம் வகுப்பில் முழுச் சித்தியும் பெற்றுப் பண்டிதரோ, பட்டதாரியோ ஆகி விட்டால் அவர் ஒரு படித்தவர் என்று கணித்துக் கொள்வதாகும். ஆனால் அவர்களில் பலர் பாடப் புத்தகங்களைத் தவிர வேறெதையும் படித்தவர்களல்ல. இங்கு நான் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். தொல்காப்பியத்தின் ஒரு பகுதியையும், திருவாசகத்தின் ஒரு பகுதியையும், பாரதத்தின் இரண்டு சருக்கத்தையும் பள்ளிக்குச் சென்று படித்துப் பெற்றவனா அல்லது வீட்டிலிருந்து கொண்டே மூன்று நூல்களையும் முழுவதும் கற்றவனா அவற்றை முற்றாகப் படித்தவன்? ஞானசம்பந்தர் ஓதாதுணர்ந்தவர், முலைப்பாலைக் குடித்தே முழு அறிவும் பெற்றவர் என்கிறார்கள். ஒரு சில பண்டிதர்களும் பட்டதாரிகளும், ஏன் பயிற்சி பெற்ற தமிழ் வாத்தியார்களில் சிலர் கூட, தம்மை ஞானசம்பந்தர்கள் என்றுதான் காட்டப் பார்க்கிறார்கள்." என்னும் கூற்று சிந்தனைக்குரியது. இக்கட்டுரை வசந்தம் சஞ்சிகையின் நவம்பர் 1965 பதிப்பில் வெளியாகியுள்ளது. - பதிவுகள்.காம் -
ஒப்பியல் இலக்கணம்! தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள் Blank Verse ஆ?! - அ.ந.கந்தசாமி -
சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற ஒரு நாடகத்தொடக்க விழாவில் பேசிய ஒரு பட்டதாரி சிறு கதாசிரியர், சில்லையூர் செல்வராசனின் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது அவை வெறும் Blank Verse என்று குறிப்பிட்டாராம். இத்தகைய தீர்ப்பை அளிக்க, ஒருவருக்கு யாப்பிலக்கணம், தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் வாயைப் பிளந்தால் அவரது அறியாமையின் நாற்றந்தான் ஊரெல்லாம் பரிமளிக்கும். பட்டதாரிச் சிறு கதாசிரியரின் பேச்சு இதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது.
நமது நாட்டிலுள்ள 'மரபு'களில் ஒன்று, நாலு நூல்களை நெட்டுருப் போட்டு, நான்கு முறை நூன சித்தியும் ஐந்தாம் முறை மூன்றாம் வகுப்பில் முழுச் சித்தியும் பெற்றுப் பண்டிதரோ, பட்டதாரியோ ஆகி விட்டால் அவர் ஒரு படித்தவர் என்று கணித்துக் கொள்வதாகும். ஆனால் அவர்களில் பலர் பாடப் புத்தகங்களைத் தவிர வேறெதையும் படித்தவர்களல்ல. இங்கு நான் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். தொல்காப்பியத்தின் ஒரு பகுதியையும், திருவாசகத்தின் ஒரு பகுதியையும், பாரதத்தின் இரண்டு சருக்கத்தையும் பள்ளிக்குச் சென்று படித்துப் பெற்றவனா அல்லது வீட்டிலிருந்து கொண்டே மூன்று நூல்களையும் முழுவதும் கற்றவனா அவற்றை முற்றாகப் படித்தவன்? ஞானசம்பந்தர் ஓதாதுணர்ந்தவர், முலைப்பாலைக் குடித்தே முழு அறிவும் பெற்றவர் என்கிறார்கள். ஒரு சில பண்டிதர்களும் பட்டதாரிகளும், ஏன் பயிற்சி பெற்ற தமிழ் வாத்தியார்களில் சிலர் கூட, தம்மை ஞானசம்பந்தர்கள் என்றுதான் காட்டப் பார்க்கிறார்கள்.
அறிதலும் பகிர்தலும் 13: பண்பாட்டுமானிடவியலின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு நிகழ்வுக்கானஅழைப்பு!
விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம்,
மானிடவியல் என்னும் கல்வித்துறை 19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியில் தோற்றம் பெற்றது. எட்வார்ட் B டைலர் (EDWARD B. TYLOR) 1832 – 1917 லூயிஸ் ஹென்றி மோர்கன் (LOUIS HENRY MORGAN) 1815 – 1881 ஆகிய இருவரினதும் எழுத்துக்கள் நாகரிகத்தில் முன்னேற்றம் அடையாத பழங்குடி மக்களின் பண்பாட்டைப் பற்றிய ஆய்வாக அமைந்தன. டைலர் ‘PRIMITIVE CULTURE’ (புராதன சமூகங்களின் பண்பாடு) என்ற நூலை 1871 இல் வெளியிட்டார். மோர்கன் ‘ANCIENT SOCIETY’ (பண்டைய சமூகம்) 1877 இல் வெளியிட்டார். இவ்விருவரையும் அடுத்து மானிடவியல் ஆய்வுகளை வெளியிட்ட பிரான்ஸ் போவாஸ் (FRANTZ BOAS) 1858 – 1942 அறிவுலகின் கவனத்தை ஈர்த்தார்.
(இறுதிப்பகுதி) ரஷ்ய ,உக்ரைன் யுத்தச் சிந்தனைகள்! - ஜோதிகுமார் -
(11)
ரஷ்யா-உக்ரைன் போரை ஒரு சமாதான நிலைக்கு கொண்டு வருவதில் பிரான்சின் மெக்ரோன் முதல் அமெரிக்க பைடன் வரை முயற்சி எடுத்ததாய் கூறப்பட்டாலும் அம்முயற்சிகளின் மொத்த பெறுபேறு அல்லது மொத்த உள்நோக்கம் எவ்வகைப்பட்டது - இது போரை மேலும் தூண்டிவிட திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளா அல்லது உண்மை சமாதான விருப்பம் கொண்ட பேச்சு வார்த்தைகளா என்பதெல்லாம் கேள்வி குறிகளாகின்றன. இருந்தும் இப்பின்னணியில் துருக்கியும் இஸ்ரேலும் மேற்கொண்ட முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனலாம். காரணம், மேற்படி இரு நாடுகளின் நிலைமைகளும், இப்போரால் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைக்கு தள்ளப்பட்டு, சற்றே சங்கடத்துக்குள் அமிழ்த்தப்பட்டவைதான் என்பதில் சந்தேகமில்லை.
உக்ரைன் - ரஷ்ய போர், இஸ்ரேலின் இருப்பையும் அதே போல் துருக்கியின் இருப்பையும், ரஷ்ய மூர்க்கத்தனத்திற்கூடு அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கும் அதேவேளை, மறுபுறத்தே, ரஷ்யாவுக்கு எதிராக செயல்படுமாறு மேற்கு அவற்றிற்கு தரும் அழுத்தங்களையும் அவை எதிர்கொள்ள நேர்கின்றது. அதாவது துருக்கி எவ்வாறு தனது போர்போஸ் கால்வாயை ரஷ்ய கப்பல்களின் உள்நுழைகைக்கு தடை விதிக்கும்படியான பல்வேறு கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுகின்றதோ, அதே போன்று இஸ்ரேலின் நிலைமையும் தர்மசங்கடத்துக்குள்ளாகின்றது எனலாம்.
Montrex ஒப்பந்தத்தின் கீழ் துருக்கி பல்வேறு விதமான சலுகைகளை பெறும் அதே நேரம் அது அநேக கடப்பாடுகளையும் சுமக்க நேரிடுகிறது – (இது தனியாக வாதிக்கத்தக்க ஒன்று). போர்போஸ் கடல்வழியை (கால்வாயை) துருக்கி அடைத்து விட்டால் அது சர்வதேச சட்டத்தை மீறிய செயலாக கருதப்பட்டு, ரஷ்யாவின் தாக்குதலுக்கு உட்படுவது நிச்சயம் என்ற நிலைமையில், தன் பாதுகாப்பை மையப்படுத்திக் கொண்டு துருக்கி, சுவர் மேல் பூனையாக நின்று ஆடும் நடனம் உலக அரங்கில் வினோதமானது.
பாடகர் டி.எம்.எஸ் பிறந்தநாள் இன்று!

சங்க இலக்கியம் பட்டினப்பாலை கூறும் தமிழரின் வணிக அறநெறி ! - இளவரசி இளங்கோவன் , மொன்றியல் , கனடா -
நீண்ட நெடுநாளாக சங்க இலக்கியங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்து வந்தது. அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் வழியாக எனக்கு ஓர் அரும்பெரும் வாய்ப்பு கிட்டியது. ஆம் பாரதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நிகழ்த்திய ஞானபாரதி விருதுக்கான நான்கு கட்ட பேச்சுப் போட்டி நடைபெற்றது. அதில் அரையிறுதிச் சுற்றில் சங்க இலக்கியங்களுள் ஒன்றான பட்டினப்பாலையையும் , நெடுநல்வாடையையும் அறியும் வாய்ப்பு கிடைத்தற்கரிய வரமாக கிடைத்தது.தமிழை வாழ்த்துவதற்கும் , வளர்ப்பதற்கும் கடின உழைப்பை உரமாக இட்டு தமிழ்த்தொண்டு ஆற்றி வரும் அமரிக்காவின் ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்திற்கு நிச்சயம் தமிழ் கூறும் நல்லுலகம் சார்பாக கோடி நன்றிகள்.
12 ஆம் வகுப்புக்கு பிறகு தமிழ் கற்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட 10 வருடங்கள் இல்லாமல் போனது. ஆங்கிலவழி கணினி தொழில்நுட்ப கல்வி, தொழில்நுட்ப வேலை, புலம்பெயர்வு என தமிழன்னையை தரிசிக்க தவறிய தருணங்கள் அவை. புலம்பெயர்ந்த நாடான கனடா மீண்டும் என்னை உயிர்ப்பித்து என் தாய்த்தமிழை வாசிக்க வாய்ப்பு தந்தது. அதற்கு முக்கிய மூல காரணமாக அமைந்தவர்கள் என் ஈழத்தமிழ் உறவுகள். மீண்டும் வாசிப்பு பழக்கம் , எழுதும் வழக்கம் , பேச்சு எல்லாம் கைக்கொள்ள இன்று தமிழன்னையின் பெருமை வெளிச்சத்தில் நானும் ஒரு சிறு துளி வெளிச்சம் பெற்று ஒளிரும் நிலவானேன்.
பட்டினப்பாலையை பற்றிய தேடல் என்னை மேலும் மேலும் எனது தாய் மொழியை பற்றியும் , தமிழர்களின் வாழ்வியலை பற்றியும் பெருமை கொள்ள செய்தது . பெருமை கதைகள் , வரலாறுகள் மட்டுமே பேசினால் போதுமா? இன்றைய வாழ்வியலில் நம்பிக்கைக்கையின்மை, சுயநலம் , எந்த வழியிலாவது பொருள் ஈட்டினால் போதும், குறுகிய காலத்தில் குறுக்கு வழியில் பொருள் ஈட்டுவது போன்ற எண்ணங்களும் செயல்களும் மேலோங்க காரணமாக இருப்பது சற்றே குறைந்து போன எமது முன்னோர்கள் வாழ்வியல் கோட்பாடாக வரித்து கொண்ட அற உணர்வு தான் என்பது எனது கருத்து.இதனை மீட்டெடுக்க நாம் நமது வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உணர்ந்துகொள்ள வேண்டும்.நாம் செய்யும் செயல்களில் ,வணிகத்தில், வேலையில் , கல்வியில் ,குடும்பத்தில் என எங்கெல்லாம் முடிந்தவரை செயல்படுத்தமுடிகிறதோ அங்கெல்லாம் உறுதியாக கடைபிடிக்க வேண்டும். வாழ்வியல் கொளகைகளாக வரித்து கொள்ள வேண்டும்.
சிறுகதை: இருள் சூழ்ந்த பௌர்ணமி! - கிருஷ்ண பிரியா -
அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது. பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர் உங்களது இப்புதுவருட குறிக்கோள் என்னவென்று. அப்போது பெரிதாக அல்லது உறுதியாக எதையும் கூறிய ஞாபகம் இல்லை அவர்களுக்கு. மதிய உணவு இடைவெளிக்கு பின்பு அலுவலகம் அடைக்கப்பட்டது. அந்த இளம்காதலர்கள், சிறு மோதலுக்கு பின் முடிவெடுத்தனர் இருசக்கரவாகனத்தில் ஒரு சிறு தூர பயணம் செல்ல.
பயணத்தில் மகிழ்ச்சி, புதிதாக செல்லும் பாதையென்பதால் சாலை ஒர காட்சியில் ஓர் ஈர்ப்பு, அலுவலுக வேலை பதற்றமின்றி இருவருக்குமாக கிடைத்த அந்த இனிய மாலைப்பொழுது என்பதால் ஒரு களிப்பு. ஆங்காங்கே நிறுத்தி தேனீர் அருந்தினர்.
அவனது ஆர்வம் தனது ஸ்ப்ளெண்டர் வாகனத்தை அவள் இயக்க வேண்டும் என்று. ஏற்கனவே இருந்த பயிற்சியின் நம்பிக்கையில் அவள் வாகனத்தை இயக்க கம்பீரமாக அவன் பின் சீட்டில். சீண்டலாக சொன்னான், பின் சீட்டில் அமர்ந்து பிரயாணம் செய்வதும் ஒரு சுகம்தான் என்று.
கவிதை: வாழவந்த வாழ்வுதனை வண்ணமுறச் செய்கின்றார் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ( மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா ) -
கையில்லா பலருள்ளார் காலில்லா பலருள்ளார்
கண்ணில்லா பலருள்ளார் வாய்பேசா பலருள்ளார்
என்றாலும் இவர்கலெல்லாம் இவ்வுலகில் வாழுகிறார்
எவருக்கும் தீங்கிளைக்க இவரென்றும் எண்ணுகிலார்
குறையெது வுமில்லாமல் குவலயத்தில் பலருள்ளார்
குறைகாணும் வழியிலவர் நிதம்பயணப் படுகின்றார்
குறையின்றிப் பிறந்ததனை மனமதிலே இருத்தாமல்
நிறைகுறைவாய் இருப்பதனை நெஞ்சேற்க மறுக்கிறது
ஊனமுற்றோர் தினமென்று ஒருதினத்தை முன்னிறுத்தி
ஊனமுற்றோர் என்போரை உயர்த்தியே பலவுரைப்பார்
உரைப்பவர்கள் அரங்குக்குள் வருவதற்கு முன்னாலே
குருடுடென்பார் செவிடென்பார் நொண்டியென்பார் கேலியுடன்
பாவம் எழுத்தாளர்கள்! - வ.ந.கிரிதரன் -
என் முன்னைய பதிவொன்றில் க.சச்சிதானந்தன் அவர்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் எழுத்தாளர் க.சச்சிதானந்தன் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றிய முகநூல் நண்பர் கு.சரவணன் அவர்கள் " சச்சிதானந்தனை தாங்கள் எழுத்தாளர் என்று சுட்டுவது பொருத்தமற்று உள்ளது. பண்டிதர் அல்லது மதுரைபண்டிதர் என்று சுட்டுவதே சிறப்பாக அமைகின்றது" என்று கூறியிருந்தார்.
உண்மையில் எழுத்தாளர் என்றழைக்காமல் அவரைப் பண்டிதர் என்றழைப்பது அவரைப் பண்டிதர் என்னும் குறுகிய வட்டத்தில் இருத்தி விடும் அபாயமுண்டு. பண்டிதர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள் அல்லர். பெரும்பாலும் அசிரியர்கள். பண்டிதர் என்பது ஒரு கல்வித்தகைமை. ஆனால் க.சச்சிதானந்தன் அவர்கள் கவிதை, கட்டுரை, நாவல் , அறிவியலென்று பன்முகத்திறமை கொண்ட எழுத்தாளராகத் தன்னை அடையாளம் காட்டியவர். ஆனந்தம், பண்டிதர் போன்ற புனைபெயர்களில் எழுதியவர். எழுத்தாளர் என்று அவரை அழைப்பது அவரைப்பெருமைப்படுத்தும் ஒன்று.
யார் கூறியது எழுத்தாளரை விடப் பண்டிதர் என்றழைப்பது பெருமைப்படுத்துமொன்றென்று. எழுத்தாளர் அதுவும் பன்முகத்திறமை மிக்க எழுத்தாளர் என்பது அவரைக் கெளரவப்படுத்தும். மேலும் யாரும் பண்டிதர் ஆக முடியும். ஆனால் பண்டிதர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாக முடியாது. பண்டிதர் என்பது ஒரு கல்வித்தகைமை. அவர் பண்டிதர் மட்டுமல்லர். கலைப்பட்டதாரி. கலாநிதி. வானியல் அறிஞர். விரிவுரையாளர். இவ்விதம் பன்முகத்திறமை மிக்கவர் அவர். விக்கிபீடியா அவரை இவ்விதம் விபரிக்கின்றது: "கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் (அக்டோபர் 10, 1921 – மார்ச் 21, 2008) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். சச்சிதானந்தன் என்ற பெயரிலும், ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்."
நூல் அறிமுகம்: பறவைகள்! எழுதியவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன். - வ.ந.கிரிதரன் -
அண்மையில் நான் வாசித்த 'பறவைகள்' பற்றிய புத்தகம் என்னை மிகவும் கவர்ந்த புத்தகங்களிலொன்றாக மாறிவிட்டது. வெறும் தகவல்களையுள்ளடக்கியதோர் அறிவியற் நூலாக அமையாமல் , இலக்கியத்தரமுள்ள, நெஞ்சை ஈர்க்கும் சுவையான மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகளை நூலாக அமைந்துள்ளது.. இயற்கையின் வனப்பை மண் வாசனையுடன் விளக்கும் வகையிலான மொழிநடையில் எழுதப்பட்டுள்ளதால் , வாசிப்பவர் எவரையும் முதல் வாசிப்பிலேயே கவர்ந்துவிடும். வாசகரும் எழுத்தில் விரியும் இயற்கையெழிலில் மூழ்கி விடுவார்.