தொடர் நாவல்: கலிங்கு (2009 -6) - தேவகாந்தன் -
வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
2009 - 6
விடிந்திருந்த பொழுதும் விடியாததாக, மாசி மாதத்தின் ஊசிப் பனி குத்துகிற ஒரு அதிகாலைவேளையில் படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வேலைகளில் மும்முரமாயிருந்த செம்பவளம் உணர்ந்துகொண்டிருந்தாள். கிழக்குத் திசைக் களர் நிலத்திலிருந்து சூரியன் பனித் திரையைக் கிழித்து பிரகாசமாய்க் காலித்துக்கொண்டிருந்தும் அந்தளவான ஒரு மனமூட்டம் அவளிலிருந்தது. ஏனென்று அவளால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. முன்னனுபவமற்ற ஒரு மந்த உணர்வு.
வித்தியா எழுந்து குளிக்க கிணற்றடி சென்றபோது கூடத்துள் அப்பா இன்னும் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டாள். மீண்டும் மஹாபாரதத்துள் அப்பாவின் வாசிப்பு சென்றிருந்தது. இரவு வாசித்த தடித்த அந்தப் புத்தகம் மேசையில் கிடந்தது. வாசித்துவிட்டு எத்தனை மணிக்கு தூங்கினாரோ? அவள் குளித்து வந்து அறைக்குள் வேலைக்கு வெளிக்கிட்டுக்கொண்டு இருந்தாள்.
அவளிடத்திலும் கலகலப்பான மனநிலையில்லை. வீட்டில் அம்மா கலகலப்பாயில்லாவிட்டால் எல்லாவற்றிலுமே அதன் தாக்கம் தெரியும். ஆனால் அதுவேதான் அப்போது அவளில் பிரதிபலித்துக்கொண்டு இருந்ததெனச் சொல்லமுடியவில்லை. உலகளாவிய தமிழரிடத்தில் அப்போது கொதித்துப் பொங்கிக்கொண்டிருந்த ஏக்கத்தின் கையறுநிலைபோலும் அது இருக்கவில்லை. எழுபத்தைந்து சதுர கிமீக்குள் அடங்கிவிட்ட போரின் இறுதி நோக்கிய நகர்வு எழுதக்கூடிய தோல்வியின் நடுக்கமும் இல்லை அது. அவையல்லாத இன்னும் ஏதோவொன்று.
வித்தியா சமையலறை போய் கருப்பட்டித் தேநீர் குடித்தாள். காலைத் தேநீர் எப்பொழுதும் அங்கே அப்பாவுக்காக கருப்பட்டியோடுதான். செம்பவளம் அவசரமாய் தேநீரோடு கணவரை அணுகினாள். அன்றைக்காவது தெண்டித்து அவரை ஆஸ்பத்திரி செல்லவைத்துவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டாள். கடந்த ஒரு வாரமாக கையுழையுதென்று அமுக்கி அமுக்கிப் பிடித்துக்கொண்டு திரிந்தவர், இரண்டு மூன்று நாட்களாக நெஞ்சைத் தடவிக்கொண்டு அல்லல்படுகிறார். ‘நெஞ்சுக்க என்ன செய்யிது?’ எனக் கேட்டு செம்பவளம் முகத்தில் ஏக்கம் விரிக்க, ‘அதொண்டுமில்லை. வாய்வாயிருக்கும். இந்தளவு நாளும் கையில நிண்டது இப்ப நெஞ்சுக்குள்ள இறங்கியிட்டுதுபோல’ என்றிருந்தார். ‘ரா ராவாய் அவளையே யோசிச்சுக்கொண்டு கிடந்தா? சண்டை முடிய நிஷா வருவாள்தான. நாங்களேன் அதையிதை யோசிச்சு அந்தரப்படவேணும்?’ என்று நெஞ்சை அவர் அழுத்தித் தேய்க்கிறவேளையிலெல்லாம் அவளும் சொல்லிக்கொண்டிருந்தாள். ‘அது வாய்வா இருந்தா இருக்கட்டும், எதுக்கும் நீங்கள் நாளைக்கு ஆஸ்பத்திரியில ஒருக்கா காட்டியிட்டு வந்திடுங்கோ’ என்று முதல்நாள் படுக்கப் போகிறபோது சொல்லியிருந்தாள். ‘ஓ’மென்று அவரும் தலையசைத்தார். ‘வித்யா வெளிக்கிடேக்க நீங்களும் கூடிக்கொண்டு போங்கோ’ என படுத்த பின் அவள் சொன்னதற்கும் ‘சரி’ என்றிருந்தார். ஆனால் இன்னும் எழும்பவில்லை. அவள் தேநீரை மேசையில் வைத்தபடி, “வித்யா வெளிக்கிட்டிட்டாள், எழும்புங்கோ’ என்றாள்.