கனடாவிலிருந்து இயங்கிவரும் வசந்தம் தமிழ் உளவளத்துணை நிலையம் மெய்நிகர் வழியாக நடத்திவரும் தொடர் கருத்தரங்கில், கனடாவில் குடும்ப வன்முறை பற்றிய ஒரு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவேளையில்தான், பிரான்ஸில் வதியும் எழுத்தாளர் நாடகக் கலைஞர் அருந்ததி எழுதிய ஆண்பால் உலகு நாவலையும் படித்து முடித்திருந்தேன். மெய்நிகர் கருத்தரங்கும், இந்த நாவலும் குடும்ப வன்முறை பற்றியே பேசியிருந்தமையால், அதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன? என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. குடும்ப வன்முறையினால் (Domestic Violence) பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். அதற்கு ஆணாதிக்கம் மாத்திரம் காரணமில்லை. பெண்களின் அறியாமையும் மிக முக்கிய காரணம்.
கனடாவிலிருந்து இலக்கிய சகோதரி பார்வதி கந்தசாமி நடத்திய குடும்ப வன்முறை தொடர்பான கருத்தரங்கிலிருந்தும், அருந்ததி எழுதிய ஆண்பால் உலகு நாவலிலிருந்தும் பெண்களின் அறியாமையை ஆண்களின் உலகம் எவ்வாறு தனக்கு சாதகமாக்கிக்கொண்டு தப்பித்துக்கொள்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
அருந்ததியின் இயற்பெயர் அருளானந்தராஜா இரத்தினம். யாழ்ப்பாணம் நாவாந்துறையில் ஒரு மத்தியதரக்குடும்பத்தில் பிறந்திருக்கும் இவர், அளவையியல் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கும் நாடகக் கலைஞர், நாடக பிரதியாளர், இயக்குநர். 1984 இல் பிரான்ஸுக்கு புலம்பெயர்ந்து சென்றபின்னரும் தனது உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி வருபவர். பிரான்ஸிலும் நாடகங்கள் எழுதி இயக்கி தயாரித்து மேடையேற்றியவர். சமாதானத்தின் பகைவர்கள், இரண்டாவது பிறப்பு, கடல் முதலான கவிதைத் தொகுப்புகளை வரவாக்கியிருக்கும் அருந்ததி, முகம் என்ற திரைப்படத்தையும் ( 1996 ) எழுதி இயக்கியிருப்பவர். ஆண்பால் உலகு அருந்ததியின் முதல் நாவல். 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு கருப்புப்பிரதிகள் பதிப்பகத்தினால் வெளியாகியது. இந்நாவல் முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது.
கடந்த ஓகஸ்ட் மாதம் பாரிஸ் சென்றிருந்தபோது, அருந்ததி ஆண்பால் உலகு நாவலையும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான Charring Flames and Enchanting Smiles பிரதியையும், கடல் கவிதைத் தொகுதியையும் தந்தார். நாவலின் மொழிபெயர்ப்பும் சமகாலத்தில் வெளியாகியிருந்ததை பார்த்து ஆச்சரியமுற்றேன். பொதுவாக தமிழ் இலக்கியப்பரப்பில் வெளியாகும் ஏதேனும் நூல்கள், வாசகரிடம் சென்றடைந்து, அதற்குக் கிட்டும் வரவேற்பினையடுத்தே, பிறமொழிகளுக்கும் கடத்தப்படுவது வழக்கம். ஆனால், அருந்ததியின் ஒரே நாவல் ஒரே சமயத்தில் ஆங்கிலத்திலும் வெளிவந்தமைக்கு காரணம் என்ன..? என வினவினேன்.
“அண்ணே படித்துப் பாருங்கள். காரணம் விளங்கும் “ என்றார்.
ஆண்பால் உலகு நாவல் உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு! இதில் வரும் பாத்திரங்கள் ஒரு சில மறைந்திருந்தாலும், ஏனைய பாத்திரங்கள் இன்றும் உலகில் எங்கோ ஓரிடத்தில் வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றன.
பிரான்ஸை விட்டுப்புறப்பட்டு தொடர் பயணங்களில் நான் இருந்தமையால், மெல்பன் திரும்பியதும் ஆண்பால் உலகு நாவலை, அமர்ந்த இடத்தைவிட்டு அவ்வப்போது நகர்ந்தவாறு சில மணிநேரங்களிலேயே படித்து முடித்தேன். இவ்வாறு எனது வாழ்நாளில் ஒரு புத்தகத்தை ( மூச்சு விடாமல் ) இதற்கு முன்னர் படித்திருக்கவில்லை. எனது மனதை வெகுவாக பாதித்த இந்த நாவலை கடந்துசெல்ல பல நாட்களாகலாம் !
வங்கியில் பணி புரிவதற்குரிய கல்வித் தகைமையுள்ள பெண், தொடர்ந்தும் வாசிக்கும் பழக்கத்திற்கு தன்னை வழக்கப்படுத்திக்கொண்ட பெண், குடும்ப சூழ்நிலையால், தனக்குத்தானே சிறைவாசம் அனுபவித்து மனதிற்குள் புழுங்கியவாறு, காதலனாலும் ஏமாற்றப்பட்டு, வாழ்க்கை தரப்போவதாகச் சொன்ன ஒருவனாலும் வஞ்சிக்கப்பட்டு, இறுதியில் குழந்தைகள் பெற்ற இளம்தாயாகி, நெருப்பில் கருகி செத்துப்போகிறாள். அந்தப் பெண் கமலா என்ற அருந்ததியின் சின்னக்காதான். அந்த அக்காவுக்கும், கடவுள் நம்பிக்கையிலேயே மூழ்கி, கடவுளே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார் என்று அடங்கி அடங்கி மனதிற்குள் குமுறிக்கொண்டே வாழ்க்கைப் படகை செலுத்திய அருமைத்தாயார் சிவபாக்கியம் அவர்களுக்குமே இந்த நாவலை அருந்ததி சமர்ப்பித்துள்ளார்.
ஒரு தமிழ்ப்பெண்ணின் மீதான ஆணாதிக்கம் முதலில் அவளது குடும்பத்திலிருந்தே தொடங்குகிறது. அந்த ஆதிக்கத்தை வீட்டுக்குள் பிரயோகிப்பவர்கள் தந்தையாக அண்ணன்மாராக இருந்திருக்கிறார்கள். படிப்பில் ஆர்வமுள்ள கமலா, எப்போதும் நல்ல நூல்களை தேடித் தேடி எடுத்துப் படிக்கிறாள். அவளது கல்வித்தகைமைக்கு ஏற்றவாறு ஒரு வங்கியிலிருந்து வேலைவாய்ப்பும் கடிதம் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அந்தக்கடிதத்தை பார்த்துவிடும் அவளது சகோதரன் ஒருவன், “ நாமெல்லாம் எதற்கு இங்கே ஆம்பிளையாக இருக்கிறோம். எம்மை மீறி நீ வேலைக்குச்செல்ல முடியுமா..? “ எனக்கேட்டு, அந்தக் கடிதத்தை சுக்குநூறாக கிழித்து எறிந்துவிடுகின்றான். அத்தகைய ஆண்மகன், இறுதியில் என்ன செய்கிறான்? வவுனியாவில் ஒரு சிங்களப்பெண்ணை தான் மணமுடித்துவிட்டதாக சொல்லிக்கொண்டு, புதுப்பொண்டாட்டியுடன் தனிக்குடித்தனம் செய்ய போய்விடுகின்றான்.
கமலாவின் தம்பி அருளின் நண்பர்கள் சிலர் அந்த வீட்டுக்கு வருகிறார்கள். அதில் ஒருவன், கமலாவை விரும்புகின்றான். அவளும் அவனை நம்பி காதலிக்கிறாள். அந்தக்காதலன் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புத்தேடி செல்லும்போது அவனது செலவுகளுக்காக தனது காதணிகளையும் கழற்றிக்கொடுத்துவிடுகிறாள். அந்தக்காதலனோ நம்பவைத்து ஏமாற்றிவிட்டு, வேறு ஒரு பெண்ணை மணமுடித்துக்கொண்டு வெளிநாடொன்றில் புகலிடம் பெற்றுவிடுகிறான்.
அவ்வாறு வஞ்சிக்கப்பட்டவளவுக்கு வாழ்க்கை தருகின்றேன் எனச்சொல்லிக்கொண்டு ஒருவன் வருகின்றான். அவன் ஏற்கனவே மணம் முடித்து பிள்ளைகளும் பெற்றவன் என்பது தெரியாமலேயே அவனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். நாட்செல்லச்செல்ல அவனது சுயரூபம் வெளிப்படுகிறது. எனினும் என்ன பயன்? அதற்குள் அவனுடைய உறவினால் குழந்தைகளுக்கும் அவள் தாயாகிவிடுகிறாள். வீட்டுக்குள் வன்முறை தொடங்குகிறது. அவள் தொடர்ந்தும் தாக்குதலுக்கும் கேவலமான பேச்சுக்கும் ஆளாகின்றாள். இறுதியில் அவள் தீயில் வெந்து சாகிறாள்.
'ஆண்பால் உலகு' நாவலின் கதைசொல்லி ஊடாக நாம் அந்த குடும்பத்தை சுற்றிச்சுழலும் அவலத்தை கண்டு மனம்கொதிக்கின்றோம். அந்த அபலைப்பெண்ணை ஏமாற்றிய கயவர்கள் தற்போது வெளிநாடுகளில் தத்தம் குடும்பத்துடன் காலத்தை ஓட்டுகிறார்கள். குற்றம் புரிந்தவர்களுக்கு எந்தவிதமான குற்றவுணர்வும் வந்திருப்பதாகத் தெரியவில்லை.
வீதியில் காலில் தட்டுப்பட்ட சிறிய கருங்கல்லை எடுத்துவந்து கழுவி அபிசேகம் செய்து பூக்கள் சொரிந்து தினமும் பூசித்து அதனை கடவுளாக்கிய அம்மா, தனது மகள் மீதான அனைத்துக் கொடுமைகளையும் அருகிலிருந்தே அவதானித்தவாறு , அந்தக்கடவுளே பார்த்துக்கொள்வார் என்று விதிமேல் பழிபோட்டுக்கொண்டு கண்ணீரை சொறிகிறாள். அந்தத்தாயின் பராமரிப்பில் அந்த அபலை மகளின் குழந்தைகள் வளருகின்றன. கதை சொல்லியான ஒரு மகன் அந்தக்குடும்பத்தின் சுமையை சகிப்புத்தன்மையுடனும் இரக்கவுணர்வுடனும் ஏற்கின்றான். அவனுக்கு பக்கத்துணையாக வந்து இணைகிறாள் காதல் மனைவி சுமதி.
எழுத்தாளர் அருந்ததியின் பாத்திரங்கள் இந்த நாவலில் முழுமை பெற்றிருக்கின்றன. தாய் சிவபாக்கியம் , சின்னக்கா கமலா, சுமதி, மம்மி, நண்பர்கள் பேரம்பலம், யோகேஸ்வரன், ஏமாற்றித் தப்பிய பாஸ்கரன், அரசரட்ணம் முதலான பாத்திரங்களை மறக்கமுடியாது. வடக்கில் புலிகள் இயக்கம் உச்சத்திலிருந்த காலப்பகுதியை பின்னணியாகக்கொண்டு இந்த உண்மைக்கதை நாவலாக எழுதப்பட்டுள்ளது.
அதனால், அன்றைய சமூக அரசியலும் இந்நாவலில் பேசுபொருளாகிறது. இதில் மற்றும் ஒரு பேராச்சரியமும் எமக்கு கிடைக்கிறது.
'ஆண்பால் உலகு', மற்றும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு முகப்போவியம் வரைந்திருப்பவர் நாவலின் நாயகியின் புதல்வி சந்திரிக்காதான். தற்போது பிரான்ஸில் வதியும் இவர், நாவலின் ஆசிரியர் அருந்ததியின் செல்வ மருமகள். அத்துடன் சிறந்த ஓவியர். தாயைப்போன்று இலக்கிய நூல்களில் ஆர்வம் மிக்கவர். ஐரோப்பிய இலக்கியங்களையும் கற்றிருப்பவர். பெற்றதாயின் மரபணு இந்த இளம் தலைமுறைப்பெண்ணுக்கு கிட்டியிருப்பதை அறிந்து மனதிற்குள் வாழ்த்துகின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.