தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1) - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்!மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ' மாநகர் விரிந்து கிடந்தது. தெற்காகத் திரும்பிப் பார்த்தான். தொலைவில் உயர்ந்த கட்டடங்கள் தெரிந்தன. 'கனடா வாத்து'க் கூட்டமொன்று V வடிவில் பறந்துகொண்டிருந்தது. சிட்டுக்குருவிகள் சில கூட்டமாகக் கடுகிச் சிறகடித்து மறைந்தன. அவன் வசித்து வந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கு அருகிலிருந்த மேப்பிள் இலை மரமொன்றிலிருந்து மெல்ல மெல்ல இறங்கிய கறுப்பு அணிலொன்று புஸ் புஸ்ஸென்று வளர்ந்திருந்த வாலை ஆட்டியபடி மெல்ல அவனைச் சிறிது நேரம் உற்றுப்பார்த்தது. பின் ஏதோ திருப்தி அடைந்ததுபோல் தன் காரியத்தில் மூழ்கி விட்டது. புல் மண்டிக்கிடந்த தரையில் உனவு தேடும் அதன் வேலையில் மூழ்கிவிட்டது. மாதவன் சிறிது நேரம் அதன் அசைவுகளைப் பார்த்து நின்றான். ஒரு கணம் அந்த அணில் பற்றிய சிந்தனைகள் அவன் சிந்தையில் ஓடின. இந்த அணிலின் இருப்பு எவ்வளவு சிறியது என்று நினைத்துக்கொண்டான். இந்த மரம்,இதனைச் சுற்றியுள்ள சிறு பிரதேசம் .. இவையே இதன் உலகம். மரத்திலுள்ள கூடும், மரத்தைச் சுற்றியுள்ள அயலுமே அதன் உலகம். ஒவ்வொரு நாளும் தன் இருப்புக்காக உணவு தேடுவதே அதன் முக்கிய பணி. அவ்விதம் இருப்பைத்தக்க வைப்பதற்கு முயற்சி செய்கையில் அதனைப் பலியெடுத்துத் தம் இருப்பைத்தக்க வைக்கும் ஏனைய உயிரினங்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற அது மிகவும் எசசரிக்கையுடன் இருக்க வேண்டும். பார்வைக்கு மிகவும் எளிமையாகத் தென்படும் அதன் வாழ்க்கை அவ்வளவு எளிதானதில்லை என்று ஒருமுறை தனக்குள் எண்ணிக்கொண்டான் அவன். அந்த எண்ணத்துடன் மீண்டும் அந்த அணில்மேல் பார்வையைத் திருப்பியபொழுது இப்போது அந்த அணில் அவனது இதயத்தை மிக நெருங்கி வந்து விட்டிருந்தது.
இதற்கிடையில் மாடப்புறாக்கள் சில அணிலுக்கு அண்மையில் பறந்து வந்தமர்ந்து இரை தேடத்தொடங்கின. அப்புறாக்களைத் தொடர்ந்து சிட்டுக்குருவிகள் சிலவும் பறந்து வந்து புறாக்களின் அருகாமையில் இரைதேடத்தொடங்கின. புறாக்களுக்கும் ,சிட்டுக்குருவிகளுக்குமிடையில் ஒருவித நட்புரீதியிலான புரிந்துணர்வு, அன்பு இருப்பதாக அவன் இவ்விதம் அவற்றை ஒன்று சேரக் காண்கையில் உணர்வதுண்டு. சிட்டுக்குருவிகள் அமைதியான சுபாவம் மிக்க புறாக்களின் அருகாமையில் ஒருவித பாதுகாப்பு கலந்த உணர்வினை உணரக்கூடுமென்றும் அவனுக்குத் தோன்றியது. இச்சமயம் பார்த்து சீ கல் என அழைக்கப்படும் வெண்ணிறக் கடற்பறவைகள் சில கீச்சிட்டபடி சிறகடித்துப் பறந்தன.