இளவாலை விஜயேந்திரன் கவிதைகள் - எம். ஏ. நுஃமான் -
- கவிஞர் இளவாலை விஜயேந்திரனின் கிடைக்கக் கூடிய முழுக் கவிதைகளையும் 'எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?' எனும் தலைப்பில் தொகுத்து இன்று நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வெளியிடுகிறோம். காலச் சுவடும் கூடலும் இணைந்து இந் நூலை வெளியிட்டுள்ளன. இதற்காக நுஃமான் அவர்கள் எழுதிய முன்னுரையை நன்றியுடன் இங்கு பகிர்கிறேன். விஜயேந்திரனின் கவித்துவத்தை இந்த முன்னுரை பதிவு செய்துள்ளது. - எழுத்தாளர் நா.சபேசன் -
இளவாலை விஜயேந்திரன் கவிதைகள் - எம். ஏ. நுஃமான் -1980களின் தொடக்கத்தில், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில், க.பொ.த. உயர் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சிலர், ஒரு புதிய காற்றாக இலக்கிய உலகில் பிரவேசித்தார்கள். ‘புதுசு’ என்ற சஞ்சிகை ஒன்றையும் (1980–1987) வெளியிடத் தொடங்கினார்கள். இவர்கள் எல்லோரும் முளைக்கும்போதே, இடதுசாரிச் சார்புடையவர்கள். தோழர் விசுவானந்ததேவனின் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியால் கவரப்பட்டவர்கள். அவர்களுள் ஒருவர்தான் இளவாலை விஜயேந்திரன்.
மகாஜனாவில் இருந்து ‘புதுசு’மூலம் வெளி உலகுக்கு அறிமுகமான கவிஞர்களுள், விஜயேந்திரனின் சக பயணிகளான பாலசூரியன், சபேசன், ரவி, ஊர்வசி, ஔவை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 1970களின் பிற்பகுதியிலும் 80களிலும், யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைத் துறைக்குள் வந்தவர்களை, போரின் புதல்வர்கள் என்று நான் சொல்வதுண்டு. இனமுரண்பாடும், விடுதலை இயக்கங்களின் எழுச்சியும், போரும், வன்முறையும் இவர்களைக் கவிதைக்குள் இழுத்துவந்தன. இவர்களுடைய கவிதைகள் பெரும்பாலும் இவற்றுக்கான இலக்கிய எதிர்வினைகளாகவே அமைந்தன. தமிழ்த் தேசியக் கருத்துநிலையும், மார்க்சிய இடதுசாரி இலட்சியங்களும், வெவ்வேறு அளவில் இவர்களது கவிதைகளில் தொனிப்பொருளாகக் கலந்திருக்கக் காணலாம். இவர்கள் யாரும் ஏராளமாகக் கவிதைகள் எழுதிக் குவித்தவர்கள் அல்ல. ஆனால், கணிசமான எண்ணிக்கையில் நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்.