முன்னுரை
கவிச்சக்கரவர்த்தி கம்பர் தம் ராமாயணத்தில் குற்றமுடைய செயல்களாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். நமக்குத் துன்பத்தைச் செய்தாலும் தூதரைக் கொல்லக்கூடாது என்றும் கூறியுள்ளார். மகளிரைக் கொல்வது பாவம் என்றும், குற்றம் என்றும் கூறியுள்ளார் என்பதை இக்கட்டுரையின் வழி ஆராய்வோம்.
பெண் கொலை புரிந்த மன்னன்
சங்க இலக்கியத்தில் நன்னன் என்ற மன்னன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவனுடைய காவல் மரம் மாமரம். அந்த மரத்தில் உள்ள பழங்களை யாரேனும் சாப்பிட்டால், அவர்கள் நீண்ட நாள் வாழ்வர் என்ற நம்பிக்கையும் இருந்து வந்தது. காவல் மரத்தின் மாம்பழம் ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு வந்தது. அது இன்னாருடையது என்பதை அறியாமல், ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த கோசர் குடி பெண் அதனை எடுத்துத் தின்றுவிட்டாள். இதனை அறிந்த நன்னன் அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தான். கோசர்குடியினர் நன்னனிடம் முறையிட்டனர். அவனது காவல் மரத்தின் மாம்பழத்தைத் தின்ற தவறுக்காக, அவளது எடைக்கு எடை பொன்னும், 81 யானைகளும் தண்டமாக ஏற்றுக்கொண்டு அப்பெண்ணை உயிருடன் விட்டு விடும்படி மன்றாடினார்கள். ஆனால் மன்னன் நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல், அவளைக் கொன்று விட்டான். இதனால் புலவர் இவனைப் ’பெண் கொலை புரிந்த மன்னன்’ என குறிப்பிடுகின்றார்.
“பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல”
(குறுந்தொகை 292)
மன்னனைப் புலவர்களும், பொதுமக்களும் வெறுத்தனர் என்பதை அறிய முடிகிறது. ஓர் அரசன் மக்களால் தூற்றப்படாமல் போற்றப்பட வேண்டுமானால் அவன் இழிவு தரும் செயலைச் செய்யக்கூடாது.
புறநானூற்றில் போர்
போர் அறமாக போர் நடைபெற இருக்கும்போது ஒரு அறிவிப்பு செய்வர். பெண்கள், பார்ப்பனர், பிணி உடையோர், ஆண்மகனைப் பெறாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடத்தைச் சென்றடைவர் என்று அறிவிப்பர். போரில் கூட, பெண்கள் இறந்து விடக்கூடாது என்பதற்காகவே தான் இந்த ஏற்பாடு ஆகும்.
“ ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நருக்கு அருங்கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்
எம் அம்பு கடி விடுதும் அரண் சேர்மின் என”
(புறநானூறு 9)
சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கிய போது, பசு, பெண்டிர்,பார்ப்பனர் உள்ள பக்கங்களில் தீ எரியக் கூடாது என்று அக்கினி தேவனுக்கேக் கட்டளையிடுகிறாள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
சங்க இலக்கியத்தில் போரில் வெற்றி பெற்ற மன்னன் தோற்றுப் போன மன்னனின் உரிமை மகளிர் மனைவியரைக் கைப்பற்றித், தன் நாடு கொண்டு வந்து, அவர்களைக் ’கொண்டி மகளிர்’ ஆக்கிய செய்திகளையும் அறிய முடிகிறது. பெண்ணின் கூந்தலை அறுத்து, யானையை இழுத்து வர கயிறுகளாகப் பயன்படுத்தியுள்ள செய்தியையும் இலக்கியங்களில் காணப்படுகிறது. பதிற்றுப்பத்தில் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் தன் பகைவனாகிய பழையன் என்பவனுடைய உரிமை மகளிரது கூந்தலைக் கொய்தான்.
“பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி,
வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர்
பல் இருங் கூந்தல் முயற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி வெந் திறல்”
(பதிற்றுப்பத்து -ஐந்தாம் பத்து 13 – 17)
அரசு குடும்பங்களில் மன்னர் பகைவரிடம் தோற்றிருப்பின் அவரது மனைவியர் நிலை இரங்கத்தக்கதாகவே இருந்தது. தோல்வியுற்ற மன்னனின் மனைவியரும், அந்நாட்டு அழகிகளும் வென்ற மன்னனின் நாட்டுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். பகைவரது மனைவியருக்குத் தரப்படும் தண்டனை வேறுவிதமாக இருந்தது. நன்னன் தனது பகைவரை போரில் கொன்று அவர்தான் மனைவியரைக் கைப்பற்றி வந்து, அவர் கூந்தலைக் கொய்து, அதனைக் கயிறாகத் திரித்து, பகைவரது யானைகளைப் பிடித்தான் என்று சங்க இலக்கிய நற்றிணைப் பாடல் கூறுகிறது.
கூந்தலைக் கயிறாகத் திரித்தல் பகை மன்னர் பலரையும் தோற்றோட செய்த நன்னன் அவர்தான் மகளிர் கூந்தலைக் கொய்து கயிறாகத் திரித்தான்.
“வேந்தர் ஒட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே”
(நற்றிணை 270)
சங்க இலக்கியங்களில் பெண்களை இழிவுபடுத்தியதையும், பெண்களை கொலை செய்தல் பாவம் என்று எண்ணினர் என்றாலும் நன்னன் என்ற மன்னன் பெண்ணைக் கொலை செய்ததையும் அறிந்து கொள்ளமுடிகிறது.
கம்பராமாயணத்தில் தாடகை வதம்
கம்பராமாயணத்தில் பெண்ணைக் கொலை செய்தல் பாவம் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் பெண்ணைக் கொலை செய்துள்ளனர் என்ற செய்திகளையும் கம்பராமாயணத்திலேயேக் காண முடிகிறது.வேள்விக்காக்க விசுவாமித்திரர், இராம இலட்சுமணர்களை அழைத்து வந்தார். வேள்வியைப் பாழ்ப்படுத்திய தாடகை மீது, அம்பைத் தொடு என்றார். இராமன் மனதில் அவள் பெண்ணாயிற்றே, அவளை எப்படிக் கொல்வது என்று நினைத்தார்.
“துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுள்ளேனும்
பெண் என மனத்திடை பெருந்தகை நினைத்தான்”.
(தாடகை வதைப்படலம் 375)
இராமனின் மனதை அறிந்த விசுவாமித்திரர் இவள் பெண் தோற்றத்தில் இருக்கிறாள். ஆனால் இவள் இவ்வுலகில் உள்ள பொல்லாதவைகள் எல்லாவற்றையும் செய்து, எம்மைச் சக்கை என்று மதித்து உண்ணாமல் விட்டு விட்டாள். இவளை என்னவென்று நினைப்பது, இந்தக் கொடியவளையும் பெண்ணென்று எண்ணுவது தகுமோ? என்கிறார்.
திருமால் பெண்ணைக் கொன்றார்
பிருகு முனிவரின் மனைவி கியாதி. அவள் அரக்கர்களிடம் உள்ளம் உருகும் காதல் கொண்டு உறவு கொண்டாள். திருமால் அவள் உயிரை வாங்கினார்.
“வரு கயல் கண் கியாதி வல் ஆசுரருக்கு
உருகு காதலுற உறவாதலே
கருதி ஆவி கவர்ந்தனன் நேவியான்”
(தாடகை வதைப்படலம் 381)
பெண்ணைக் கொன்ற இந்திரன்
விண்ணிலும், மண்ணிலும் நெருங்கி உள்ள உயிர்கள் யாவும் தனக்குரிய உணவு என்று கருதுகின்ற சிற்றறிவு பெற்றவளான குமதியை இந்திரன் வஜ்ராயுதத்தால் கொன்று அவள் உடலை அழித்தான்.
“தானவள் குமுதிப் பெயரால் தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்கான்”
(தாடகை வதைப்படலம் 382)
பழிக்கு நாணுதல்
இரு வரங்களைத் தர வேண்டி தசரதனிடம், கைகேயி பிடிவாதமாக இருந்தாள். தசரதன் அவளது கையைப் பிடித்து தரையில் மோத எண்ணுவான். அவள் பெண்ணாகப் பிறந்து இருப்பதால் அவளை எற்றுவதால் ஏற்படும் பழிக்கு நாணுவான்.
“பெண் என உட்கும்பெரும் பழிக்கு நாணும்
உள் நிறை வெப்பொடு உயிர்த்து உயிர்த்து உலாவும்”
(கைகேயி சூழ்வினை படலம் 196)
கைகேயி முன்பு வாக்களித்த வரங்களை இப்போது நீங்கள் கொடுத்தால் பெற்றுக் கொள்வேன். இவ்வாறு கொடுக்காவிட்டால் உன் மீது பழி உண்டாக நான் இறந்து போவேன் என்கிறாள். (கைகேயி சூழ்வினைப் படலம் 200)
பெண்ணைக் கொல்லுதல்
பஞ்சவடியில் சீதையைத் தூக்கிச் செல்ல சூர்ப்பணகை முயன்ற போது, இலட்சுமணன் ’அடியே நில் என்று அதட்டிக் கொண்டே விரைவாக வந்தான். அவளைக் கொல்ல நினைத்து பெண்ணைக் கொல்லுதல் பாவம் என்பதால் கொல்லாமல் விட்டான். அதனால் அவளைக் கொல்லும்படி வில்லை எடுக்காமல், அவளது கூந்தலைத் தனது கையினால் முறுக்கி, சுற்றிப் பிடித்து விரைவாக எடுத்து உதைத்தான். பிறகு மற்றொரு கையினால் தனது உடைவாளை உருவி எடுத்தான். அவளுடைய மூக்கையும், காதுகளையும், முளைக்காம்புகளையும், ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தான்.
“மூக்கும் காதும் வெம்முரண் முலைக்கண்களும் முறையால்
போக்கி போக்கிய சினத்தொடும் புரி குழல் விட்டான்”.
(சூர்ப்பணகைப் படலம் 310)
அயோமுகியைக் கொல்லாது விட்டான்
அரக்கி அயோமுகி, இலட்சுமணன் மேல் ஆசைப்பட்டு அவனை அடையும் எண்ணத்தில் அவனை மயக்கி, வானில் தூக்கிச் செல்ல முற்பட்டபோது, அவன் அவளுடைய மூக்கு இருந்த இடம் பெருந்துளைகளாகும்படி அவள் மூக்கையும், அவளுடைய காதுகளையும், வளைந்த பற்களின் மேலே படிந்த உதடுகளையும், துண்டுகளாகச் சிதறி விழும்படி வாளால் அறுத்து, அவளது தோற்றத்தையே மாற்றிவிட்ட சமயத்தில், அவள் கூக்குரல் எழுப்பி புலம்பினாள். அதனால் அவன் அவளைக் கொல்லாது விட்டு விட்டான்.
“துளைபடு மூக்கொடு செவி துமித்து உக
வளை எயிறு இதழொடு அரிந்து மாற்றிய”
(அயோமுகிப் படலம் 1115)
இலங்கை தேவியைக் கொல்லாத அனுமான்
இலங்கையின் உள்ளே செல்ல முற்பட்ட அனுமனை, இலங்காதேவி தடுத்து போர் செய்தாள். பெண்ணைக் கொல்லுதல் பழி தரும் என்பதை உணர்ந்தவன் தான் அனுமன். அவள் மீது பாய்ந்து, அவளிடம் இருந்த ஆயுதங்களைச் சிதறச் செய்தான். கோபமடைந்த இலங்காதேவி மேகம் போல் முழங்கி குன்றுகளைக் கழச்சிக் காய்களாக, பந்தாக எறிந்தாள். அனுமனை அறைய முற்பட, அனுமன் அவளைக் கொல்வது பாவம் என்று நினைத்து, அவளது மார்பில் ஓர் அறைந்தான்.
“அடியா முன்னம் அம் கை அனைத்தும் ஒரு கையால்
பிடி யா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்ன”
(ஊர் தேடு படலம் 185)
அங்கார தாரையைக் கொன்ற அனுமன்
அனுமன், சீதையைத் தேடி இலங்கை செல்லும் வழியில் கடலில் அங்காரதாரை அனுமனை விழுங்கப் பார்த்தது. அவ்வாயினுள் அனுமன் புகுந்தான். அதைக் கண்ட அறக்கடவுளும் அழுதது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பேருருவத்துடன் நரசிங்கம் தூணில் இருந்து பிறந்தது போல, அவளது வயிற்றைக் கிழித்துக்கொண்டு அனுமன் வெளியே வந்தான்.
“திறந்தாள் எயிற்றை அவள் அண்ணால்இடை சென்றான்
அறம்தான் அரற்றியதென அயர்த்து அமரர் எய்த்தார்”
(கடல் தாவு படலம் 82)
வீடணன் கூற்று
அனுமனைக் கொல்ல இராவணன் கட்டளையிட்டபோது வீடணன் எழுந்து தூதர்களைக் கொல்லக்கூடாது என்றும் கூறுகிறான். இப்பூவுலகம் முழுவதிலும் அண்ட கோலத்தின் உள்ளேயும் பொய்மை சேராத வேதங்கள் விளங்கும் வேறு வேறான இடங்களிலும், உள்ள பழமையான குடியில் வந்த நல்லவர்களான அரசர்களில் மாதர்களைக் கொலை செய்தவர்கள் உள்ளனர் என்று சொல்லப்பட்டாலும், தம்மிடம் வந்த தூதர்களைக் கொல்பவர்கள் யார் உள்ளனர் என்கிறான்.
“வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறு வேறு இடத்து வேந்தர்
மாதரைக் கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த”
(பிணி வீட்டு படலம் 1157)
இக்கூற்றிலிருந்து இதற்கு முன்னரும் மாதர்களைக் கொலை செய்தல் தவறு, பாவம் என்றாலும் கொலை செய்துள்ளனர் என்பது பெறப்படுகிறது
இராவணன் கூற்று
பஞ்சவடியில் சீதையிடம், இராவணன் தன் பெருமையைத் தானேப் புகழ்ந்து பேசியபோது, சீதை அரக்கர்களை அழிக்கவே இராமன் வந்துள்ளான் என்று இராமனைப் பலவாறாகப் புகழ்ந்து பேசினாள்.உடனே இராவணன் தன் சுய உருவத்துடன் வர, சீதை பயந்து நடுங்கினாள்.உடனே இராவணன் அவளிடம் அஞ்சாதே அன்னமே, பூமியில் வாழும் மானுடர் வலியர் என்றால், பெண்ணாதலின் அவ்வாறு கூறிய நீ பிழைத்தாய். யாரையும் வணங்கி வாழாதவன் நான் என்று கூறுகிறான்.( சடாயு உயிர் நீந்த படலம்)
நீ பெண் என்பதால் உன்னைக் கொல்லமாட்டேன் என்று கூறுகிறான்.
மகோதரன் பெண்ணைக் கொல்வது பாவம் என்றான்:
இந்திரசித் இறந்ததைக் கண்ட மண்டோதரி துக்கம் மிகுதியால் பலவாறாகப் புலம்பினாள். இலங்கை வேந்தனான இராவணனும் நாளை இதுபோல இறந்து படுவான் அல்லவா, அதற்காகவே அஞ்சினேன் என்றாள். இதைக் கேட்ட இராவணன் மிகுந்த கோபத்துடன் இவைஅனைத்தும் அந்தச் சீதையால் தானே வந்தது, அவளை இப்பொழுதே என் வாளால் கொல்வேன் என்று அவள் இருக்கும் இடம் நோக்கி ஓடினான். அப்பொழுது அமைச்சன் மகோதரன், அவனிடம் ஒரு பெண்ணை, சிறந்த குலத்தில் தோன்றியவளே, தவ நிலையில் உள்ளவளைக் கோபித்து பயமின்றி நின் வாளால் வெட்டிக் கொல்வாயானால் கங்கையைத் தன் தலையில் கொண்டவனும், திருமாலும், பிரம்மனும் உன்னைப் பார்த்து நகைப்பான். காலகேயர்களையும், எட்டுத் திக்கு யானைகளையும் வெற்றி கொண்ட உன்னுடைய வாள் சீதையின் மீது பட்டால், தன் தொழிலில் வெட்கத்தினால் குன்றி குறைபடுமே அன்றி, அவளது உயிரினைக் கொல்லுமோ. கொல்லாது மங்கையான சீதையைக் கொல்ல நினைப்பது, மண்ணுள்ளோர் இயல்பன்று. வாணுலோர் இயல்பன்று. நீதியும் அன்று. இலங்கை தலத்துக்கு ஏற்ற தன்மையும் அன்று. மேலோர் பின்பற்றி வந்த தர்மமோ எனில் அதுவும் அன்று. புலத்தியன் குலத்தில் பிறந்து புண்ணிய அறநெறிகளை மேற்கொண்டவனே, இது வலிமையின் இயல்பும் அன்று. அப்படி இருக்க கொலையைச் செய்து, என்றும் மறையா பழி கொண்டு மனம் கலங்குவாயோ என்று கேட்டான்.
“நிலத்து இயல்பு அன்று வானின் நெறி அன்று நீதி அன்று
தலத்து இயல்பு அன்று மேலோர் தருமமேல் அதுவும் அன்று
புலத்தியன் மரபின் வந்து புண்ணியம் மரபு பூண்டாய்
வலத்து இயல்பு அன்று மாயாப் பழி கொள மறுகுவாயோ”
(இராவணன் சோகப்படலம் 31 83)
வாலியின் கூற்று
சுக்ரீவன், வாலியிடம் சண்டைக்கு வருமாறு அறை கூவல் விடுத்த போது, தாரை வாலியிடம், சுக்ரீவன் முன்பு உன் தோள் வலிக்குத் தோற்று ஓடியவன். இன்று திரும்ப வந்து, உன்னுடன் போர் செய்வதற்கு வந்த செயலானது, வேறு பெருந்துணையை பெற்றுள்ளமையால் ஆகும் என்று கூறினாள். வாலி தன் பெருமையைக் குறித்துக் கூறி, தாரையைச் சமாதானப்படுத்தினான். அப்போது தாரை, அரசே இராமன் என்பவன் அந்தச் சுக்ரீவனுக்கு இனிய உயிர்த்துணைவனாய்ப் பொருந்தி, உன் உயிரைப் பறிப்பதற்காக வந்துள்ளான் என்று நம்மிடம் அன்புடையவர்கள் கூறினார்கள் என்று சொன்னாள். அவள் கூறியதைக் கேட்ட வாலி பாவியே, வருந்திய பெரிய இருவினைகளுக்கு அழிவு காணத்தக்க உபாயத்தைக் காண இயலாமல் நீயே வந்து அருள் செய்வாயாக என்று அழைத்து வருந்திய உலகத்துக்கு அற வழிகளை எல்லாம் தன் நடைமுறையில் செய்து காட்டிய இராமனுக்குப் பொருந்தாதவற்றை கூறி என்ன அபச்சாரம் செய்து விட்டாய் உன் பெண்மை இயல்புக்கு ஏற்ப இங்ஙனம் தவறு செய்து விட்டாய் என்று கூறினான்.
“உழைத்த வல் இரு வினைக்கு ஊறு கண்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம்
இழைத்தவர்க்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய்
பிழைத்தானை பாவி உன் பெண்மையால் என்றான்”
(வாலி வதைப்படலம் 257)
முடிவுரை
சங்க இலக்கிய காலத்திலேயே நன்னன் பெண்ணைக் கொலை செய்துள்ளான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.போர் நடைபெற இருக்கும் போது பெண்களுக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடாமல் இருக்க அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல ஆணையிட்டதையும் அறிந்து கொள்ளமுடிகிறது. கண்ணகி கோபத்தில் மதுரையை எறித்தபோதும் பெண்களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படக்கூடாது என்கிறாள். கம்பராமாயணத்திலும் பெண்களைக் கொலை செய்யக்கூடாது என்று இராமன், இலட்சுமணன், அனுமன், தசரதன்,இராவணன், அமைச்சர் மகோதரன், வாலி போன்றோர் எண்ணியதையும் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது. இருப்பினும் அனுமன் அங்காரதாரையையும், திருமால் கியாதியையும், இந்திரன் குமுதியையும் கொலை செய்தனர் என்பதையும் நாம் கம்பராமாயணத்தின் வழி அறிந்து கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
ஆலிஸ்.அ,பதிற்றுப்பத்து மூலமும் உரையும்,நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை2004.
பாலசுப்பிரமணியன்.கு.வெ, நற்றிணை மூலமும் உரையும்,நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை2004.
நாகராசன்.வி, குறுந்தொகை மூலமும் உரையும்,நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை2004.
பாலசுப்பிரமணியன்.கு.வெ, புறநானூறு மூலமும் உரையும்,நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை2004.
பூவண்ணன், கம்பராமாயணம் தொகுதி 1,2,3,4,5,6,7,8 வர்த்தமானன் பதிப்பகம் சென்னை 2004.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.