மனப்பிறழ்வு (Schizophrenia) - ஶ்ரீரஞ்சனி -
கொடூரமான கொலை ஒன்றைப் பற்றிக் கேள்விப்படும்போது, அந்தக் கொலையாளி மனச்சோர்வால் (depression) பாதிக்கப்பட்டிருந்ததால்தான் அந்தக் கொலை நிகழ்ந்ததெனப் பொதுவில் பேசிக்கொள்கிறார்கள். நாங்கள் அதிகமாகக் கேள்விப்படும் ஒரு மனநல ஒழுங்கீனமாக மனச்சோர்வு இருப்பது அதற்கான காரணமாக இருக்கலாம். ஆனால், மனச்சோர்வு என்பது ஒருவரின் மனநிலையில்/உணர்ச்சிகளில் ஏற்படும் ஓர் ஒழுங்கீனம் ஆகும். அதன்போது, மனச்சோர்வடைந்திருக்கும் நபரே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார். மனச்சோர்வைத் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு நிலையை ஒருவர் அடையும்போது, அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடும். ஆனால், எழுந்தமானமாக நிகழும் திடீர்க் கொலைகளுக்கு மனச்சோர்வு காரணமாக இருப்பதில்லை. அதேவேளையில், இன்னொரு வகையான மனநல ஒழுங்கீனமாக இருக்கும் schizophrenia (மனப்பிறழ்வு) என்ற நோ ய் இவ்வகையான திடீர் கொலைகளுக்குக் காரணமாக இருக்கக்கூடும்.
Schizophrenia என்பது யதார்த்தம் எது, பிரமை எது என்ற வித்தியாசம் தெரியாத சவால்கள் நிறைந்த ஒரு மனநிலையாகும். அந்த நிலையில் ஒருவரால் தெளிவாகச் சிந்திக்கவோ, தன் உணர்சிகளைக் கட்டுப்படுத்தவோ, சரியான தீர்மானங்களை எடுக்கவோ, உறவுகளைக் கையாளவோ முடியாதிருக்கும். சிலநேரங்களில் இந்த நோயின் அறிகுறிகள் மோசமாகலாம். Schizophrenia உள்ளவர்கள் எல்லோரும் வன்முறையாளர்களாகவோ, கொலைசெய்பவர்களாகவோ இருப்பதில்லை, எனினும், அந்த நோய்க்கு ஏற்ற சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளாதவர்களை அந்த நோய் வன்முறையாளர்களாக மாற்றலாம். அத்துடன், மதுபானம், போதைப்பொருள் போன்ற பொருள்களை அந்த நோயாளர் அதிகமாகப் பயன்படுத்துவதும் அவரை மேலும் ஆக்ரோஷமானவராக மாற்றக்கூடும்.