இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு எழுத்தாளர் ஒருவரின் பங்களிப்பு மகத்தானது மட்டுமல்ல பிரமிக்க வைப்பதும் கூட. இவரது எழுத்துலகப் பங்களிப்பும் முக்கியமானது என்றபோதும் பிரமிக்க வைப்பது இவர் இலக்கிய உலகுக்கு ஆற்றிய இன்னுமொரு முக்கியமான பங்களிப்புத்தான். இவர் முற்போக்கு இலக்கியத்தைத் தன் பாதையாக ஏற்றுக்கொண்டதுடன் , செயற்பட்டவரும் கூட, சுயமாக வாசித்துத் தன் எழுத்தாற்றலை, ஞானத்தினை வளர்த்துக்கொண்டவர். இவர் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தைச் சேர்ந்தவராகவிருந்தபோதும்கூட சகல பிரிவு எழுத்தாளர்களுக்கும் களமமைத்துக்கொடுத்தார். நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் உருவாக, வளர அவர் அமைத்துக்கொடுத்த களம் உதவியது. அதுதான் அவரது மிக முக்கியமான இலக்கியப்பங்களிப்பு. அவர்தான் எழுத்தாளரும், மல்லிகை சஞ்சிகை ஆசிரியருமான டொமினிக் ஜீவா.
ஓவ்வொரு தடவை மல்லிகை இதழ்களைப் புரட்டும்போதும் ஏற்படும் பிரமிப்புக்கு அளவில்லை. முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் அவர் இருந்தாலும், மல்லிகையில் அனைவருமே எழுதினார்கள். எழுத்தாளர் எஸ்.பொ. ஒருவரின் படைப்புகளைத் தவிர ஏனைய பல்வேறு இலக்கியக் குழுக்களைச் சார்ந்தவர்களின் படைப்புகளையெல்லாம் மல்லிகையில் காணலாம். எழுத்தாளர் மு.தளையசிங்கம் எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் சு.வில்வரத்தினம் எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் மு.பொன்னம்பலம் எழுதியிருக்கின்றார். கவிஞர் கந்தவனம் எழுதியிருக்கின்றார். கலாநிதி க.கைலாசபதி எழுதியிருக்கின்றார். அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதியிருக்கின்றார். ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கெல்லாம் மல்லிகையில் இடம் கிடைத்திருக்கின்றது. கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன், வடகோவை வரதராஜன், தாமரைச்செல்வி , கே.எஸ்.சுதாகர் என்று அன்று இளையவர்களாகவிருந்த பலர் எழுதியிருக்கின்றார்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.