தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (1 - 3)! - ஜோதிகுமார் -
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -
1
பேராசிரியர் நுஃமான் அவர்கள், மஹாகவி குறித்து 1984இல் எழுதிய, தனது அறிமுகத்தில், அவரது உள்ளடக்கங்களின் சிறப்புகளைப் பின்வருமாறு பட்டிலிடுகின்றார்:
1. ஆழமான மனிதாபிமானம்.
2. வாழ்வின் மீதான நம்பிக்கையும் வாழ வேண்டும் என்ற முனைப்பும்.
3. ஏற்றத்தாழ்வின் மீதும், போலி ஆசாரங்களின்; மீதுமான அவரது எதிர்ப்பு. ப-21
இறுதியில் குறிப்பார்:
“இங்கு எடுத்துக்காட்டிய சிறப்புப் பண்புகள் சிலவற்றுக்கு எதிரிடையான சிலவற்றை அவரது கவிதையில் இருந்து நாம் எடுத்துக்காட்ட
முடியும்… ஆயின் அவை புறநடைகளே. புறநடைகளைக் கொண்டுன்றி பொது பண்புகளைக் கொண்டு ஒரு கவிஞனை நாம் மதிப்பீட
வேண்டும். எனினும் புறநடைகளை நாம் ஒதுக்கி விடவும் முடியாது. இந்த அறிமுகத்திலே அத்தகைய ஓர் ஆய்வு தேவையற்றது என கருதி தவிர்த்துக்கொண்டேன்”. ப-45
மேற்படி கூற்றில் ஓர் தள்ளாட்டம் தெரிகின்றது என்பது வெளிப்படை.
“புறநடைகளை நாம் ஒதுக்கி விடவும் முடியாது” என்று கூறும் அதே வீச்சில் “அது தேவையற்றது என்று ஒதுக்கியும் விடுவேன்” என கூறவும் தலைப்படுகின்றார் என்பதே இங்கே உறுத்தலான விடயமாக அமைந்து போகின்றது.
அதாவது, ஏன் இப்படி, ஒரே வீச்சில் 'ஒதுக்கி விடுவும் முடியாது' என்று கூறும் அதே கணத்தில் 'ஒதுக்கியும் விட்டேன்' என கூற நேர்கின்றது என்ற கேள்வி அனைவரையுமே ஈர்க்கக் கூடிய ஒன்றுதான்.
ஆனால், சற்று நிதானித்துப் பார்க்கும் போது, மஹாகவியை சிலாகிக்க முற்படும் எவர்க்கும் இச்சிக்கல் தவிர்க்கப்பட முடியாத ஓர் அம்சமாகவே இருந்து போகக் கூடும் - அதாவது, ஒருவர் மஹாகவியின் ஆக்கங்கள் பொறுத்து முழுமையாக கதைப்பதானாலும் சரி அல்லது அதனை விடுத்து பேராசிரியர் நுஃமான் அவர்களின் “புறநடையை ஒதுக்கி விடும்” அணுகுமுறையைக் கைக்கொண்டாலும் சரி – மேற்படி தள்ளாட்டம் ஏதோ ஒரு வகையில் வந்து சேர்ந்து விடும் என்பது பிறிதொரு விடயம்.