பதிவுகள்.காம் யூன் 2005 இதழ் 66
நூல் அறிமுகம்: 'ஓவியம் வரையாத தூரிகை' - றஞ்சி (சுவிஸ்) -
இனங்களின் மொழிகளின், தேசங்களின் மீதான ஒடுக்குமுறைகள் ஏதோவொரு வழியில் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பிரக்ஞை உணர்வே பெண்ணின் பாத்திரமானது பல புதிய பரிமாணங்களுடன் நோக்கப்படுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளதுடன் பெண்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. அத்துடன் விடுதலைப்போராட்டங்கள் வன்முறையாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் இலக்கியம் வாழ்வின் ஆதாரங்களைச் தேடிச்செல்லக் கூடிய சூழ்நிலையாக உள்ளது. அந்த வகையில் 'ஓவியம் வரையாத தூரிகை' பெண்ணின் ஆத்மார்த்தமான குரல்களைப் பல்வேறு வடிவங்களில் கேட்கமுடிகிறது.
பெண்களின் கனவுத்தேசத்தின் விடுதலையிலும் அனைவரும் சமமாக வாழக்கூடிய புதிய விடியலிலும் அனாரின் கவிதைகள் ஆழ்ந்து நிற்கின்றன. நிகழ்வுகளின் மீதான கோபம், தாக்கங்கள், நிற, இன ஒடுக்குதலுக்கு அவதியுறுவோர் என பெண் ஒடுக்குமுறைக்கு தனது அனுபவங்களை வேதனையை எதிர்ப்பு உணர்வை வெளியிடும் பெண் குரலாக இவரின் கவிதைகள் வெளிப்பட்டுள்ளன. அனாரினால் எடுத்தாளப்படும் சொற்களும் படிமங்களும் வித்தியாசமானவை. இன்று தமிழில் கவிதை எழுதும் பெண்களின் எண்ணிக்கை அதிகா¢த்து வருகின்றன. உணர்வுகளை பாதிக்கும் வகையில் கவிதைகளை எழுதி வருபவர்களில் -எழுத்துலகில் குறுகிய காலத்தில் நன்கு அறியப்பட்ட கவிஞரான- அனாருக்கு முக்கிய இடம் உண்டு. இவரின் 'ஓவியம் வரையாத தூரிகை' பெண்ணின் மனஉணர்வுகளை பெண் நிலையில் நின்று பதிவு செய்கின்றன.
இத் தொகுப்பில் பெண்களின் ஆத்மார்த்தமான குரல்களைப் பல்வேறு வடிவங்களில் காணமுடிகின்றது. அத்துடன் கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் பெண் என்ற வகையில் பிரதேச, மத, இன, மொழி ரீதியானதாக இவரின் கவிதைகள்அமைகின்றன. பெண்களின் வெவ்வேறு வயதுப் பருவங்கள் இக் குரலினோடு தெரிவதோடு பலவகை உணர்வுகளின் கலவை தழும்பிச் சிந்துகிறதையும் மிக அன்னியோன்யமாக உணரக் கூடியதாக உள்ளது என தனது முகவுரையில் குறிப்பிட்டுள்ளார் ஆழியாள்.
ஆம் அடக்கத்தை எனக்கே போதித்தாய்
என்னிடமே எதிர்பார்த்தாய்
உயிருள்ள தோளில்
ஓர் மாலையாகக்
கிடக்க நினைத்தேன்
கடைசியில் என்னை
பிணத்தின் கால்களில்
மலர் வளையமாய்ச் சாத்திவிட்டாய்.
மரபுகளின் பெயரில் ஆண் மேலாதிக்கம் பெண்கள் மீது சுமத்துகின்ற சமுதாய நுகத்தடிகளை தூக்கியறிய முன் வரவேண்டும் எனவும் சமூகத்தின் ஒடுக்குமுறைக்குள் வாழநேர்ந்த தமது சுயமுரண்பாடுகளையும் மிக அழகாக இக் கவிதை காட்டுகிறது
எம்மிடருந்த
எல்லாமே உமக்கு
இடைஞ்சலாய் தோன்றிற்று
எம் உயிரும் உணர்ச்சியும் உடைமையும் கூட
உமது பாதரட்சைத் தோலுக்கு
எம்
முதுகுத் தோல் தேவைப்பட்டது
உமது கொடியைப் பறக்க விட
எம் எலும்புகள்
முறிக்கப்பட்டன
கடைசியில்
நீர் இத்தேசத்தின்
செளபாக்கிய மனிதராய் இருக்க நாம்
நாடற்று
நாதியற்று
1990 இல் ஈழத்து தமிழ் அரசியலில் ஏற்பட்ட தலைகுனிவு, சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட ஓர் இனத்தின் அவலம், சொந்த மண்ணிலேயே பாதம் பதித்து நிற்க முடியாது பரதேசிகளாக நிறுத்தப்பட்டுள்ள அவலம் கவிதையில் தெறிக்கிறது. யாழ் மண்ணையே சொந்த மண்ணாக இருப்பிலும் தமது உணர்விலும் கொண்டிருந்த யாழ் முஸ்லிம் மக்கள் அந்த மண்ணிலிருந்து விடுதலைப்புலிகளினால் 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்பட்டார்கள். உணர்வுகளை புதைந்த கவிதையின் வெளிப்பாடு அனைவரினதும் இதயங்களை குத்தி காயப்படுத்தி விடுகின்றன. எமது சரித்திரத்தில் நடைபெற்ற இந்த கேடுகெட்ட சம்பவமானது அனைவரையும் தலைகுனிய வைத்துள்ளது. அதை உணர்வுபூர்வமாக இக் கவிதை எடுத்துக்காட்டுகின்றது. அனாரின் வேதனையை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆழியாள் மிக அழகாகத் தனது முகவுரையில் இக் கவிதை பற்றி கூறுகையில் மனிதாபிமானம் கொண்ட நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படும் குற்றவுணர்ச்சியும் வெட்கமும் எம் தலைகளைக் குனியவைப்பது தவிர்க்க முடியாத நிகழ்வாகிறது என்று கூறுகின்றார்.
அதேபோல் இன்னுமொரு கவிதையில் அனார் இப்படி விளிக்கின்றார்.
நான் பேசாதிருப்பதனால்
ஊமையென்றோ
உணர்ச்சிகளற்;றவள் என்றோ
எண்ணி விட வேண்டாம்
உங்களை திருப்தியிலாழ்த்தும்
பொய்களைப் பேச
நான் விரும்பவில்லை
நான் அமைதியாக இருப்பதனால்
உங்கள் வாக்குறுதிகளை
நம்பிவிட்டதாக
முடிவுகளுக்கு
தலை சாய்த்து விட்டதாக
கருதி விட வேண்டாம்
வாழ்வை
உரிமையை
எந்த விலைக்கும்
என்னால் விற்க முடியாது.
இந்தக் கல்லறை வாசகங்களின் அர்த்தங்களுடன் மெளனங்களை பேசவைக்கும் அனார் வாழ்வும் வாழ்வின் துயரத்தையும் உறுதியோடு புனைந்துரைக்கின்றார். அனாரின் இக் கவிதை உணர்வுகளை காயப்படுத்தி விடுகின்றன. கவிதைகளின் உயிர்ப்பை கவிஞர் தொட்டு நிற்கின்றார்.
அதேபோல் 'மெளனச் சிலுவைகள்' என்ற கவிதையில்
நம் நிரந்தரமற்ற ஆசையின்
கடைசி வார்த்தைகளை
உயிர்ப் புல்லாங்குழலில்
நிரப்பிக் கொள்வோம்
நம் உணர்வுக்களுக்கின்று
ஓசைகள் இல்லை
கண்களுமில்லை
முடிவின் ஆழத்தில்
மெளனச் சிலுவைகளில்
எம் இதயத்தின் துடிப்புகளும்
அடங்கிப் போகட்டும்.
என எமது சமூகத்தில் பல பரிமாணங்களுடன் புரையோடிப் போயிருக்கும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் இக் கவிதை பொருந்துகின்றது அது மட்டுமல்லாமால் பேரினவாதத்திற்கு எதிரான குரலாகவும் ஒலிக்கின்றது.
இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து கவிதைகளும் 'மூன்றாவது மனிதன்', 'எக்சில்', 'அமுது', 'ஊடறு', 'பெண்கள் சந்திப்பு மலர்', 'விபவி', 'பெண்', 'தினகரன்', 'நிலம்', 'யாத்ரா' போன்ற பல இலக்கிய இதழ்களில் வெளிவந்தவையாகும். பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புக்கள் என பல வெளிவருகின்றன. அவைகள் பெரும்பாலும் ஆண் எழுத்தாளர்களின் முகவுரையுடனேயே வெளிவருகின்றன. பெண்மொழிக்காகவும், அதற்காக குரல் கொடுக்கும் பெண் எழுத்தாளர்களின் தொகுப்புக்கள் கூட பெண் எழுத்தாளர்களின் முகவுரையுடன் வெளிவருவது மிகக் குறைவு. அனாரின் கவிதைத் தொகுப்புக்கு முகவுரை எழுதியிருப்பது இன்னுமொரு பெண் கவிஞரான ஆழியாள். அது இத் தொகுப்புக்கு மேலும் வலுச்சேர்க்கின்றது.
றஞ்சி (சுவிஸ்) 03.6.2005
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வெளியீடு: முன்றாவது மனிதன் வெளியீட்டகம்
143, Muhandaram Road
Colombo -3
Sri Lanka
முதற் பதிப்பு 2004 தை
பதிவுகள்.காம் யூன் 2005 இதழ் 66
பதிவுகள்.காம் பெப்ருவரி 2006 இதழ் 74
சுல்பிகாவின் 'உரத்தும் பேசும் உள்மனம்'! - றஞ்சி(சுவிஸ்) -
1980களிலிருந்து கவிதை எழுதி வரும் சுல்பிகாவின் கவிதைத்தொகுதியான 'உரத்துப் பேசும் உள்மனம்' வெளிவந்துள்ளது. இக் கவிதைத்தொகுதியானது சுல்பிகாவின் மூன்றாவது கவிதை தொகுதியாகும். இலங்கையில் இருந்த பல்வேறு சமூக அரசியல் நிர்ப்பந்தங்கள் பிரச்சினைகளை உள்ளக் குமுறல்களாகவும் வெளிப்படுத்துகிறார். ஒரு வகையில் இவை சுகப்பிரசவங்களல்ல வலியுடன் பிரசவித்தவை. சுயதணிக்கைகளுக்கு பல தடவை உட்படுத்தப்பட்டதன் காரணமாக தன்மயமாக்கப்பபடாத, ஈரலிப்பற்ற தன்மை கொண்டவை தன் கவிதைகள் என்கிறார் சுல்பிகா இவர் தற்போது வேலை நிமித்தமாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.
அழகியல் நோக்கில் தனது கவிதைகள் முழுமையானவையாகவோ , முறையானவையாகவோ இருக்கவேண்டும் என்ற அக்கறைக்கு தன்னால் முன்னுரிமை அளிக்க முடியவில்லை என்று கூறும் சுல்பிகா, கவிதைகள் சிறப்பானதாகக் கூட இருக்கலாம். நயமாகக் கூறல், இலகுநடை, வெளிப்படையாக செய்தி கூறல், போன்றவற்றில் தனக்கு உடன்பாடு உண்டு என்றும் உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் கிளறி வாசிப்பவரில் கேள்விகளை உருவாக்கி சாதகமான செயற்பாட்டுக்கு உந்துதல் அளித்தால் அதன் பயன்பாட்டுக்கு அதுவே போதுமானது என்கிறார் அவர். இவரின் கவிதைகள் ஆழமானவை இக்கவிதை தொகுதியில் வெளிவந்துள்ள பல கவிதைகள் மனதை தொட்டுச் செல்கின்றன.
அன்பு செய்வதாவது
உயிருடன் புதைக்கப்பட்டு
முனகி முனகி இறுகிப்போன
என் புதை குழிக்குள்
உன் சுவாசக் காற்று
வெதுவெதுப்பாக
சூட்டைச் சுமந்து
நுளைந்திருக்கின்றது
உயிர்ப்பு உடலெங்கும்
பரவும் பரவசம்
உயிரின் மூலதனத்தைக்
தொட்டுக் கிளர்ச்சியூட்டுகிறது
நேசிக்கும் இதயத்திற்கு
புதைக்குள்ளிருந்தும்
விரோதிக்க முடியவில்லை
புதை குழியிலிருந்தும்
அது உனக்கு
உயிர்ப்புடன்
அன்பே செய்யும்.
மிகவும் அற்புதமான கவிதை வரிகள் இவை உயிருடன் புதைக்கப்பட்டு முனகி முனகி இறுகிப்போன என் புதைகுழிக்குள் உன் சுவாசக்காற்று துயரினை தனதாய் கருதி வலி உணர்தலும் இக் கவிதையில் காணப்படுகிறது.
இன்னுமொரு கவிதையில்
உனது பார்வை
என்னைச் சுட்டெரித்தது
இந்த மனிதர்கள் எவ்வாறு
இவ்வாறானார்கள்?
இறப்பு அவர்களை ஏன்
கலங்க வைக்கவில்லை?
எப்போதும் இவர்கள் இதயம்
இறுகிப்போனது கரும் பாறையாய்?
நண்பனே உனது நண்பனின்
இறப்புக்குப் பல்லாண்டுகளுக்கு முன்
அது நிகழ்நது விட்டது
உனது நண்பியின்
இறப்பு
உன்னை கலக்கியிருக்கக் கூடும்
இவர்கள் இதயம் பாறையாகிய கதையும்
உனக்குப் புரியாததுதான்
எனினும் என் அன்பு நாயே
நம்பிக்கை கொள் இம்மனிதர்கள் மீது
என்றோ ஒரு நாள் இவர்கள்
தங்கள் மனிதாபிமானமுள்ளவர்கள்
உயிரபிமானமுள்ளவர்கள்
இயற்கையபிமானமுள்ளவர்கள:
இவ்வுலகில் இன்னுமுள்ளனர்
இன்னும் பிறக்கவுமுள்ளனர் என்று.
எனினும் அன்பு நாயே நீயாவது நம்பிக்கை கொள் இம்மனிதர்கள் மீது. மிகவும் அற்புதமாக கூறுகிறார். மரங்களைப்பற்றி மிருகங்களைப் பற்றி பறவைகளைப் பற்றியெல்லாம் கவிஞர்கள் கவிதைகள் எழுதுகிறார்கள். ஆனால் இந்தக் கவிதையில் மிருகப் படிமங்கள் அலங்காராத்திற்காக அன்றி செயல்பங்கு மிக்கவையாக இருக்கின்றன.
சபதம் என்ற கவிதையில்
சருகுகள் ஓதுங்கிகிடக்கும்
சகதிக்குள் தடையின்றி ஓடுகின்றது நீர்
சாக்கடையின் சகதிக்குள்
சிக்குண்டிருந்தது உனது சடலம்
நேற்றுக் காலை நீ கணவனுடன்
கரையில் உலவியதாய்
காற்றுடன் கலந்து செய்திகள் வந்தன
உடல் சுற்றிய ஒரு துணித்துண்டேனும்
உன் மீதில்லை
மனித தர்மங்களும் தார்மீக மதங்களும்
தரிப்பிடம் தேடி அலைந்து திரிந்தன.
தேசியத்தின் பேரால் ஒரு யோனி
பயங்கரவாதத்தின் பெயரால் மற்றொன்று
பலவந்தத்தின் பிடியில் இன்னுமொன்று
சுயநலத்தின் சூறையில் பிறிதொன்று
எத்தனை யோனிகள் எத்தனை உடல்கள்
இன்னும் அழிய உள்ளன
தோற்று விட்டதா மனித தர்மங்கள்
மனித உயர் விழுமியங்கள்
உயிர்த்தெழும் வரை
எமது யோனிகள்
எமது உடல்கள் மற்றொரு காமுகனைப்
பெற்றுப் போடாதிருக்கட்டும்.
என்று கூறும் சுல்பிகா உண்மை தான் எமது யோனிகள் எமது உடல்கள் மற்றொரு காமுகனை பெற்றுப் போடாதிருக்கட்டும். எவ்வளவு ஆழமான கருத்து இது. இப்படி இவரது பல கவிதைகள் மனதையும் உணர்வையும் தொட்டு நிற்கின்றன. பெண்கள் கவிதைகள் என்றால் மென்மையான விஷயங்கள் தான் கூடுதலாக எழுதப்பட்டிருக்கும் என்ற பலரின் கருத்தை சுல்பிகாவின் கவிதைகள் உடைத்து விடுகின்றன. மிக அழுத்தமான மிக அவசியமான சொற்களில் இக்கவிதை முழமைபெறுகிறது.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி முன்னணி, முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இலங்கை முஸ்லிம் பெண்களின் அந்தஸ்து நிலை பற்றியும் அதனை முன்னேற்றுவதற்கான கருத்துக்கள் பற்றியும் ஆய்வுகளை செய்து செயற்பாடுகளை முன்வைத்து அதற்காக உழைத்துவரும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி இன்று செயற்பட்டு வருகின்றது. சுல்பிகா இம்முன்னணியில் இணைப்பாளர் குழுவில் ஒருவராக 1990லிருந்து செயற்பட்டு வருகிறார். அத்துடன் தேசியகல்வி நிறுவகத்தில் பிரதம செயற்திட்ட அதிகாரியாகவும் கடமையாற்றுகிறார். பல்நூல் ஆசிரியரான இவர் கல்வியில் பெண்ணியல் தொடர்பான ஆய்வுகளை செய்வதுடன் கவிதை நூல்களையும் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி
21.25 பொல்ஹென்கொட கார்டின்
கொழும்பு 5
இலங்கை
றஞ்சி(சுவிஸ்)
21.01.2006
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள்.காம் பெப்ருவரி 2006 இதழ் 74