நண்பர்களே! நாம் பலருடன் பழகுகின்றோம். சிலரை நம் நண்பர்களாகக் கொள்கின்றோம். பல வழிகளிலும் உண்மை நட்புடன், எம் நண்பர்களின் இடுக்கண் காலங்களில் எம்மால் முடிந்த உதவிகளைச் செய்கின்றோம். சில காலங்களின் பின் , எம்மிடமிருந்து பல பயனுள்ள உதவிகளை உரிய காலத்தில் பெற்றுப் பயனடைந்த சிலர், தம் இன்னல்கள் தீர்ந்து சுகமாக வாழும் காலத்தில், தாம் இன்னல் பட்டிருந்த காலத்தில் தமக்குதவிய நண்பர்களின் உதவியின் உயர்வை , அதனால் தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளை மறந்து விடுவார்கள்.
இது என்றாலும் பரவாயில்லை. இவர்களின் இன்னல்களை யார் அகற்றிவைத்தார்களோ , அவர்கள் இன்னலுற்று நெருக்கடியான நிலையில் இருக்கையில் , தமக்குதவிய அவர்களின் இக்கட்டான நிலைமையைத் தெரிந்தும், இவர்கள் அவர்களைக் கண்டும் காணாததும் போல் இருந்து விடுவார்கள். அவர்களுடன் கதைத்தால் , எங்கே அவர்கள் ஏதேனும் உதவி கேட்டு விடுவார்களோ என எண்ணி விலகி விடுவார்கள்.
இது இன்று நேற்று நடப்பதல்ல. காலங் காலமாக இப்பேர்ப்பட்ட மனிதர்களும் நம்மிடையே வாழ்ந்து வந்துள்ளார்கள் - வாழ்ந்து வருகின்றார்கள்- வாழ்ந்து வருவார்கள். இதை ஒளவையாரின் ஓர் சங்ககாலப் பாடல் மூலம், என் தந்தையார் மிக அழகாக விளக்கியுள்ளார்.
அதனை இன்றிங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
புள்ளும் பூவும் (மாணவர் தமிழ் விருந்து - பக்கம் 157-160)
புலமை, புலவனின் உள்ளப் பெருக்கு. புலமை பெருகி வாழ்கின்ற உள்ளத்திலேயே, தெளிவும் இனிமையும் சேர்ந்து வாழ்கின்றன. அறமும், அன்பும், புலமை உள்ளத்தின் ஊற்றுக் கண்கள். ஒளவையாரின் புலமை உள்ளம் அமுத சுரபி போன்றது. மக்களின்வாழ்வை வழி வழியாக மலர்த்தி வளம் படுத்துகின்ற சிறப்பு, ஒளவையாரின் புலமைக்கே உரியதாகும். மக்களுடன் உயிர்க்குயிராய் கலந்து நிலவுகின்ற பண்புகளில், நட்பே மேலானது. உலகின் நன்மைக்குக் காரணமாய் நின்றுலவுவது, உண்மை நண்பர்களின் வாழ்வேயாகும்.
இன்பத்தில் மட்டும் அன்றித் துன்பத்திலும் பங்கு பற்றி வாழ்கின்ற பண்புதான் உண்மை நட்பாகும். பலர், இன்ப காலத்தில் மட்டும் ஒருவரோடு ஒருவர் உறவு கொண்டு, துன்ப காலத்தில் பிரிந்து விடுகின்றார்கள். தன்னலங்கருதி வாழ்கின்ற மக்களினம், பெருகாமல் தடுக்கும் படைக்கலமாக உண்மை நட்பு விளங்குகின்றது. செல்வம் பெருகிய காலத்தில் ஒருவருடன் நட்புப் பூண்டவர்கள் , செல்வம் சுருங்கி வறுமை வந்தவுடன், அவரை விட்டு நீங்குகின்ற செயலை , ஒளவையாரால் பொறுக்க முடியவில்லை.