கறுப்பு ஜூலையில் நடைபெற்ற வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையில் இரண்டாவது தடவையாகத் தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் ஜூலை 27. இன்றுதான் மருத்துவர் இராஜசுந்தரம் படுகொலை செய்யப்பட்டார். இத்தருணத்தில் அவருடன் பழகிய நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். குறுகிய காலமே பழகியிருந்தாலும் என்மீது மறக்க முடியாத தடங்களை பதித்த இலட்சிய புருசர் அவர். அவருடன் ஜீப்பில் நாவலர் பண்ணைக்குச் செல்கையில், அவரது இருப்பிடத்தில் , இறம்பைக்குள அநாதைகள் விடுதியில் நடந்த 'தமிழீழமும், சமயமும்' கருத்தரங்கில் உரையாடிய தருணங்களை நினைத்துப் பார்க்கின்றேன். அவரோர் இலட்சிய புருசர். அயராது அகதிகளின் புனர்வாழ்வுக்காக உழைத்தவர்.
மருத்துவர் இராஜசுந்தரம் 23.03.1943 சோமசுந்தரம் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப்பிறந்தவர். பெற்றோர் ஆசிரியர்கள். இவர் ஆரம்பத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் படித்திருக்கின்றார். அப்பொழுது இளம் விவசாயிகள் சங்கத்தின் செயலாளராகவிருந்திருக்கின்றார். பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்றார். அப்பொழுது சாரணர் படைத்தலைவராகவிருந்திருக்கின்றார். 1963இல் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் ஒரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் (ஆர்.எம்.பி). மனைவி சாந்தி காராளசிங்கம் மருத்துவர் (எம்.பி.பி.எஸ்). இவர் தனது மருத்துவக் கல்வி முடிந்ததும் லுனுகல, புசல்லாவ ஆகிய இடங்களிலுள்ள மருத்துவ நிலையங்களில் பணியாற்றினார். தோட்டத்தொழிலாளர்களின் உடலாரோக்கியத்தைப் பேணுவதில் கவனம் செலுத்தினார். அக்காலகட்டத்தில் இந்தியத் தொழிலாளர் பேரவையில் அங்கத்தினராகவும் விளங்கியிருக்கின்றார். காந்தியம் அமைப்பில் இணைந்து பணியாற்றுவதற்கு முன்னரே அவர் மலையக மக்களுடன் இணைந்து பணிபுரிந்து வாழ்ந்திருக்கின்றார், அவர்கள்தம் நல்வாழ்வில் அக்கறை காட்டியுள்ளார் என்பதை அறிய முடிகின்றது.
கட்டடக்கலைஞரும், நகர அமைப்பு வல்லுநருமான எஸ்.ஏ.டேவிட் (டேவிட் ஐயா) உருவாக்கிய காந்தியம் அமைப்பு செயலுருவாக்கம் பெற்றபோது அதில் இவருமிணைந்திருந்தார். காந்திய அமைப்பின் முக்கிய நோக்கங்கள் பின்தங்கிய தமிழ் மக்களை வறுமை, அறியாமை மற்றும் நோய் ஆகிவற்றிலிருந்து காப்பாற்றுவதுதாம். 77 இனக்கலவரத்தைத் தொடர்ந்து இடம் பெயர்ந்த சுமார் 40, 000 பேருக்குக் காந்தியம் நிவாரணம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளித்துள்ளதென்றால் அது பிரமிப்பைத்தருகின்றது. ஆனால் அதற்குக் காரணம் காந்தியத்தின் பொதுச் செயலாளராக அயராது இயங்கிய இராஜசுந்தரம் அவர்கள்தாம். மலையகத்திலிருந்து பாதிக்கப்பட்டு வந்த மலையக மக்களை வரவேற்று, அவர்களுக்கு இருக்க நிலம் கொடுத்து, நிலைக்க வசதிகள் செய்துகொடுத்த காந்தியம் அமைப்பின் பணி வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நற்பணி.
எண்பத்து மூன்றில் அவரும் , டேவிட ஐயாவும் இலங்கை அரசபடைகளால் கைது செய்யப்பட்டபோது அவர்கள் மீது சாட்டப்பெற்ற குற்றச்சாட்டுகள்:
1. தமிழிழ மக்கள் விடுதலைக்கழகத்தின் சந்ததியாருடன் சந்தித்தது. அது பற்றிப் பொலிசுக்கு அறிவிக்காதது.
2. தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத் தலைவர் உமாமகேசுவரனுன் சந்தித்தது. அது பற்றிப் பொலிசுக்கு அறிவிக்காதது.
3. உமாமகேசுவரன், சந்ததியார் ஆகியோர் இந்தியா தப்பிச் செல்ல உதவியது.
- மருத்துவர் இராஜசுந்தரம், டேவிட் ஐயா & சந்ததியார் -
இக்குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டு , அவற்றுக்காக ஆயுட்காலச் சிறைத்தண்டனை பெற்று .வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்தவர்கள். அவர் வெலிக்கடைச்சிறைச்சாலையின் இளைஞர் பகுதியில் அடைக்கப்பட்டு இருந்தபோது சுமார் நாற்பது பேர்வரையிலான ஆயுததாரிகள் வந்து கதவை உடைத்திருக்கின்றார்கள். அப்பொழுது அவர்களிடம் சென்று உரையாடியவேளையில் வெளியில் இழுக்கப்பட்டு, இரும்பாயுதமொன்றால் தலையிலடிக்கப்பட்டுக்கொல்லப்பட்டார். மருத்துவர் இராஜசுந்தரத்தின் பணியும், வாழ்வும் மறக்கப்பட முடியாதவை. இலங்கைத்தமிழர் விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கியமான தடங்கள் அவை. வெலிக்கடைச்சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ்க் கைதிகள் அனைவரையும் இந்நாளில் நினைவிலிருத்துவோம்.
மேலதிகத் தகவல்களுக்கு:
1. The Gandhiyam By Rajan Hoole – https://www.colombotelegraph.com/index.php/the-gandhiyam/
2. https://en.wikipedia.org/wiki/Rajasundaram
3. Detention, Torture and Murder" by S.A.David, B.A. (Architecture) Melbourne, Diploma in Town Planning (Leeds, UK) -
https://tamilnation.org/indictment/genocide83/gen10.htm
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.