ஆய்வு: எஸ். பொன்னுத்துரை படைப்புகளில் காணலாகும் பண்பாட்டுக் கூறுகள்! - முனைவர் ப. பாரதி, உதவிப் பேராசிரியர், சாரதா கங்காதரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேல்ராம்பட்டு, புதுச்சேரி -
முன்னுரை
பண்பாடு என்பது பண்பட்ட மனதின் வெளிப்பாடேயாகும். சங்க கால மக்களின் வாழ்க்கை நிலையையும். பின்புலத்தையும் இது எடுத்து காட்டுவதாகவும் வருங்காலச் சந்ததியினருக்கு நல்ல நினைவுச் சின்னமாகவும் விளங்குகின்றது.
பண்பாட்டுக் கூறுகள்:
அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படும் கருத்துக்களும், நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் பண்பாடாக அமைகின்றன.
'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்' (நச்சினார்க்கினியர் உரை, கலித் தொகை, கலி. 16)
என்னும் கலித்தொகை வரி பிறர் இயல்பை அறிந்து நடக்கும் நற்குணம் என்னும் ஒழுக்கமும் பண்பாடு என்று கூறுகின்றது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், சமூகத்தினருக்கும் தனித்தனிப் பழக்கவழக்கங்கள் உண்டு. அவை பிற சமூகத்தினரிடமிருந்து தங்களை தனித்துக் காட்டுகின்ற அடையாளங்களாகும். அவ்வகையில் நவீன இலக்கியவாதியான இலங்கை எழுத்தாளர் எஸ்.பொ. என்று அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை இலங்கை தமிழ் மக்களின் நம்பிக்கையையும், பழக்க வழக்கங்களையும் மையமாக வைத்துத் தனது படைப்புகளில் விளையாட்டு, திருவிழா, மருத்துவம், உணவுப் பழக்கம் போன்றவற்றைப் படைத்துள்ளார்.
விளையாட்டுக்கள்
'விளையாட்டு என்பது வெளித்தூண்டுதலின்றி மனமகிழ்ச்சியூட்டும் வெயல்களில் இயற்கையாக ஈடுபடுவதாகும். அவ்விளையாட்டு பொழுதுபோக்காக மட்டுமின்றி உடல்நலம்,மனநலம் பேணுவதாகவும் உள்ளது' என்று சு. சக்திவேல் நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் (ப. 246) குறிப்பிடுகின்றார்.