மாண்புறு நல்லாசிரியர் மயிலங்கூடலூர் பி. நடராசன் அவர்கள்! - சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா -
நடராசன் சேர் இவ்வுலகை நீத்துவிட்டார் என்ற செய்தியை அறிந்தபோது, தாங்கொணாத் துயர் என் தொண்டையை இறுக்கியது. அதிர்ச்சியில் இருந்து மீண்டெழும்போது, அவருடன் உறவாடிய நினைவுகள் ஒன்றையொன்று முந்திக்கொண்டு நெஞ்சில் அலை மோதத் தொடங்கின.
என் வாழ்வில் மறக்க முடியாத அவர், எனது உயிரியல் பாட ஆசிரியர். என்னுள்ளிருந்த எழுத்து ஆற்றலை இனங்கண்டு, என்கழுத்தைப் பிடித்து எழுத்து உலகில் இழுத்துத் தள்ளிவிட்ட பெருந்தகை. தமிழை உயிராகவும், பகுத்தறிவை உணர்வாகவும் கொண்டு வாழ்ந்த விஞ்ஞான ஆசிரியர். என்னில் மிகுந்த அன்பு கொண்டு கண்காணித்து என் வளர்ச்சியில் அக்கறை செலுத்தியவர். 1980 ஆம் ஆண்டு, நாயன்மார்கட்டில், அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தபோது, தன்வீட்டில் ஒருநாள் தங்கிச் செல்லவேண்டுமென்று அன்புக் கட்டளையிட்டு என்னைச் தங்கச் செய்து, மகிழ்வு கொண்டு என்னையும் மகிழவைத்தார். எனது திருமணம் நிச்சயிக்கப்பட்டபின்னர், மணப்பெண்ணுடன் அவரைச் சென்று சந்தித்து ஆசி பெற்று வந்தேன். அதுவே அவரை நேரிலே இறுதியாகச் சந்தித்த நாளாகிவிட்டது.
ஓர் ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக, உன்னதமான ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருந்த உத்தமர் அவர். மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், எட்டாம் வகுப்பில் பொதுவிஞ்ஞானத்தையும், ஒன்பதாம் பத்தாம் வகுப்புக்களில் (க.பொ.த. சாதாரண தரம்) உயிரியலையும் எங்கள் வகுப்பினருக்கு கற்பித்தார். இந்த இரண்டு பாடங்களைக் கற்பித்த ஒரே காரணத்திற்காக மட்டுமல்ல, கண்டிப்பான ஒரு தந்தையைப் போல, அன்பான ஒரு தாயைப்போல, கண்ணியமான ஒரு தமயனைப்போல, இடுக்கண் வருங்கால், களைகின்ற ஒரு நண்பனைப்போல எங்களை அரவணைத்து வளர்த்தெடுத்த பெருந்தகையாக அவர் விளங்கினார் என்பதாலும், மறக்கமுடியாத ஆசிரியராக அவர் எங்கள் இதயங்களில் குடிகொண்டிருந்தார்.
சிறந்த ஆசிரியர்கள் பலரிடம் கல்விகற்கும் பேறு எங்களுக்குக் கிடைத்தது. அவர்களில் மிக உயர்ந்த ஆசிரியராகத் திகழ்ந்தவர் நடராசன் சேர் அவர்கள். வேட்டியும், அதே வெள்ளை நிறத்தில் (வாலாமணி என்று சொல்லப்பட்ட) முழுநீளக்கைச் சட்டையும், மூக்குக் கண்ணாடியும் அணிந்த அந்த மெல்லிய, உயர்ந்த உருவம் வகுப்பிற்குள் வரும்போதே எங்கள் முகமெல்லாம் பூவாகப் பூக்கும்.