அண்மைகால இலங்கை அரசியலில் அரங்கேறும் நாடகங்களும் , அவற்றின் பின்னணிகளும்! - ஜோதிகுமார் -
Iஅண்மைகாலத்து இலங்கையில், பல்வேறு சம்பவங்கள், அடுத்தடுத்து இடம் பெற்று, இலங்கை அரசியல் சூழலை அல்லது அச்சூழலை வசப்படுத்த முயலும் சிந்தனைகளை, அடியோடு சிதறடிக்கும் தொடர் கோர்வையாக, அரங்கேறத் தொடங்கியுள்ளன.
குருந்தூர் அரசியல் விவகாரத்தில் தொடங்கி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரடியாக தூற்றப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்ட விடயமாகட்டும் அல்லது செல்வராசா கஜேந்திர குமார் குண்டுக் கட்டாக பொலிசாரால் ‘குளற குளற’த் தூக்கி சென்ற சம்பவமாகட்டும் (தினக்குரலின் தலைப்புச் செய்தி) அல்லது சனல் - 4 அலைவரிசை வெளிப்படுத்திய உயிர்த்த ஞாயிறு தொடர்பிலான இஸ்லாமிய தீவிரவாத விடயங்களாகட்டும் அல்லது எமது முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு தப்பி சென்ற விடயமாகட்டும் அல்லது சட்டமா அதிபர் நீதிபதி சரவணராஜாவை அழைத்து தீர்ப்பை மாற்றி எழுத சொன்ன குற்றச்சாட்டாகட்டும் அல்லது ‘தமிழ் மக்களை இந்தியாவும் கைவிட்டு விட்டது. ஐ.நா. படையை உடனடியாக இங்கு அனுப்பவேண்டும்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஷ் அவர்களின் கூற்றாகட்டும் (தினக்குரல் தலைப்பு செய்தி: 01.10.2023) அல்லது ஒக்டோபர் மாத்தின் நடுப்பகுதி தொடக்கம் இந்தியா இலங்கைக்கான தனது படகு சேவையை, நாகப்பட்டினம்-காங்கேசன்துறை இடையில் ஆரம்பிக்கும் என்ற செய்தியாகட்டும் - அனைத்துமே, அவ்வவ் அளவில், தனித்தனி அதிர்வெடிகள் தாம்.