13
பேட்டியின் போது திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் திருகோணமலை துறைமுக புனரமைப்பு திட்டத்தை முதன்முதலில், தானே 2003இல், பிரதமர் வாஜ்பாயுடன் கதைத்ததாகவும் பின்னர் சம்ப10ர் அனல்மின்திட்டம் குறித்தும் தாங்களே, முதன்முதலில் பிரேரித்ததாகவும், ஆனால் இந்தியா, எப்போதும் ஒப்பந்தத்துக்குள்ளாகவே(1987) விடயங்களை பார்க்க முற்படுகின்றது என்றும், தாங்களோ அதற்கும் வெளியே, வழிகளை தேடுவதாகவும் குறிப்பிட்டது ஏனையவற்றை போன்றே முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.
அதாவது, இக்கட்டுரையின் முற்பகுதியில் (12ம் பகுதி) குறிப்பிட்டவாறே, ‘விடயங்களை’ –முக்கியமாக ‘வட-கிழக்கு நலன்களை’ - இந்தியா முன் கவிழ்த்து விட்டு அல்லது இந்தியா முன் நகர்த்தி வைத்து விட்டு, வட-கிழக்கு மக்களும், இந்தியாவும் ஒருவரோடு ஒருவர் அடிபடுதலை ஊக்குவிக்கும் ஓர் அணுகுமுறை, இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல், உண்மையில், நடைமுறையில், காணக்கிட்டுகின்றதா என்பது ஓர்கேள்வியாகின்றது. இருந்தும், திரு.யதீந்திரா அவர்கள் மிக அண்மையில் கூறியுள்ளது, மேற்படி அணுகுமுறைகளை கருத்தில் கொண்டதால் எழுந்த ஒன்றா என்பதும் சரியாக தெரியவில்லை:
“இந்தியாவை விடுதலை புலிகள் அணுகிய முறைமை தவறென்பதையே வரலாறு நிரூபித்துவிட்டது. இந்தியாவை தவிர்த்து, புறந்தள்ளி, தங்களின் இலக்கை அடைய முடியுமென்றே பிரபாகரன் நம்பினார். ஒன்றை நம்புவது தவறல்ல. ஆனால் அது தோல்வியுற்ற பின்னர் அந்த நம்பிக்கையை நியாயப்படுத்த முற்படுவதும், அதனை சரியென்று நம்பி செயற்பட எத்தனிப்பதும்தான் தவறானது” (தினக்குரல்:02.10.2022).
இத்தகைய ஓர் பின்னணியிலேயே மேற்படி நிட்டின் கோக்லேயின் பேட்டியின்போது திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ‘இந்தோ-பசுபிக்’ கடற்பிரதேசம் குறித்து அதிக அக்கறை காட்ட முற்பட்டதும் என்றுமில்லாத முக்கியத்துவத்தை எட்டி பிடிக்கின்றது எனலாம்.