வாசிப்பு அனுபவம்: காட்சி மொழி - சினிமாவுக்கான இதழ்! - விதுஷா- பேராதனைப் பல்கலைக் கழகம் , கண்டி -
இலங்கையில் தமிழ் மொழியிலான சினிமா பற்றிய உரையாடல்களை ஏற்படுத்துவதற்கான தளங்கள் விரிவாக்கப்பட வேண்டிய தேவை அதிகமாக உணரப்படுகின்றது.
இச்சூழலில் காட்சி மொழி காலாண்டு இதழ் பேசப்படவேண்டிய ஒரு இதழாக வெளிவந்துள்ளது. இலங்கையில் இருந்து உலக சினிமாவிற்காக வெளிவந்திருக்கும் காட்சிமொழி, சினிமா அரசியலையும் அதன் வடிவங்களையும், வரலாறுகளின் வளரச்சிப் படிமங்களையும் உரையாடலுக்கான களமாக திறந்துவிட்டுள்ளது.
இந்திய - இலங்கைச் சூழலில் இருந்து வெளிவரும் பெரும்பாலான கதாநாயக வழிபாட்டை மையப்படுத்திய 'கமர்ஷியல்' சினிமாவின் போக்கும் அதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவப் பரப்புரைகளும், விளம்பரங்களும், பெண்ணுடல் பண்டமாக்கப்படுவதும், பாலியல் சுரண்டல்களும், கிசு கிசுத் தகவல்களுமே சினிமாவாக சித்திரிக்கப்பட்டு நமக்குப் பழக்கப்படுத்தப்படுகின்றது.
இது பெரும்பாலும் சினிமாவை ஒரு 'கமர்ஷியல்' பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமே நம்மிடம் நம்பவைக்க முயற்சிசெய்து கொண்டிருக்கின்றது.
அதற்கு அப்பால் சினிமாவினை கலைவடிவத்தோடு இணைந்த உயிரோட்டமான வெகுசன சமூக ஊடகமாக வெளிப்படுத்தக் கூடிய வெளிகளை இந் நிலை மறைத்தும் வைத்துள்ளது.
காட்சிமொழி இதழ் அந்த கட்டமைப்புகளை உடைத்து ஒரு சமூக கலை இலக்கிய சினிமாவிற்கான உரையாடலை நிகழ்த்தக்கூடிய தளமாக உருப்பெற்றிருக்கின்றது.
நான்கு தமிழ் மொழியிலான கட்டுரைகளுடனும் மூன்று மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுடனும் வெளிவந்துள்ள இவ் இதழ் , சினிமாவில் வழக்கமாகப் பேசப்படுகின்ற விடயங்களில் இருந்து விலகிய அல்லது அவற்றிற்கு முரணான வெளிப்படுத்தல்கள் எந்தளவு தூரம் சினிமாவினை இன்றுவரை ஒரு காத்திரமான கலைப் படைப்பாகவும் ஊடகமாகவும் கொள்வதற்கு வழிசமைத்துள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன.