
-பதிவுகள் இணைய இதழில் 2009இல் வெளியான கட்டுரையிது. 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும் பொருட்டு மீள்பிரசுரமாகின்றது. -
1.
இன்று முருகையனின் நினைவுப்பகிர்தலிற்காய் வந்திருக்கும் உங்களில் சிலர், முருகையனோடு நெருங்கிப் பழகியவர்களாக இருக்கக்கூடும். இன்னும் சிலர் அவரது வெளிவந்த படைப்புக்களை வாசித்து நெருக்கம் கொண்டவர்களாக இருக்கக்கூடும். எனக்கு எப்படி முருகையன் முதலில் அறிமுகமானார் என காலப் பாதையில் பின்னோக்கி நகரும்போது, சிறுவயதுகளில் படித்த பாடப்புத்தகங்களின் மூலமாக அறிமுகமாயிருப்பார் போலத்தான் தோன்றுகின்றது. ஈழத்தில் படித்த காலத்தில் பாடக்குழு உறுப்பினர்களின் பெயரில் முருகையனின் பெயர் நீண்டகாலமாய் இருந்து வந்திருக்கின்றது. அப்போது அறிமுகமாகிய முருகையன், இப்போது எனக்கு தெரிகின்ற பன்முகத் திறமை கொண்டதொரு படைப்பாளியாக அறிமுகமாயிருக்கவில்லை என்பதும் உண்மை.
பின்னாட்களில் வாசித்த 'பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்' தொகுப்பின் மூலமாக முருகையன் எனக்குள் ஒரு கவிஞராக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார். எங்களுக்கென்று ஒரு நீண்ட கவிதைப் பராம்பரியம் இருந்து வந்திருக்கின்றது. மஹாகவி, நீலாவாணன், முருகையன், பசுபதி என்று தொடர்கின்ற வளமான மரபு எங்களுக்கு இருக்கின்றது. முருகையன் கவிஞராக மட்டுமில்லாது, நாடக ஆசிரியராக, கட்டுரையாசிரியராக,மொழிபெயர்ப்பாளராக எனப் பன்முகத்தனமையுடையவராக இருந்திருக்கின்றார். இவையெல்லாவற்றையும் விட, இன்று முருகையனின் மறைவை ஒட்டி எழுதப்படுகின்ற அஞ்சலிக்குறிப்புக்களைப் பார்க்கும்போது, முருகையன் ஓர் அற்புதமான மனிதராக வாழ்ந்திருக்கின்றார் போலத்தான் தெரிகிறது.
பட்டங்களோடும் பட்டோபங்களோடும் பலர் வாழ்ந்தாலும், அவர்களில் பலரால் நிலத்தில் காலூன்ற முடிவதில்லை; சக மனிதர்களை நேசிக்கத் தெரிவதில்லை. அந்தவகையில் பார்க்கும்போது, இவ்வாறானவர்களுக்கு எதிர்மாறாக, முருகையனும், ஏஜே கனகரட்னவும் வாழ்ந்து முடித்துவிட்டுப் போயிருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் தமது திறமைகளின் வெளிச்சத்தில் திளைக்காது, சக மனிதர்களை நேசித்துக்கொண்டு, சாதாரணமாய் வாழ்ந்த அருமையான மனிதர்கள். ஆதி மதங்களும், அண்மைக் காலத்து மார்க்சிசமும் போதித்ததும் சக மனிதர்களை உன்னைப் போல நேசி என்பதைத்தான். மதத்தையும் மார்க்சையும் வைத்து எத்தனையோ போலித்தனங்களும் பித்தலாட்டங்களும் நிகழ்ந்துகொண்டிருக்க, முருகையனும், ஏஜேவும் தங்களது வாழ்வின் மூலம், முக்கியமான ஒரு விடயத்தை சப்தமின்றி எங்களுக்கு உணர்த்திவிட்டுப் போயிருக்கின்றார்கள்.