கடன் நெருக்கடிகளும், உக்ரைன்-ரஷ்ய போரும்! - ஜோதிகுமார் -
Iஉக்ரைன்-ரஷ்யா போர்களத்தில், அண்மையில் நடந்த இரு நிகழ்வுகள், உலக அளவில் ஊடகங்களில் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டன: ஒன்று, KHMELNYTSKYI எனும் இடத்தில், உக்ரைனின் ஆயுத தளபாடங்களின் சேமிப்பு நிலையத்தின் மீது ரஷ்யா, நடத்திய மாபெரும் தாக்குதல். மற்றது, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாய், “எமது அரண்”, “எமது இதயம்” என்று உக்ரைனினால் கொண்டாடப்பட்ட பக்மூத் (Bakhmuth) என்னும் பாதுகாப்பு கோட்டையின் ஒட்டுமொத்த வீழ்ச்சி
II
KHMELNYTSKYI ஆயுத கிடங்கானது, உக்ரைன் தலைநகர் கிவ்விலிருந்து 322km தொலைவிலும் இதனை விட நெருக்கமாக, மேற்படி கிடங்கு, போலந்து எல்லையிலிருந்து 119km தொலைவிலும் அமைந்து கிடக்கிறது. அதாவது, உக்ரைனின் மேற்கு புறமாய் அமையப்பெற்றிருந்த இம் மாபெரும் ஆயுத கிடங்கு, போலந்து எல்லைக்கு மிக அருகாமையிலும், ரஷ்ய எல்லைக்கு மிக தொலைவிலும் அமையப்பெற்றிருப்பது குறிக்கத்தக்கது. இருந்த போதிலும், ரஷ்யா, மே 15-16இன் இரவில், 18 ஏவுகணைகளையும் ஆறு ட்ரோன்களையும் கொண்டு மேற்படி, தொலைதூர தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது. 18 ஏவுகணைகளில் ஆறு ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் எனவும் ஒன்பது குரூஸ் (CRUISE) ஏவுகணைகள் எனவும் ஏனைய மூன்று ஏவுகணைகள் இனம் தெரியாதவை எனவும் கூறப்படுகின்றது. இவற்றில் பல ஏவுகணைகளைதான் சுட்டு வீழ்த்தி விட்டதாக உக்ரைன் அறிவித்த போதும், தாக்குதலின் போது இங்கிலாந்து அனுப்பி வைத்திருந்த யுரேனிய ((URANIUM) முனை கொண்ட தாங்கிகளுக்கான குண்டுகள் பலவற்றையும், கூடவே, உலகின் முதல் தர விமான-அணு எதிர்ப்பு ஏவுகணையான அமெரிக்காவின் பேட்ரியேட் ஏவுகணைகளும் அழிந்து விட்டதாக உக்ரைனினாலேயே அறிவிக்கப்பட்டது.