அஞ்சலிக்குறிப்பு: நெடும்பயணத்தில், பாதி வழியில் விடைபெற்ற பேராசிரியர் செ. யோகராசா! - முருகபூபதி -
கண்டியிலிருந்து கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை என்னைத்தொடர்புகொண்ட எழுத்தாளர் நொயல் நடேசன், எங்கள் இலக்கிய நண்பர் பேராசிரியர் செ. யோகராசா மறைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார். உடனே கொழும்பிலிருக்கும் பேராசிரியை சித்திரலேகா மௌனகுருவை தொடர்புகொண்டு அந்தச்செய்தியை ஆழ்ந்த கவலையுடன் உறுதிப்படுத்தினேன். இரண்டு நாட்களுக்கு முன்னர், மகரகமக மருத்துவமனைக்குச்சென்று அவரைப் பார்த்ததாகவும், கவலைக்கிடமான நிலையில் அவர் இருந்ததாகவும் சித்திரலேகா சொன்னார்.
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கியப் பயணத்தில் இணைந்து வந்திருக்கும் எமது அருமை நண்பர் செ. யோகராசாவின் அருமைத் துணைவியார் விஜயதிலகிக்கும் ஏகபுதல்வி சுவஸ்திகாவுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் துயரத்திலும் பங்கெடுத்து இந்த அஞ்சலிக்குறிப்பினை எழுதுகின்றேன்.
இலங்கையில் வடமராட்சி பிரதேசம் பல இலக்கிய ஆளுமைகளையும் கல்விமான்களையும் பெற்றெடுத்த மண். 1949 ஆம் ஆண்டு, கரணவாய் கிராமத்தில் செல்லையா – இலட்சுமி தம்பதியரின் செல்வப்புதல்வனாக பிறந்திருக்கும் யோகராசா, தனது ஆரம்பக்கல்வியை கரணவாய் வித்தியாலயத்திலும் உயர்தரக்கல்வியை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்தவர்.