நினைவு கூர்வோம்: மருத்துவர் இராஜசுந்தரம்! - வ.ந.கி -
இன்று , ஜூலை 27, மருத்துவர் இராஜசுந்தரம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட நாள். இலங்கையின் வரலாற்றில், குறிப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றில், இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் இலங்கைத் தமிழரின் ஆயுதப்போராட்ட வரலாற்றில் மருத்துவர் இராஜசுந்தரத்துக்கு முக்கியமான, நிலையானதோரிடமுண்டு. அவரது பங்களிப்பின் முக்கியத்துவம் பன்முகப்பட்டது. 'கட்டடக்கலைஞர்' எஸ்.ஏ.டேவிட்டின் கனவான 'காந்தியச் சமூகம்' என்னும் மானுட விடுதலைக்கான தீர்வுத் திட்டத்தினை வட,கிழக்கில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் முக்கியமான பங்களிப்பு அவருடையது. அப்பங்களிப்பு மூலம் அக்காலகட்டத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் திட்டத்தினை வெற்றிகரமாகச் செயற்படுத்து வதில் முழுமூச்சுடன் உழைத்தவர் அவர். இவ்விதமானதொரு சூழலில் இலங்கைத் தமிழர் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. அச்சூழலில் தவிர்க்கமுடியாதவாறு காந்தியம் அமைப்பும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. எல்லைப்புறங்களில் நடைபெற்ற குடியேற்றங்கள் மேலும் விரிவு படாமலிருக்கவும், எதிர்காலக் குடியேற்றங்களைத் தடை செய்யும் நோக்கிலும் காந்திய அமைப்பு வடகிழக்கின் எல்லைப்பிரதேசங்களில் அதிகமான குடியேற்றத்திட்டங்களை உருவாக்கியது. இச்சமயத்தில் காந்திய அமைப்பினுள் சந்ததியாரின் வருகை அவ்வமைப்பினைத் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளில் ஈடுபட வைத்துவிட்டது. பின்னர் காந்திய ஸ்தாபகர் 'டேவிட் ஐயா' , மருத்துவர் இராஜசுந்தரம் போன்றோர் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். காந்தியச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டனர். கனடாவில் வாழ்ந்து மறைந்த சண்முகலிங்கம் அவர்களும் அவர்களிலொருவர். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவரது அனுபவங்களைப் பதிவு செய்யும்படி கூறுவேன். அவரும் பதிலுக்குப் பதிவு செய்யப்போவதாகக் கூறுவார். இறுதியில் பதிவு செய்யாமலேயே மறைந்து விட்டார்.