இன்றைய இளம்தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் டொமினிக் ஜீவா. கொள்கைகளை மட்டும் கூறுபவர்களுக்கு மத்தியில் தாம் கொண்ட கொள்கைகளிலிருந்து இம்மியளவும் விலகாமல் வாழ்ந்து காட்டிய மார்க்சியவாதி. தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையைத் தமது கதைகளில் காட்சிப்படுத்தியவர். கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகள் உள்ள இடங்களுக்குச் சென்றோ, குளுகுளு அறையில் சுகத்தை அனுபவித்துக் கொண்டோ சிறுகதை எழுதுபவர் என இவரை யாரும் நினைத்துவிடக் கூடாது. தொழிலாளர்களைப் பற்றிய கதை எழுதியவர் என்று மட்டுமே பலரும் கருதிக் கொண்டிருந்த வேளையில், அவரும் ஒரு தொழிலாளிதான் எனத் தெரிந்த போது, ஏனோதானோவென்று நினைத்தவர்களும் அண்ணாந்து பார்த்து அகலக்கண்களை விரித்து ஆச்சரியப்பட்டனர்.
இந்தியத்தாயின் உடலிலிருந்து அறுந்து விழுந்த இதயமாய்த் தொங்கிக் கொண்டிருக்கும் இலங்கை மண்ணின் யாழ்ப்பாணத்தில் 27.06.1927 அன்று ஒரு தொழிலாளி வீட்டின் பிள்ளையாய் டொமினிக் ஜீவா பிறந்தார். எழுதுவதைப் பொழுது போக்காகவோ, தொழிலாகவோ இவர் செய்யவில்லை. தொழிலாளிகளுடன் இணைந்து தொழிலாளியாகவே வாழ்ந்து எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் சிறுகதைகள் படைத்தவர்.
டொமினிக் ஜீவாவின் கதைகளில் மிகப்பெரிய தேசத்தை ஆண்ட இராஜாக்களையோ, செல்வச் சீமான்களோ, புகழ்பெற்றுத் திரிந்தவர்களோ கதையின் நாயகராக இருப்பர் எனக் கருதினால் அது தவறு. தொழிலாளர்களின் இரணங்களையும் மனங்களையும் அனுபவித்து, உள்வாங்கி, தன்னுடைய கதைகளின் நாயகர்களாகக் காட்சிப்படுத்தியவர். கற்பனைச் சிறகுகளைக் கொண்டு இலக்கியவானில் பறக்காமல், நிஜ வாழ்க்கையில் பம்பரமாய்ச் சுழலும் உண்மை மாந்தர்களின் உணர்ச்சிகளைக் கருக்களாக்கிக் கதைகளாகப் பிரசவித்தவர்.
தனது படைப்புகளின் மூலம் பணத்தைச் சம்பாதிக்காமல், மனித மனங்களைச் சம்பாதித்த பெருமைக்குரியவர். ஆரம்ப காலத்தில் இவரின் கதைகளைப் படித்தவர்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து, இராஜகம்பளம் விரித்து வரவேற்கவில்லை. மாறாக இளக்காரமாய்;ச் சொல்லித் திட்டியவர்கள்தான் உண்டு. காரணம் இவரது கதைகளில் வருபவர்கள் மனிதர்கள் அல்லர்.. அன்றைய கால உயர்ந்தவர்களால் சாதாரண, ‘இதுகள்’ எனக் கூறப்பட்ட, நசுக்கபட்ட, உரிமை மறுக்கப்பட்ட, அடிமைப்பட்ட நிலையிருந்த தொழிலாளர்கள். இன்னும் தெளிவுபடுத்த வேண்டுமென்றால், மனித நிலையிலிருந்து இறக்கி விடப்பட்ட தொழிலாளி வர்க்கம். ரிக்ஷாக்காரன், துறைமுகத் தொழிலாளி, மாட்டுக்காரன்… இப்படியானவர்கள். கிராமப் பழமொழியில் கூறினால், “பொழக்கிறவங்களுக்குப் பொங்க மொடா சொமக்கிறவங்க” எனக் கூறிவிடலாம்.
ஒவ்வொரு நூலுக்கும் அதன் ஆசிரியர், தன்னை விடச் சிறந்தவர், தன் மாணவர் இப்படி யாரேனும் ஒருவரிடம் கேட்டு அணிந்துரை வாங்குவது வழக்கம். டொமினிக் ஜீவாவின் ’பாதுகை’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு அணிந்துரை எழுதிய சிறந்தவர் யார் தெரியுமா? முத்து முகம்மது. இவர் சக எழுத்தாளரோ, தன்னுடைய நண்பரோ, அல்லது முன்பு குறிப்பிட்டவர்களைப் போன்றவரோ அல்லர். பிறகு யார்? செருப்புத் தைக்கும் தொழிலாளி, டொமினிக் ஜீவாவின் நண்பர், ‘பாதுகை’ சிறுகதையின் கதை நாயகர் என்ற மூன்று சிறப்புகளைக் கொண்டவராவார். எழுத்துலகில் இம்மாதிரியான புரட்சி செய்தவர் டொமினிக் ஜீவா ஆவார்.
தண்ணீரும் கண்ணீரும்
படைப்புலகில் டொமினிக் ஜீவாவின் ஒரு பானை அமுதத்தில் ஒரு துளி அமுதத்தைச் சுவைக்கும் வகையில், ‘தண்ணீரும் கண்ணீரும்’ என்ற ஒரு சிறுகதையை மட்டும் காணலாம். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு. உணவிலும் முதன்மை பெறுவது தண்ணீர். யாழ்ப்பாணத்துக் கடற்கரையோரம் வசிப்பவர்களுக்குத்தான் தண்ணீரின் அருமை தெரியும் என்றவாறு, மக்கள் பிரச்சினையைக் கொண்டு கதையைத் தொடங்குகிறார் டொமினிக் ஜீவா. ஒரு பிரச்சினை உருவாவதற்கான காரணத்தை பீடிகை போட்டு வீணடிக்காமல் எடுத்த எடுப்பிலேயே எதார்த்தமாகச் சொல்லி விடுகிறார். பண்டாரி என்னும் பெயருடைய ரிக்ஷாக்காரன்தான் கதையின் நாயகன். ‘நளவர்’ என்னும் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவன். பண்டாரியைப் பற்றி டொமினிக் ஜீவா குறிப்பிடும் போது, ‘மனித மாடு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். பண்டாரி ரிக்க்ஷாவை ஓட்டிப் பிழைப்பவன் அல்ல. ரிக்க்ஷாவை இழுத்துப் பிழைப்பவன். மாட்டு வண்டி எவ்வாறு மனிதனைச் சுமந்து இழுக்குமோ, அதேபோல் மாட்டின் இடத்தில் பண்டாரி இருந்து கொண்டு ரிக்க்ஷாவை இழுத்துக் கொண்டு ஓடுபவன். “ ஐயா…துரை…ராசா…” எனக் கூறி வாடிக்கையாளரை அழைப்பவன். மாடாய் உழைக்கிறான் என்ற தொடருக்குச் சொந்தக்காரன்.
ரிக்க்ஷா இழுக்கும் பண்டாரிக்கு ஒருநாள் மதியவுணவு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. பசியோடு இரவில் வீட்டிற்கு வருகிறான். மனைவி கொடுத்த சாப்பாடு என்ற பெயருடைய அமெரிக்கன் மாப்பி;டையும், சுட்ட கருவாட்டுத் துண்டொன்றையும் விழுங்குகிறான். குடிப்பதற்கு நல்ல தண்ணீரைத் தேட, குடம் காலியாக இருக்கிறது. வீட்டிலிருந்த நல்ல தண்ணீரை மகன் காசுமரம் வளர்க்கிறேன் எனச் சொல்லி, காசை நட்டுவைத்து தண்ணீரைச் செலவழித்தது மனைவியின் மூலம் தெரிய வருகிறது. பண்டாரியின் மனைவி நல்ல தண்ணீருக்காக அக்கம்பக்கம் அலைந்தும் ஒருவரும் கொடுக்காத நிலை ஏற்படுகிறது.
பண்டாரி வாழ்கின்ற பகுதியில் மூன்று நல்ல தண்ணீர் கிணறுகள் இருக்கின்றன. ஒன்று ஒருவருக்குச் சொந்தமான வீட்டுக்கிணறு, மற்றொன்று மாதா கோயில் கிணறு, இன்னொன்று அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள கிணறு. பண்டாரிக்குத் தண்ணீர் தாகம் மிகுதியாக இருந்தது. முதல் இரண்டு கிணறுகளுக்கும் இரவு நேரத்தில் செல்ல முடியாத சூழலில் அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள கிணற்றில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்ற படபடப்புடன் செல்கிறான். தண்ணீரைக் கிணற்றிலிருந்து இறைக்கும்போது கண்டக்டர் சாமிநாதன் பார்த்துவிடுகிறான். “ நளவன், நளப்பண்டாரி கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ளி விட்டான். கிணற்றைத் தீட்டுப் படுத்திவிட்டான்” எனச் சத்தமிடுகிறான். கூட்டம் கூடிவிடுகிறது. பண்டாரியின் மேல் பல சொல்லம்புகள் வீசப்படுகின்றன. அடியும் உதையும் தாரளமாய்க் கொடுக்கப்பட்டது. உயிர் மிச்சமாகிறது. அன்றிரவே பண்டாரியின் வீட்டை சாதி என்னும் தீ எரித்து விடுகிறது. “ அக்கினி பகவான் உயர் ஜாதி இந்துக்களின் தீப்பெட்டிக்குள்ளிருந்துதான் அடிக்கடி தலையைக் காட்டும் ஆசாமியாச்சே” என கதையின் ஆசிரியர் கூறுவதிலிருந்து, “ ஏழைகளின் வீட்டில் அடுப்பைத் தவிர எல்லாமே எரிகிறது” என்ற அறிஞர் ஒருவரின் கருத்து நினைவுக்கு வருகிறது.
உயிர் பிழைத்த பண்டாரி சில நாட்களில் தனது தொழிலுக்குச் செல்கிறான். அன்றைய நாள் மாலை வரை ஒரு வாடிக்கையாளரும் கிடைக்காமல் தேடுகிறான். வழியில் கூட்டமொன்று தென்படவும், அதே நேரத்தில் வாடிக்கையாளர் ஒருவர் அழைக்கவும் பண்டாரி கூட்டத்தைப் பார்த்துச் செல்லலாம் எனப் பார்க்க, அங்கே அன்று பண்டாரியைக் காட்டிக் கொடுத்த சாமிநாதன் விபத்தில் அகப்பட்டு உயிருக்குப் போராடிக்; கொண்டிருந்தான். பண்டாரி;க்கு வாடிக்கையாளரிடமிருந்து அழைப்பு வந்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் உயிருக்குப் போராடியவனைத் தூக்கித் தனது ரிக்ஷாவில் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதோடு, தன் இரத்தத்தையும் கொடுத்துக் காப்பாற்றினான். சிலமணி நேரம் கழித்து கண் விழித்த சாமிநாதன் நர்ஸ் மூலம் பண்டாரியின் செயலை அறிந்தான். பண்டாரி, சாமிநாதன் அருகில் செல்ல சாமிநாதன் “ சொல்லு பண்டாரி ஏன் எனக்கு உயிர்ப் பிச்சை தந்தாய். நான் கொடியவன், தீயவன், உன்னை மிருகமாக அடித்தேன், நீ இருந்த வீட்டை எரித்தேன். நான் நாயிலும் கடையன் ஏன் இந்த நாய்க்கு உதவினாய்” எனச் சொல்லி கண்ணீர் விட்டுக் கதறி அழுதான். அப்போது பண்டாரி, “ நானும் மனிதன் நீயும் மனிதன். நீயும் நானும் தொழிலாளிகள்” என்கிறான். தாழ்த்தப்பட்டவர்கள் தொண்டையை நனைக்கத் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் அவர்களின் மனதில் ஈரம் இருக்கிறது.
டொமினிக் ஜீவாவின் கதைகள் ஒடுக்கப்பட்டவர்களின் உன்னத குணங்களைத் தெரிவிக்கின்றன. அவர்களின் மனிதத்துவப் பண்பினை எடுத்துரைக்கின்றன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.