ஆய்வுச் சுருக்கம்
தன்னுடைய காதலன் கோவலன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்ட மாதவி தான் துறவு மேற்கொண்டதோடு தன்னுடைய மகள் மணிமேகலையையும் துறவியாக மாற்றினாள். வைணவம், சைவம், சமணம் எனப் பல மதங்கள் இருந்த நிலையில் குறிப்பாக கோவலன் சமண சமயத்தைப் பின்பற்றுபவனாக இருந்த நிலையில் ஏன் அவள் துறவிற்குப் பௌத்தத்தைத் தேர்வு செய்தாள் என்ற வினா இங்கு எழுகிறது. அத்துடன், மாதவி பௌத்த துறவியாக மாறினாள் பௌத்த சமயத்தினுடைய கருத்துக்களைத் தெரிந்து கொண்டாள். தன்னுடைய வாழ்க்கை முழுவதும் ஒரு பௌத்த துறவியாகவே வாழ்ந்து இறந்து (அல்லது முக்தி அடைந்தாள்) போனாள் என்று இல்லாமல் அவள் பௌத்த துறவியாக மாறிய பின்னணியில் அவளிடம் ஏன் அமுதசுரபி என்ற பாத்திரம் வந்து சேருகிறது? அந்தப் பாத்திரத்தைக் கொண்டு அவள் ஏன் மக்களுடைய பசிப்பிணியைப் போக்குகிற அறப்பணியை மேற்கொண்டாள்? என்ற கேள்விகளும் எழுகின்றன.
மேலும், அமுதசுரபி என்ற பாத்திரம் பார்ப்பனர்களால் ஆபுத்திரனது உணவுப் பாத்திரத்தில் கல் போட்டுத் துரத்தப்பட்ட பின்னர் அவனுக்கு சிந்தாதேவி என்ற பெண் தெய்வத்தால் கொடுக்கப்பட்டது என்பதும், அப்படிக் கிடைத்த அந்தப் பாத்திரந்தான் மணிமேகலைக்கு மணிபல்லவத் தீவில் உள்ள கோமுகிப் பொய்கையில் கிடைத்தது என்பதும் முக்கியமாக கவனிக்கத்தக்கன. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கிறபொழுது ஏன் இந்த தொடர்ச்சியான செயல்பாடுகள் எல்லாம் நிகழ்ந்தன என்பதும் அவற்றைக் காப்பிய ஆசிரியர் கூறுவதற்கான நோக்கம் என்ன? என்பது குறித்தும் நாம் விரிவாக ஆராய வேண்டி உள்ளன. அத்தகைய ஒரு விரிவான தேடலை முன்வைக்கிறது இக்கட்டுரை.
திறவுச்சொற்கள்
சிலப்பதிகாரம், மணிமேகலை, இரட்டைக் காப்பியங்கள், கோவலன், கண்ணகி, மாடலமறையோன், கவுந்தியடிகள். மணிமேகலை துறவு, சமய அரசியல்.
முன்னுரை
தன்னுடைய காதலன் கோவலன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்ட மாதவி தான் துறவு மேற்கொண்டதோடு தன்னுடைய மகள் மணிமேகலையும் துறவியாக மாற்றினாள் என்பது சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள செய்தி. அதாவது, கணிகையர் குலத்தைச் சார்ந்தவளான மாதவி மற்ற பெண்களைப் போலக் கணிகையராகவே வாழ விரும்பாமல் கணிகையர் குலத்தில் இருந்து விலக விரும்பினாள். தன்னைப் போன்ற ஒரு நிலைமை எதிர்காலத்தில் தன்னுடைய மகளுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என நினைத்தாள். அதனால்தான் தன்னுடன் சேர்த்து தன் மகளையும் துறவியாக மாற்றினாள்.
இப்படி இருவரும் துறவியாக மாறியது சரிதான். அனால், சிக்கல் என்னவென்றால், அவள் துறவியாக மாறிய அல்லது ஏற்றுக் கொண்ட பௌத்த சமயம்தான். வைணவம், சைவம், சமணம் எனப் பல மதங்கள் இருந்த நிலையில் குறிப்பாக கோவலன் சமண சமயத்தைப் பின்பற்றுபவனாக இருந்த நிலையில் ஏன் அவள் துறவிற்குப் பௌத்தத்தைத் தேர்வு செய்தாள் என்ற வினா இங்கு இயல்பாக எழுவது தவிர்க்க முடியாத ஒன்று.
அத்துடன், மாதவி பௌத்த துறவியாக மாறினாள் பௌத்த சமயத்தினுடைய கருத்துக்களைத் தெரிந்து கொண்டாள். தன்னுடைய வாழ்க்கை முழுவதும் ஒரு பௌத்த துறவியாகவே வாழ்ந்து இறந்து (அல்லது முக்தி அடைந்தாள்) போனாள் என்று இல்லாமல் அவள் பௌத்த துறவியாக மாறிய பின்னணியில் அவளிடம் ஏன் அமுதசுரபி என்ற பாத்திரம் வந்து சேருகிறது? அந்தப் பாத்திரத்தைக் கொண்டு அவள் ஏன் மக்களுடைய பசிப்பிணியைப் போக்குகிற அறப்பணியை மேற்கொண்டாள்? என்ற கேள்விகளும் எழுகின்றன. இவை ஒரு புறம் இருக்க, மறுபுறம் அவ்வாறான அவளது துறவு வாழ்க்கை நடைமுறையை நோக்கி நகர்ந்த வேளைகளில் அவள் சந்தித்த நபர்கள், அவ்வாறு சந்தித்த அவர்களுக்கும் மணிமேகலைக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல்கள், அந்த உரையாடல்களின் தொடர்ச்சியாக அறிவு சார்ந்த கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்ததன் பின்புலங்கள் என இவை எல்லாம் நாம் கவனம் செலுத்தக்க கூடியனவாக உள்ளன.
மேலும், அமுதசுரபி என்ற பாத்திரம் பார்ப்பனர்களால் உணவுப் பாத்திரத்தில் கல் போட்டுத் துரத்தப்பட்ட ஆபத்திரனுக்குச் சிந்தாதேவி என்ற பெண் தெய்வத்தால் கொடுக்கப்பட்டது என்பதும், அப்படிக் கிடைத்த அந்தப் பாத்திரந்தான் மணிமேகலைக்கு மணிபல்லவத் தீவில் உள்ள கோமுகிப் பொய்கையில் கிடைத்தது என்பதும் முக்கியமாக கவனிக்கத்தக்கன. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கிறபொழுது ஏன் இந்த தொடர்ச்சியான செயல்பாடுகள் எல்லாம் நிகழ்ந்தன என்பதும் அவற்றை காப்பிய ஆசிரியர் கூறுவதற்கான நோக்கம் என்ன? என்பது குறித்தும் நாம் விரிவாக ஆராய வேண்டி உள்ளன. அத்தகைய ஒரு விரிவான தேடலை முன்வைக்கிறது இக்கட்டுரை.
மணிமேகலை அறவண அடிகள் சந்திப்பு -1
மணிபல்லவத் தீவில் அமுத சுரபியைப் பெற்றதுடன் முற்பிறவி குறித்தும் அறிந்துகொள்ளும் மணிமேகலை அறவண அடிகளை சந்திக்கிறாள். புத்து தேவன் போதனைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்று சென்றவளிடம், ‘...மடக் கொடியே! அந்த நாளில் பிறக்கும் புத்த தேவன் அருளிய அறவுரையைக் கேட்போர் துன்பமளிக்கும் மக்கட் பிறவியைக் கடவாதவர் ஆவர். ஆதலால் போதி மரத்தடியில் அமர்ந்து மெய்யறிவு பெற்ற சிறப்பமைந்த புத்ததேவனின் இணையடிகளைக் குற்றம் அற்று வணங்கிப் போற்றுவதைப் பிறவிதோறும் நான் மறவேன். மாதே! உன் நல்வினையால் விளையும் பல நலங்கள் இந்நகரில் நிகழும் பூங்கொடிப் பாவாய்! அந்தப் பயன்கள் அவ்வாறு நிகழ்ந்த பின்னரல்லாமல் நான் கூறும் அறவுரை உன் மனத்தில் இப்பொழுது பதியாது. உன்னோடு இருக்கும் இவ்இருவரும் முற்பிறப்பில் அருந்துயர் நீக்கும் புத்ததேவனின் போதி மரத்தின் அடியில் அமர்ந்து ஞானோதயம் அடைந்த புத்த தேவனின் திருந்திய அடிகளை உன்னுடன் வலம் கொண்டு தொழுது வினைப் பற்று நீங்கி மாசற்ற சீரிய வழியிலேயே செல்வர். அதை நீ காண்பாய்! (மணிமேகலை 12:106 -113) என்று கூறும் அறவண அடிகள் அதன் பின்னர், ‘உயிர்களைப் பாதுகாக்கும் அருமருந்தாகிய உணவைச் சுரக்கும் அமுதசுரபி என்னும் மாபெரும் பாத்திரத்தை நீ பெற்றிருகிறாய். மக்கள் தேவர் என்ற இரு சாரார்க்கும் ஒத்த முடிவு உடைய பொது அறம் ஒன்று கூறுகிறேன். அவர்களுடைய பசிப்பிணியைச் தீர்ப்பாயாக.! இதுவே நான் கூறும் அறநெறி" (மணிமேகலை 12: 114-119) என்கிறார்.
இந்தப் பின்னணியில்தான் மணிமேகலைக்கு ஆபுத்திரன் வரலாறு சொல்லப்படுகிறது. அதுவும் அறவணஅடிகள் சொல்வதாக காப்பியத்தில் உள்ளது.
ஆபுத்திரன் வரலாறு வாரணாசியில் தொடங்கி மணிப்பல்லவத் தீவில் முடிவடைகிறது. வாரணாசி பார்ப்பன பெண்ணான சாலி (கற்பொழுக்கம் கெட்ட) தென்திசையில் நீராட வருகிறாள். அங்குக் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்த குழந்தை 7 நாட்கள் ஒரு பசுவினால் காக்கப்படுகிறது. இளம்பூதி என்ற பார்ப்பனன் அந்தக் குழந்தையை எடுத்துச் சென்று இவன் ஆ மகன் இல்லை. தன்மகன் என்று வளர்க்கிறான். அக்குழந்தைக்கு வேத கல்வியை முழுமையாகச் சொல்லிக் கொடுக்கிறான். முழுமையான ஒரு பார்ப்பனாக வளர்ந்து நிற்கின்ற அவன்தான் வேள்விக்காகக் கொல்லப்பட இருக்கும் ஒரு பசுவைக் காக்க போராடிப் பார்பனர்களால் வயநாடு என்ற அந்த ஊரில் இருந்து ‘இவன் ஓர் ஆ மகன்’ என்று பழிச்சொல் சுமத்தி அவனது பிச்சைப் பாத்திரத்தில் கல்லைப் போட்டு அங்கிருந்து துரத்துகிறார்கள். அதனால் அங்கிருந்து தென்மதுரை சென்றடைகின்றன். அங்குப் பிச்சை எடுத்து அதில் கிடைத்த உணவை மற்றவர்களுக்குக் கொடுத்து அவ்வுணவை உண்ட அவர்களின் மகிழ்ச்சியியைக் கண்டு மகிழ்கிறான். இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிற வேளையில் ஒருநாள் இரவு வேளை வறியவர்களுக்கு உணவு அளிக்க இயலாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிற பொழுது அவனது முன் சிந்தாதேவி என்ற தெய்வம் தோன்றி அமுதசுரபியைக் கொடுக்கிறது. அமுத சுரபியைப் பெற்ற அவன் அனைவருக்கும் உணவு கொடுத்து அதன் மூலம் பெறும் புகழை அடைகிறான்.
அவனது புகழை அறிந்த இந்திரன் அவனுக்கு வரம் கொடுக்க வருகிறான். மக்களுடைய பசித் துன்பத்தைப் போக்கி அதில் அவர்கள் அடையும் ஆனந்தத்தைக் காண்பதை விட மேலான என்ன இன்பத்தை உங்களால் எனக்கு வரமாக கொடுத்து விட முடியும்? என்று இந்திரனை அவனது வரம் கொடுக்கும் பண்பை மறுத்து விடுகிறான். அதனால் கோபமடைந்த இந்திரன் மதுரை நகரை பெருமழையால் வளப்படுத்துகிறான். அங்கு உணவு வேண்டுவோர் யாரும் இல்லாத காரணத்தினால் வருந்தும் ஆபுத்திரனுக்குச் ‘சாவக நாட்டில் உணவின்றி வறுமையோடு மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்ற செய்தி தெரியவருகிறது. அங்கிருந்து சாவக நாட்டை நோக்கி மரக் களத்தில் செல்லுகிறான். செல்லும் வழியில் மணிபல்லவத் தீவில் இறங்கி இருந்த பொழுது அவனும் அந்த மரக்கலத்தில் ஏறி விட்டான் என்று நினைத்து இரவோடு இரவாக மரக்கலம் சென்று விட அந்த மணிபல்லவத்தீவில் யாரும் இல்லாத காரணத்தினால் உணவைத் தான் மட்டுமே உண்டு வாழ வேண்டுமா என்ற அந்தச் செயலை அவமானமாகக் கருதி அந்தப் பாத்திரத்தை அங்குள்ள பொய்கையில் வீசி எறிந்து விட்டு உண்ணா நோன்பு இருந்து இறந்து விடுகிறான். பிறரது துன்பத்தைப் போக்குவதைத் தன் வாழ்க்கையின் நோக்கமாக கொண்ட அவன் மறுபிறப்பில் சாவக நாட்டின் அரசகுமாரனாகப் பிறந்து அரசனாக மாறுகிறான். இஃது அறவண அடிகள் மணிமேகலைக்குக் கூறிய ஆபுத்திரனது வரலாறு.
அறவண அடிகள் மூலம் சொல்லப்படும் மேற்கண்ட ஆபுத்திரனது (வரலாறு) கதையில் நாம் கவனம் செலுத்தக்கூடிய பகுதிகள் சில உள்ளன. அவை,
ஒன்று - ஆபத்திரன் பார்ப்பனப் பின்புலத்தில் வளர்ந்தாலும் அவன் பார்ப்பனன் இல்லை. பார்ப்பனர்கள் செய்த பசுவைக் கொன்று செய்யும் வேள்வியை எதிர்க்கிறான். அதாவது பார்ப்பனர்களின் தவறான சிந்தனைகளுக்கு எதிரான மாற்றுக் குரலை அவன் எழுப்புகிறான். ஆனால் அவனது அந்தக் குரல் எடுபடாமல் பார்ப்பனர்களால் நசுக்கப்படுகிறது.
இரண்டாவது - தென் மதுரையில் அமுத சுரபி மூலம் (கொடை உள்ளத்தால்) பெரும் புகழைப் பெற்றாலும் வானவர்களின் தலைவன் என்ற இந்திரன் பின்புலத்தில் அங்கிருந்து துரத்தப்படுகிறான்.
இந்த இரண்டு செய்திகளையும் நாம் ஒன்றிணைத்துப் பார்க்க வேண்டி உள்ளது. மேலும் ‘புகார் நகரில் நல்லுயிர் எல்லாம் இன்பமின்றி வருந்த வறுமை காலம் உண்டாகியது. வெண்ணிற அலைகளை உடைய பாற்கடல் தந்த அமுதத்தை வானோர் தாம் உண்டு கழித்து எஞ்சியதைப் பயன்படுத்தாது வறிதே வைத்தனர். வறுமை பரவி இருக்கும் இவ்வுலகில் கொடிய பசித்துன்பத்தை நீக்கவல்ல அறம் தழைக்கும் திருவோட்டைப் பயன்படுத்தாது வைத்தல் வானவர் செயலை போல தகுதியற்ற செயலாகும்’ என்று அறவண அடிகள் மணிமேகலையிடம் கூறியுள்ளதையும் குறிப்பாக, அதை ஆபுத்திரன் வரலாற்றைக் கூறிய பின்னணியில் கூறியுள்ளர் என்பதும் கவனிக்கத்தக்கது.
தென் மதுரையில் இருந்து ஆபுத்திரன் துரத்தப்படுகிறான். மணிபல்லவத்தீவில் அவன் வாழ்க்கை முடிவடைகிறது. மணிபல்லவத் தீவில் இருந்த பொய்கையில் இருந்து கிடைத்த (ஆபுத்திரன் வீசி எறிந்த அமுதசுரபி) அட்சய பாத்திரத்தைக் கொண்டு மணிமேகலை புகார் நகரை அடைகிறாள். புகார் நகரில் வறுமைவுற்றிருக்கின்ற மக்களின் பசிப்பினையைப் போக்குகிறாள் என்பதான இந்த இரண்டின் இடையிலான உறவின் பின்னணி பார்ப்பன ஆதிக்க குரலுக்கான எதிர் குரலாக அமைந்துள்ளதாக உணர முடிகிறது.
மதுரையில் இருந்து ஆபுத்திரன் துரத்தப்படுவதன் பின்னணியில் இந்திரன் சுட்டப்படுவதும் புகாரியில் உள்ள மக்களின் வறுமையை அமுதம் உண்ட தேவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மணிமேகலை அங்குச் செல்ல வேண்டும் என்று அரவண அடிகள் கூறுவதுமாமான இந்த இணைவு என்பது ஆபுத்திரனையும் மணிமேகலையும் ஒன்றிணைக்கின்ற புள்ளிகளாக இருக்கின்றன. அஃதாவது, ஆபுத்திரனுடைய வீழ்ச்சி மணிமேகலையின் எழுச்சியாக இங்கிருந்து ஆரம்பம் ஆகிறது எனலாம்.
மேலும், ஆபுத்திரனுக்கு அமுதசுரபியானது சிந்தாதேவியின் மூலம் கிடைத்தது. மணிமேகலைக்கு அந்த அமுத சுரபியானது மணிபல்லவத் தீவில் கோமுகி பொய்கையில் கிடைத்தது. இவ்வாறு இரண்டு பேருக்கும் அமுதசுரபி கிடைத்ததில் ஓர் ஒற்றுமையை நாம் பார்க்க முடிகிறது. அஃதாவது, அமுதசுரபி என்ற அந்த அட்சய பாத்திரம் இருவரும் இருவரும் விரும்பாத நிலையில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஏனெனில், ஆபுத்திரனும் அமுதசுரபி வேண்டும் என்று தவம் கிடக்கவில்லை. மணிமேகலையும் அமுதசுரபி வேண்டும் என்று தவம் கிடக்கவில்லை. ஆனால் இருவரையும் இணைத்த புள்ளி என்பது அவர்கள் உயிர்கள் மேல் கொண்ட அன்பு என்ற ஒன்றுதான் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
மணிமேகலை அறவண அடிகள் சந்திப்பு - 2
அறவண அடிகளிடமிருந்த விடைபெற்றுக் கொண்டு புகார் நொக்கிப் புறப்பட்டுச் சென்றவளுக்கு உணவளிக்கும் செயலை எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வி எழுகிறது. அப்போது ஆதிரை - சாதுவன் வரலாறு அவளுக்குச் சொல்லப்படுகிறது. அமுதசுரபியில் யாரிடமிருந்து பிச்சையைப் பெறுவது என்ற கேள்வி எழுந்த நிலையில் காயசண்டிகையால் இந்த வரலாறு சொல்லப்படுகிறது.
சாதுவன் என்பவன் கற்பொழுக்கம் கெட்டவனாக இருந்து மனம் திருந்தி மீண்டும் நல்லொழுக்கம் உடையவனாக மாறிப் பொருளீட்டச் சொல்வதும், மரக்கலும் உடைந்ததால் நாகர் வாழும் தீவில் சிக்கிக் கொள்வதும், பிறகு நாகர்களிடம் இருந்து தப்பித்ததோடு இல்லாமல் நாகர்களுக்கு அறவுரை கூறுவது என்பன இந்த அட்சய பாத்திரத்தோடும் மணிமேகலையின் துறவு என்பதோடும் இணைவதைப் பார்க்க முடிகிறது.
‘’நாகர் தலைவ! சினம் கொள்ளாமல் கேள்! உடம்பில் உயிர் வாழும் போது உடல் தனக்கு நேர்வதை உணரும்; அதனிடமிருந்த உயிர் பிரிந்து விட்டால் அதை வெட்டித் தீயில் எரித்தாலும் அதே உடல் தனக்கு நேர்வதை உணராது. இதிலிருந்து அவ்வுடம்பிலிருந்து பிரிந்து சென்றது ஒன்று உண்டு என்பதை நீ அறிவாய். அதுதான் உயிர். மேலும் ஓரிடத்தை விட்டுச் செல்கின்றோர்க்குப் பிறிதொரு போகுமிடம் உண்டு என்பதை நான் மட்டுமல்ல. யாவரும் அறிவார்கள். அத்துடன் மனித உடம்பு இருந்த இடத்திலேயே இருக்க அதனுடைய உயிர் பல காதங்கள் கடந்து நெடுந்தூரம் செல்லும் என்பதைக் கனவிலும் காணமுடியும். ஆகவே அவ்வாறு சென்ற உயிர் தன் வினைப்பயனை நுகர்வதற்கு உரிய வேறோர் உடலில் புகும். இதைத் தெளிவாக அறிந்து கொள்வாயாக!" (மணிமேகலை 16:95-104)
என்று நாகர் தலைவனுக்குச் சாதுவன் அறிவுரை கூறுகிறான். அதைக் கேட்டு எப்போதும் சினத்தோடு இருப்பதால் தீப்போலச் சிவந்து விளங்கும் கண்களையுடைய நாகர் தலைவன். நல்ல அறங்களை அறிந்த சாதுவன் நல்லடியில் விழுந்து வணங்கினான்.
"கள்ளையும் ஊனையும் கைவிட்டால் இவ்வுடம்பில் தங்கி வாழும் உயிரைப் பாதுகாக்கும் வகை அறியேன்! உயிர்களுக்கு என்று அறுதியிட்ட முறைமையால் நாங்கள் இறக்கும்வரை செய்யத்தக்க எமக்கேற்ற நல் அறங்களை எடுத்துக் கூறுக!" (மணிமேகலை 16:108-111) என்றான்.
"நன்றாகச் சொன்னாய்! நீ நல்வழிச் செல்வாய்! அறம் செய்வதற்கு உன்னால் இயலக்கூடிய வழியைச் சொல்லுவேன்! மரக்கலம் உடைந்து உயிர் பிழைத்த மக்கள் இத்தீவுக்கு வந்தால் அவர்களைக் கொல்லாது அவருயிரைப் பாதுகாப்பாயாக! முதுமை அடைந்து தாமாகவே இறக்கும் விலங்குகளைத் தவிர வேறு எவ்வுயிர்க்கும்' தீங்கு செய்யற்" (மணிமேகலை 16:-112-116)
என்று சாதுவன் அவனுக்கேற்ற அறவுரை கூறினான். அந்த அறிவுரைகளைக் கேட்ட நாகர் தலைவன் ’இனி மரக்கலம் உடைந்து கடலில் தத்தளிக்கும் மனிதர்களை உண்ண மாட்டேன்’’ என்று உறுதி மொழியைத் தருவதோடு இதுனால்வரை மரக்கலம் உடைந்து இறந்தவர்களிடமிருந்து பெற்ற பெரும் செல்வத்தைச் சாதுவனிடம் கொடுத்து அனுப்புகிறான்.
அவ்வாறு கிடைத்த பெருஞ்செல்வத்தைக் கொண்டு ஆதிரையும் - சாதுவனும் நல் அறங்களைச் செய்து இனிதாக வாழ்ந்து வருகிறார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆதிரையின் கையால் நீ பிச்சை பெருவயாக! என்று காயசண்டிகையின் மூலமாக மணிமேகலைக்கு செய்தி சொல்லப்படுவது. இது மணிமேகலை இன்னும் பௌத்த சிந்தனையை உள்வாங்குவதற்குத் தயாராகவில்லை என்ற அறவண அடிகளின் கருத்தின் தொடர்ச்சியாக அமைகிறது. மேலும், அவள் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கான பயணத்தின் முதல் படியாக ஆதிரை - சாதுவன் பின்புலம் அவளுக்குச் சொல்லப்படுவதாக நாம் உணர முடிகிறது. அதனைத் தொடர்ந்து அவளது பயணத்தில் அடுத்தடுத்து பௌத்த கருத்துக்கள் வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது.
குறிப்பாக, காயசண்டிகை சாபம் பெற்ற நிகழ்வைக் கூறலாம். முனிவன் உண்ண வைத்திருந்த நெல்லிக்கனியைத் பார்க்காமல் தவறுதலாக மிதித்ததன் காரணமாக யானை தீ நோயால் பாதிக்கப்படுவதுடன் ஆகாயத்தில் பறக்கும் சக்தியையும் இழக்கிறாள் அவள். அஃது ஒரு முப்புரி அணிந்த ஓர் அந்தணன் பின்புலத்தில் நிகழ்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், சாரணர் போல் கவுந்தி அந்தரத்தில் பறக்கும் ஆற்றல் பெறவில்லை என்று சிலம்பில் கூறப்பட்டுள்ளதையும் சுதமதி தன்னுடைய தந்தையின் உயிரைக் காக்கத்தயாராக இல்லாததால் சமண சமயத்தில் இருந்து விலகி பௌத்த சமயத்தைத் தழுவினாள் என்பதையும் இங்கு இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளன.
அடுத்ததாக சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்ற முயன்றபொழுது வெளிப்படும் சில கருத்துக்களை இங்குப் பார்ப்பது அவசியமாகிறது.
ஒன்று - கிள்ளிவளவன் திருமாலின் வாமன அவதாரத்தின் வழி தோன்ற என்றும் இந்திரன் போன்றவன் என்றும் அவன் வெண்கடம்ப மரத்தைக் கண்ணன் தன் முன்னவன் என்று நினைத்து வணங்கினான் என்றும் குறிப்பிட்டுள்ள இந்தப் பின்புலத்தில் அவனை மணிமேகலை சென்று சந்திக்கிறாள். அவ்வாறு சந்திக்கும் அவள் சிறையில் இருந்தவர்களுக்கு உணவளித்ததுடன் அங்குப் புத்த தேவனின் திருக்கோயில் ஒருபுறமும் தவச்சாலை ஒருபுறமும் உருவாக்குகிறாள் என்ற இந்த முரண்களை நாம் இணைத்து பார்க்க வேண்டி உள்ளது.
அடுத்ததாக, அருந்தவ முனிவர்கள் உதயணன் இறப்பு குறித்த செய்தியை மன்னனிடம் கூறுகிற பொழுது இரண்டு கருத்துக்களை கதைகளாக சொல்லுவதை நாம் கவனிக்க முடிகிறது. ஒன்று - பரசுராமன் அரசர் அல்லாதவர்களைச் கொல்ல மாட்டேன் என்ற உறுதியை கொண்டு இருக்கிறான் என்று கூற வருகிற இடத்தில் பிறப்பின் அடிப்படையில் தான் மன்னனாக முடியும் என்ற கருத்தை வெளிப்படுத்துவது.
இரண்டு - பிறப்பின் அடிப்படையிலான தர்மத்தை காப்பதற்காக ககந்தனை அவனுடைய தந்தை காந்தனே வெட்டிக் கொன்ற செய்தி.
மூன்று - பார்ப்பனர்கள் கூறினார்கள் என்ற ஒரே காரணத்தினால் தர்மதத்தன் என்பவன் தன்னுடைய மாமன் மகள் விசாகையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முதிய வயதில் புகார் நகருக்குத் திரும்பி வந்து அவளைத் திருமணம் செய்ய முயல்வது. ஆனால் அவள் இந்தப் பிறவியில் தான் தன் அவனைத் (மாமனை) திருமணம் செய்துகொள்ளமாட்டேன். அடுத்த பிறவியில் தான் திருமணம் செய்துகொளவேன் எனத் திடமாக மறுத்துவிடுவது என்ற இந்த மூன்று செய்திகள் கவனத்தில் கொள்ள தக்கன.
மணிமேகலை சிறையில் இருப்பவர்களுக்கு உணவளிக்க செல்லுகிற பொழுது மன்னன் கிள்ளிவளவன் பின்புலத்தில் இடம்பெற்றுள்ள மேற்கண்ட செய்திகளும் உதயணன் இறந்த செய்தியை மன்னனிடம் சொல்வதற்காக அருந்தவ முனிவர்கள் சொல்லுகிற கதைகளில் இடம்பெற்றுள்ள செய்திகளின் பின்புலமும் பார்ப்பனர்களின் அதிகாரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளன. மேலும் பிறப்பு அடிப்படைய்யிலான (நான்கு வகை வர்ணம்) பிரிவனையும் சொல்லப்பட்டுள்ளது.
இந்தப் பின்புலத்தில் நாம் மணிமேகலையின் அடுத்தடுத்த நகர்வுகளில் வெளிப்படும் கருத்துக்கள் குறித்துப் பார்ப்பது அவசியமாகிறது. தன்னைப் பின்தொடரும் உதயணனிடம் அடுத்தடுத்து இரண்டு முறை அவள் அறிவுரை கூறுவதாக நாம் பார்க்க முடிகிறது.
ஒன்று – ‘’உண்மைப் பொருள் அறிந்தவர்களின் கேள்விகளால் துளைக்கப்பட்ட செவியுடையவனாக நீ ஆகுவையாயின் நீ கேட்டதற்கு மறு மொழி கூறுவேன். பிறப்பதும், நாட்செல்ல கிழப்பருவம் அடைவதும், நோய் வாய்ப்பட்டு வருந்துவதும். இறந்து போவதும் உடையது இந்த உடம்பு. இது துன்பத்திற்குக் கொள்கலமானது. இதன் இயல்பு இதுவெனத் தெரிந்தேன்; இதன் பயன் இன்மையை உணர்ந்தேன். ஆகவே, மிக்க நன்மை தரும் துறவறத்தை விரும்பி மேற்கொண்டேன்! வெஞ்சமரில் பகைவரை ஆழிக்கும் யானை போன்ற வீரமகனுக்கு என் போன்ற மகளிர் கூறத்தக்க பேரறிவுரையும் உண்டோ? நான் கூறியதைக் கேட்பாய்! இனி நீ விரும்பியதைச் செய்க!" ( மணிமேகலை18:134 -1 42) என்ற முதல் அறிவுரை.
இரண்டு – ‘’தன் அழகின் மீது பெருவிருப்பம் கொண்ட உதயணனுக்கு இளமையின் நிலையற்ற தன்மையை உணர்த்த விரும்பிய அவள், ‘’நரைத்த தலை மயிருடைய வயது முதிர்ந்த கிழவி ஒருத்தியைச் சுட்டிக் காட்டினாள். அரசினங்குமர! இவளுக்கு முன்பு... இளமை இருந்தது. அழகு இருந்தது. ஆனால் பின்பு குளிர்ச்சி பொருந்திய மக்குமணல் போன்றிருந்த நிறம் திரிந்து வேறாய வெண்மையான மணல் போல் நரைத்த கூந்தலைக் காண்பாய்! முன்பு பிறை போன்ற வடிவுடைய நெற்றி வெண்மையாக நரைத்துத் திரைத்த தோலினால் அழகிழந்திருக்கும் இயல்பைக் காண்பாய்! சுருங்கி இருப்பன பாராய்! செங்கழுநீர் மலர்போல் இருந்த கண்கள் வழுவாகிய நீரைச் சுமப்பன காண்பாய்! குமிழம் பூப் போன்றிருந்த மூக்கு வெறுக்கத் தக்க சீயைச் சொரிவது பாராய்! வரிசையாக அமைந்திருந்த முத்துக்கள் போன்ற பற்களும் சுரை விதையைப் போல் பிறழ்ந்து வேறுபட்டன காண்பாய்! இலவம் பூவின் இதழ்போல் திகழ்ந்த செவ்வாய் புலால் நாற்றமடிக்கும் புண்ணைப் போலத் தீ நாற்றம் வெளியிடுவதைப் பாராய்! வள்ளைத் தண்டு போல் வடிந்திருந்த காதுகள் உள்ளிருந்த ஊன் வாடிய வற்றலைப் போல் காய்ந்து சுருங்கியிருப்பன காணாய்! வியப்பு விளைவித்த கொங்கைகள் வெறும் பை போலத் தொய்ந்து வீழ்ந்து மாறுபட்டன. பாராய்!. இளைய மூங்கில் போன்ற தோள்கள் தாழ்ந்து ஒடிந்த தென்னை மடல்போல் திரங்கி வீழ்ந்தன காண்பாய்! நரம்பும் தோலும் நகத்தின் தொடர்ச்சியிலிருந்து கழன்று விடுபடத்திரங்கிய விரல்களைப் பாராய்! வாழைத் தண்டுபோல் தழைத்திருந்த துடைகள் இரண்டும் தாழைத் தண்டுபோல் வற்றியிருப்பன காணாய்! அம்புப் புட்டிலைப் போன்ற கனைக்கால்கள் தம்மிடம் பொருந்திய எலும்பும் தோலும் வெளிப்புறத்தே காட்டுவன காணாய்! இளந்தார் போல் திருந்தி விளங்கிய மெல்லடிகளின் செவ்வியும் வண்ணமும் முற்றிய தென்னையின் உலர்ந்து உதிர்ந்த காயைப்போல் வற்றி வறண்டு இருப்பதைப் பாராய்! ஒவ்வோர் உறுப்பும் புறத்தே அழகாக இருப்பினும் உள்ளே அருவெறுக்கத்தக்க கோலத்தில் இருப்பது. மனித உடம்பின் புலால் நாற்றத்தை மலராலும் சந்தனத்தாலும் மறைத்து, அதன் மேல் எழும் வெறுப்பை ஆடையாலும் அணிகலனாலும் மாற்றி ஆசை எழச்செய்ய பழங்காலம் முதலே முன்னோர் வகுத்த வஞ்சத்தைத் தெரிந்துகொள் இளவரசே!" (மணிமேகலை 20:38- 70) என்று காயசண்டிகை உருவில் இருந்த மணிமேகலை இரண்டாவது முறை அறிவுரை கூறினாள்.
இவ்வாறு முற்பிறப்பு அறிந்தவளாக, ஆகாயத்தில் பறக்கக் கூடியவளாக, வேறொருவர் (காயசண்டிகையின்) உருவில் இருக்கக் கூடியவளாக என்ற பின்புலத்தில் அவள் அறிவுரைகள் பல கூறினாள். என்றாலும் உதயணன் இறந்தான் என்பதை அறிந்து துடித்துப் போகிறாள்.
''காதல! முற்பிறப்பில் விழியால் நஞ்சைக் கக்கும் நச்சுப் பாம்பு தீண்டி உன்னுயிர் பிரிந்த நாளில் ஈமத்தீயில் என்னுயிரைக் கொளுத்தினேன். இப்பிறப்பில் உவவனத்தில் உன்னிடம் சென்றமனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் என் குலதெய்வம் மணிமேகலா தெய்வம் தோன்றி என்னை மணிபல்லவத் தீவுக்கு எடுத்துச் சென்றது; பற்றற்ற முனிவன் புத்த பெருமானின் திருவடிப் பீடிகையைக் கண்டேன்; என் முற்பிறப்பு உணர்ந்தேன்.மணி மேகலா தெய்வம் மீண்டும் தோன்றி உன் பிறப்பு அனைத்தும் எனக்குத் தவறாது கூறியது. 'பிறந்தோர் இறப்பதும்; இறந்தோர் பிறப்பதும் உலக இயற்கை. அறம் இன்பமும் தரும் பாவம். துன்பத்தைக் கொடுக்கும்" என்று நான் உனக்கு அறிவுறுத்தினேன். உன் தீய வினைகள் நீங்கவே நான் காயசண்டிகை உருவம் எடுத் தேன். விஞ்சையன் காஞ்சனன் மயங்கிச் சீற்றம் கொண்டான்; கூரிய வாளால் வெட்டிக் கொடுமை செய்தான், கொடிய ஊழ்வினை வந்து உருத்தலால் இறந்தனையோ? காதல!" (மணிமேகலை 21:10- 26) என்று துன்ப மொழிகளைக் கூறி மணிமேகலை நெட்டுயிர்த்துப் புலம்பினாள்; அழுதாள்; ஏங்கினாள்; பெருமூச்சு விட்டு எழுந்தாள். உதயகுமரன் அருகில் செல்வதற்காக நடந்தாள்.
அவளது துயர நிலையை அறிந்த அருந்தவ முனிவர்கள் ‘’செவ்வரி படர்ந்த நீண்ட கண்களையுடைய மணிமேகலை செல்லாதே! செல்லாதே! அல்லிமாலை அணிந்த அரசிளங்குமரனிடம் செல்லாதே! உனக்கு இவன் கணவனாக இருந்ததும், உன் மனத்திற்கு இனியவனான இவனுக்கு நீ மனைவியாகி இருந்தாலும் அறிந்த முற்பிறப்பில் மட்டும் அல்ல, அதற்கும் முந்தைய பலப்பல பிறப்புகளிலும் உண்டு. இவ்வாறு பல பிறப்புக்களில் தடுமாறும் பிறவியின் தோற்றம் துன்பத்தில் அழுந்த செய்யும். துன்பத்திலிருந்து மீட்சி பெற்று பிறவித் தொடரை அறுக்க முயலும் நீ கலங்காதே!" (மணிமேகலை 21: 27-36) என்ற அறவுரையைக் கேட்டுக் கலக்கம் விடுத்தாள்.
அதன் பிறகு, ‘’காந்திற் பாவை மணிமேகலைக்கு அடுத்து நடக்க இருக்கக்கூடிய எதிர்காலம் பற்றிய செய்திகளை விளக்கமாக எடுத்து சொல்லுகிறது. அவற்றையெல்லாம் கேட்ட மணிமேகலை தன் வீடு பெறும் எல்லையை அறிந்து வலையில் இருந்து விடுபட்ட மயிலைப் போல மயக்கம் தெளிந்தாள் (மணிமேகலை (21: 187- 190).
அதாவது, மணிமேகலை முற்பிறப்பு மட்டுமல்ல அடுத்த பிறப்பு குறித்தும் முக்தி அடைவதற்கான வழிவகைகள் குறித்தும் அறிவதன் மூலம் அவள் தெளிவடைவதாக இங்குச் சொல்லப்பட்டுள்ளது.
இந்த அனுபவங்கள்தான் பின்னர் இராசமாதேவியின் தந்த துன்பங்களை எல்லாம் பொறுத்துக் கொள்வதோடு அவளுக்கு அறவுரைகளையும் கூறுவதற்கான வலிமையைக் அவளுக்குக் கொடுத்தது.
‘பூங்கொடி நல்லாய்! நீ தகுதியற்றவை செய்தாய்! உன் மகன்
உதயகுமரன் சென்ற பிறவியில் என் கணவன்: நீலபதி என்னும்
அரசியின் வயிற்றில் பிறந்தவன்; மணம் கமழும் மாலை சூடிய
இராகுலன். அவனை விழியால் நஞ்சைக் கக்கும் பாம்பு தீண்டி
அவன் ஆருயிரைப் போக்கியது. அவன் இறந்த துயரத்தை ஆற்றாமல்
உயிர் வாழ விரும்பாத நான் என்னுயிரைத் தீயிலிட்டுச் சுட்டேன்
அப்போது நீ எங்கே இருந்து இளங்கோவிற்காக அழுதாய்?
இப்பொழுது இவனுக்காக அழுகிறாயே! நீ உன் மகனின் உடலுக்கு
அழுதாயோ? அல்லது உயிருக்கு அழுதாயோ? உடலின் பொருட்டு
அழுதால் அந்த உடல் புறங்காட்டில் வெந்து சாம்பலானதே; அதைப்
புறங்காட்டில் இட்டவர் நீங்கள் அல்லாமல் வேறு யார்? காணாத
உயிர்க்கு அழுதால், செய்த வினையின் காரணமாக அவ்வுயிர்
வினை வழிச் சென்று புகும் இடத்தைத் தெரிந்து உணர முடியுமா?
ஆராய்ந்து அணிந்த வளையல்களையுடைய தேவி! உன் மகனின்
உயிரிடத்து நீ அன்பு உடையவளாயின் எல்லா உயிர்களிடத்தும்
அன்பு காட்டி இரக்கம் கொள்ள வேண்டும். அவ்வாறு எல்லா
உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினால் உன் மகன் உயிர்க்கும் அன்பு
செய்தவை ஆவாய்! ........ (மணிமேகலை 23 :66 - 79)
என்று கூறும் அவள், ‘’நங்கை நல்லாளே! பித்தேற்றும் மருந்து ஊட்டினாய்! மறுபிறப்பு அறிந்தவள் ஆதலால் அறிவு பிறழ்ந்து மறத்தல் இல்லாத அறிவுடையேன் ஆயினேன். காரிருள் செறிந்த இடையாமத்தில் கல்வி அறிவு இல்லாத கயவன் ஒருவன் என்னைக் கற்பழிக்க வந்த பொழுது ஆண்மகன் உருவம் எடுத்து இருந்தேன். உணவு தராமல் பட்டினி போட்டு என்னைக் கொல்ல நினைத்தாய்! பசி நீக்கும் மந்திரம் பெற்றவள் ஆதலின் நான் உன் வஞ்சத்திலிருந்து தப்பினேன். சென்ற பிறவியில் எனக்குக் கணவனாக இருந்தவனை நீ இப்பிறப்பில் பெற்ற தாய்! ஆதலால் உன்னுடைய கொடிய துன்பத்தை நீக்கக் கருதினேன். உன்னைத் துன்புறுத்தும் தீயவினையை ஒழித்து அமைதி தர விழைந்தேன். இக்கடமைகளைச் செய்து முடிக்க எண்ணியதாலேயே நான் வானில் பறந்து செல்வதையோ, வேற்றுருக்கொண்டு உன்னை வெருட்டவோ என் உள்ளத்தில் நினைக்கவில்லை’’ (மணிமேகலை23:91-99) என்றவள், காமத்தின் கொடுமை, கொலையின் தீமை, கள், களவு, பொய் ஆகிய ஐந்தின் தீமைகளையும் விளக்கிக் கூறியதோடு கல்வி கற்றல் ஒன்றே மனிதனாக இருப்பதற்கு சிறந்த வழி என்று கூறுவதோடு அவ்வாறு கற்ற கல்வியின் மூலம் சினத்தை அழித்தல், வறுமை உற்றவருக்கு உதவுதல், பசிப்பிணி போக்குதல், உயிர் அன்பு ஆகியவற்றின் வழியாக நீ உன்னுடைய மனத் தீயைப் போக்குவாயாக என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கிற வேளையில் அறவண அடிகள் அங்கு வருந்து சேருகிறார்.
இராசமாதேவி அவரைச் சென்று வரவேற்கிறபொழுது ‘அறிவு உண்டாக்கட்டும்’ என்று அவளை வாழ்த்துகிறார். அதன் பிறகு, இராசமாதேவியைப் (மாதவி, சுதமதி, சித்ராபதி உள்ளிட்டவர்கள் உடனிருக்க) பார்த்து பல்வேறு அறிவுரைகளைக் கூறும் அவர் ‘இதை நீங்கள் எல்லோரும் கேட்டு நடங்கள்’ என்று கூறி ‘மணிமேகலையைப் பார்த்து ‘நீ மறுபிறப்பு உணர்ந்தவள் பிற சமய கருத்துக்களைக் கேட்ட பிறகு உன்னிடம் வருவேன்’ என்று கூறுகிறார்.
இந்த உரையாடலில் இரண்டு செய்திகள் நாம் பார்க்க வேண்டி உள்ளன. ஒன்று இராசமாதேவி, மாதவி, சுதமதி, சித்ராபதி உள்ளிட்டவர்களுக்குச் சொல்லக்கூடிய அறவுரைகள் ஏற்கனவே மணிமேகலைக்குத் தெரியும் என்பதால் அவளுக்கு அவை தேவைப்படவில்லை. இரண்டாவது அவள் இன்னும் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டி உள்ளது என்பது (அதாவது, பிற சமய கருத்துக்களைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டி இருப்பது). அதனால் இரண்டாவது முறையாக புத்தவேவனின் அறக்கருத்துக்களை மணிமேகலையிடம் கூறாமல் தவிர்த்துவிடுகிறார்.
அதன் பிறகு ‘‘நான் இந் நகரத்தில் தங்கியிருந்தால் ஊரார், "இவள் அரசிளங்குமரனுக்குக் கூற்றாக வந்தவள்!’’ என்று பழித்துரைப்பர். ஆதலால் நான் ஆபுத்திரன் நாட்டை அடைந்து. அதன் பின்னர் மணிபல்லவத் தீவை அடைந்து, அங்குள்ள புத்த பீடிகையை வணங்கித் துதித்த பின்னர் வஞ்சிமாநகர் செல்வேன். அங்கே பத்தினி தெய்வம் கண்ணகியின் பொருட்டு எங்கும் நல்லறங்களைக் குறைவின்றி ஆற்றுவேன். எனக்கு இன்னல் ஏதேனும் நேரிடுமோ என்று நீங்கள் துயரமடைய வேண்டாம். மனத்திற்கினியார் அனைவரையும் வணங்குகிறேன்!" (மணிமேகலை 24: 150 -58) என்று கூறி மணிமேகலை எல்லோரையும் பணிந்து அங்கிருந்து புறப்படுகிறாள்.
இவ்வாறு மணிமேகலை அறவண அடிகளை இரண்டாவது முறை சந்திக்கின்ற பொழுது அமுதசுரபியில் உணவிட காயசண்டிகை சாப விமோசனம் அடைதல். ஆதிரையின் கணவன் சாதுவனின் அறச்சிந்தனைகள் குறித்து அறிந்து கொள்ளுதல். சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றியது. உதயணனுக்கு அறவுரைகள் கூறியது. காந்திற் பாவை மூலம் எதிர்காலம் குறித்து அறிந்து கொள்ளுதல். இராசமாதேவியின் பழிவாங்கும் உணர்வைப் போக்கி அவளுக்கு அறிவுரை கூறியது என்ற பின்புலத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு அறவண அடிகள் மேற்சொன்ன நீ மறுபிறப்பு உணர்ந்தவள் பிற சமய கருத்துக்களை கேட்ட பிறகு உன்னிடம் வருகிறேன் என்ற செய்தியோடு அந்த சந்திப்பு நிறைவடைகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.
மணிமேகலை அறவண அடிகள் சந்திப்பு - 3
அதன் பிறகு சாவக நாட்டை அடைந்த அவள் ஆபுத்திரனின் முற்பிறவியைக் குறித்து எடுத்துரைக்க, முற்பிறவி குறித்து அறிந்த ஆபுத்திரன் தன்னுடைய இந்தப் பிறவியின் இழி நிலை குறித்து வருந்துகிறான். பிறகு தன்னுடைய அமைச்சர் மூலமாக தன்னுடைய பிறப்பினால் சாவக நாடு எவ்வாறு வளம் நிறைந்ததாக மாறியது என்ற உண்மை குறித்து அறிந்து மனம் தேறினாலும், மணி பல்லவத் தீவிற்குச் சென்று தன்னுடைய பிறப்பு குறித்த செய்தியை நேரில் கண்டுவரவேண்டும் என்று கடலில் மரக்கலத்தில் பயணம் மேற்கொள்ளுகிறான். மணிமேகலை வான் வழியாக மணிபல்லவத் தீவை அடைந்து அவனுக்காக காத்திருக்கிறாள். மணி பல்லவத் தீவில் அவனை வரவேற்று புத்த பீடிகை முன்பு அழத்துச் செல்லுகிறாள். அப்போது அங்கு வந்த தீவதிலகை அவ்விருவரும் புத்த பீடிகை முன் இருப்பதைக் கண்டு மகிழ்கிறாள். ஆபுத்திரனின் மரணத்திற்குப் பிறகு அவனைத் தீவில் தனியாக விட்டு விட்டுச் சென்றவர்கள் திரும்பவும் தேடி வந்ததும், அவ்வாறு வந்து வந்த அவர்கள் ஆபுத்திரன் இறந்ததை நினைத்து தாங்களும் இறந்து போனார்கள் என்ற செய்தியைச் சொல்லி அவர்களுடைய எலும்புக்கூடு இருக்கிற இடத்தை காட்டிக் கொடுக்கிறாள். அவளது அந்த உரையாடலில் ஆபத்திரனை கொலையாளி என்பதாகச் சுட்டப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. அதுவும் ‘தன் உயிரை கொன்றவன் (உண்ணா நோன்பு இருந்தான்). தனக்குப் பிறகு வந்தவர்கள் உயிரையும் கொன்றான் (ஆபுத்திரனைத் தனியாக மணிபல்லவத் தீவில் விட்டு விட்டு வந்ததால்தான் அவன் உண்ணா நோன்பு இருந்து இறந்தான் என்று வருந்திய அவர்களும் உண்ணா நோன்பு இருந்து இரந்தனர்) என்பதாக அஃது உள்ளது.
தன்னுடைய முற்பிறப்பு குறித்து உணர்ந்து கொண்ட சாவக நாட்டரசன் (ஆபுத்திரன்) தன்னுடைய எலும்புக்கூட்டை எடுத்து பார்த்து புலம்ப அவனுக்கு மணிமேகலை அறிவுரை கூறுகிறாள். அவற்றைக் கேட்ட சாவக நாட்டரசன், "நல்ல நெற்றியுடைய நங்கையே! நீ உரைத்தவாறு என்னுடைய நாட்டிலும் பிறருடைய நாட்டிலும் நல்லறங்களைச் செய்வேன். என்னுடைய முற்பிறப்பை உணர்த்தி என்னை அறிவுடையோனாகச் செய்து என்னைப் புதியவனாக்கினாய்! ஆகவே உன்னுடைய பிரிவைத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை?’’ (மணிமேகலை25:231-233) என்று கூறி இரங்கினான்.
அவனிடம், "அரசே! நீ துன்பம் எய்த வேண்டாம்! உன் நாட்டு மக்களைப் பிரிந்து இத்தீவிற்கு வந்தது குறித்து வருந்தி உன் நாட்டு மக்கள் உன்னைக் கூவி அழைப்பார்கள்! ஆதலால், மரக்கலமேறிச் செல்வாய்! நான் வஞ்சிமா நகர் செல்வேன்" (மணிமேகலை25:234-238) என்று கூறி வானின் வழியே எழுந்து சென்றாள்.
ஆபுத்திரனின் முற்பிறப்பு குறித்த செய்தியை அவனுக்கு உணர்த்தியதோடு அவன் இந்தப் பிறவியில் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் உணர்த்திய மணிமேகலை வானின் வழியாக வஞ்சி மாநகரை அடைகிறாள். வஞ்சி மாநகருக்கு வெளியே இறங்கிய அவள் அன்னை கண்ணகியையும், வள்ளல் தன்மையிற் சிறந்த தந்தை கோவலனையும் தெய்வமாக அமைக்கப்பட்ட சிலைகளைக் காணும் விருப்பம் உந்தியதால் கண்ணகிக் கோட்டம் புகுந்தாள். தெய்வத் திருவுருவாக நிற்கும் சிலைகளுக்கு முறையாக வணக்கம் செலுத்தி தந்தை தாயருடைய சிறந்த குணங்கள் பலவற்றையும் எடுத்துப் பரவிப் புகழ்ந்து, ‘’அன்பு மகளிர் செய்வதுபோல கணவன் இறந்தவுடன் உயிர் துறக்காமலும், மறுமையில் அவனையே மணந்து வாழ்வதற்காகக் கைம்மை நோன்பாகிய நல்ல தவநெறியை மேற்கொள்ளாமலும், கற்பையே கடனாகக் கொண்டு வேறு வகையில் உமது கடனை முடித்ததற்குரிய காரணத்தைக் கூறி அருளவேண்டும்!" (மணிமேகலை.26:1-10) என்று சொல்லி உள்ளம் கசிந்துருகிக் கண்ணகியின் முன் நின்றாள்.
அதைக் கேட்ட கண்ணகி, "என் தலைவனுக்கு உற்ற கடுந்துன்பத்தைப் பொறாமல், நான் வெஞ்சினம் கொண்டு மதுரை நகரைக் கொடிய தீ மூட்டிய நாளில் அந்நகரின் காவல் தெய்வமாகிய மதுராபதி என் முன்னர்த் தோன்றியது. ‘இது நீங்கள் முற்பிறப்பில் செய்த தீவினையின் பயனால் விளைந்தது... என்று முற்பிறவி குறித்து கூறி.. அப்படி கொலை செய்யப்பட்ட சங்கமன் மனைவி நீலி ஒரு பெரிய மலையின் மீது ஏறி ஆறாத்துயரோடு கீழே விழுந்து உயிர் துறப்பதற்கு முன்னால், 'இப் பிறப்பில் எனக்குத் தீங்கிழைத்தவர் மறு பிறப்பில் இதே துன்பத்தை அடைவாராக!' என்று இட்ட சாபமானது இப்பொழுது உங்களுக்கு சித்தித்ததாகும். 'முன் செய்த வினை ஒருபோதும் நீங்காது பின்னர் வந்து பற்றும்' என்ற உண்மை மொழிகளை மதுராபதி தெய்வம் கூறிய பின்னரும் நான் மிக்க சீற்றம் கொண்டு வளம் பொருந்திய மதுரை நகரத்தை அழித்தேன். ஆயினும் முன் செய்த நல்வினைப் பயனால் நானும் என் கணவரும் தேவருலகத்திற்குச் சென்றோம். அந்த நல்வினையின் முடிவில் கொடிய சினத்தில் உண்டான பாவம் எங்களை அடைவதிலிருந்து எவ்வகையாலும் நீங்காது. ஆதலால் தேவருலகத்தில் நல்வினைப் பயன் நுகர்ச்சி இல்லாதபொழுது மீண்டும் உலகத்தில் பிறப்போம். எல்லாப் பிறப்புக்களிலும் இருவினைகளினாலும் உந்தப்பட்டு நீங்குவதற்கரிய பிறவிப் பெருங்கடலில் நீந்திப் பிறந்தும், இறந்தும் உங்களைப்போலவே வருந்துவோம். மறந்தும் வானம் பொய்க்காத மகதநாட்டிற்கு ஒப்பற்ற அழகிய திலகம் போன்றது என அறிஞர்களால் சிறப்பித்துக் கூறப்படும் அழியாத பெருமையுடைய கயிலை நகரில் வீடு பேறுக்குரிய எண்ணற்ற தன்மைகளை நிறையப் பெற்று பொலிவுடைய புத்த ஞாயிறு தோன்றி போதி மரத்தினடியில் எழுந்தருளி தீதற்ற நான்கு வகை உண்மைகளையும் தெளிந்து போதைமை முதலிய பன்னிரு நிதானங்களின் தோற்றத்தையும். அப்பன்னிரு சாரியும் அழியும் வகையையும் இத்தன்மையன என எடுத்துக் கூறிக் காமம் முதலிய குற்றங்களினின்றும் விடுபட்டு உலகம் முழுவதும் முதன்மையான கதிர்களைப் பரப்பும் பொழுது அன்புகொண்ட மனத்தோடு புத்த தேவனின் அறவுரைகளைச் செவிமடுத்து உள்ளத்தில் பற்றுகளைத் துறக்கரும் எண்ணம். தோன்றி உன்னுடைய தந்தையுடன் நான் புத்த தேவனின் இந்திர விகாரங்கள் ஏழையும் வணங்கித் துதித்துப் பெறும் அந்த நல்வினையினால் துன்பம் தரும் இப்பிறப்புக்களில் பிறவாமல் தொடர்ந்துவரும் பிறவி நீத்து நிர்வாணம் அடைவோம். அதுகாறும் எல்லோர்க்கும் பலவகையான சிதிகளைச் செய்து கொண்டிருப்போம் என்று தன்னைப் பற்றிக் கூறியவள், பின்னர்,
‘மணிமேகலையே! இந்த மூதுரில் உறையும் சமயவாதிகளிடம் அவரவர் சமயங்களின் அறிந்த பொருள்களை முறையாகக் கேட்பாயாக! ஆனால், அந்தச் சமயக் கருத்துக்களில் உண்மைத்திறம் இல்லாததை நீயே விளங்கிக் கொள்வாய்! ஆதலால் புத்ததேவன் அருளிச்செய்த ஆகமங்களின் வழியையே பின்பற்றுவாயாக! நீ இளையள்; வளையணிந்தவள் என்று உனக்கு யாரும் தம்முடைய சமய உண்மைகளைக் கூற மாட்டார்கள்! ஆதலால் நீ வேற்றுருவம் கொள்வாயாக!" (மணிமேகலை 26 :11- 78) என்று அறிவுரை வழங்கினாள்.
அவற்றைக் கேட்ட மணிமேகலை மாசற்ற சிறப்புடைய மணிமேகலா தெய்வம் கொடுத்த வேற்றுருக் கொள்ளும் மந்திரத்தை ஓதி உரைத்து ஒரு தவ முனிவன் வடிவம் மேற்கொண்டாள். கோயில்களும் மன்றங்களும் சாலைகளும், பூமலர்ப் பொழிலும், பொய்கையும் சூழ்ந்து நற்றவ முனிவரும். கற்று அமைந்த அறவோரும் அறநெறி கண்ட தொன்னூற் புலவரும் எங்கும் விளங்கிய புறமதில் புறத்திலுள்ள இருக்கையை அடைந்தாள்.
கண்ணகி கூறிய இவை அனைத்தும் சிலப்பதிகாரத்தில் வரந்தருக்காதையில் சொல்லப்பட்டுள்ளவற்றிற்கு (கண்ணகியின் தேவலோக சென்று திரும்பிய பின்னரான நிகழ்வுகளும் அவற்றில் உள்ளவையும்) முரண்பாடாய் அமைந்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. இது குறித்து நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டி உள்ளது.
அவை ஒரு புறமிருக்க, ஆண்வேடத்தோடு சமய கணக்கர்களை அணுகும் மணிமேகலை ஐந்து சமயங்கள் குறித்த கருத்துக்களை கேட்டு அறிந்து கொள்ளுகிறாள். என்றாலும் அவற்றில் மனங்கெள்ளாத அவள் இறுதியாக பூதவாதியிடம் முற்பிறப்பு குறித்து அறிந்தவர் உண்டோ? என்று வினாவி, அந்த பூதவாதியின் அறியாமையை நினைத்து நகைத்துத் தன் வரலாற்றைக் கூறுகிறாள்.
"பூதவாதியே! உன்னுடைய தந்தையும் தாயுமாகிய பெற்றோரை அனுமானத்தாலன்றி (கருத்து அளவை) எவ்வகையால் அறிவாய்? மெய்யான பொருள்கள் பலவும் உண்மை உணர்வுக்கு ஏதுவாகிய அனுமானம் முதலிய அளவைகளாலன்றி காட்சி அளவையால் மட்டும் அறிவதற்கு இயலாது. எனவே காட்சி அளவால் கொள்ளப்படுவதே தெளிவுடையது என்றும். காட்சி அல்லாத பிற அளவைகளால் அனுமானிக்கப்படுவது ஐயத்திற்கிடமானவை என்று கூறாதே. இதை உணர்ந்துகொள்!" (மணிமேகலை 27 :280 -90) என்று தான் வேற்றுரு எய்திய ஆண்வடிவோடே நின்று தான் கூற நினைத்த கருத்தை உரைத்தாள். இவ்வாறு மணி மேகலை வஞ்சிமா நகரில் ஐவகைச் சமயங்களின் கருத்துகளையும் அறிந்தாள்.
பின்னர் அங்கிருந்து மாதவி, சுதமதி, அறவண அடிகளைச் சந்திப்பதற்காக வஞ்சி மாநகர் நோக்கிச் செல்கிறாள். வஞ்சி மாநகரின் பல்வேறு அழகிய காட்சிகளை எல்லாம் காணும் அவள் புத்தமத கொள்கைகளை உணர்த்தும் ஓவியங்களோடு அழகு பெற்று விளங்கும் தவப் பள்ளிகளையும் கண்டு மகிழ்கிறாள்.
கண்ணகிச் சொன்னபடிச் சென்று சமயவாதிகளைச் சந்தித்த மணிமேகலை அங்கிருந்து மாதவி, சுதமதி, அரவண அடிகளைச் சந்திப்பதற்காக வஞ்சி மாநகர் நோக்கி சென்றாள். வஞ்சி மாநகரின் பல்வேறு அழகிய காட்சிகளை எல்லாம் காணும் அவள் புத்தமத கொள்கைகளை உணர்த்தும் ஓவியங்களோடு அழகு பெற்று விளங்கும் தவப் பள்ளிகளையும் கண்டு மகிழ்ந்தாள்.
அதன் பிறகு’‘மாசற்ற புத்ததேவனின் அருளறத்துடன் விளங்குவோராகிய மாதவர் வாழும் தயப்பள்ளியை அடைந்தாள். அங்கே கோவலன்-கண்ணகிக்கு உற்ற கொடுந்துயர். கேட்டுத் துறவு பூண்டு தவம் இயற்றும் கோவலன் தந்தை மாசாத்துவானைக் கண்டு அவனடிகளைப் பணிந்தாள். தன்னுடைய கையில் இருந்த அமுதசுரபியின் அறமாண்பையும், அவ்வறத்தின் சிறப்பால் சாவக நாட்டரசனான ஆபுத்திரனை அழைத்துக் கொண்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்ததேவனின் பீடிகையைக் காட்ட அதனால் அவன் தன் பழம் பிறப்பை உணர்ந்ததும், முற்பிறப்புணர்ந்த சாவக நாட்டரசன் முன்னால் தீவதிலகை என்னும் உயிர்தெய்வம் தோன்றி அவனுடைய காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொள்ள அறவண அடிகளும், மாதவி சுதமதியரும் இறந்து விடாமல் தப்பிப்பிழைத்துப் புகார் நகரை விட்டு இவ்வஞ்சி மாநகர் அடைந்ததைக் கேட்டதும். சாவக நாட்டரசன் தன்னுடைய நாட்டிற்குத் திரும்பச் சென்றதும், தான் மணிபல்லவத் தீவைவிட்டு இத்திருநகர் அடைந்ததும், அதன் பின்னர் தான் புனைந்த மாதவன் வடிவத்தோடு பல சமயவாதிகளின் கருத்துக்களைக் கேட்டதும், அவரவர் சமயங்களில் அறிந்து உரைத்த மெய்ப்பொருள்கள் எல்லாம் செம்மையாக இராததால் அவற்றைத் தம் மனத்தில் பதியவைக்காமல், புத்ததேவன் உரைத்த அருளறத்தைக் கேட்க விருப்பங்கொண்டு அறவண அடிகளைத் தேடித் தான் வந்த வரலாற்றையும் கூறினாள்.
அவற்றையெல்லாம் கேட்ட மாசாத்துவான், "தூயோய்! உம்மை நான் கண்டது என் நல்வினைப் பயனே!" என்று கூறினான். பின்னர், "மணி மேகலையே! கேள்! உன்னுடைய தந்தையும், தாயும் முற்பிறப்பிறவியில் செய்த தீவினையாலே வளம் மிக்க மதுரை மாநகர் தீக்கிரை யாகுமாறு தாம் துன்பம் எய்தி இறந்தனர். அதைக் கேட்டுப் புத்த தேவன் கூறிய அன்பும் அருளும் உடைய அருளறத்தை மேற்கொள்ளும் தகுதியுடையேனாதலால் இல்வாழ்க்கையைப் பொய் உணர்ந்தேன், செல்வமும் உடம்பும் சிறிதளயேனும் என்று பெறாதன என்பதைத் தெளிவாக உணர்த்தேன்; உணர்ந்த பின்பு வழுவில்லாத நல்லறத்தினையும் பெருந்தவத்தையும் கடைப்பிடிக்க மேற்கொண்டன். தவநெறியில் சேர்ந்த நான் அழகிய வஞ்சிமா நகரத்தைச் சேர்ந்த காரணத்தைக் கேட்பாயாக!.
முன்பொரு காலத்தில் இமயமலைச் சரிவில் தம்முடைய விற்பொறியைப் பொறித்த சேரர் பெருந்தகை குடக்கோ சேரலாதன் பவளச் செவ்வாயும், துடி இடையும் உடைய மகளிருடன் இச்சோலையில் புகுந்து இன்பம் நுகர்ந்திருந்தான். அப்பொழுது நற்குணத்தில் மேம்பட்டோரும், கருமுகில் உலாவும் வான்வழியே செல்வோரும் ஆகிய தருமசாரணர் இலங்கையில் உள்ள சமனொளி என்னும் மலையை வழிபட்டுத் திரும்பும்போது இச் சோலையில் அரசனுக்கு நல்வினை தோன்றிப் பயனளிக்க ஏது இருந்ததால் அவ்வுயர்ந்தோர்கள் இப்பூம்பொழிலில் இறங்கிக் கல்லாசனத்தில் அமர்ந்தனர். சேர அரசன் முற்பிறப்பில் நற்றவம் புரிந்தோன். அதனால் அச்சாரணரை ஆர்வம் பொங்க வரவேற்றான்; புகழ்ந்துரைத்தான்; தாமரை மலர் போன்ற திருவடிகளை நீரால் கழுவினான். அவர்களுக்கு ஏற்ற வண்ணம் அறுசுவையோடு கூடிய நால்வகை உணவுகளையும் அளித்தான். அரசன் தானே தனித்தும், தன் அரசவை உறுப்பினரோடு கூடியும் பற்பல சிறப்புக்களைச் செய்து, அறவுரை நவிலுமாறு வேண்டி நின்றான். அச் சாரணரும், பிறப்பினால் வரும் துன்பமும், பிறவாமையினால் வரும் இன்பமும், அறத்திற்கு முதல்வனாகிய புத்தன் அருளிச் செய்த நால்வகை வாய்மையும் ஆகிய இன்பம் தரும் அமிழ்தம் போன்ற அறவுரைகளை அரசனின் செவியில் உரைத்தனர். அந் நாளில் உன். தந்தை கோவலனுக்கு ஒன்பது தலைமுறை முன்னவனாகிய கோவலன் குடகோ சேரலாதனிடத்து நீங்காத அன்புகொண்ட ஆருயிர் நண்பனாதலால் அரசனுக்கு இச் சோலையில் தருமசாரணர் உரைத்த நல் அறத்தை அரசனுடனிருந்து அவனும் கேட்டான். தன் முன்னோர் அறவழியில் ஈட்டிய பெரும் பொருளோடு தான் ஈட்டிய அளவற்ற செல்வத்தையும் ஏழு நாட்களுக்குள் இரப்போர்க்கு அளித்து அனைத்தையும் துறந்தான். பின்னர் பிறரால் தொழுதற்குரிய நற்றவம் புரிந்தான்; புத்த தேவனுக்கு மலையில் வானளாவிய வெண்ணிற ஒளி வீசும் திருக்கோயிலை அமைத்தான். இத் திருக்கோயில் இவ்வுலகோரின் துன்பம் நீக்கவல்லது. ஆதலால் அதைக் கண்டு வழிபட்டுப் புகழும் விருப்பத்தால் இங்கே வந்தேன். இங்கு வாழும், அறிவுச் சுடர் நீங்காது ஒளிவீசும் அருந்தவ முனிவோர். காவிரிப்பூம்பட்டினம் கடலால் கொள்ளப்படும் என்று கூறிய நல்லுரை கேட்டு இங்கேயே தங்கிவிட்டேன். (மணிமேகலை. 28 : 69 - 145) என்றவன் மேலும்,
நற்றவ மாதே! இன்னும் கேள்! உன் தந்தை தன்னுடைய தீவினை வந்து உருத்தியதால் கொலையுண்டு இறந்தான். ஆயினும் முன்பு செய்த நல்வினையின் பயனால் தேவருலகம் சென்று இன்பம் துய்க்கிறான். ஆனால் பின்னர் அவனுடைய இப்பிறப்பில் முற்றுப் பெறாத தீவினையின் பயனை நுகர்வதற்கு மீண்டும் பிறவியெடுத்துப் புத்த தேவன் போதி மரத்தின் கீழ் மீண்டும் அருளறத்தை மேற் கொள்ளும் பொழுது தானும் தவம் செய்வான். இளங்கொடி! கயிலை நகரில் தன் மனைவி கண்ணகியுடன் புத்ததேவனின் அறவுரைகளைக் கேட்டு நிருவாண மடைவான். இவ்வுண்மையை அறிந்தோர் கூறிய வியத்தகு மொழிகளால் பின்வரும் நிகழ்ச்சியை உணர்ந்தேன். தோகையே! நானும் அப்பொன்னாளில் புத்த தேவனின் அறவுரைகளைக் கேட்பேன்; உன்னுடைய மறுபிறப்பு நிகழ்ச்சிகளை நெடிய தூணில் பொருந்திய துவதிகன் என்னும் கற்திற்பாவை கூறியதால் தெளிந்தாய் அல்லவா? அச்செய்தியை அறவண முனிவர் கூறியதால் நான் அறிந்தேன். பூங்கொடி! நீ புத்த தேவனுடைய அருளறத்தைக் கேட்பதற்குரிய ஏது நிகழ்ச்சி கச்சி மாநகரில் உண்டாகுமாதலால் அறவணவடிகள் அங்கே சென்றார். மாதவர் அந் நகரத்திற்குச் சென்ற பொழுது உன்னுடைய தாயாரும் அவருடன் சென்றனர். நங்கையே! அது மட்டுமல்லாமல் இன்னொன்றையும் கேட்பாயாக. பொன்னிற மதில்களுடைய காஞ்சிமாநகர் மழை வளம் இன்றி மன்னுயிர் பல மடிந்து அழகு அழிந்திருக்கின்றது. அங்கு வாழ்ந்த அறவோர்க்குச் சோறிடுவோர் யாரும் இல்லாததால் இவ் வஞ்சிமாநகர் வந்து சேர்ந்திருக்கும் மாதவர் பலரைக் காண்பாயாக! பசிப்பிணியைப் போக்கும் ஆருயிர் மருந்தே மழை தரும் மேகத்தைப் போல அந்நகர் நடுவே தோன்றி அவ்வுயிர்களைக் காக்கும கடமை உன்னுடையதாகும்" (மணிமேகலை 28 136 162) என்று கூறினான்.
மாசாத்துவான் சொன்னவற்றைக் கேட்ட மணிமேகலை அங்கிருந்து புறப்பட்டுக் காஞ்சி மா நகரை அடைகிறாள். அமராவதி போன்ற அக்காஞ்சி வளமற்றுக் கிடப்பதைக் கண்டு வருந்தி நிற்கிறாள். அவளது வருகை குறித்து முன்னரே அறிந்திருந்த மன்னர் முன்னர் அவள் அழைத்துச் செல்லப்படுகிறாள்.
‘நங்கை நல்லாய்! என் செங்கோலாட்சி திறம்பியதாலோ, துறவோர் தவம் செய்யாமல் தவறியதாலோ தேன் சிந்தும் பூச்சூடிய கூந்தலுடைய மகளிர் கற்பில் குறைந்தவரானதாலோ என் நன்னாடு முழுமையும் வறுமை எய்தியது. இத்துன்பக் காலத்தின் காரணத்தை அறிய முயன்றும் அறிய முடியாமல் மயங்கி இருக்கிறேன். இவ்வாறு கலங்கும் என் முன்னால் ஒரு மாதெய்வம் தோன்றியது. 'மன்னா! வருந்தாதே! உன் பெரிய தவத்தால் இங்கு ஒரு மங்கை வருவாள். அவள் தன் கையகத்தில் இருக்கும் பெருமை சான்ற பாத்திரத்திலிருந்து வழங்கும் ஆருயிர் மருந்தாகிய சோற்றால் உன்னுடைய பெரிய நாட்டின் மக்கள் உய்வர்; அவளுடைய அருளால் இந்திரன் ஏவ மேகங்கள் இடையறாது பெருமழை பொழியும்; அவள் இப்பேரூரில் புகுந்த பின்னர் நல்லறம் பல நிகழும்: மழை பெய்யாமற் போயினும் நீருக்கு வறுமை ஏற்படாது; ஆதலால் முன்னோர் அமைத்த செழுமை மிக்க நீருடைய கோமுகிப் பொய்கையுடன் மணிபல்லவத் தீவே இங்கு வந்திருக்கின்றது என்று கூறுமாறு இவ்வூரிலேயே பொய்கையும் சோலையும் முறைப்படி செய்து அழகுபடுத்துவீராக!" என்று அறிவுறுத்திய பின்னர் அத்தெய்வம் மறைந்து விட்டது. அத்தெய்வம் கூறியபடி நாங்கள் அமைத்த இடம் இதுவே!" என்று கூறி இளங்கிள்ளி அந்த இடத்தை மணிமேகலைக்குக் காட்டினான். மணிபல்லவத் தீவைப் போன்றமைந்த அச்சோலையினுள் சென்று பொய்கையும் பூம்பொழிலும் கண்ட மணிமேகலை மனம் மகிழ்ந்தாள். தன்னுடைய பழம்பிறப்பை அறிவுறுத்திய பீடிகை மணிபல்லவத்தில் இருப்பதைப் போன்றே புத்த தேவனின் தாமரைத் திருவடிகளையுடைய பீடத்தை முறைப்படி அமைத்து, பீடம் அமைந்த திருக்கோயிலுள் மணிபல்லவத் தீவின் காவல் தெய்வமாகிய தீவதிலகையையும், மாபெரும் தெய்வமான மணிமேகலா தெய்வத்தையும் தான் வணங்கி வழிபடுவதற்காகச் சமைத்து அவற்றிற்குத் திருவிழாவும், பூசனை முதலிய பிற சிறப்புக்களும் அரசனால் நடைபெற ஏற்பாடு செய்தாள். பிறரால் வணங்குவதற்குரிய நங்கை நல்லாள் மணிமேகலை தன் கையிலிருந்த பசிப்பிணிக்கு மருந்தாகிய அமுத சுரபியைப் புகழ்ந்து பணிந்து அதனைப் புத்ததேவனின் பாத பீடிகையில் வைத்து நின்று எல்லா உயிர்களையும் உணவுண்ண வருக! என்று அழைத்தாள். பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய மணிமேகலை தன் இனிய மொழிகளால் அழைக்க பதினெட்டு வகையான மொழிகளை பேசும் எண்ணற்ற மக்களில் குருடர், செவிடர், முடவர். ஆதரவற்றோர். ஊமையர். நோயுற்றோர், தவவடிவு பூண்டு விரதம் காப்போர், பசிப்பிணியால் வாடுவோர், உடையுமின்றி வறுமையில் உழல்வோரும் ஆகிய மக்கள் அனைவரும், பல கோடி விலங்குகளின் கூட்டமும் சேர்ந்து நிலை பெற்ற உயிர்கள் யாவும் ஒருங்கே வந்து சேர்ந்தன. மணிமேகலை, உணவு நாடி வந்தோர் அனைவருக்கும் உணவாகிய ஆருயிர் மருந்தை அயராது அளித்தாள். அங்கே உணவருந்தியோர் பசி நீங்கிப் பொலிவு பெற்றனர்.
பெருந்தவ முனிவர் கையில் பெய்த அறத்தின் பயனும், நீர், நிலம், காலம், ஏர் முதலிய கருவிகள் ஆகிய யாவும் செவ்வனம் அமைந்த பொழுது விதைக்கப்பட்ட விதையின் பயனும் பெருகியவாறு போல அமுத சுரபி சோறாகிய பெருவளத்தைச் சுரந்து கொடுத்தது. மழை பெய்யச்செய்து உலகிற்கு வளம் தந்தது போல் உணவு தந்து தம்முடைய பசிப்பிணியை நீக்கிய மணிமேகலையை வணங்கித் துதித்துத் திரும்பிச் சென்றனர்.
இவ்வாறு அறப்பணி நிகழ்ந்து கொண்டிருந்த பொழுது மாதவியும், சுதமதியும் அறம் அல்லாதவற்றை நீக்கிய அறவண அடிகளும் வளம் சிறந்த தொன்னகரத்தில் மன்னுயிர் முதல்வியாகிய மணிமேகலை உணவளிக்கும் அறப்பள்ளியை வந்து சேர்ந்தனர். அவர்கள் வரவின் நன்மையை உணர்ந்த மணிமேகலை ஆர்வத்தோடு சென்று, அவர்களுடைய திருவடிகளை வணங்கி, நீரால் அவர்களுடைய நல்லடிகளைக் கழுவி, நல்லாசனத்தில் ஏற்றி, அறுசுவையோடு கூடிய நால்வகை உணவுகளையும் அளித்து, உண்ணுவதற்குரிய காலத்தில் உண்பித்து, வெற்றிலையும் பாக்கும் கற்பூரமும் அளித்து. 'என் மனத்தில் பொருந்திய அறம் நிலைப்பதாக!" என்று கூறித் தன்னுடைய மாதவன் வடிவத்தைக் களைந்து வணங்கினாள். (மணிமேகலை 28:187 245)
தன்னை வணங்கி நின்ற மணிமேகலையைத் தன்னுடைய அறம் நிகழும் நாவால் வாழ்த்தினார்; பின்னர் காவிரிப்பூம்பட்டினம் கடலால் கொள்ளப்படுவதற்குரிய காரணத்தைக் கூறலுற்றார். "நாக நாட்டரசன் வளைவன். அவன் மகள் பீலிவளை என்பாள். அவள் மணிபல்லவத் தீவிற்குச் சென்ற பொழுது அங்கே கம்பளச் செட்டி என்னும் வணிகன் தனியே மரக்கலம் செலுத்தி வந்தான். பீலிவளை தான் சோழ அரசன் நெடுமுடிக்கிள்ளி என்பானுக்குப் பெற்றெடுத்த. ஈன்ற அணிமை தீராத இளங்குழவியை அவ்வணிகனிடம் கொடுத்து சோழ அரசனிடம் சேர்க்குமாறு வேண்டினாள். குழவியை வணங்கிப் பெற்ற வணிகன் மரக்கலத்தில் ஏற்றிக் கொண்டு வரும் நாளில் சோழ நாட்டுக் கரைக்கு அண்மையில் வரும்பொழுது காரிருள் சூழ்ந்த நடுச்சாமத்தில் மரக்கலம் சிதைந்து விட்டது. அவன் மட்டும் தப்பிக் கரையை அடைந்தான்; அவன் அரச குமாரனைத் தேடியும் காணாமல் சோழ அரசனிடம் வந்து நிகழ்ந்ததைத் தெரிவித்தான். அதனைக் கேட்ட மன்னன் மனம் வருந்தினான்; சோர்வடைந்தான். எங்கும் விரைவாகத் தேடித் திரிந்தான். காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரனுக்கு விழாக்கோள் எடுக்கும் நாள் வர மறந்தான். தன்னுடைய விழா கொண்டாடாது கழிந்ததால் தேவர்கோன் இந்திரன் சினங் கொண்டான்.
உன்னுடைய உயிர் தந்தை கோவலனின் பெருங்குலத்தில் ஒன்பது தலைமுறைக்கு முன்னர்ப் பிறந்த வணிகன் ஒருவன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தியவன்; அவன் ஒரு சமயம் மகர மீன் வாழும் கடலில் மரக்கலத்தில் சென்றான். அவனுடைய நாவாய் பசுமையான கம்பளத்தில் இரும்பு ஊசி ஒன்று எளிதில் ஒளிந்து இடம் தெரியாமல் மறைந்து விடுவதைப் போல், கடலில் மூழ்கி அழிந்தது. ஆழ்கடலில் அவன் வருந்தினான். ஏழு நாட்கள் கடல் அலைகளால் அலைக்களிக்கப்பட்டு இறுதியில் அவன் உயிர் போகும் துன்பத்தை எய்தினான்.
ஆனால் அவன் ஐவகைச் சீலமும், நால்வகை வாய்மையும் மேற்கொண்டு வழுவின்றிக் கடைப்பிடித்தவன், ஆதலால் இந்திரனின் இருக்கையாகிய பாண்டுக் கம்பளம் நடுநடுங்கி அவ் வணிகனுக்குள்ள துன்பத்தை இந்திரனுக்கு அறிவித்தது. மணிமேகலா தெய்வமே! கடலில் இறப்புத் துன்பம் எய்தியுள்ள வணிகன். போதி மரத்தடியில் இருந்து தவமியற்றிய ஆதி முதல்வனும், நாதனுமாகிய ஞானமே வடிவான வீரன் (போதி சத்துவன்) ஆவதற்குத் தகுதியுடைமவன். பெரிய கடற்பரப்பில் பெருந்துன்பம் உற்றான். அவன் துள்பத்தைப் போக்கு" என்று அருகில் இருந்த மணிமேகலா தெய்வத்தைப் பணித்தான். உலகில அறமே அரசாட்சி புரியவும், அறத்தின் ஆணையே எங்கும் நிலவுமாறும் உலக மக்களுக்கு அவர்களுடைய பிறவி தோறும் உதவும் மாண்புடையவள், மணிமேகலா தெய்வம். அத்தெய்வம் அவ்வணிகனைக் கடலிலிருந்து எடுத்துக் கரை சேர்த்தது.
மணிமேகலா தெய்வம் செய்த உதவியை அறிந்த சாரணர், உன் தந்தையிடம் வந்து உனக்கு மணிமேகலை என்று பெயர் வைத்ததற்குரிய காரணம் இஃது என்று கூறினார். அந்த உதவிக்காக உனக்குப் பெயர் சூடும் நாளில் அத் தெய்வத்தின் பெயரையே உன் தந்தை உனக்குப் பெயரிட்டான். மணிமேகலை! அன்றிரவே உன் தந்தையின் கனவில் மணிமேகலா தெய்வம் தோன்றியது. நனவில் கூறுவது போல தெளிவான மொழிகளால் நீ துறவறம் மேற் கொள்ளும் செய்தியை அவனுக்குக் கூறியது.
"இந்திரவிழா மறத்தலில் இந்நகர் கடல் கொள்ளும்! என்பது மெல்லிய மலர் மேனியுடைய மணிமேகலை தெய்வத்தின் கருத்தாதலும், இந்திரன் இட்ட சாபத்தாலும் காவிரிப்பூம்பட்டினம் கடலால் கொள்ளப்பட்டு அழிந்தது. நான் மாதவி சுதமதியருடன் எல்லோரும் புகழ்ந்து கூறும் உன்னைக் காண்பதற்காக காஞ்சி மாநகர் வந்தோம்," (மணிமேகலை 29:1- 36) என்று அறவண அடிகள் கூறினார்.
அடிகள் கூறியவற்றைக் கேட்ட மணிமேகலை அறவண அடிகளின் இணையற்ற திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். மணிபல்லவத் தீவில் பொன்னொளி வீசும் புத்த பீடிகையின் தெய்வமான தீவதிலகையும் நீவிர் கூறிய செய்தியை எனக்குத் தெரிவித்தாள். ஆதலால் நான் காவிரிப்பூம்பட்டினம் செல்லாது அந்நகரமே போன்ற அழகிய வஞ்சிநகர்ப் புறத்தே மாதவன் வடிவம் பூண்டு வெவ்வேறு முடிவுகளை உரைக்கும் நூல்களின் சமய நுண் பொருள்களைக் கேட்டேன். நான் கேட்ட ஐந்து வகைச் சமயங்களின் உண்மைகளும், நான் உருக்கொண்ட வடிவம் எனக்கு எவ்வாறு பொருத்தமற்றதோ அதைப் போல செம்மையுடையனவாகத் தோன்றவில்லை. ஆகவே அவற்றைச் சிந்தையில் கொள்ளாதொழிந்தேன். அடிகள் பெருமானே! உண்மைப் பொருளை அடியேற்குக் கூறியருள் வீராக!" என்று மணிமேகலை வேண்டி நின்றாள்.
"மணிமேகலையே! நீ கேட்கும் மெய்ப் பொருளை அறிவதற் குரிய வழியைக் கூறுகிறேன். நீ அறிவோடு பொருந்தி நுணிகிக் கேட்பாயாக! ஆதி புத்தன் உரைத்த அளவைகள் இரண்டே ஆகும். அவை குற்றமற்ற காட்சி அளவைகள் கருத்தளவையும் ஆகும். ஒரு பொருளைக் கண் முதலிய பொறிகளால் வண்ணம் முதலிய வற்றைப் பற்றிக் காண்டல் முதலியன செய்து நேர்முகமாக அறிவதே காட்சியாகும்.
இவ்வாறு ஒரு பொருளின் பொருண்மையை மாத்திரம் கண்டு உணரும் அறிவை பிரத்தியக்கம் (காட்சி அளவை) என்று சொல்லி. பிறரால் உணரப்படும் அப்பொருளின் பெயர். சாதி குணம், தொழில் முதலியவை அனுமானத்துள் (கருத்தளவை) அடங்கும் என ஆராய்ந்து தெளிந்து காட்சி அளவை வகைகளுக்கு இலக்கணம் காணாது விட்டனர். மேலும் சுட்டுணர்வால் பெறும் அறிவு பொருளின் திறத்தால் மட்டுமே பெறப்படுவது; மனத்தில் ஏற்படும் கற்பனையோடு தொடர்பற்றது. எனவே பிரத்தியக்கம் நிருவி கற்பகக் காட்சி (முற்றுப் பெறாத அறிவு) என்று விலக்கி விட்டனர்…. (மணிமேகலை 29: 46- 56)
என்று கூறிய அறவண அடிகள் போலி கருத்துக்களின் உண்மை பொய் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியன x விலக்கக்கூடியன என்பது குறித்து விரிவாக விளக்கிக் கூறி, இவ்வாறு காட்டப்பட்ட குற்றமுடைய சாதனங்களால் காட்டப்படும் போலிக் கருத்துக்களின் உண்மையும் x பொய்யும், இவைகளுக்கு ஏற்ற, கொள்ளக் கூடியதும் x தள்ள வேண்டியதுமானவற்றிற்கு அமைந்த விதிவிலக்குகளைக் கொண்டு ஐயம் திரிவு இன்றி ஆராய்ந்து அறிந்து கொள்வாயாக!" (மணிமேகலை 29: 57- 72)என்று அறவண அடிகள் மணிமேகலைக்கு நன்னெறி கூறினார்.
தன்னுடைய முற்பிறப்பு வரலாற்றை அறிந்த மணிமேகலை தானத்தை மேற்கொண்டு சீலங்களின் வழிநின்று புத்தன். தருமம், சங்கம் என்னும் கொள்கைகளான மும்மணியையும் மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் வழிபட்டு புத்தன் திருவடியைப் புகல் உள்ளதாய்க் கருதி புத்த சங்கத்தில் அடைக்கலம் புகுந்தாள்.( மணிமேகலை 30: 1-3)
அரவண அடிகள் தொடர்ந்தார்… அவரது அறவுரையில் சில…
புத்தன் கூறிய அறவுரை பன்னிரண்டு பொருள்களாகக் கூறப்படும் நெறியை உடையது; இப் பன்னிரண்டு பொருள்களும் ஒன்றோடு ஒன்று காரண காரியமாய்ச் சார்ந்தும் மீண்டும் அவை தம்மில் ஒன்று மீள மற்றொன்றும், ஒன்றோடு ஒன்று காரண காரியமாய் இயைந்து தொடர்ந்தும் தோன்றும். இதை மண்டிலமாக வகைப்படுத்திப் பின்னர் தெளிய வைத்தார். ஒன்றிலிருந்து ஒன்று தோன்றும் வழிமுறைத் தோற்றத்துக்கு மாறாகத் தோன்றுவதற்குரிய காரணத்தை நீக்கிய வழி மேற்கூறிய பன்னிரு பொருள்களிலிருந்தும் மீட்சி ஏற்படும். இவ்வாறு காரணமில்லாத விடத்துக் காரியமாகிய வழிமுறைத் தோற்றம் இல்லை என்பதும் காரணத்தை விரும்பி மேற்கொண்டால் காரியமாகிய தோற்றம் உண்டாதலும்; காரணங்களைக் கொள்ளுவதும் தள்ளுவதும் ஆன தகுதிக்கேற்ப காரியத் தோற்றம் உண்டாவதும் இல்லாமற் போவதும் ஆகும் எனச் சொல்லப்படும்; காரண காரியங்களின் உண்மை. இன்மைகள் இவ்வியல்பால் உணரப்பட்டு வரும்.
உலகம் மூன்று வகைப்படும். அவை: கீழ். நடு, மேல் என்பனவாகும். வினை செய்தற்குரியது நடு உலகம்: நல்வினைப் பயன் நுகர்தற்குரியது மேல் உலகம்; தீவினைப் பயன் நுகர்தற்குரியது கீழ் உலகம். இம் மூவகை உலகங்களிலும் உள்ள உயிரிக்கூட்டம் எண்ணிறந்தன. பலவாகிய உயிர் ஆறு வகைப்படும். அவை: மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு. பேய் என்பன. நல்வினை, தீவினை என்ற இருவகைச் செய்கைகளால் மக்கள்,தேவர் முதலாகச் சொல்லப்பட்ட பிறப்பை உயிர்கள் அடையும். உயிர்கள் கருவில் தோன்றிய பொழுதே வினைகளும் அவற்றோடு இயைந்து தோன்றும். செய்வினைப் பயனாகிய கருமம் தோன்றும் காலத்தில் மனத்தில் இன்பமும் துன்பமும் ஏற்படும்.
"மணிமேகலை! தீவினை என்பது யாதென்று கேட்பாயாயின் நான் சொல்லுவதைக் கேளாய்! அழியாத உடம்பில் உண்டாகும் தீவினைகள் மூன்று வகையாகும்; அவை கொலை, களவு, காமம் என்னும் தீய வேட்கை என்பன.
வாக்கில் உண்டாகும் தீவினைகள் நான்கு: அவை பொய், புறங்கூறல், கடுஞ்சொல் கூறல், பயனில் கூறல் என்பனவாகும்.
மனத்தில் தோன்றும் தீவினைகள் மூன்று. அவை பிறர் பொருளைக் கவர நினைத்தல் வெகுளல், குற்றம்பட உணர்தல் என்பனவாகும்.
மேற் கூறியவாறால் தீவினை பத்து வகையாகும். இத்தீய வினைகளின் வகையும், இயல்பும், விளையும் பயனும் அறிந்துணர்ந்த மெய்யறிவுடையோர் இப்பத்து தீயவினைகளின் வழிப்படார். அவ்வாறின்றி இவற்றை நினைத்தாராயின் விலங்கும் பேயும் நரகரும் ஆகிக் கலக்கமுற்று உள்ளத்தில் கவலை கொண்டு துன்பமடைவார்கள்.
இந்த துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால் நல்வினையை மேற்கொள்ள வேண்டும் நல்வினை என்பது மேற்கூறிய பத்தை நீக்குதல்
உடலுடன் கூட்டாய் இயங்குவதால் ஆன்மாவிற்கு அழிவு உண்டு. வீட்டுலகம் அடைய நான்கு வழிகள் உள்ளன துக்கம் துக்க தோற்றம் துக்க நீக்கும் துக்க நீக்க நெறி பற்று ஒழித்தல் என்பதே துக்க நீக்கத்திற்கான ஒரே வழி.
தோன்றிய பொருள் அழியும் மீண்டும் பிறப்பு என்பது பற்று பற்றுவிடல் அதாவது பற்று என்பது பிறப்பிற்கான காரணி பற்றுவிடல் என்பது பிறப்பு இல்லாமல் போவதற்கான காரணி…
‘முட்டையாகிய விதையா பனையா முந்தியது? என்ற வினாவிற்கு ‘எந்த முட்டைக்கு எந்த பனை? என்ற வினா என்பதாகவும், பழையதோ புதியதோ என்பன போன்ற கேள்விகளுக்கு இல்லாத பொருளுக்கு பதில் தேவையில்லை என்பன போன்ற விளக்கங்களும் இவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை.
அதற்கு அடுத்ததாக காமம் வெகுளி மயக்கும் துன்பத்திற்கு காரணம் என்பதும், இறுதியாக அறவுரை கேட்டல் கேட்டதை சிந்தித்தல் கேட்டவாறு நடத்தல் உண்மை தெளிதல் ஆராய்ந்து அறிந்து மயக்கத்தை போக்கிக் கொள்ளுதல் என்பதாக அவர் சொல்லி முடிக்க இந்த உண்மை நெறிகளை எல்லாம் கேட்ட மணிமேகலை மனிதப் பிறப்புக்கு காரணமான குற்றங்களை களைவதற்கான நோன்புகளை நோற்றாள்.(மணிமேகலை 30:4-264)
அறண அடிகளை மூன்றாவது முறை சந்திக்கின்ற பொழுது சாவக நாட்டு அரசனனின் முற்பிறப்பான ஆபுத்திரன் பிறப்பு குறித்த செய்தி சொல்லியதுடன் அவனை மணி பல்லவத் தீவிற்கு அழைத்துச் சென்று அவனது மறுபிறப்பை உணரச் செய்தது. பின்னர் அவன் இந்தப் பிறவியில் செய்ய வேண்டிய அறசெயல்களைச் செய்ய அறிவுரை வழங்கியது. கண்ணகியிடம் மறு பிறப்பின் காரணத்தைக் கேட்டு அறிதல். ‘கோபத்தால் மதுரையை எரித்த செயல் காரணமாகச் சொர்க்கத்திலிருந்து மீண்டும் (கோவலன் உடன்) மறுபிறப்பெடுத்த தாங்கள் புத்த தேவனின் பொற்பாதங்களை பணிந்து தங்களுடைய பிறவியில் முற்றுப்பெறுவோம் என்ற என்ற செய்தியோடு சமய கணக்கரிடம் சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டுக்கொள்’ என்ற அறிவுரையை கேட்ட மணிமேகலையிடம் அவ்வாறு கேட்கின்ற பொழுது ‘நீ வேற்றுருவம் கொண்டு செல்’ என்ற அறிவுரையும் சொல்வது கவனிக்கத்தக்கது. ‘பெண்ணாக இருப்பதாலும் இளையவளாக இருப்பதாலும் உனக்கு அவர்கள் யாரும் சமயக் கருத்துக்களைக் கூற மாட்டார்கள்’ என்று கருத்து இந்த இடத்தில் கண்ணகியின் மூலமாக மணிமேகலைக்குக் கூறப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ளத் தக்க ஒன்று. கண்ணகி கூறியவாறு ஓர் ஆணின் தோற்றத்தோடு சென்ற மணிமேகலை பல்வேறு சமயங்களின் கருத்துக்களை கேட்டாலும் அவள் உள்ளத்தில் அச்சமயங்களின் கருத்து ஏற்புடையதாக இல்லை என்று தோன்றுவதும், பிறகு அவர்களிடம் வாதம் புரிந்து அங்கிருந்து செல்லுகிற வழியில் மாசாத்துவானிடம் மணிமேகலா தெய்வத்தின் அருளையும் புத்தரின் பெருமையும் கேட்டு அறிதல் என்ற இந்த நீண்ட செயல்களுக்கு பின்னர் அவள் அறவண அடிகளை மூன்றாம் முறையாக சந்திக்கிறாள் அப்பொழுதுதான் அவளுக்கு அறவண அடிகள் புத்த தேவனின் அறவுரைகளைச் சொல்லுகிறார்.
“மணிமேகலையின் பழம்பிறப் புணர்வும், எதிர்கால நிகழ்ச்சி யுணர்வும் அவட்கு வாராதிருப்பின், அவள் வாழ்க்கையே வேறு வகையில் திரும்பி யிருக்கும். இவட்கு மணிமேகலா தெய்வமும் தீவதிலகையும் அறவண வடிகளும், கந்திற் பாவையும் கண்ணகி கடவுளும் மாசாத்துவானும் பெருங்காவல் செய்வதுபோல இவ்வுணர்வுகளைக் கொளுத்தினமையின், இவள் தன்வாழ்வைத் தூய்மையாக நடத்தி அறப்பயனைப் பெற நேர்ந்தது. இவளுடைய இயற்கையறிவு யாண்டும் தனித்து நின்று ஒரு நிகழ்ச்சியையும் நிகழ்த்தவில்லை. (முப்பெரும் காவியங்களில் மணிமேகலை ஆராய்ச்சி பக்.66, 67) .
மணிமேகலையின் துறவு என்பது மாதவியால் திடீரென்று எடுக்கப்பட்டாலும் அவள் பௌத்த சமயத்தின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான பின்னணியில் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடந்ததை காப்பியம் முழுமைக்கும் பரவலாக சொல்லப்பட்டு இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது அஃது அறவண அடிகள் முதல் சந்திப்பு அரவணை அடிகள் இரண்டாம் சந்திப்பு அரவணை அடிகள் மூன்றாம் சந்திப்பு என்று மூன்று சந்திப்புகளின் பின்புலங்களில் நடைபெற்ற மேற்கண்ட உரையாடல்களின் தொகுப்பில் இருந்து நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
முடிவுரை
மணிமேகலையின் பயணத்தை நாம் கவுந்தியடிகளின் மரணத்திலிருந்து தொடங்குவது சரியாக இருக்கும். கவுந்தியடிகள் ஏன் துறவியாக மாறினாள் என்பது பற்றி நமக்குச் சரியாகத் தெரியவில்லை. என்றாலும், அவரது செயல்பாடுகளின் பின்புலத்தில் ஏதோ பிரச்சனை (அவளது வாழ்க்கையில்) ஏற்பட்டதன் பின்னணியில் தான் அவள் துறவியாக மாறி இருக்கிறாள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் எதுவாயினும் அவள் துறவு மேற்கொண்ட சமண சமயத்தில் அவள் உயர்வு அடையவில்லை. அதனால்தான் கோவலன் வாழ்க்கையில் நடந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் அவள் இறந்து விடுகிறாள்.
தன் காதலனால் ஏமாற்றப்பட்ட சுதமதி முதலில் சமண சமயத்தை நாடுகிறாள் பின் அச்சமயத்தில் இருந்து வெளியேறி பௌத்த சமயத்தைத் தழுவுகிறாள்.
இந்த இருவர் பின்னணியில் இருந்துதான் நாம் மணிமேகலையின் பௌத்த துறவு குறித்து ஆராயவேண்டும். மேற்குறித்த இரு பெண்களின் சமண சமய துறவின் தோல்விக்கான காரணம் பெண்களுக்கான இடம் அச்சமயத்தில் வழங்கப்பாடமைதான் என்றும் அதனால்தான் அவர்கள் அச்சமயத்தில் இருந்து புறம் தள்ளப்பட நிகழ்வுகள் நடந்துள்ளன என்பதும் புலனாகிறது.
மேலும், இங்கு இன்னும் சில விஷயங்களை நாம் பார்க்க வேண்டி உள்ளன. மணிமேகலை பௌத்த துறவியாக மாறிய பிறகு அவள் மணிபல்லவத் தீவிற்கு மணிமேகலா என்ற பெண் தெய்வத்தால் அழைத்துச் செல்லப்படுகிறாள். மணி பல்லவத் தீவை பாதுகாத்து வருபவள் தீவதிலகை என்ற பெண். இவ்வாறு இரண்டு பெண்களின் பின்னணியில் அவளுக்கு அமுதசுரபி கிடைக்கிறது. .கிடைத்த அமுதசுரவிலிருந்து உணவை யாரிடமிருந்து பெறவது அவ்வாற் பெற்ற உணவை யாருக்கு முதலில் தருவது என்ற கேள்வி எழுந்த பொழுது ஆதிரை காயசண்டிகை என்ற இரண்டு பெண்கள்தான் அங்கு வருகிறார்கள். ஆதிரை என்ற பெண்ணிடம் இருந்து உணவை பெறுகிறாள். அவ்வாறு பெற்ற உணவை காயசண்டிகை என்ற பெண்ணுக்குத் தான் முதலில் தருகிறாள்
தன்னுடைய முற்பிறவி கணவனாக இந்தவனும் இந்தப் பிறவியில் காதலனாக இருந்தவனுமான உதயணன் இறப்பிற்குப் பிறகு இராசமாதேவியின் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வை மாற்றி அவளை நல்வழிப்படுத்துகிறாள். இராசமாதேவி தன் தவறை உணர்ந்து மணிமேகலையின் மேன்மையை உணர்கிற அந்த நேரத்தில் சரியாக அங்கு வருகிற அறவண அடிகள் அவளை வாழ்த்துகிற பொழுது 'அறிவு உண்டாகட்டும்' என்று வாழ்த்துகிறார் என்பதையும் இந்த இடத்தில் நாம் இணைத்துப் பார்க்க வேண்டியது.
ஏனெனில் இராசமாதேவியிடம் இல்லாதது அஃது ஒன்றுதான் என்பதாக நாம் அங்கு புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. நீடூழி வாழ்க! என்றோ மங்களகரமாக வாழ்வாய்! என்றோ வாழ்த்தாமல் அவ்வாறு வாழ்த்தியது அதுவும் மணிமேகலையின் அறவுரைகளைக் கேட்டு தெளிவுப்பெற்ற பின்னணியில் அந்த வாழ்த்து அமைந்திருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு கண்ணகியைச் சந்தித்த பொழுது புத்த தேவனின் திருப்பாதங்கள்தான் இறப்பிலிருந்து தங்களுடைய (கோவலனையும் சேர்த்து) பிறப்பை தடுத்து நிறுத்த முடியும் என்ற அறவுரையைப் பெறுவதும் அதனைத் தொடர்ந்து கோவலனுடைய தந்தையான மாசாத்துவனைச் சந்தித்த பொழுது புத்த தேவனின் அறிவுரை பேரில் மணிமேகலா தெய்வம் தன்னுடைய 9 தலைமுறைக்கு முந்தைய மூதாதையரை கடலில் இருந்து காத்த செய்தியும், அதே மணிமேகலா தெய்வம் கோவலனின் கனவில் தோன்றி மணிமேகலையின் துறவு குறித்து சொல்லியதாக கூறப்படுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளன.
தோழி சுதமதி தொடங்கி ஆதிரை காயசண்டிகை மணிமேகலா தெய்வம் தீவதிலகை தெய்வமாக மாறிய கண்ணகி என்று காப்பியம் முழுவதும் பெண்களை மையமாக கொண்டு கதை நகர்வு நிகழ்வதும் அந்நிகழ்வுகளின் இடையே ஒன்று அறிவு சார்ந்த முன்னெடுப்புகளும் இன்னொன்று சமூகத்தின் வறுமையைப் (பசிப்பிணி) போக்குதல் என்ற பின்புலத்தில் சுழன்று கொண்டிருப்பதையும் கவனிக்க முடிகிறது.
இறுதியாக ஒன்று. இக்காப்பியத்தில் மணிமேகலை அறவண அடிகளை மூன்று முறை சந்திப்பதாக சொல்லப்படுகிறது. முதல் முறை சந்திப்பில் இரண்டாவது முறை சந்திப்பிலும் நீ இன்னும் அறவுரைகளை என்னிடம் கேட்பதற்கு தயாராகவில்லை என்று சொல்லும் அறவண அடிகளின் கூற்று ஒருபுறமும் மறுபுறம் இந்த நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருப்பதும் மூன்றாவது முறை அவள் அறவண அடிகளை சந்தித்த பொழுது மணிமேகலை சமய கணக்கர்களிடம் அக்கால சமயங்கள் குறித்த செய்திகளைக் கேட்டு அறிந்து இருப்பதும் அந்த சமயங்களில் உள்ள கருத்துக்கள் தனக்கு உடன்பாடாக இல்லை என்ற தெளிவு பெற்ற பின்புலத்தில் அவள் அறவண அடிகளிடம் பௌத்த சமயத்தின் அறக்கருத்துக்களை கேட்பதும் அவ்வாறு கேட்டவள் வீடு பேறு அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவது என்பதாக காப்பியம் நிறைவடைவதையும் நாம் இணைத்து பார்க்க மணிமேகலை காப்பியத்தின் மாண்பு நமக்கு தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
துனைநின்ற நூல்கள்
இளவழுதி.வீ., சிலப்பதிகாரம் (மூலமும் உரையும்), 2015 (முதல் பதிப்பு), தி.நகர், சென்னை -600 017.
இறைக்குருவனார், திருக்குறள் மணி புலவர்., சிலம்பில் பிழையா (ம. பொ. சி. க்கு மறுப்பு), 1983 (மறுபதிப்பு- 1) தமிழ் கொடி பதிப்பகம் , 88 தம்பு செட்டி தெரு , சென்னை - 600 001.
சிதம்பரனார், சாமி., சிலப்பதிகாரத் தமிழகம், 2008 (முதல் பதிப்பு), அறிவுப் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை – 600 014.
சுப்பிரமணியன், முனைவர் ச.வே., கானல் வரி, 2002 (முதல் பதிப்பு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600 113.
சுப்பிரமணிய ஆச்சாரியார். திரு வித்துவான்.வெ.சு. , சிலப்பதிகார ஆராய்ச்சி, நா.முனிசாமி முதலியார், பத்திராதியர் 'ஆனந்தபோதினி,' சென்னை 1917.
தங்கவேலு, முனைவர் கோ, தமிழக வரலாற்று வரிசை -9, தாய்நில வரலாறு (முதல் பாகம்), 2013 (முதல் பதிப்பு), அமிழ்தம் பதிப்பு, தி.நகர், சென்னை – 600 017.
திருகூட சுந்தரம், பொ., சிலப்பதிகாரம் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்), 1967 (முதல் பதிப்பு), அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் நூல் வெளியீடு.
துரைசாமிப் பிள்ளை. ஒளவை., முப்பெரும் காவியங்களில் ஒன்றான மணிமேகலை ஆராய்ச்சி,1942 (முதல் பதிப்பு) திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகம் லிமிடெட் சென்னை.
நடராசன், தி.சு., சிலப்பதிகாரம் மறுவாசிப்பு, 2015 (முதல் பதிப்பு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை - 600 098.
பஞ்சாங்கம், க., இலக்கியத் திறனாய்வு (பஞ்சாங்கம் கட்டுரைகள் II), 2010 (முதல் பதிப்பு), காவ்யா வெளியீடு, கோடம்பாக்கம், சென்னை – 600 024.
மாணிக்கம்.ஞ (உ.ஆ)., சிலப்பதிகாரம் தெளிவுரை, 2019 (பத்தாம் பதிப்பு), உமா பதிப்பகம், சென்னை – 600 001.
மீனாட்சி சுந்தரனார், தெ.பொ., சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் தெ.பொ.மீ களஞ்சியம் - 4, 2005 (முதல் பதிப்பு), காவ்யா வெளியீடு, கோடம்பாக்கம், சென்னை - 600 024.
ஆய்வுக் கட்டுரைகள்
தேவந்தி – மடலமறையோன் பயணங்களில் உள்ள முரண்களும் அவற்றின் பின்னணியும், மார்ச் - 2023, புதியவையம், (UGC Approved journal) pa: 253 – 261, ISSN : 2456-821X
சிலப்பதிகார வாசிப்பில் உள்ள முரண்பாடுகளும் இடைவெளிகளும், ஜூலை - 2021, Shanlax International Journal of Tamil Research Volume: 6 Issue:1 P-ISSN: 2454- 3993
மணிமேகலை கட்டமைக்கும் சமூக அரசியல் ... IJCRT.org இணைப்பு 1 இணைப்பு 2
மணிமேகலைக் காப்பியத்தில் புத்தசமய நெறி – ResearchGate
பௌத்த சமயமும் மணிமேகலை மொழிபெயர்ப்புகளும்
இரட்டைக் காப்பியங்களில் மணிமேகலை பற்றிய செய்திகளின் பின்புல அரசியல் journal,, Volume: 9, Issue:35, ISSN 2455 - 0531
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.