ஆய்வு: இலக்கண அமைப்புமுறைக் கோட்பாட்டில் நன்னூல்- வினையியல் - முனைவர் ரா.பிரேம்குமார், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை , ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவானைக்கோவில்-5 -
முகப்பு:
ஒலிகள் தொடர்ந்து பொருளை உணர்த்தும் அமைப்பை எடுத்துக்காட்டுவது மொழியின் இலக்கணமாகும், மொழியின் இயல்பை விவரிப்பதே இலக்கணம் என்பர். மொழி என்பது ஒலி மற்றும் வரிவடிவத்தைச் சார்ந்த்து. வரிவடிவம் அவ்வப்போது மாற்றம் அடையலாம். புது வரிவடிவங்களும் எளிதில் இடம்பெற்றுவிடலாம் இவ்வகையான மாற்றங்களை காலப்போக்கில் ஏடுகளில் பதிந்து மொழியின் தன்மை சிதையாமல் காப்பதே இலக்கணத்தின் நோக்கம் எனலாம். இவ்வளப்பரிய செயல்களை தம்முள் கொண்டிருக்கும் இலக்கணம் தன்னை தாமே எவ்வாறு கட்டமைத்துக் கொள்ளவேண்டும் என்ற வரையறையும் இலக்கணத்திற்கு உண்டு. அவற்றினைக் கோட்பாடுகளாக இலக்கணிகள் தம் படைப்பினுள் வைத்து இலக்கணம் அமைத்திருப்பர். அவ்வாறு அமையப்பெற்றது இவ்விலக்கண அமைப்புமுறைக் கோட்பாடு ஆகும். இக்கோட்பாட்டினுள் நன்னூலில் இடம்பெற்றுள்ள வினையியல் எவ்வாறு ஆக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கும் முகமாக இக்கட்டுரை அமையப்பெறுகிறது.
கோட்பாடு-பொருள் விளக்கம்
கோட்பாடு என்ற சொல்லுக்குக் கொள்கை, நிலைமை, கொண்டிருக்கும் தன்மை, அனுசரிப்பு என்று கழகத் தமிழ் அகராதி பொருள் விளக்கம் தருகிறது (கழகத் தமிழ் அகராதி, ப.406). மேலும் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கோட்பாடு எனும் சொல்லுக்கு “ஒரு துறையில் ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்றுக்களின் தொகுப்பு (கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, 381). இதன்வழிக் கோட்பாடு என்பது அமைப்பு முறையை அடிப்படையாகக் கொண்ட கூற்றுகளின் தொகுப்பு என்ற கருத்தாக்கம் பெறப்படுகிறது.