சிறுகதை: சந்தியா அப்பு! - செ.டானியல் ஜீவா -
எனக்கு பிடித்த மனிதர்கள் என்று என்னுடைய ஊரில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் சிலர் தான் இருக்கிறார்கள். அவர்களில் சந்தியா அப்பு மிக முக்கியமானவர். வயது எண்பதை நெருங்கினாலும் சோர்வில்லாமல் உழைத்த மனுஷன். வாளிப்பான தேகம், விறைப்பான முறுக்கு ஏறிய தோல் பட்டைகள். ஒரு காலத்தில் பெயர் போன சிறகு வலைத் தொழிலாளியாக அறியப்பட்டவர். இப்போது விடு வலைத் தொழிலுக்கும், கூடு வைக்கிற தொழிலுக்கும் போய் வருகின்றார். எங்களுடைய ஊர் கோயிலில் இருக்கும் சிறிய அறை ஒன்றிலே நானும் என் தந்தையின் தகப்பனாரான செபஸ்தி என்று ஊரவர் அழைக்கும் செபஸ்தியார் அப்புவும் வசித்துவந்தோம். அப்பு வசிப்பதற்காகவே கோயில் நிர்வாகத்தினர் அந்த அறையை கொடுத்திருந்தார்கள். நாங்கள் எல்லோரும் அப்பையாவை அப்பு என்றுதான் அழைப்பது வழக்கம். அப்பு கோயிலில் சங்கிடத்தார் வேலை செய்கிறவர்.
நான் பதினான்கு வயது வரைக்கும் அங்கே இருந்து தான் பள்ளிக்குச் சென்று வந்தேன். ஒரு மார்கழி மாதக்குளிரோடு அப்புவின் உயிரும் அடங்கிப்போனது. அப்பு இறந்த பின்னர் நான் பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு கடல் தொழிலுக்குப் போகத் தொடங்கினேன். அப்புவோடு நான் இருந்த காலத்தில், ஒரு நாள் ஞாயிறு காலையில் அப்புவை தேடி ஒருவர் வந்தார். அவர்தான் சந்தியா. தென்மோடிக்
கூத்தில் போட்ட ஒப்பனை கலையாத முகத்துடன் அவர் அங்கு வந்திருந்தார்.
“இவன் என்ர பேரன் கொஞ்சம் முசுப்பாத்தியாக எப்பவும் கதைப்பான்” என்று. சொல்லிக்கொண்டே அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் அப்பு. முதல் நாள் இரவு நடந்த கூத்தில் கோமாளி வேடமணிந்த சந்தியாவின் நடிப்பை ஏற்கனவே நான் எங்கட அப்புவுக்கு நடித்துக் காட்டியபோது அவர் விழுந்து விழுந்து சிரித்து விட்டு
"அவர் நல்ல நடிகன், அதோட நல்ல மனுஷன். ஒருத்தரைப் பார்த்து வா போ என்றுகூடக் கதைக்க மாட்டார். மிகவும் மரியாதையாகப் பழகுபவர். சிறு வயதில் இருந்தே நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறம். ஒருவகையில் அவரும் நம்மட சொந்தக் காரர்...! " என்று அப்பு சொன்னார். அவரைப் பற்றி சொல்லும் போது அப்புவின் கண்களில் ஏதோ ஒரு இனம் புரியாத கசிவும், இரக்கமும் கரைந்து இருந்ததை கூர்ந்து அவதானித்தேன். அப்பு தொடர்ந்து ஏதாவது அவரைப் பற்றி கதைப்பார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அதற்குமேல் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். ஏதாவது சோகம் அவரது நெஞ்சை நிறைக்கும்போது, எதுவும் பேசாமல் அமைதியாகவே இருப்பது அவரது வழக்கம். என்னுடைய ஆச்சியின் மரணம் அவரை நடைப்பிணமாக்கிவிட்டது.