ME TOO இயக்கச் செயற்பாட்டாளர்களுக்கும் சக படைப்பாளிகளுக்கும்…. - லதா ராமகிருஷ்ணன் -
இருபது வயதுப் பெண்ணாக ஒரு ஊடகவியலாளராக பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் இன்று திரைப்பட இயக்குநராக உள்ள ஒருவரால் தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான அச்சுறுத்தல் குறித்து சக கவிஞர் லீனா மணி மேகலை மீ டூ இயக்கம் தந்த உலகளாவிய ஆதரவுக்கரங் களின் தோழமை அளித்த தெம்பில் பொதுவெளியில் பேசியதற்காக சம்பந்தப்பட்ட நபர் அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டிருக்கிறார்.
நீதிமன்றத்தில் லீனாவின் ஒழுக்கத்தைக் கேள்விக்குட்படுத்தியும், தன் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரமாக அயல்நாடுகளிலிருந்து வரும் அழைப்பை லீனா மணி மேகலை ஏற்க முடியாமல் அவருடைய வெளிநாட்டுப் பயணங்களைத் தடைசெய்யக் கோரி வழக்கு தொடுத்தும் சக கவிஞர் லீனாவின் படைப்பெழுச்சிக்குப் பலவகையிலும் முட்டுக்கட்டை யிட்டுக்கொண்டிருக்கிறார்.
மான நஷ்ட வழக்கு போட யாருக்கும் உரிமையிருக்கிறது. அதே சமயம், அவரவர் மனசாட்சிக்குத் தெரியும் தன் மீது சுமத்தப்படும் குற்றம் உண்மையா, பொய்யா என்று.
அப்படி ME TOO இயக்கப் பின்னணியில் குற்றம் சுமத்தப் பட்ட ஆண்களில் சிலர் பல வருடங்கள் முன்பு தாம் அப்படி நடந்துகொண்டது உண்மை தானென்றும் அதற்காக வெட்கப்படுவதாகவும் மன்னிப்பு கேட்டதும் நடந்தது.
ME TOO இயக்கப் பின்புலத்தில் ஓர் ஆண் மீது ஒரு பெண் பொய்யாக குற்றம் சுமத்த் வாய்ப்பிருக்கிறது என்றாலும் ஒரு பெண் தன் பாதிப்பு குறித்துப் பேசும்போது அவர் உண்மை பேசுகிறாரா அல்லது பொய்யுரைக்கிறாரா என்பது நம் உள்ளுணர்வுக்கு எளிதாகப் புலப்பட்டுவிடும்.
பொய்யாக ஒருவர் மீது பழிசுமத்தி அதில் பிராபல்யம் தேடிக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட நபரை லீனா குறிப்பிட்டிருக்க மாட்டார் என்பது தெளிவாகவே விளங்குகிறது. தவிர, இத்தகைய ஒரு குற்றச்சாட்டை அவர் வேறெப்போதும் வேறெந்த நபர் மீதும் சுமத்தியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.