அறிமுகம்
ஈழத்து தமிழ் இலக்கிய செல்நெறியின் புதியதோர் புலனாக அமைவது புகலிடத் தமிழ் இலக்கியம் ஆகும். புகலிடத் தமிழ் இலக்கியம் என்ற சொல் ஈழத்து அரசியல் சூழலுடன் தொடர்புடைய பொருண்மை கொண்டது. உள்நாட்டு போர் காரணமாக தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு அரசியல், புவியியல், பண்பாடு, வாழ்க்கை முறை, மொழி முதலான அனைத்து அடிப்படைகளிலும் இருந்து; வேறொரு நாட்டில் தஞ்சம் பெற்று வாழ்பவர்கள் எழுதுகின்ற இலக்கியங்களே புகலிடத் தமிழ் இலக்கியம் என்று வரையறை செய்யப்படுகின்றன. ஒருவர் தனது தாய் நாட்டில் இருந்து வெளியேறிச்சென்று வேறொரு நாட்டில் வாழும் போது எழுதுகின்ற இலக்கியங்களை தனியே ஒரு வகைப்பாட்டில் குறிப்பிடுகின்ற வழக்கம் உலக இலக்கிய வரலாற்றில் உண்டு. இத்தகைய இலக்கியங்கள் “தமிழில் புகலிட இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம, அலைந்துதழல்வு இலக்கியம, புலச்சிதறல் இலக்கியம்” என்று பலவாறாக அழைக்கப்படுகின்றது.
அந்த வகையில் அந்நியமாதல் கருத்து நிலையானது 2010-ஆம் ஆண்டு வெளிவந்த நான் நிழலானால் என்ற ஸ்ரீPரஞ்சனி விஜேந்திர அவர்களினுடைய சிறுகதைத் தொகுதியில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதை அடிப்படையாகக் கொண்டதாக இந்த கட்டுரை அமைகின்றது.
அந்நியமாதல் கருத்துநிலை
19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியானது வேலை மட்டும் சமூக உறவுகளின் தன்மையில் ஆழமாக மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன் பொருட்டே தான் அந்நியமாதல் என்ற கருத்தின் உருவாக்க நிலைக்கு வித்திட்டது என்று கூறலாம.; அந்த வகையிலே ஹெகலின் அந்நியமாதல் பற்றிய கருத்து நிலைகளை கார்ல் மார்க்ஸ் தனது உழைப்பின் பொருள் நிலைமையை சிந்தனைக்கு பயன்படுத்தினார் . அடிப்படையில் ஹெகல் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தின் நிலைகளின் ஒரு கூறாக அந்நியமாதல் சிந்தனை காணப்படுகின்றுத. ஆரம்ப காலத்தில் அந்நியமாதல் உற்பத்தி முறை உழைப்பு சுரண்டல் அதேபோன்று பொருள் நிலைக் காரணிகளின் அடிப்படையில் அந்நியமாதல் காணப்பட்டது. தற்காலத்தில் சமூகமஇ; குடும்பமஇ; நிறவாதம், மொழி போன்ற பல்வேறு காரணங்களின் ரீதியாக அந்நியமாதல் இடம்பெறுகின்றது அது மட்டுமின்றி தொழிற்சார் அந்நியமாதல,; கல்வி சார்ந்து கூட்டு வாழ்க்கை ரீதியான அந்நியமாதல் என்று பலவாறாக வரையறை செய்து கொள்ளக்கூடிய வகையிலே இன்றைய அந்நியமாதலினுடைய தன்மை காணப்படுகின்றது.
புலம்பெயர்ந்து சென்ற ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் பண்பாட்டு ரீதியான அந்நியமாதல், சுய அந்நியமாதல், மொழி ரீதியான அந்நியமாதல,; பொருளாதார அந்நியமாதல், சாதிய மேலாதிக்கம் மொழி புறக்கணிப்பு, நிறவாதம்இ இருத்தலியல் அந்நியமாதல் என பலவாறாக அந்நியப்படுத்தப்படுகின்றனர.; இவ்வாறான அந்நியமாதல் தன்மையானது எவ்வாறு ஸ்ரீPரஞ்சனி விஜேந்திரா அவர்களுடைய சிறுகதை தொகுதியிலே காணப்படுகின்றது என்பதை பற்றி இந்த அந்நியமாதல் கருத்து நிலையும் ஈழத்து புகலிடத் தமிழ் இலக்கியமும் என்ற ஆய்வுக் கட்டுரை முன்வைக்கின்றது.
- எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா -
நான் நிழலானால் என்ற நூலாசிரியர் பற்றிய ஒரு நோக்கு
இலங்கையில் தெல்லிப்பழை பிறந்து தற்பொழுது கனடாவில் வசித்து வருகின்றார் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா. இவர் எழுதிய முதல் சிறுகதைத்தொகுதி நூலாக காணப்படுவது மனக்கோலம் இது ஈழநாடு ஏப்ரல் (1984) ஆம் ஆண்டு வெளிவந்தது. உதிர்தலில்லை இனி – சிறுகதைத் தொகுதி( -2018) நான் நிழலானால் -சிறுகதைத் தொகுதி (-2010) ஒன்றே வேறே – சிறுகதைத் தொகுதி –(2022) போன்ற சிறுகதைத் தொகுதிகளை எழுதி வெளியிட்டுள்ளார.;
நான் நிழலானால் என்று சிறுகதை தொகுதியானது 16 சிறந்த கதைகளை உள்ளடக்கமாகக் கொண்டது அந்தவகையில, நான் நிழலானால், புகலிடம் தேடி, நிசி கிழித்த மென்குரல் நெருடல்கள், விடை பெறும் கானல்தடம், உறவுகள் ஊமையானால்,; நெற்றிவிழி மௌனம், எரிமனம் சிவந்து, சிக்குண்ட சினம், வலி, நீயே நிழலென்று, இது அதே நிலவல்ல, பனியுலவும் தெரு நீளம,; முந்தி நிற்கும் சுவடுகள், ஏமாற்றங்கள், இழை ஒன்று அறுந்து போகின்றதா? ஏன்ற கதைகளைக் கொண்டள்ளது.
எனது சில மதிப்பிடுகள்.
எழுத்தாளர் ஸ்ரீPரஞ்சனி அவர்களுடைய சிறுகதைத்தொகுதியானது பெரும்பாலும் பெண்களினுடைய அவலத்தினை எடுத்துக்கூறுகின்ற ஒரு முக்கிய சிறுகதையாகும.; அதுமட்டுமின்றி பண்பாடு சார்ந்த வகையிலே எவ்வாறு அந்நியாக்கப்படுகின்றார்கள் அதேபோன்று இருத்தலியல் ரீதியாக எவ்வாறு அநியாக்கப்படுகின்றார்கள் என்ற பலவாறான தகவலினை தருகின்ற வகையிலே இவருடைய சிறுகதைத்தொகுதியானது காணப்படுகின்றது. புலம்பெயர்ந்து சென்றவர்கள் அந்நிய தேசத்திலே எவ்வாறான இன்னல்களை எதிர்நோக்குகின்றார்கள் என்ற ஒரு தெளிவினையும் ஒரு பூரணமான அறிவைப் பெற்று கொள்வதற்கு இவருடைய நான் நிழலானால் என்ற சிறுகதைத்தொகுதியானது முக்கியமானது ஒரு எடுத்துக்காட்டாக அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்க உண்மை ஆகும்.
பண்பாட்டு அந்நியமாதல்
அந்நியமாதல் என்பது மனித சமூக வரலாற்றில் நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு நிகழ்வாகும.; தமக்குரிய உலகினையும், நியமங்களையும் மனிதர் கட்டமைத்துக்கொள்வதில் அவர்களுடைய உயிரியலும், சூழலும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஈழத்துப் பண்பாட்டுச் சூழலுக்குள் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் அகதிகளாகச் சென்றபோது பண்பாடு சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. சுய பண்பாட்டு மனநிலையிலிருந்துகொண்டு தஞ்சம் நாடிச்சென்ற நாடுகளின் பண்பாட்டை எதிர்கொள்வது சவால்மிக்கதாக இருந்தது. குறிப்பாக புலம்பெயர்ந்து சென்ற மூத்த தலைமுறையினர் தமிழ்ப்பண்பாட்டினைப் புகலிட நாடுகளிலும் இறுக்கமாகப் பேண முற்பட்டனர். அதேவேளை புதிய பண்பாட்டை எதிர்க்கவும் முற்பட்டனர். எனினும் அடுத்துள்ள இரண்டாம் மூன்றாம் தலைமுறையைச் சார்ந்தவர்களில் பெரும்பாலானோர் புகலிடப் பண்பாட்டுக்கு இயைவாக்கமடையவேண்டியவர்களாக இருந்தனர்.
பண்பாட்டு அந்நியமாதலிலே மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது கற்புநெறி. ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற கருத்தியலை மையப்படுத்திய ஈழத்தமிழரின் கற்புக்கோட்பாட்டு மனப்பாங்கே புகலிட தேசங்களில் பண்பாட்டு அந்நியமாதல் சார்ந்த பெரும்பாலான சிக்கல்களுக்கு மூலகாரணியாக அமைந்தது. தெய்வீகம், விழுமியம், ஒழுக்கம் முதலானவற்றால் மூடப்பட்டதாகவும் சமூகத் தண்டனையால் அச்சுறுத்தப்பட்டதாகவும் காணப்பட்ட தமிழரின் திருமண நடைமுறைகள் திறந்த பாலுறவுப் பண்பாட்டில் சிக்கல்களை எதிர்கொண்டது. திருமணத்திற்கு முந்திய பாலுறவும் ஒருவர் பலருடன் உடலுறவு கொள்வதும் கற்புப் பண்பாட்டு நோக்கில் மிகப்பெரும் பண்பாட்டு மீறல்களாகக் கருதப்பட்டன.
நான் நிழலானால் என்று சிறுகதை தொகுதியிலே வருகின்ற நெருடல்கள் என்னும் சிறுகதையில் ஒரு சமுதாயத்திலே பெண் எவ்வாறு சித்திரிக்கப்படுகின்றாள் என்கின்ற நிலைமையினை பண்பாட்டு அந்நியமாதலின் ஊடாக விவரிக்கின்றார் நூலாசிரிய அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக.
“அம்மாவுக்கு புருசனைக் கைக்குள் வைத்திருக்கத் தெரியாது, அம்மா சரியாக இருந்தால், ஏன் அவர் வெளியிலை போகிறார் என்றெல்லாம் தமது நாக்கை விரும்பிய விதமெல்லாம் வளைத்து, ஆட்கள் பல கதைகள் கதைத்து முடிய பல வருடமானது. அவருக்கு அப்படி ஒரு தொடர்பு இருக்குது என்று தெரிந்தாலும் இப்படி ஓடிப் போவார் என யாரும் எதிர்பார்க்க வில்லை.”
“உன்ரை அம்மா ஒரு வேசி’, என்று என்ன வெல்லாமோ சொல்லி அப்பா சுத்துவார். நான் அம்மாவின் பக்கம் நிற்கிறேன் என்ற கோவத்தில், அந்த ஆற்றாமையில், பொறாமையில் பின் என்னிலும் ஒரு பிழை கண்டு பிடித்து, எனக்கும் அடிக்க வருவார். அம்மாவைத் தப்பான ஆளாக எனக்குக் காட்டுவதன் மூலம் தான் என்னத்தைத்தான் சாதிக்க நினைக்கிறாரோ என பல தடவைகள் நான் சலித்துக் கொண்டதுமுண்டு. ‘வா கடைக்குப் போவோம். உனக்கு விரும்பினதை வாங்கித் தாறன்’. என்று எப்போதாவது அப்பா அன்பாகக் கேட்டாலும் கூட, அங்கு நான் ஏதாவது பிழை செய்து, அவர் கோபத்துக்குக் காரணமாகி விட்டால் என்ன நடக்குமோ என மனதில் பீதி வரும். மிகக் கடுமையாக மறுப்பேன். அழுவேன். அதற்கும் அவர் அம்மாவைத்தான் வசை பாடுவார். “உன்ரை அம்மா ஒரு கிறேசி வுமன், அவள்தான் உனக்குத் தேவையில்லாத கதை சொல்லி உன்னை என்னிடம் இருந்து பிரிக்கிறாள்”, என்பார்.
“உறவுகள் ஊமையானால”; என்ற சிறுகதையிலே கற்புநெறி பற்றியும் உடலுறவு பற்றி ஏற்படுகின்ற ஒரு சிந்தனையை வெளிப்படுத்துகின்ற வகையிலே அமைகின்றது.ஹ2யு
“நீயும் உன்ரை பிள்ளைகளும் தான் புதினமான ஆக்கள். அங்கை எல்லாரும் பிள்ளைகளோடை தான் வருகினம். உன்னைக் கட்டினன் நான் போயும் போய்...”
“அடுத்ததாக ஒரு பெண் பிள்ளை பிறந்தாள். உடல் உறவில் மட்டும் தான் அவளுக்கு அவன் கணவன் ஆனான். ஆனால் நாள் முழுக்க தனித்திருந்து பிள்ளை களுடன் போராடும் அவளுக்கு அதுவும் சுமையானது. இரவில் பிள்ளை அழுதால், ‘நான் வேலைக்குப் போக வேண்டாமோ, அடுத்த அறைக்கு கொண்டு போ, எனச் சினந்தான்.”
பலவருடங்களாக கணவனுடன் உடல் உறவு கொள்ளாமல் இருப்பதை வேண்டுமானால் நியாயப் படுத்தலாம். ஆனால் அவனுடன் வாழ்ந்துகொண்டு அவனுக்குத் தெரியத்தக்கதாக இன்னொரு ஆணுடன் தனது இச்சையைத் தணித்துக் கொள்ளும் அந்த அம்மா பாத்திரத்தை அன்றும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்றும் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்றாள் அவள்.
கலாச்சார என்பது தமிழர்களுக்கான அடிப்படையான ஒன்றாகும் இந்த கலாச்சாரம் பற்றிய அந்நியமாதலினை சிக்குண்ட சினம் என்ற சிறுகதையின் ஊடாக வெளிப்படுத்துகின்றார் நூல் ஆசிரியர் அது தொடர்பான எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு நோக்குகையிலே
“இப்படிச் செய்றது அநியாயம் எண்டு தமிழ்ப் படங்களிலேயே பிரச்சாரம் பண்றாங்கள். நீங்கள் இங்கை,அதுவும்,கனடாவிலை இருந்து கொண்டு அமளிப்படுத்திறியள். எனக்கு உது ஒண்டும் பிடிக்கேல்லை. உங்கடை பிள்ளைக்கு இப்ப என்ன பன்னிரண்டு வயசு தானே! இங்கத்தைய சாப்பாடு! வெள்ளனவே எல்லாரையும் குந்தவைக்குது என்ன,” இது அம்மாவின் சினேகிதி மாலா.
“ஓம், ஓம்! அதுவும் இந்த நாட்டிலை சொல்ல வேணுமே? ஒருத்தன்ரை கையிலை பிடிச்சுக் குடுக்கும் வரைக்கும் முள்ளிலை நடக்கிற மாதிரித் தான்.”
அவர்கள் கதைக்கிறதைக் கேட்க எனக்கு இன்னும் அருவருப்பாக இருக்குது. என்னில் எந்த நம்பிக்கையும் இல்லாத புலம்பல். “கலாச்சாரம் எண்டு சொல்லிச் சொல்லி இவை திணிக்கிறதுக்கு அளவில்லை. எனக்கு இது எல்லாத் தையும் உடைச்சுக் கொண்டு எப்ப ஓடுவன் எண்டு இருக்கு,” என்கிறேன் நான்.
“அக்கா சொல்லுறா, எங்கடை அம்மாவை வெளி நாடுகளுக்கு வந்து இங்கத்தையக் கலாச்சாரத்தைப் பாத்தவுடன், தங்கடை அழியப் போகுதோ எண்டு பயப் படுகினம். அதாலை தான் வலோக்காரத்துக்கு இது எங்கடை கலாச்சாரம் எண்டு எல்லாத்தையும் தங்களோடை இழுத்து வைச்சுக் கொண்டிருக்கினம் எண்டு. இங்கை இப்ப நடக்கிற மாதிரி அங்கை இவ்வளவு அதிகமாய் சங்கீத, நடன அரங்கேற்றங்களே நடக்கேல் லையாம்,” என விளக்கம் தருகிறாள் ஆர்த்தி.
அதை விட, இங்கை மாதிரி அங்கை எல்லாரிட் டையும் காசும் இருக்கேல்லைத் தானே ! இங்கை காசு உள்ளவை போட்டி போட்டுக் கொண்டு ஒரு ஆளை மற்ற ஆள் மிஞ்சுற விதத்திலை பெரிசா வைக்கினம்.” வெறுப்புடன் சொல்கிறேன் நான்.
இவ்வாறு நோக்குகையிலே அந்நியமாதல் செயல்பாடுகளானது பண்பாடு சார்ந்த ரீதியிலே காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றுத. ஒரு சமூதாயத்திலே பெண்ணுக்கு ஏற்படுகின்ற துன்பங்கள் அதேபோன்று பண்பாட்டு ரீதியாக வருகின்ற கலாச்சார மாற்றங்களையும் தமிழ் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அங்கு இருக்கின்ற பிள்ளைகளுக்கு இடையே மாறுபடுகின்ற தன்மையையும் கற்புநெறி தொடர்பான பல்வேறு விடயங்களையும் பயன்படுத்துகின்ற வகையிலே இவருடைய சிறுகதையானது காணப்படுகின்றது அவதானிக்கலாம்.
குழந்தை வளர்ப்பும் சிக்கல்களும்
குழந்தைகள் தாம் பிறந்து வாழும் பண்பாட்டுச் சூழலுக்கேற்றவாறு நடந்துகொள்ள முற்படுகின்றார்கள். பெற்றோர் தமது தமிழ்ப் பண்பாட்டைத் தமது பிள்ளைகள் பின்பற்றவேண்டுமென்று கருதுகிறார்கள். அந்தப் பண்பாட்டு முரண் குழந்தை வளர்ப்பில் பாரிய சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, முதலாவது தலைமுறையைச் சார்ந்த பெரும்பாலான தமிழர்களின் மனநிலை தமது பண்பாடு அழிந்துவிடும் என்பதேயாகும்.
புகலிடம் தேடி என்ற சிறுகதையிலேயே குழந்தை வளர்பினுடைய சிக்கல்களையும் அங்கு வாழுகின்ற பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான முரண்படையும் எடுத்துக் கூறுவதாக இந்த சிறுகதை காணப்படுகின்றது.
ரீச்சர், “எங்கடை அம்மாவுக்கு எங்களோடை கதைக்க நேரமில்லை,”.
“அம்மா வீட்டுக்கு வந்ததும் சமைப்பா பிறகு எல்லாம் துப்பரவு செய்வா. அதுக்குப் பிறகு ரீவி பாத்து போட்டு படுத்திடுவா. நாங்கள் ,இடைஞ்சல் செய்தால் அவவுக்கு சரியான கோபம் வரும்.” தொடர்ச்சியாக ஆசா சொன்னபோது உண்மையிலேயே என்னால் அதை ஜீரணிக்க முடிவில்லை. என்ன சொல்வது என்றும் புரியவில்லை. இருந்தரலும் காட்டிக் கொள்ளாமல்“சரி, அப்பாவுடன் கதைக்கலாம் தானே,” என்று ஏதோ சொல்வதற்காகச் சொல்லி வைத்தேன்.
ரீச்சர், நாங்கள் அப்பாவை காண்கிறது கூட இல்லை. அவருக்கு இரண்டு வேலை. வீட்டிலை நிக்கேக்கையும் நித்திரை தான் கொள்ளுவார். அல்லாட்டில் சும்மா கத்திக் கொண்டு நிப்பார். எங்கடை குழப்படி எல்லாமாகச் சேத்து அம்மா அவருக்கு சொல்லிட்டால், கையிலை அம்பிடுறதை எடுத்து விளாசுவார். போன கிழமை தம்பிக்கு பெல்ற்றால் நல்ல அடி,” இது நிசாந்-
தாங்கள் சொல்லுறபடி நுடக்காட்டில் ஸ்ரீPலங்காவுக்கோ அல்லது இந்தியாவுக்கோ அனுப்பிவிடுவார்களாம். நாங்கள் எதைக் கதைக்கிறது. பிடிக்குதோ இல்லையோ, அவை சொல்லுறபடி செய்ய வேண்டியது தான்,” இது பிரியங்கா.
அங்கு அம்மா அடித்தால், பாட்டியிடமோ, சித்தியிடமோ, அடைக்கலம் தேடலாம். ஒத்தடம் தரும் அணைப்பைப் பெறலாம். இல்லை எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என் முனைந்தால் கூட வழியில்லை. என்ன தான் செய்ய முடியும்?
சாதிய மேலாதிக்கம்
பண்பாட்டு அடிக்கட்டுமானங்களுள் ஒன்றாக சாதியும் காணப்படுகின்றது. சாதியை முன்னிறுத்தி தம்மை மேலாண்மையுடையவர்களாகக் கட்டமைத்த அதிகாரத்துவச் சமூகம், அதனை இன்னொரு சமூகத்தை ஒடுக்குகின்ற ஆயுதமாகப் பாவிக்கும்போது சாதி சார்ந்த பிரச்சினைகளும் அதனால் அந்நியமாதலும் எழுகின்றன. குறிப்பாக உயர் சாதியெனப்பட்டோர் தமக்கான சாதி நடைமுறைகளைப் பேணுவதைக் கௌரவத்திற்குரியதாக நோக்குகின்றனர். இந்தச் சாதிப்பெருமிதத்தால் உருவாகிய அதிகார மையம் மேலாண்மை பெற்றமையால் அவ்வதிகார மையத்திற்கு புறம்பாக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட மக்கள் பல நிலைகளிலும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சாதிய மேலாதிக்கம் காரணமாக தாழ்ந்த சாதிக்காரர்களை இவ்வாறுதான் வழிநடத்தவேண்டுமென்ற நிலைப்பாடு உயர்சாதியினரிடையே பலமான அதிகார முன்னெடுப்பாகக் காணப்படுகின்றது.
“விடை பெறும் கானல்தடம்” என்ற சிறுகதையிலே சாதிய மேலாதிக்க தன்மை காணப்படுவதனை அவதானிக்கலாம்.
என்னைப் பற்றி நீங்கள் முழுதாக அறிந்து கொள்வது எல்லோருக்கும் நல்லது என நினைக்கிறேன்.
நாங்கள் வெள்ளாளர் பரம்பரை அல்ல. எமது மூதாதையர் விவசாயம் செய்யவில்லை. மீன் பிடித்துத் தான் சீவியம் நடாத்தினார்கள். இதைச் சொல்வதில் எனக்கு எந்த விதமான மனவருத்தமும் இல்லை.
குறிப்பாக இது உங்கள் பெற்றோருக்கும் தெரிவது அவசியம். அத்துடன் நீங்கள் கேட்டது போல் எனது குறிப்பை இத்துடன் அனுப்பி உள்ளேன்.
“அர்ஜுன் அவை எங்கடை ஆட்கள் இல்லையாம்.”
“என்ன பிள்ளை நீ சொல்லுறாய்? உண்மையாகவே, யார் சொன்னது? கடவுள் காக்க, என்ன கதை இது. இஞ்சரப்பா கேட்டியளோ?”
“அம்மா வேறை ஒருத்தரும் சொல்லெல்லை. அர்ஜுன் தான் சொன்னது.”
“அப்ப உனக்கு முதலே தெரியுமே?”
“இல்லை, இப்ப குறிப்பு அனுப்பேக்கை தான் அதையும் எழுதினவர்.”
“என்ன சாதியாம்...என்ன....எதுவோ, இனி என்ன செய்கிறது? குறிப்புப் பொருந்தேல்லை, எண்டு சொல்ல வேண்டியது தான்!”
“அம்மா இவ்வளவு நேரமும் அர்ஜுன் மாப்பிளையாக வாறது எங்கடை பாக்கியம், கடவுள் சித்தம் எண்டெல்லாம் கொண்டாடிப் போட்டு, குறைந்த சாதி என்டதும், நீங்களும் மற்றவை மாதிரி அதே பாரம்பரியக் கதை சொல்லி, உங்களைச் சுற்றி வழமையான வட்டம் போடப் போறியளோ?
“ஊரோடை ஒத்துப் போகவேணும் பிள்ளை, பிறகு நாங்கள் இனசனத்தோடை கொண்டாட வேணுமெல்லே.”
“உங்களுக்கு ஊரைப் பற்றித்தான் கவலை. எங்கடை மனங்களை யோசித்துப் பாத்தியளோ?”
“நீ சொல்ற மாதிரி கண்ட கிண்ட சாதியளோடும் கலக்கிறது நடைமுறை விஷயமில்லை பிள்ளை.”
“அம்மா அர்ஜுன் மனித சாதி. மனிதர்களிடையே மொழி, சாதி, இனம், மதம் எண்டு எத்தனை பாகு பாடுகள்.... எத்தனை பிரிவுகள்..... இந்த வரம்புகள், எல்லைகள், வேலிகள் எல்லாம் பாத்துப் பாத்து நான் களைச்சுப் போனன். ஆசீர்வாதம் வழங்க உங்களுக்கு விருப்பமில்லை எண்டால் தயவு செய்து விலகி நிண்டு வழியை விடுங்கோ”.
நிறவாதம்
சமூகத்தில் ஒருவரை அந்நியப்படுத்தும் காரணிகளுள் நிறமும் ஒன்று. ஒரு தன்மையான நிறக் குழுமமாக ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் சிதறி பல்வேறு நாடுகளில் வாழத்தலைப்பட்டபோது நிறம் சார்ந்த ஒடுக்குதலுக்கும் பேதங்காட்டலுக்கும் உள்ளாக்கப்பட்டனர். வெள்ளையர் கறுப்பர் என்ற சமூகப் பிரிவினையின் கொடூரத்தை முதன்முதலாக உணரத் தொடங்கினர். இவ்வொடுக்குமுறைகளை பாடசாலைகள், தொழில் புரியும் இடங்கள், பேருந்து நிலையங்கள், கடைகள், பொதுவிடங்கள் என அனைத்து நிலைகளிலும் எதிர்கொண்டார்கள். இலங்கையில் தாம் எதிர்நோக்கிய அடக்குமுறைகளை வேறொரு வகையில் புகலிடத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் எதிர்நோக்கினர்.
இது அதே நிலவல்ல என்று சிறுகதையிலே ஸ்ரீரஞ்சனி அவர்கள் நிறவாதம் பற்றி பேசுகின்றார் இந்த சிறுகதை தொகுதியிலே நிறவாதம் பற்றி பேசுவது குறைவாக இருப்பினும் இது அதே நிலவல்ல என்கின்ற சிறுகதையினுடாக நிறவாதத்திணை தொட்டுச் செல்கின்றார் நூல் ஆசிரியர்.
‘சண்டிலிப்பாய்காரர் சொல்லுகினம், பொம்பிளை நிறம் குறைவு எண்டு. மகனுக்குப் பிடிக்கேல்லையாம்’, ‘சாவகச்சேரியார் சீதனம் கொஞ்சம் கூடக் கேட்கினம்’, ‘பருத்தித்துறை மாப்பிளைக்கு ஊரிலை கட்ட விருப்ப.
பொருளாதார அந்நியமாதல்
தனிநபர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்கவோ, பயனடையவோ இயலாத நிலையில் பொருளாதார அமைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டு அந்நியமாக்கப்படுகின்றனர். இப்பொருளாதார அந்நியமாதல் என்பது பரந்த பொருளாதார மற்றும் கட்டமைப்புக் காரணிகளுடன் தனிப்பட்ட அனுபவங்களின் குறுக்குவெட்டைப் பிரதிபலிக்கின்றது.
உழைப்பிலிருந்தும், உற்பத்திப் முதலாளித்துவம் பொருளீட்டல், அதிகாரப் பலம் என்பவற்றை மையப்படுத்தி முதலாளிகளுக்கிடையே போட்டியை உருவாக்கிய அதேவேளை தொழிலாளர்களுக்கிடையேயும் போட்டிகளை உருவாக்கியது. தொழிலாளர்களைத் தமது சுயநலத்திற்காகப் பிரித்தாண்டது. இந்நிலைமை உண்மையான மனிதத் தொடர்புகள் வளர்வதற்குச் சவாலாக அமைந்தது. இது கூட்டுணர்வு சிதைக்கப்படுவதற்கும் ஒருவருக்கொருவர் அந்நியமாகிப்போவதற்கும் காரணமாக அமைந்தது. அத்தோடு நவீன நுகர்வோர் கலாசாரம் பொருட்கள் மற்றும் சேவைகளை மையப்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட அடையாளத்தையும் தனியாள் தன்னிறைவையும் அடையமுடியும் என்ற கருத்தை ஊக்குவிக்கின்றது. இக்கருத்தியல் கூட்டுணர்வைச் சிதைத்து அந்நியப்படுத்தலை வளர்க்கின்றது. இத்தன்மை தனிநபர்களை அவர்களின் உண்மையான சுயத்திலிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் அந்நியப்படுத்துகின்றது.
புலம்பெயர் வாழ்வில் பொருளாதார அந்நியமாதல் என்பது புகலிடத் தமிழர்கள் தமக்கான பொருளாதார வாய்ப்புகள், வளங்கள், நிதி நிலைத்தன்மைகள் சார்ந்து எதிர்கொள்ளும் புறக்கணிப்பு நிலையைச் சுட்டுவதாகவே பெரும்பாலும் அமைகின்றது. வேலைவாய்ப்புக்களைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறிப்பாகத் தொழிலைத் தேடி அலைதல், மிகவும் கடினமான தொழில்களையே செய்யவேண்டியிருத்தல், தொழிலுக்கு ஏற்ற ஊதியத்தைப் பெறமுடியாமை, தொழிலாளர் நலன் மறுக்கப்படுதல், தொழிலாளர் சமத்துவமின்மை, நிதி ஒருங்கிணைப்புக்கான தடைகளை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளில் புகலிடத் தமிழர்கள் சவால்களை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகின்றது. இதனால் புகலிடம் பெற்ற நாடுகளில் தொழில் சார்ந்த அந்நியமாதலைச் சந்தித்தனர்.
நெற்றிவிழி மௌனம் சிறுகதையில் பொருளாதார அந்நியமாதல் பின்வருமாறு காட்டப்படுகின்றது.
நீ உழைச்சு அவளுக்கு சீதனம் தேடுகிறதுக்கிடையிலை உங்கடை இரண்டு பேற்றை வயதும் வட்டுக்கை போயிடும். அப்பாவும் இல்லை,” அம்மாவின் குரல் பிசிறுகிறது.
‘அம்மா என்ரை கனவுகளை, ஆசைகளை கொஞ்சமாவது நினைச்சுப் பாருங்களன்’.
‘சரி, இதை விட்டால் தங்கைச்சிக்கு என்ன வழி செய்வாய் எண்டு சொல்லு பாப்பம். எல்லாரும் காதலிக்கிறது தான் தம்பி. ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு அது ஒத்து வரவேணும் மோனை.’
‘பலிக்கடாவாக்கிறதுக்குத் தானே ஆம்பிளைப் பிள்ளைகளை பெறுகிறனீங்கள்,’ கோபத்துடன் வெளியேறுகிறேன். அன்றிலிருந்து தினமும் அம்மா முகத்தை நீட்டி வைச்சுக் கொண்டு கண்ணீர் வடிக்கிறா. தங்கைச்சியும் மனம் விட்டுக் கதைகிறாளில்லை.
தேவகியைப் போய் சந்திக்கிறேன். நிலைமையை விளக்குகிறேன். ‘உங்கடை வீட்டிலை கொஞ்சமாவது சீதனம் தருவினமோ?’ பரிதாபமாய்க் கேட்கிறன். அவள் என்னைக் கோவித்துத் திட்டியிருந்தாலாவது தாங்கியி ருப்பன். ‘உங்கடை ஒரு தங்கைச்சிக்கு சீதனம் தேடுறது கஷ்டம் என்றால், நாங்கள் மூண்டு பொம்பிளைப் பிள்ளைகள் இருக்கிற சூழல் எப்படிருக்கும்? சொல்லுங்கோ பாப்பம்,’ திரும்ப என்னைக் கேட்கிறாள். முடிவில் என்னிலை சுயபச்சாதாபமும், வாழ்க்கையிலை வெறுப்பும், என் உறவுகளிலை கோபமும் வந்ததுதான் மிச்சம்.
எரிமனம் சிவந்து என்ற சிறுகதையில் பகல் வகுப்புக்கு ஆட்கள் காணாது. இரவு வர இயலாதெண்டால் சனி ஞாயிறு நடக்கும் பகல் வகுப்புக்கு வரலாம் தானே.”
“நான் முதலிலேயே தெளிவாகச் சொன்னனான். எனக்கு வார நாட்களிலை நடக்கிற பகல் வகுப்புக் களுக்குத் தான் வர ஏலும் எண்டு.” எனக்கு குரல் தழுதழுக்கிறது.
“பொதுவா இங்கே பகல் வகுப்பு நடக்கிறேல்லை. எங்களுக்கு முழு நேர ஊழியர்களை வைத்திருக்கக் கட்டாது. போன இரண்டு கிழமையும் அந்த ஆசிரியர் தன்ரை வேலைக்கு லீவு போட்டு விட்டுத்தான் வந்தவர்.”
எனக்கு அவர்களின் நடைமுறையில் மிகுந்த கோபம் வந்தது. என்னை நம்ப வைத்து ஏமாற்றிப் போட்டு அதற்கு எந்த விதத்திலும் வருத்தம் காட்டாமல் கதைத்ததைப் பார்க்க எரிச்சலாக இருந்தது.
“அது உங்கடை பிரச்சனை. ஆனால் நீங்கள் சொன்னதைச் செய்ய வேணும். இப்படித் தெரிந்தி ருந்தால் நான் இங்கை படிக்க வந்திருக்க மாட்டன்.”
சொல்லும் போது மனம் படபடக்கிறது. அந்த நேரம் அங்கே வந்த கவுன்சிலர், ‘என்ன பிரச்சனை’ என்று கேட்டுப் போட்டு, “சரி.... வாறகிழமை வாங்கோ, பாப்பம், பகல் வகுப்பு நடத்த முயற்சி செய்கிறம்,” என்கிறார்.
இருத்தலியல் அந்நியமாதல்
தனிநபர்கள் தமது தாயகத்திலிருந்து ஒரு புதிய நாட்டிற்கு அகதியாகச் சென்ற நிலையில் அவர்கள் அனுபவிக்கும் துன்பம் மற்றும் பிரிவினையின் ஆழமான உணர்வை எடுத்துக்கூறுவது இருத்தலியல் அந்நியமாதலாகும். புலம்பெயர்தல் மற்றும் அதனோடு தொடர்புடைய மறுசீரமைப்பிலிருந்து எழும் அடையாளம், சொந்தம், உடைமை ஆகியவற்றின் சவால்களில் வேரூன்றிய ஆழமான இருத்தலியல் நெருக்கடியை இது பிரதிபலிக்கின்றது. புலம்பெயர்ந்தவர்கள் தமது கடந்த கால வாழ்நிலை, தற்போதைய வாழ்நிலை என்பவற்றை நினைத்துப் பார்க்கையில் ஆழ்ந்த பின்னோக்கு நினைவுக்கு அதாவது கடந்தகால நினைவுகளுக்குச் சென்று அவை இழந்துவிட்டதாகக் கருதும் தன்மை ஏற்படுகின்றது.
ஒரு நாட்டிலிருந்து அல்லது ஒரு சமூகக் குழுவிலிருந்து வேறாக்கப்பட்ட அந்நியத்தன்மையே அகதி நிலையெனலாம். இனமுரண்பாட்டுச் சூழல் காரணமாக ஈழத்திலும் புகலிட நாடுகளிலும் தமிழர்கள் பெருந்தொகையில் அகதியாகி அலைந்துழல்வுக்குட்பட்டனர். தாய்நாட்டுப் பிரிவும் புகலிட நாடுகளில் அகதி நிலையில் எதிர்கொண்ட சிக்கல்களும்,புறக்கணிப்புக்களும் தாம் இந்த மனித சமூகத்திலிருந்து வேறாக்கப்பட்டவர்கள் என்ற மனநிலைக்குத் தமிழர்களை உட்படுத்தின. பிறந்த நாட்டில் வாழும் உரிமை மறுக்கப்பட்டவர்களாக வாழ்விடம் தேடிச் சென்ற சூழலில் அந்நாடுகளும் தம்மை ஒதுக்குவதை உணர்ந்தார்கள் இந்நிலைப்பாடு புகலிடத் தமிழர்களுக்கு மிகுந்த வேதனையினையும் அந்நியமாதல் தன்மையினையும் ஏற்படுத்துவதாக அமைந்தது.
எடுத்துக்காட்டாக நேற்றுக் காணாமல் போன சோபனாவின் முகம் எங்கும் நிழலாடி மனதில் ஒரு இனம் புரியாத படபடப்பைத் தருகிறது. நாம் கனடாவுக்கு புதிதாக வந்தபோது எங்களது அயலவர்கள் அவர்கள். பின்பு நாமும் அவர்களும் வேறு வேறு திசைகளில் இடம் மாறி விட்டதால் எங்காவது விழாக்களில் தான் காண்பதுண்டு.
“வாய் நிறைய சிரிப்பும், மனம் பூரா மகிழ்வும் தாங்கி கனடாவுக்கு சுரேனிடம் போக, அன்று இதே விமான நிலையத்தில் நின்றது, இன்று போல என் மனதில் இன்னும் பசுமையாகப் பதிந்திருக்கிறது. நான்கு வருடத்துக்குள் அத்தனையும் இழந்து, அம்மாவைத் தஞ்சம் தேடி, சொந்த நாட்டுக்குள் ‘விசிற்றர்’ என்ற பெயருடன் உள்நுழையும் அந்த நிலைப்பாடு தந்த மன நெருடலில், என் கண்கள் பனிக்கின்றன”.
துயரமான நினைவுகள் நிறைந்த கனடா வாழ்வை விட்டு இலங்கைக்கு நிரந்தரமாக ஓடி விட முடிவெடுத்தேன். ஆனால் அம்மாவிடம் வந்த பின் நான் ஆசைப்பட்ட அத்தனையும் இயலுமான வரை செய்து, எங்களின் சுகமே தன் சுகமாக, அதில் நிறைவு கண்ட அம்மாவுக்கு, என் சோகம் எவ்வளவு பாதிப்பைக் கொடுக்கிறது எனப் புரிகிறது.
பலவருட கால யுத்தத்தின் இழப்புக்களையும் தாக்கங்களையும் மேவிய அதிர்ச்சி, பீதி, பதற்றம் என பலவகை உணர்ச்சிகளையும் கண் இமைக்கும் நொடிப் பொழுதில் நடந்த இந்த இயற்தையின் கொடூரம் எங்கும் விதைத்திருந்தது...
அன்று ஒரு சனிக்கிழமை, பனி கொட்டிக் கொண்டேயிருந்தது. கனடாவின் அத்தனை பருவ கால மாற்றங்களும் அழகுதான். ஒவ்வொரு பருவமும் மாறும் போது அந்த மாற்றங்களை அப்பத்தான் புதிதாகப் பார்ப்பது போல் ஒரு புத்துணர்வை, மிகவும் ரம்மிய உணர்வைத் தர அவை என்றுமே தவறுவதில்லை.
இது எங்கடை பாரம்பரியம், அதைக் காப்பாற்றுவது எங்கடை கடமை’ என்று சொல்லாமல் சொல்லும் சிலரின் ‘பொம்பிளை நிறம் காணாது’, ‘சீதனம் கொஞ்சம் கூட வேணும்’ என்ற இழுவைகள் அவவை நிறையவே குழப்பி இருந்தது. அதனால் புதுத் தொழில் நுட்பத்தின் அனுகூலத்தை நாடி வந்திருக்கின்றா அவ.
வீட்டுக்குள் நுழைந்ததும், “வீடு மிகச் சுத்தமாக, கலை நயத்துடன் அழகாக இருக்கிறது,” என்கிறேன். “எல்லாம் அம்மாவைப் பார்த்துப் பழகியது தான்,” என்கிறாள் மது. கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள், என் பயணத் திட்டங்கள், அவர்களின் புகலிடப்பதிவுகள் என்று சுவாரஸ்யமாய்க் கதைத்துக் கொள்கிறோம். பல தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறோம்.
தொண்ணூறுகளில் ஒரு கொஞ்சநாள் அகதி முகாமில் வாழ்ந்த வாழ்வே சாகும் வரை மறவாத நினைவுத் தடங்களை எங்கள் மனதில் பதித்து விட்டது என்றால் மாதக் கணக்கில் அகதி முகாங்களில் அதுவும் குழந்தைகளுடன் இருக்கும் மக்களின் கதி எப்படி யிருக்கும், இதற்கெல்லாம் எது தீர்வு, அது எப்போ வரப்போகிறது என்ற தொடர் நினைவுகளில் மனது மிக வலித்தது.
நாட்டை விட்டு வெளியேற வசதியும் வழியும் இல்லாததால் தம்மைப் பலியாக்க வேண்டிய விதி அவர்களுக்கு என்ற உண்மை இதயத்தை கிழித்தது. நாங்கள் இங்கே, வெளிநாடுகளில் எந்தவித பயப் பிராந்தியும் இல்லாத சூழலில் இருந்து கொண்டு எமது உரிமை தான் முக்கியம் என்கிறோம்.
ஆனால் அங்கு இருப்பவர்கள், தினமும் சாவா, வாழ்வா என்று போராடிக் கொண்டிருப்பவர்கள் அப்படி இன்னும் நினைப்பார்களா அல்லது ஏதோ சாப்பிட்டோம், தூங்கினோம் என்று நிம்மதியா யிருந்தால் போதும் என நினைப்பார்களா என இடையில் மனதினுள் ஒரு விசாரணையும் வந்தது.
அப்படியாயின் இவ்வளவு கால அழிவுக்கும் இழப்புக்கும் என்ன பொருள், ‘எதிரி’, ‘எதிரி’ என்று தமிழனைத் தமிழனும், தமிழனைச் சிங்களவனும், சிங்களவனைத் தமிழனும் கொன்று தீர்க்கும் கொடுமை எப்போ முடியப் போகிறது நினைக்க நினைக்க சுமை அதிகமானது.
வீட்டுக்குப் போனதும் கணவர் கோப்பி போடச் சொல்கிறார். கேத்தலை ஓன் பண்ணி விட்டு, உடுப்பு மாத்தப் போனபோது தொலைபேசியில் செய்தி இருக்கிறது என்பதைக் காட்டும் லைற் விட்டு விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அழைத்தது யாராயிருக்கும் என்று பார்த்த போது லண்டனிலிருந்தும், இலங்கையிலிருந்தும் அழைப்புக்கள் வந்திருப்பதை தொலைபேசியில் பதிந்துள்ள இலக்கங்கள் சொல்கின்றன. மனதில் மேலும் படபடப்பும் விசனமும் அதிகமாக என்ன செய்தி என்று பார்க்கிறேன.
“நான் லண்டனிலிருந்து வினோ மச்சாள் கதைக்கிறன்.விமலாவுக்கு திடீரெனக் கண் தெரியாமல் போச்சுதாம். நாளைக்கு காலைமை கட்டாயம் ஒப்பரேசன் செய்யவேணும் என்று டொக்டர் சொல்லியி ருக்கிறாராம். வீட்டிலை உன்னைக் காணேல்லை எண்டு எனக்கும் எடுத்துச் சொல்லியிருக்கினம். உடனடியாக அவைக்கு போன் எடு.”
உன்ரை கொக்காவுக்கு பார்வையிலை பெரிய பிசகு வந்திட்டுது பிள்ளை. நாளைக்கு கொண்டு வந்து ஆஸ்பத்திரியிலை விடச்சொல்லி டாக்குத்தர் சொன்னவராம். அது காசாஸ்பத்திரி. அதைப் பற்றி உன்னோடை கதைக்க உடனை எங்கடை வீட்டை ஒருக்கா போன் பண்ணு.” நேரத்தைப் பார்க்கிறேன், லண்டனிலை சாமம். யாழ்ப்பாணத்திலை காலமை எட்டு மணி. அவசரமாக யாழ்ப்பாணத்துக்கு கோல் பண்ணுகிறன். ஆனால் மறு முனையில் பதில் அளிக்க எவரும் இல்லை. அக்காவை அட்மிற் பண்ணியிருப் பார்கள். மற்றவர்களும் தமது வேலைகளுக்குப் போயிருப்பார்கள் எனப் புரிந்தது. அக்கா ஒப்பரேசனுக்குப் போக முன் அவவுக்கு அனுசரணையாக இருக்க முடியவில்லையே, அவவுக்கு மனவுறுதி கொடுக்கக் கூடியதாய் இரண்டு வார்த்தைகள் அவ்வுடன் கதைக்க முடிய வில்லையே என்பதில் மனம் மிக நொந்தது. நாட்டு நிலைமைக்கான எனது பங்களிப்பைச் செய்யப் போனதில், வீட்டுக்கான பங்களிப்பைச் செய்ய முடிய வில்லையே என்ற ஆதங்கத்தில் மனமும், உடலும் அடித்துப் போட்ட மாதிரி இருந்தது.
அக்கா பாவம். அனுராதபுரத்தில் வேலை செய்த அத்தான் 83 கலவரத்தில், சிங்களக் காடையர்களின் இனவாதத்துக்குப் பலியான போது, அவரின்ரை சடலத்தைக் கூட காணக் கிடைக்காத துர்ப்பாக்கியவதி அவள். தனது மூன்று வருடத் திருமண வாழ்வு முகாரியில் முடிந்து போக, தன் வாழ்க்கையை எங்களுக்காக என முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவள்.
இலங்கை அரசாங்கத்தின் ‘தரப்படுத்தல்’ என் பல்கலைக்கழகக் கதவை மூடி விட, திருமணக் கதவு திறந்து, கனடாவில் எனக்கு வாழ்வமைத்துத் தந்த நாள் முதல், மனநலம் குன்றிய தம்பியையும், வயது போன அம்மாவையும் அக்கா தான் இந்த இருபது வருட காலமா பராமரிக்கிறா.
விழ்ந்த பிறகு தான் என்னவும் சொல்லலாம் வலு கவனமாய்ப் பாக்க வேணுமாம். ஏதாவது தொற்றுதல் வந்தால் தான், எல்லாம் பிழைக்கிறதாம். வீட்டை வந்தாப் பிறகும், நாளுக்கு மூண்டு தரம் கண்ணுக்கு மருந்து விடவேணுமாம். உதுகளை யோசித்துத்தான் கொக்கா கண்ணை டாக்குத்தர்மாருக்கு காட்டாமல் இருந்திருக்கிறா. எங்கடை வீட்டிலையும் எல்லாரும் பள்ளிக்கூடமும் வேலையும் எண்டு அவரவர் பாடு. எனக்கும் கண்பார்வை அப்படி இப்படித் தானே! யாரைக் கொக்காவுக்கு பொறுப்பாக இருக்கக் கேட்கலாம் எண்டு தான் யோசிக்கிறன்.”
“நாளைக்கு ரிக்கற் கிடைத்தால் நாளை மறுதினம் உங்கை நிற்பன். ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம் எண்டு அக்காவுக்குச் சொல்லுங்கோ. அதுவரைக்கும் ஒரு ஆளை அவவுக்கு ஒழுங்கு பண்ணித் தந்தியள் எண்டால் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். எவ்வளவு காசு செலவழிஞ்சாலும் பரவாயில்லை,” சொல்லச் சொல்ல குரல் உடைந்து பலத்து அழுகிறேன்
திடீரென என் மனதில் உதித்த முடிவை மாமாவுக்கு சொல்லி முடித்தவுடன் மனதில் கொஞ்சம் அமைதி வந்தது. படுக்கப் பிடிக்கவில்லை. கீழே போய் கொஞ்ச நாளைக்கு காணக் கூடியதாய் பிட்டு மாவும் குழைத்து வைத்துப் போட்டு, சில கறிகளையும் செய்து முடிக்க, இவர் எழும்பி வருகிறார்.
“என்ன மாதிரி, யாரோடும் கதைத்தனியோ?” என்கிறார். “ஓம், கொஞ்ச நேரத்துக்கு முந்தித்தான் ரத்தினம் மாமாவோடை கதைத்தனான். உங்களுக்கும் தெரியும் தானே! அங்கை உதவிக்கு ஆருமில்லை. அதாலை நான் அங்கை வாறன் எண்டு அவரிட்டை சொல்லியிட்டன்.
அக்கா தேறும் வரை நான் அங்கை போய் நிற்கப்போறன். அக்காவின்ரை பார்வைக்கு ஊறு ஏதும் வரக்கூடாது எண்டு நீங்களும் கடவுளைக் கேளுங்கோ.”
“நாங்கள் எப்படி உன்னைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்கிறது. உலகமெல்லாம் போராட்டம் நடக்குது. வன்னியிலே நடந்த போரின்ரை உக்கிரம் இன்னும் தணியேல்லை. கொழும்பிலை இறங்கி ஊர் போய்ச் சேந்து திரும்பி வாறது நடக்கக்கூடிய விஷயமாய் எனக்குத் தெரியல்லை.”
“பிரச்சனை, பிரச்சனை எண்டு பயந்து கொண்டு கடமையைச் செய்யாமலிருக்க முடியாது. தயவு செய்து என்ரை நிலைமை விளங்கிக் கொள்ளுங்கோ, பிள்ளைகளும் அதை விளங்கிக் கொள்ள உதவி செய்யுங்கோ. நாட்டுக்காக, மொழிக்காக, உரிமைக்காக எண்டு எத்தனை பேர் எவ்வளவோ தியாகங்களைச் செய்யும் போது, என் வீட்டுக்காக நான் இதைக் கூடச் செய்யா விட்டால், என்னை நானே மன்னிக்க முடியாது,” என்று உறுதியாக, முடிவாக கணவரிடம் சொல்லிவிட்டு ஊருக்குப் போவதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்குகிறேன்.
தொகுப்புரை
ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற வேளையிலே நான் நிழலானால் என்கின்ற சிறுகதைத்தொகுதியானது அந்நியமாதல் நாட்டிலே நடைபெறுகின்ற ஒட்டுமொத்த அந்நியமாதல் செயற்பாடுகளில் ஒரு தொகுதியாக அமைவதுதான் நான் நிழலானால் என்ற சிறுகதைத்தொகுதி ஆகும். கனடாவில் வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்களினுடைய இன்னல்களை எடுத்துக்காட்டுவதாகவும் அங்கு வாழுகின்ற மக்கள் எவ்வாறான சிக்கல்களை எதிர்கொள்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அமைவது இந்த சிறுகதைத்தொகுதியினுடைய பிரதான கருப்பொருளாக அமைகின்றது.
இலக்கியம் என்பது கலாபூர்வமாக எழுதப்படுவதாயினும் அது சமூக மாற்றத்தை, சமூக வரலாற்றை ஆவணப்படுத்தும் பதிவாகவும் அமைகிறது. ஈழத்துத் தமிழிலக்கியத்தின் ஒரு புலமாக வளர்ச்சிபெற்றுள்ள ஈழத்துப் புகலிடத் தமிழ் இலக்கியங்கள் ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு வாழ்வியலை வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் ஆவணமாக உள்ளது. அதேவேளை அவை ஈழத்து வாழ்வியலிலிருந்து வேரோடு பிடுங்கப்பட்ட துயரத்தினையும் புகலிட நாட்டு அரசியல், சமூக, பண்பாட்டுச் சூழல்களால் எதிர்கொண்ட எதிர்கொள்கின்ற சிக்கல்களையும் இவை காரணமாக அந்நியமாதல் நிலைமையைச் சந்திப்பதையும் மிகத் தெளிவாகப் புலப்படுத்தி நிற்கின்றன.
புகலிடத் தமிழ் இலக்கியங்களை ஆராய்கின்றபோது அவற்றில் அந்நியமாதல் சிந்தனை மேலோங்கியிருப்பதைக் காணமுடிகின்றது. அவ்விதத்தில் அந்நியமாதல் கருத்துநிலையை உள்வாங்கியதும் தனித்துவமானதுமான ஒரு கோட்பாட்டைத் தமிழ்ச் சூழலில் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திநிற்கின்றது. இவ்வாய்வு.
உசாத்துணைப் பட்டியல்
ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா. (2010). நான் நிழலானால், சென்னை:சித்தன் கலைக்கூடம்.
ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா “நான் நிழலானால்”, ஞானம், நவம்பர் (2008)
ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா “நெருடல்”, ஞானம், நவம்பர் (2008)
ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா” விடைபெறும் கானல்தடம்”, மல்லிகை (44ஆவது) ஆண்டு மலர் ஜனவரி 2(009)
ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா “எரிமனம் சிவந்தது”, மல்லிகை மே (2009)
ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா “வலி”, உதயம், மே (2009)
ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா “நெற்றிவிழி மௌனம்”, வல்லினம், ஜனவரி 2010
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.