பாவலர் துரையப்பா பிள்ளை அவர்களால் 1910 ஆண்டளவில் திண்ணைப் பள்ளிக்கூடமாக தொடங்கப்பட்ட ஆரம்ப பாடசாலை, படிப்படியாக வளர்ந்து, அபிவிருத்தி கண்டு, மகாஜனா கல்லூரியாக தரணியில் உயர்ந்திருப்பதை நன்கறிவீர்கள். ஏராளமான கல்விமான்களையும், அறிஞர்களையும், படைப்பிலக்கியவாதிகளையும், விஞ்ஞானிகளையும், பொறியியல், மருத்துவம், கணக்கியல், சட்டம் உட்பட பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களையும் தன்னார்வத் தொண்டர்களையும், ஆசிரியர்கள், பேராசிரியர்களையும் உருவாக்கிய விருட்சமாகத்திகழ்வது யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி.
இங்கு நான் கற்றிருக்காதுபோனாலும், இங்கு தமது கல்வியைத் தொடர்ந்து பின்னாளில் மேற்குறிப்பிட்ட துறைகளில் புகழ்பெற்ற பலர் எனது நண்பர்கள் வட்டத்தில் இணைந்துகொண்டார்கள். மகாஜனா கல்லூரிக்கும் எனக்குமிடையே உணர்வுபூர்வமான தொடர்பு இருந்தமையாலோ என்னவோ, பல “ மகாஜனன்கள் “ எனது நெஞ்சத்துக்கும் நெருக்கமானார்கள் .
அரைநூற்றாண்டுக்கு முன்னர் 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து எனக்கு கிடைத்த டொமினிக்ஜீவாவின் மல்லிகை மாத இதழில்தான் எனது முதலாவது சிறுகதை ( கனவுகள் ஆயிரம் ) வெளியானது. அவ்விதழின் அட்டைப்படத்தை அலங்கரித்தவர் பாவலர் துரையப்பா பிள்ளை. அதன்பின்னர், 12 ஆண்டுகள் கடந்த நிலையில் 1984 ஆம் வருடம், அக்கல்லூரியில் நடந்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் முரண்பாடுகள் அறுவடை கதைத் தொகுப்பு வெளியீட்டு அரங்கில் உரையாற்றுவதற்கு சென்றபோதுதான் இக்கல்லூரியின் வாயிலில் எனது காலடித்தடம் பதிந்தது.
அந்த முற்றத்தில் வீணை ஏந்திய கலைவாணியின் அழகான சிலை. இக்கல்லூரியில் கற்று படைப்பாளியாக உயர்ந்த மஹாகவி உருத்திரமூர்த்தி அவர்கள் எழுதிய ஒரு கவிதையில் “வாணி. அது உனது காணி “ என வர்ணித்து எழுதியிருப்பார். அந்த வாணியையும் ஆளும்வர்க்கத்தின் ஆயுதப்படையினர் அபகரித்து, மீண்டும் விடுவித்தது வேறு கதை!
இவ்வாறு பல இலக்கிய மற்றும் வரலாற்றுச்செய்திகளை கொண்டிருக்கும் மகாஜனா கல்லூரியின் வழித்தோன்றலான தியாகராஜா ஶ்ரீஸ்கந்தராஜாவும் தற்போது செய்தியாகிப் போனார்.!
வழக்கம்போன்று காலை வேளையில் நடைப்பயிற்சிக்கு செல்லும் அவரை, கடந்த 08 ஆம் திகதி காலன் வந்து அழைத்துச் சென்றுவிட்டான். அடிக்கடி அமெரிக்காவிலிருக்கும் தனது மைத்துனர் ராஜலிங்கம் அவர்களுடன் மெய்நிகர் ஊடாக உரையாடி ஆன்மீகம் முதல் அனைத்துலக அரசியல் மற்றும் சமூகப்பிரச்சினைகள், உடல் – உள நலம் சம்பந்தமான சந்தேகங்கள் பற்றியெல்லாம் உரையாடி வந்திருப்பவர்தான் தியாகராஜா ஶ்ரீஸ்கந்தராஜா.
நவம்பர் 06 ஆம் திகதியும் அவ்வாறு அமெரிக்காவிலிருக்கும் மைத்துனருடன் உரையாடிவிட்டு, திரும்பி வந்து உரையாடலின் சாராம்சம் தொடர்பாக பதில் எழுதுவேன் எனச்சொல்லிவிட்டு எழுந்து சென்றவர்தான் மீண்டும் திரும்பி வரவில்லை. அன்றைய தினமும் நடைப்பயிற்சியிலிருந்தவரை விதி, ஒரு காரின் ரூபத்தில் வந்து அவர் வாழ்வில் விளையாடிவிட்டு அகன்றுவிட்டது. சமகாலத்தில் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவங்களில் மற்றும் ஒன்று அன்பர் தியாகராஜா ஶ்ரீஸ்கந்தராஜா அவர்களின் திடீர் மறைவு.
1988 களில் அவரை விக்ரோரியா இந்து சங்கத்தின் ( இச்சங்கம்தான் அதே ஆண்டு விக்ரோரியா மாநிலத்தில் கரம்டவுண்ஸ் என்ற இடத்தில் தைப்பொங்கல் தினமன்று ஶ்ரீசிவா – விஷ்ணு ஆலயத்திற்கான அடிக்கல்லையும் நாட்டியது.) பிரார்த்தனை நிகழ்ச்சிகள் Prahran Migrant Centre இல் வெள்ளிக்கிழமை தோறும் நடந்த வேளைகளில் சந்தித்திருக்கின்றேன். பின்னாளில் நாம் இலங்கையில் நீடித்த போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ்ச்சிறார்களுக்காக இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினை ஆரம்பித்தபோது, அதன் நிதிச்செயலாளராகிய செல்வி வித்தியா அரசரட்ணம் அவர்களை , அவரது செல்வப்புதல்வன் மனுபிரணவன் மணம் முடித்தபோது ஶ்ரீஸ்கந்தராஜாவுடனான உரையாடல்கள் நெருக்கமானது.
அவர் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் பழைய மாணவராயிருந்தமையினால், அந்த மாணவர் சங்கத்தின் விக்ரோரியா மாநில கிளையில் இணைந்து இயங்கியவாறு பல ஆக்கபூர்வமான பணிகளை கல்லூரிக்காக முன்னெடுத்தார். இதே கல்லூரியின் முன்னாள் மாணவியும், பின்னாளில் அக்கல்லூரியிலேயே ஆசிரியையாக பணியாற்றியவருமான படைப்பிலக்கியவாதியும் சீர்மியத் தொண்டருமான திருமதி கோகிலா மகேந்திரன் மெல்பனுக்கு வருகை தந்தபோது, பழையமாணவர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருந்தார்.
அக்கல்லூரியில் கற்ற பல மாணவர்களின் கல்வித்தேவைகளுக்காக தொடர்ந்தும் தனது உழைப்பினையும் வருவாயில் கணிசமான தொகையினையும் நல்கிய பெருந்தகைதான் ஶ்ரீஸ்கந்தராஜா. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமிருந்தாலும், கலை, இலக்கியத்தை ரசிப்பதிலும் நேசிப்பதிலும் ஆர்வம் மிக்கவர். அவருக்கும் மகாகவி பாரதியில் மிகுந்த ஈடுபாடு இருந்திருக்கிறது என்பதை , அவரின் இறுதி நிகழ்வின்போது அமெரிக்காவிலிருந்து பறந்து வந்த அவரது மைத்துனர் ராஜலிங்கம் அவர்கள் நிகழ்த்திய அஞ்சலி உரையிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
பாரதியின் “ நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்
சொல்லடி சிவசக்தி “
என்ற பாடல் வரிகளை தானும் ஶ்ரீஸ்கந்தராஜாவும் உச்சரித்து, அதிலிருக்கும் பொருள்நயம் பற்றி விவாதிப்பதுண்டாம் என்று அன்பர் ராஜலிங்கம் சொன்னார். அவர் தனது இரங்கலுரையில், “ எப்போதும் மந்திரப்புன்னகை தவழ அனைவருடனும் இன்முகத்துடன் உரையாடும் எங்கள் ஶ்ரீஸ்கந்தராஜாவையும் அந்த மரகத வீணையைப்போன்று இவ்வாறு எறிந்துவிட்டாயே… சொல்லடி சிவசக்தி… “ என்று ஆதங்கத்துடன் உரையாற்றியபோது நாம் நெகிழ்ந்துவிட்டோம்.
பாரதியின் கவிதைகளில் ஈடுபாடுகொண்டிருந்த ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள், பாரதியின் ஏழைகளின் கல்வி தொடர்பான சிந்தனைகளினாலும் பெரிதும் கவரப்பட்டிருந்தார் என்பதை அன்றைய இறுதி நிகழ்வில் உரையாற்றிய அவரது வகுப்புத்தோழன் சம்பந்தனின் இரங்கலுரையிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
ஶ்ரீஸ்கந்தராஜா பல வருடங்களுக்கு முன்னர் எமது மாநிலத்தில் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகத்திலும் தோன்றினார். அந்த நாடகத்தில் எழுத்தாளர் கே. நித்தியகீர்த்தியும் நடித்தார்.
கரம்டவுண்ஸ் ஶ்ரீ சிவா – விஷ்ணு ஆலயத்தில் இளம்தலைமுறை சிறார்களுக்காக அவர் சமய வகுப்புகளும் நடத்தியிருப்பதை அவதானித்திருக்கின்றேன். மகாபாரதக்கதைகள், இராமாயணக்கதைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் குழந்தைகளுக்கு எளிதாகச் சொல்லிக்கொடுக்கும்போதும் அவரது முகத்தில் புன்னகை தவழ்ந்துகொண்டேயிருக்கும்.
சில வருடங்களுக்கு முன்னர் தமிழக இலக்கிய நண்பரும், எழுத்தாளரும், சமூகச்செயற்பாட்டாளரும் கீழடி அகழ்வாராய்சி தொடர்பாக எழுதியும் பேசியும் வருபவருமான அ. முத்துக்கிருஷ்ணன் மெல்பனுக்கு வருகை தந்து புத்தகங்களை வாசிப்போம் நேசிப்போம் என்ற தொனிப்பொருளில் பேசினார். அந்த நிகழ்ச்சியில் ஶ்ரீஸ்கந்தராஜாவும் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து விடைபெறும்போது, என்னருகில் வந்த ஶ்ரீஸ்கந்தராஜா, “ தன்னிடம் ஏராளமான ஆன்மீகம் – சமயம் சார்ந்த புத்தகங்கள் இருக்கின்றன. தனக்குப்பின்னர் அவற்றை யாராவது பயன்படுத்தவேண்டும். ஆவனசெய்யமுடியுமா ? “ எனக்கேட்டிருந்தார்.
புத்தகங்களை நேசிப்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் சேகரிப்பவர்களுக்கும் அந்திம காலத்தில் வரும் கவலை இதுதான் ! அந்தக்கவலை அவருக்கும் சில வருடங்களுக்கு முன்னரே வந்திருக்கிறது. எனக்கு அத்தகைய புத்தகங்களில் ஆர்வம் குறைந்திருந்தமையால், “ இங்கிருக்கும் பொது நூலகங்கள் அல்லது ஆலயங்களில் அமைந்துள்ள சிறிய நூலகங்களுக்கு வழங்குங்கள். “ எனச்சொல்லியிருந்தேன்.
நாட்கள் செல்ல, அதே கோரிக்கையை அவர் எனது மற்றும் ஒரு இலக்கிய நண்பர் எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தியிடமும் சொல்லியிருக்கிறார்.
தீபத்திருநாளன்று கடந்த 12 ஆம் திகதி மலர்களின் படுக்கையில், அவர் மலர்ந்த முகத்துடன் எம் அனைவருக்கும் விடைகொடுத்துச் சென்றுவிட்டார். இறுதி நிகழ்வின்போது இரங்கலுரையாற்றிய அன்பர்கள் சம்பந்தன், இரத்தினம் கந்தசாமி, ராஜலிங்கம் மற்றும் செல்வப் புதல்வன் மனுபிரணவன் ஆகியோரின் உரைகள் தொகுத்து ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. எம்மத்தியில் இப்படியும் ஒரு மனிதநேயப் பண்பாளர், ஏழைத்தமிழ் மணவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் வாழ்ந்திருக்கிறார் என்பதை அவர்களது உரைகள் சொல்லிக்கொண்டே இருக்கும்.
எஞ்சியிருப்பது அவர் பற்றிய பசுமையான நினைவுகள்தான். அன்னாரின் திடீர் மறைவினால், ஆழ்ந்த கவலையிலிருக்கும் அவரது அருமைத் துணைவியார் மற்றும் மக்கள், மருமக்கள், பேரக்குழந்தைகள் உட்பட உறவினர்கள் நண்பர்கள் அனைவரதும் துயரத்தில் நாமும் பங்கேற்கின்றோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.