கூடத்துள் பாய் விரித்துப் படுத்திருந்த அல்லிராணியின் ஜன்னலூடு பாய்ந்த பார்வையில் வௌி கருமை திணிந்து கிடந்தது தெரிந்தது. ஒரு வெள்ளிகூட வானில் பூத்ததாய்க் காணக்கிடக்கவில்லை. முதல்நாள் தன் வீட்டு முற்றத்திலிருந்து அவள் பார்க்க நேர்ந்த இரவு, அதன் பாதியளவும் இருண்மை கொண்டிருக்கவில்லை என்பது ஞாபகமாக அவளுக்கு அதிசயம் பிறந்தது. மாலையில்கூட பார்த்தாளே, அம் மாதிரி இருண்ட பாதிக் கோளமாகும் முன் அறிகுறியேதும் அப்போதும் கண்டிருக்கவில்லைத்தான்.
பதினொரு மணிபோல் சாப்பிட்டுவிட்டு சிவம் தூங்கச் சென்ற அறையுள்ளிருந்து வெளிமூச்சில் எழுந்த மெல்லிய கீரொலி கேட்டது. தூங்கியிருப்பாரென எண்ணிக்கொண்டாள்.
மாலையில் விமானநிலையத்திலிருந்து வானில் வந்திறங்கியது கண்டபோதே கொஞ்சம் வயதாகிவிட்டார்போலவே சிவம் அவளுக்குத் தென்பட்டார். ஆயினும் தளர்ந்துபோனாரென்று சொல்லமுடியாதபடியே உடல்வாகு இருந்தது. கடைசியாக அவள் பார்த்திருந்தமாதிரி அல்லவென்றாலும், அதே சிரிப்பும் பேச்சும் கண்வெட்டுமாகத்தான் சிவம் இருந்தார். டென்மார்க்கிலிருந்து அவரின் மகள் கலாவதிதான், ‘வயது போயிட்டுதெல்லோ, ரண்டு மாசத்துக்கு முன்னால இஞ்ச பாத் றூமில சறுக்கி விழுந்தும்போனார், சொன்னாக் கேட்டாத்தான, ஊரைப் பாக்கத்தான் வேணுமிண்டு ஒரே அடம், நீங்கள் இருக்கிற துணிவிலதான் ரிக்கற்றைப் போட்டு அனுப்புறன், அசண்டையீனமாய் இருந்திடாதயுங்கோ, அக்கா, அய்யா கவனம்… கவனம்’ என பத்து தடவைக்கு மேலயாவது போனிலே சொல்லியிருந்ததில், அல்லிக்கே அவ்வாறாக அவரின் பலஹீனத் தோற்றம் மனதில் உருவாகிற்றோ தெரியவில்லை.
மறுபடி அவள் வெளியே பார்த்தபோது, இருள் இன்னும் திணிந்துவிட்டதாய்த் தெரிந்தது. வெளியிலிருந்து உள்நுழைந்த இருள் கூடத்து நீல இரவு விளக்கின் ஒளியையும் தின்றுகொண்டிருப்பதாய் உணர்ந்தாள். காற்று மண்டலம், சுவாசிப்பதற்களவான காற்றைமட்டுமே கொண்டதுபோல் மூச்சில் லேசான சிரமம். மேலே மின்விசிறி அதன் முழுவிசையில் இயங்கிக்கொண்டுதான் இருந்தது. ஒருவேளை வெம்மைபெற்ற காற்றை நெஞ்சுதான் உள்ளிழுக்க பின்னிற்கிறதாக்கும்.
ஜன்னலின் வெளியே கிளை படர்த்தியிருந்த மாமரத்தின் நீளிலை அணுவளவு அசைவு செய்தில்லை. அந்தகாரமும் நிசப்தமும் அவள் உள்ளத்தை விறைக்கப்பண்ணின.
மேனி பிசுபிசுக்கத் துவங்கியது.
திடீரென ஆனந்தனினது மேனி வியர்வையின் மெல்லிய வாசம் நாசியில் சர்…ரென ஏறுவதுபோல் அவளுக்குத் தோன்றியது. அது அவன் வாசமில்லை, அது வாசமேயில்லை, அப்படியொரு வாசம் வீசவேயில்லையென வலிந்து தன்னை நம்பவைத்து அந் நினைவகற்ற முயன்றாள்.
ஆனால் அந் நினைவுந்திய வாசம் நாசியிலேறியதுமே அது உடம்பில் கிளர்த்திய உணர்ச்சிமட்டும் மாறாதிருந்தது அந்தப்படியே.
உடம்பெங்கும் ஊரலெடுத்தது; உளைந்தது. சளிந்து கிடந்த நெஞ்சுகள் தினவெடுக்கத் துவங்கின. முதுகுளைந்த கழுதை இனி உப்பளத்துக்குச் செல்லாமல் அடங்காதென்ற நிலை.
எல்லாவற்றையும் அமர்த்திவிடப்போல் சட்டென அவள் கவிழ்ந்து படுத்தபோதும், அங்கிங்காய்க் கிடந்த துணை நினைவுகள் புடைத்தெழுந்தன. அவள் அதற்குள் அழுந்தினாள்.
அது பாவமென, ஒழுக்கக் கேடுவென அவ்வாறான வேளைகளில் அவளுள் எண்ணங்கள் எழத்தான் செய்கின்றன. எப்போதும்போல், தன் உள்ளக தர்க்கங்களில் அவற்றை அடங்கச்செய்துகொண்டு உணர்ச்சிகளை மேலே எகிற விடுகிறாள்.
அவன் செத்துப்போயிருந்தால், அவள் தன் கைம்மையை கொண்டிருந்த காதலுக்கான அர்ப்பணிப்பாய், தன் வாழ்வின் அந்திமம்வரை காத்திருப்பாள்தான். அவளது வாழ்வின் தடமும் அந்தமாதிரித்தான் அதுவரை இருந்தது. ஆனால் அவன் இரண்டு பிள்ளைகளோடு அவளை நொந்தழிய விட்டுவிட்டு, பூசாரியின் மூத்த மகளை இழுத்துக்கொண்டு ஓடியவன். அவள் எதிர்வந்த வாழ்வின் வறுமையைத் தாங்கினாள்; உறவின் உணர்வேக்கங்களை அவ்வாறுதான் வளர்த்தித் தணித்தாள்.
சிவமும் லேசுப்பட்டவரில்லை. சகஜமாய் பழகிவந்த அவரின் பார்வை பேச்சுக்கள் அவள் தனித்த வாழ்வெய்திய பின்னால் மொத்தமாய் மாறிப்போய்விட்டன. ஆனாலும் ஓரெல்லை அவர் இகக்கவில்லை.
குடும்பமாக அவர் டென்மார்க் போய்ச்சேர்ந்த மூன்று வருஷங்களின் பின்னாக குண்டுவீச்சில் சேதமாகிவிட்ட வீட்டைப் பார்க்க சிவம் 1987இல் ஒருமுறை வந்திருந்தார்.
அக்கா… அக்காவென வழிந்த கலாவதியின் கடிதக் கெஞ்சலில் அவள்தான் அவரது சாப்பாடு, படுக்கை முதலியவற்றை கவனித்து அனுப்பினாள்.
அந்த நாட்கள் அவளுக்கு இன்னமும் ஞாபகம்.
ஊரிலிருந்தபோது கண்ணோடிய நிலையில் அப்போது அவர் இல்லையென்றாலும், ஏதோவளவான ஒரு கண்ணோட்டம் இருக்கவே செய்தது. ஆளும் இன்னும் பொலிவேறித்தான் தென்பட்டார்.
ஒருநாள் அவள் கூடத்துள் அதே ஜன்னலோரம் பாய்விரித்துப் படுத்திருக்கிறாள்.
சாரமும் மேலே துண்டுமாய் முகம், கமக்கட்டு, முதுகினில் ஊற்றெடுக்கும் வியர்வையைத் துடைத்தபடி லாந்தர் வெளிச்சத்தில் அங்குமிங்குமாய் கூடத்துள் சிவம் உலவிக்கொண்டிருக்கிறார்.
தான் அங்கே பிறந்து வளர்ந்த காலத்தில் அந்த ஊருக்கு மின்சாரமே வந்திருக்கவில்லை, எல்லா வசதியீனங்களையும் தாங்கித்தான் வளர்ந்ததாய்ச் சொல்லிக்கொண்டிருந்தாலும், மின்சாரமற்றதால் விளைந்திருந்த அந்த வெக்கையையும் இருளையும் சகிக்கமுடியாமல் அப்போது தவித்துக்கொண்டுதான் இருந்தார்.
தண்ணியடிச்சா உந்தமாதிரி வேர்க்கத்தான் செய்யுமென சொல்ல நினைக்கிறவள், அது அவர் வீடு, அவரிஷ்டம் என அடங்கிக்கொண்டு, ‘அதில நிண்டு வெளிய வெளிய என்ன பாக்கிறியள், அங்கிள்?’ என ஒரு சிரிப்போடு கேட்கிறாள்.
‘மழை வருமோண்டு பாக்கிறன்’ என்கிறார் அவர். ‘அது வந்தாலும் அடங்காத வெக்கைதான் இது. ஆனா பெய்ஞ்சுதெண்டா பறவாயில்லாம இருக்கும்.’
அவள் திகைத்து அவரைநோக்கித் திரும்புகிறாள்.
அவர் மேலே அங்கே நிற்காமல் தன்னறைக்குள் நுழைகிறார், ‘மழை பெய்ஞ்சா… என்னவொண்டு, வந்து கட்டிப்பிடிச்சுக்கொண்டு பக்கத்தில படுத்திடுவன். எதுக்கும் லாம்பை தணியாமல் விடு’ என்றபடி.
உள்ளே கைவிளக்கு அணைந்தது.
நீக்கல்விட்டு சாத்தப்பட்ட கதவிடைக்கூடாக இருள் குமைந்துகொண்டு வெளிவந்தபடி இருந்தது.
அஃதொன்றையும் கவனிக்கும் மனநிலையில் அல்லி இல்லை. அவளை வேறொரு சிந்தனை ஆக்கிரமித்திருந்தது.
மழை வருமா? இந்த மூட்டத்திலா?
அவளுள் ஆச்சரியம், திகைப்பு, புதிரென ஓர் கலவை உணர்வு.
கோடை மழை ஏதேனும்…? அதனால்தான் இந்த வெக்கையுமோ?
வானில் படர்ந்திருந்த இறுக்கமற்ற இருளும், ஆங்காங்கே மின்னிய வெள்ளிகளும் அவளுக்கு மழை வரலாமென்ற சிறிதளவு நம்பிக்கையைக்கூட வருவிக்கவில்லை; ஆனால் அவளது விருப்பம் வருவித்தது.
மழை வந்தால், உண்மையில், சொன்னதுபோல் ஓடிவந்து சிவம் பக்கத்தில் படுத்துவிடுவார்தானா?
படுத்துக்கிடந்து என்ன செய்வார்? மெல்ல, அல்லியென அழைக்கக்கூடும். அப்போது தான் ‘ம்’மென அனுங்கவேண்டுமா, அல்லது மூச்சுக் காற்றையும் மெல்ல இழையவிட்டபடி நித்திரைபோல் கண்ணை இறுக மூடிக்கொண்டு பாசாங்கு பண்ணவேண்டுமா?
அவளுக்கு பதில் தேவையில்லை. அவள் ஏற்கனவே காட்சிகளின் அடுத்த கட்டத்தை விரித்தபடி தன்னுள் ஊறிக்கொண்டிருந்தாள்.
அவரது இடது கரம் அவளது தோள் மேலாகத் தாவி அவளது முலைகளில் படிகிறது. சட்டையை நெகிழ்த்தி நழுவிக்கொண்டு உட்சென்று முலைக் காம்பினைத் தேடுகிறது. தட்டுப்பட்டபோது விரல்களில் பிடித்து நன்னுகிறது. சிறிதுநேரத்தில், ஒருநாள் தாடி முளைத்த நாடி அவள் கன்னத்தில் வந்து குத்துகிறது.
இனி அவள் என்ன செய்யவேண்டும்?
அவரது முயற்சிக்கு ஒத்தாசை பண்ணவேண்டும், ஆனந்தனுக்குச் செய்ததுபோல.
அவள் நிமிர்கிறாள்.
தணிக்காத லாந்தர்ச் சுடர் பிரகாசமாய் எரிந்துகொண்டிருக்கிறது.
நீக்கல்விட்டு சாத்தப்பட்ட சிவத்தின் அறைக் கதவூடாக இன்னும் இருளின் கசிவு.
அவள் தெரிகிறாள், யாரும் பக்கத்தில் படுத்தில்லையென.
கழுத்தை வளைத்து ஜன்னலூடு பார்வையை வெளியே வீசுகிறாள்.
ஒரு இலை அசைந்த, உருண்ட சத்தமில்லை.
வெகுநேரமாகியும் அன்று மழை பெய்யவில்லை. அடுத்த நாளிலும் பெய்யவில்லை. சிவம் மறுபடி டென்மார்க் செல்லும்வரைகூட பெய்யவில்லை.
இத்தனை நீண்ட காலம் கழித்து மழை பெய்யாத அந்த இரவுகளை அவள் எண்ணி வெப்பிராயமும் வேதனைப்பாடும் பட்டு அலமந்து கிடந்த அந்த 2017இன் இரவில் அவளுள் ஜுரம்போல் தகித்தெழுந்திருந்தது நரம்பிச்சை.
அவ்வாறு அல்லி எவ்வளவு நேரம் கிடந்திருக்கக்கூடும்?
திடீரென அவள் மேனியில் லேசான குளிரின் வருடல். காற்று மயிலிறகால் மேனி தடவுவதுபோல் மின்விசிறியிலிருந்து மெல்ல இழைகிறதை உணர்கிறாள். வெளியே இலைகளின், ஓலைகளின் சலனம் கேட்கிறது.
மேலே, முற்றத்தில் விழுந்திருந்த மாமரத்தின் காய்ந்த நீள் சருகுகளின் அவ்வப்போதான உருள்வு.
சட்டென ஜன்னலூடு மின்னல் கீறு பாய்ந்தது. தொடர்ந்து எங்கோ தொலை தூர வானத்தில் மேகங்களின் தொடர் மோதல்கள்.
விழுந்த இடியேறு இந் நேரம்வரை இடைநின்ற சடங்களை நொறுக்கியும், தீய்த்தும்கொண்டு பூமியைக் குடைந்துபோயிருக்கும்.
திடீரென ஓட்டுக் கூரையில் பெருந் துளிகள் சட்டச் சடசடவென உதிர்வதை அவள் கேட்கிறாள்.
பின் கடல் பெருகும் ஓசையுடன் வானம் பிளக்கிறது.
பெருமழை!
மெல்ல தலையை மிதத்தி அல்லி சிவத்தின் கதவை நோக்குகிறாள். சூழலைக் கிரகிக்கிறாள்.
ஒரு சலனமில்லை கூடத்தில். சாத்தியிருந்த கதவினூடாக இரவு விளக்கின் ஒரு மெலிந்த கீறலும் கசிந்தில்லை.
அந்த அமர் அடங்காமல் இனி நாள்கள் அவளுக்கு இயல்படையா. அந்த நாளை அவள் தனதாக்கத் தீர்மானித்தாள்.
சிவம் எழுந்துவந்து அவளருகே படுப்பதற்கு நீண்ட காலத்துக்கு முந்திய அந்த இரவில் ஒரு மழை வேண்டியிருந்ததெனின், அந்த மழைதான் அப்போது பெய்துகொண்டிருக்கிறது என்பதை சிவம் ஏன் கருதவில்லை?
ஆழுறக்கமா? அந்த அறைக்குள் சத்தம் நுழைவதைத் தடுக்க பொறியேதேனும் வைக்கப்பட்டிருக்கிறதா?
ஓட்டினைக் கிளப்ப முயலும் அந்த தடித்த காற்றுக்கும், நிலத்தைப் போழ்க்கும் கனத்த தாரைக்கும், அந்த இடி முழக்கத்துக்கும்கூட தூக்கம் கலையாத மனிதர் உளரா எவரேனும்?
மேனியில் உறைந்த வேர்வையின் வீச்சம், அவளுள் எழுந்த மிருகத்தை உசுப்பிக்கொண்டிருக்கிறது. மலையாளக் கரை, ஈழக் கரையெங்கும் வெட்டியடிக்கும் அம் மின்னலில் எத்தனை பேரின் காம சந்நதம் அடங்கிக்கொண்டிருக்குமோ! அவளுக்கு…? அவள் தன்னில் தீயெழுவதை உணர்கிறாள்.
மழை இன்னும் பெய்ஞ்சுகொண்டிருந்தது. ஆனாலும் அது இப்படியே ராராவாய்த் தொடருமென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாதது.
அவள் எழுந்தாள்.
கதவுகள் திறந்திருந்த ஜன்னலூடாய் தெறித்த நீர் தெப்பமாய் நிலத்தில் தேங்கியிருந்தது. கால்மாட்டுப் பாய் நனையத் துவங்கியிருந்தது.
அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
அவள் சிவத்தின் அறை வாசலை நெருங்கினாள். இயல்பான தயக்கத்தையும், சங்கோஜத்தையும் அகற்றுபவளாய் மூடிய கதவின் முன்னால் சிறிது தாமதித்து நின்றாள். உள்நிறைந்த இருள் கதவைத் துளைத்துக்கொண்டு வந்து தன்னுள் உறைவதாய் ஒரு மாயத் தோற்றம்.
அவள் தன்னைச் சுதாரித்தாள்.
‘அங்கிள்… அங்கிள்…!’
அவளெடுத்த குரலோசை துயிலில் கிடந்தவரை உசுப்பியது.
உள்ளிருந்து, ‘என்ன?’வென்ற முனகலும், ‘ஆரது…?’ என்ற வினவலும் கேட்டன. பின்னால், கட்டிலிலிருந்து இறங்கி கதவைநோக்கி வரும் அரவமெழுந்தது.
லைற்றைப் போட்டுக்கொண்டு சிவம் கதவைத் திறந்தார். நெகிழ்ந்த சாரத்தை அவிட்டுக் கட்டியபடி அவளைப் பூஞ்சிப் பூஞ்சி பார்த்தார். இனங்கண்டுகொண்டு, ‘என்ன, அல்லி, விடிஞ்சுபோச்சா?’ என்று கேட்டார்.
‘ரண்டு மணி.’
‘பின்னயேன் எழுப்பினனீ?’
மழையை அவர் கேட்க அளிக்கும் கால அவகாசமாய் சிறிது தாமதித்து நின்றுவிட்டு, ‘மழை பெய்யிது, அங்கிள்’ என்றாள்.
‘பெய்யட்டன்’ என்றார் அசிரத்தையாய். ‘நானும் கேட்டன். குளிருக்கு நல்லாய்த்தான நித்திரை வந்திது, அதால இப்ப உனக்கென்ன இடைஞ்சல்?’
அவள் திடுக்கிட்டாள். வார்த்தை குழறியது. ‘மழை உங்களுக்கு பிடிக்குமேயெண்டு… காட்டுறதுக்காண்டி…’
அவர் மௌனமாய் அவளில் பார்வை தீட்சண்யித்தார். நினைவுகளைப் புரட்டுவதுபோல அவர் நெற்றி சுருங்கியது. எதுவோ விளங்கியதுபோல் தலையசைத்தார். லேசாகச் சிரித்தார். கெழுமிய உணர்வலைகளைக் கட்டுப்படுத்தி நிதானமடைந்துகொண்டு சொன்னார்: ‘நீ அந்த ராத்திரியை யோசிச்சிட்டாய்போல கிடக்கு. போ… போ… போய்க் கிட!’
அவர் திரும்பினார்.
லைற்றை நூர்த்தார்.
மெதுவாக கதவை மூடினார்.
அலுத்த வார்த்தைகள் அறையுள்ளிருந்து வெளிக்கிட்டன. ‘மழையாம் மழை… இப்ப பெய்ஞ்சென்ன, பெய்யாம விட்டென்ன?’
ஒரு குழந்தையின் அழுகுரலாய் அது அவள் செவியில் ரூபம் மாறி ஒலித்தது.
எல்லா உணர்ச்சிகளும் ஒரு கணத்தில் பொசுங்கின. சிறிதுநேரத்தில் அவளுக்கு மனத்துள் சிரிப்பெழுந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.