நதியில் நகரும் பயணம் (10) : மில்றன்பேர்க் (Miltenberg) - நடேசன் -
- வில்லியம் மன்னரது 14 மீட்டர் சிலை -
நதி பயணத்தில் மிற்றன்பேர்க் என்ற சிறிய நகரம் தரிப்பாக இருந்தது . இதுவும் பவேரியா பகுதியில் உள்ள பழைய நகரம் ஒன்றாகும் இங்கு குடியேற்றம் ரோமர்களது காலத்திற்கு முந்தியதென்றாலும் அதனது எச்சங்கள் இங்கு இல்லை. மத்திய காலத்தின் எச்சங்களே தற்பொழுது காணப்படுகிறது.
நதியின் கரையில் இருப்பதால் எப்போதும் மக்கள் போக்குவரத்து வணிகம் இங்கு செழித்திருந்ததன் விளைவாக நகரம் முழுவதும் அழகிய மரக் கட்டிடங்கள் , கற்கள் பதித்த தெருக்கள் இருந்தன. அத்துடன் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பின்பு இடிந்த கோட்டை ஒரு மலையில் உச்சியிலிருந்தது . தற்பொழுது அது மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது . நாங்கள் அதில் ஏறாது அண்ணாந்து பார்த்ததோடு திரும்பிவிட்டோம்.
எங்களுக்கு வண்ண வண்ணமாக கிளாஸ் வகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்குச் சென்றோம் . அதில் பலர் பல நேரம் செழித்தார்கள். மருந்துகளை அடைக்கும் பல கண்ணாடி போத்தல்கள் அங்கிருந்தது. ஜேர்மனி, கிளாஸ் தயாரிக்கும் தொழிலில் முக்கிய நாடாகப் பல காலம் இருக்கிறது. ஆனால், தற்பொழுது ரஸ்யாவிடமிருந்து கிடைக்கும் எரிவாயு தட்டுப்பாட்டால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன என அறிந்தேன்.
மில்றன்பேர்க் நகரத்தின் பாதையில் நடந்தபோது பல நிர்வாண ஓவியங்கள் கொண்ட ஒரு கட்டிடம் இருந்து . அதை அவுஸ்திரேலியாவில் உள்ளதுபோல் செக்ஸ் டொய்ஸ் (Sex toys) விற்கும் கடையாக இருக்குமோ என ஆவலுடன் எட்டிப்பார்த்தால் அது ஒரு ஓவியக் கண்காட்சி இடமாகத் தெரிந்தது. அதேபோல் ஒரு மருந்தகம் முன்பாக இரண்டு எலும்புக்கூடுகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன .
ஐரோப்பாவில் இருநூறு வருடங்கள் முன்பாக நடந்த நகரங்களின் வளர்ச்சியில் மூச்சுத் திணறி விலகி வந்த பல ஓவிய, சிற்ப, கட்டிடக் கலைஞர்கள் இப்பகுதியில் வந்ததால் இந்த நகரங்களில் தங்களது கைவண்ணத்தைக் காட்ட முடிந்தது என்று சொல்லப்பட்டது. இந்தப் பகுதிகளுக்கு போகும் பாதைக்கு ரோமான்ரிக் ரோட் (Romantic Road) எனப் பெயரிடப்பட்டது.