அஞ்சலி: பன்முகத்திறமை மிக்க கலைஞர் ரேலங்கி செல்வராஜா! - ஊர்க்குருவி -
இவர் ஒ ரு சிறந்த ஊடகவியலாளராகவிருந்தவர். சிறந்த நடிகையாக ஒளிர்ந்தவர்; திறமை மிக்க நர்த்தகியாக மிளிர்ந்தவர். இவரதும், இவரது கணவரதும் நினைவு தினம் ஆக்ஸ்ட் 12. இவர் நடித்த திரைப்படம் இலங்கையில் வெளியான முதலாவது சினிமாஸ்கோப் தமிழ்த்திரைப்படமான 'தெய்வம் தந்த வீடு' அதில் இவர் குமுதினி என்னும் பெயரில் நடித்திருந்தார். நடிகர் ஏ.ரகுநாதனுடன் நடித்திருந்தார். இவரது இனிய குரல் இவரைச் சிறந்த வானொலிக் கலைஞராக மின்ன வைத்தது.
அரசியலில் ஒருவர்மேல் ஒருவர் சேற்றை வாரியிறைப்பார்கள். அதற்காக ஒருவரையொருவர் கொன்று குவிப்பதில்லை. ஆனால் இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தின்போது மாற்றுக்கருத்துள்ளவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். இது இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் உரியதொன்றல்ல. உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆயுதப்போராட்டங்களில் இவ்வகையான போக்கு நிலவியதைக் காண்கின்றோம். இவ்வகையான போக்கே பல நாடுகளில் ஆயுதப்போராட்டங்களின் தோல்விகளுக்கும் முக்கிய காரணங்களிலொன்றாகவிருந்தது.
இவரது கணவர் இவருடன் சேர்த்துக் கொல்லப்பட்டார். முன்னாட் போராளிகளிலொருவரான அவர் கொல்லப்பட்டபோது மனைவியுடன் சேர்ந்து 'பயண' வர்த்தக நிறுவனமொன்றினை நடத்திக்கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் கொல்லப்பட்ட இவர்கள்து பெண் குழந்தைக்கு வயது ஒன்று. இவர்தான் 'தெய்வம் தந்த வீடு' என்னும் இலங்கைத்தமிழ்த்திரைப்படத்தில் குமுதினி என்னும் பெயரில் நடித்திருந்த ரேலங்கி செல்வராஜா. கொக்குவிலைச் சேர்ந்தவர். இவரது கணவரான சின்னத்துரை செல்வராஜா ஓமந்தையைச் சேர்ந்த முன்னாட் போராளி.