ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டக்காலத்தில் அமைப்புகளின் உள் முரண்பாடுகள், புற முரண்பாடுகள் பலரை பலி வாங்கியுள்ளன. இலங்கை அரசுக்கும், போராட்ட அமைப்புகளுக்குமிடையிலான மோதல்கள் பலரைப் பலியாக்கியிருக்கின்றது. போராட்டம் காரணமாக அமைப்புகளினால் பல்வேறு அரசியல் காரணங்களினால் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் எனப்பலர் பலியாகியுள்ளனர். அவர்களின் இழப்புகள் ஈடு செய்யப்பட முடியாதவை. அவர்களில் ஒருவர்தான் எழுத்தாளர் காவலூர் எஸ்.ஜெகநாதன். எனக்குக் காவலூர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் இவர்தான். காவலூருக்கு இவரைப்போல் பெருமை சேர்த்தவர் வேறொருவர் இலர். அவ்வளவுக்குப் பத்திரிகை, சஞ்சிகைகள், வானொலியிலெல்லாம் காவலூரின் பெயரை ஒலிக்க வைத்தவர் இவர். அண்மையில் நூலகம் தளத்தில் பழைய மல்லிகை போன்ற சஞ்சிகைகள், பத்திரிகைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது எங்கு தேடினாலும் என் கண் முன்னாள் வந்து நிற்கும் எழுத்தாளராக விளங்கியவர் இவரே. அவ்வளவுக்கு அவர் தீவிரமாக எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருந்தார். மல்லிகை, வீரகேசரி, சுடர் என்று அவரது படைப்புகள் வெளிவராத பத்திரிகை, சஞ்சிகைகளே இல்லையெனலாம்.
இலங்கையில் பட்டம் பெற்று நல்ல பணியில் இருந்தவர் 83 ஜூலைக்கலவரத்தைத்தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாகத் தமிழகம் சென்றார். தன் குடும்பத்தாரைப் பாதுகாப்பாக அங்கு தங்க வைத்துவிட்டு அடிக்கடி இலங்கை வந்து போய்க்கொண்டிருந்தார். அவ்விதமானதொரு சூழலில் திடீரெனக் கடத்தப்பட்டுக் காணாமல் போனார். பின்னர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. அவர் கொல்லப்பட்டது பற்றிப் பலவிதமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இத்தகவல்களை காவலூர் ஜெகநதன் பற்றிய என் முகநூல் பதிவொன்றின்போது எதிர்வினையாற்றிய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களினால் பதிவு செய்யப்பட்டன. அவர் அமைப்பொன்றினால் கடத்தப்பட்டு இன்னுமோர் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், பின்னர் அவ்வமைப்பினால் கொல்லப்பட்டதாகவும் அத்தகவல்கள் கூறின. அதற்கு அவரைக் கைது செய்த அமைப்பின் தலைவர் கூறிய காரணம் அவர் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதுதான். அப்பதிவுக்கு எதிர்வினையாற்றியிருந்த காவலூர் ஜெகநாதனின் சகோதரரான எழுத்தாளர் எஸ்.எஸ்.குகநாதன் அக்காலகட்டத்தில் தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கை எழுத்தாளர் ஒருவர் காவலூர் ஜெகநாதன் தமிழகத்தில் குறுகிய காலத்தில் அடைந்த செல்வாக்கினைக்கண்டு பொறுக்க மாட்டாமல் அவர் மேல் அவ்விதமானதொரு பழியைப்போட்டதாகவும், அதன் காரணமாகவே அவரது நண்பரான அமைப்பின் தலைவர் அவரைக் கைது செய்ததாகவும் தன் கருத்தினைப் பதிவு செய்திருந்தார். ஆனால் இன்று அவரைக் கைது செய்த அமைப்பின் தலைவரும் இல்லை. கொன்ற அமைப்பின் தலைவரும் இல்லை. ஆனால் காவலூர் ஜெகநாதன் உயிருடன் இல்லாவிடினும் அவர் படைப்புகளூடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இனியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்துகொண்டுதானிருப்பார். அவ்வளவுக்கு அவர் படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்திருக்கின்றன. அப்படைப்புகள் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகளினூடு , அவர் வெளியிட்ட படைப்புகளூடு அவர் வாழ்ந்துகொண்டிருப்பார்.
காவலூர் ஜெகநாதனைப்பற்றி கூகுளில் தேடிப்பார்த்தேன். இருந்தவரை அயராது, தளராது எழுதிக்கொண்டிருந்தவரைப்பற்றிய போதிய விபரங்கள் கிடைக்கவில்லை. படைப்புகளைப்பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. புகைப்படமும் கிடைக்கவில்லை. அவர் இருந்தவரை மக்களுக்காக எழுதிக்குவித்தார். ஈழநாடு வாரமலரில் இளையவர்களை நேர்காணல் செய்து அறிமுகப்படுத்தினார். அதற்காக என்னுடனும் தொடர்பு கொண்டபோது அன்றிருந்த சூழலில் என்னால் நேரில் சந்திக்க முடியாமலிருந்த காரணத்தினால் கேள்விகளை அனுப்பும்படி கூறினேன். அனுப்பியிருந்தார். பதில்களை அனுப்பியிருந்தார். எனது புகைப்படத்தினை 'புளக்' செய்து ஈழநாடு பத்திரிகை நிறுவனத்துக்கு அனுப்பும்படி கூறினார். நான் அனுப்பவில்லை. அதனால் அந்நேர்காணல் வெளியாகியிருக்காதென்று நினைக்கின்றேன். இளையவர்களின் சிறுகதைகளைத்தொகுத்து வெளியிட்டார்.
கலாவல்லி ஆசிரியரான கலா.குமரிநாதன் வெளியிட்ட 'அறுவடை'என்னும் சிறு பிரசுரம் நூலகம் தளத்திலுள்ளது. எழுத்தாளர் கலா. குமரிநாதன் தொகுத்த காவலூர் எஸ்.ஜெகநாதனின் அபுனைவுகள் சிலவற்றின் தொகுப்பிது. . இவரைப்பற்றிய ஏனைய எழுத்தாளர்களின் குறிப்புகள் சிலவும் இடம்பெற்றுள்ளன. இப்பிரசுரத்தில் காவலூர் எஸ்.ஜெகநாதனைப்பற்றிய பல தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு தர விரும்புகின்றேன். 'அறுவடை'யினை வாசிக்க: http://noolaham.net/project/06/576/576.pdf
கலாவல்லி சஞ்சிகையின் இலக்கியப்பரிதி பதிப்பக வெளியீடாக வெளிவந்த காவலூர் எஸ்.ஜெகநாதனின் நூல்கள்:
1.உடைவுகள் (குறுநாவல்). (யாருக்காவது இந்நூல் பற்றிய மேலதிகத்தகவல்கள் இருப்பின் அறியத்தரவும்)
வெளிவர இருப்பவை:
1. வானத்து நிலவு (சிறுவர் சிறுகதைத்தொகுப்பு)
2. வெற்றுச் சிப்பிகள் (குறுநாவல்)
3. 'புதுவெள்ளம்' (காவலூர் எஸ்.ஜெகநாதனின் வெளிவந்த அனைத்துப்படைப்புகள் பற்றிய ஆய்வு நூல் கலா.குமரிநாதனால் எழுதப்பட்டது).
இவையெல்லாம் வெளிவரவிருப்பவையாக அறிவிக்கப்பட்ட நூல்கள். பின்னர் வெளியானவையா இல்லையா என்பது தெரியவில்லை.
1. கலாவல்லி இதழில் காவலூரான் என்னும் புனைபெயரில் காவலூர் ஜெகநாதன் ஒரு பக்கக் கட்டுரை மாதாமாதம் எழுதியிருக்கின்றார். பல்வேறு சமூக , அரசியல் பிரச்சினைகளைப்பற்றிய கட்டுரைகள் அவை. அவற்றிலொன்றான 'சோசலிசம்' 'அறுவடை' தொகுப்பிலுள்ளது.
2. பேராதனையில் பணியாற்றிய காலத்தில் தினகரன் குறிஞ்சிக் குரலில் மலையக மக்களின் துயர வாழ்வு கண்டு மனம் நொந்து 'தோட்டங்கள் தோறும்' என்னும் தலைப்பில் எழுதியிருக்கின்றார்.அவற்றிலொன்றும் இத்தொகுப்பிலுள்ளது.
3. காவலூர் ஜெகநாதனின் இலக்கியப்பணியினைக் கெளரவித்து யாழ் இளைஞர்கள் பாராட்டு விழா நடத்தியிருக்கின்றார்கள். அதனையொட்டி ஈழநாடு சிறப்பு மலரொன்றினை வெளியிட்டுள்ளது. அதிலுள்ள கட்டுரையொன்றும் தொகுப்பிலுள்ளது.
4. 'இளைஞர் நெஞ்சில் கனலும் நெருப்பு' என்னும் தலைப்பில் பதினைந்து கட்டுரைகளைத் தினகரனின் 'இளைஞர் வட்டம்' பகுதியில் எழுதியிருக்கின்றார். அவற்றில் சாதி, சீதனம், சினிமா மோகம், பாலியல் நோய்கள், வேலையில்லாத்திண்டாட்டம் என்று பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார். அத்தொடரினொரு கட்டுரையும் இத்தொகுப்பிலுள்ளது.
5. ஜெகநாதன் சிறு சஞ்சிகைகளின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுள்ளவர். பிரபல பத்திரிகைகளில் அவற்றைப்பற்றி எழுதியிருக்கின்றார். கலைமலர், தாரகை, கிருதயுகம், மாருதம், ஞானதீபம், செவ்வந்தி போன்ற பல சிற்றிதழ்களை அவர் அறிமுகப்படுத்தி எழுதியுள்ளார். அவற்றில் அதிகமானவற்றை அவர் 'நந்தனா' என்னும் புனைபெயரில் எழுதியிருக்கின்றார். அவற்றிலொரு கட்டுரையும் 'அறுவடை' தொகுப்பிலுள்ளது.
6. 'இலக்கியத்துறையில் இளைய தலைமுறை' என்னும் தலைப்பில் ஈழநாடு வாரமலரில் அவர் இளந்தலைமுறையினரை ஊக்குவித்து இருபத்தேழு கட்டுரைகள் எழுதியுள்ளார். அத்தொடரில் இடம் பெற்ற எழுத்தாளர் துரை மனோகரன் பற்றிய கட்டுரை இத்தொகுப்பிலுள்ளது.
7. நாடகங்கள் பற்றி விமர்சனங்கள் எழுதியுள்ளார். அவற்றிலொன்று இத்தொகுப்பிலிடம் பெற்றுள்ள 'பரதன் பெற்ற பாதுகை' நாடகம் பற்றிய விமர்சனம்.
8. தமிழக ஆக்க இலக்கியகர்த்தாக்களை அறிமுகம் செய்து தினகரனிலும், சுடர் சஞ்சிகையிலும் எழுதியிருக்கின்றார்.
9. தினகரன் பத்திரிகையின் இலக்கிய உலகம் பகுதிக்காகச் சில காலம் இலக்கியச் செய்திகளைச் சேகரித்து எழுதியுள்ளார்.
10. சாதாரண மனிதர்கள் பலரைச் சந்தித்து அவர்களது பல்வகைப்பிரச்சினைகளைபப் பற்றி மித்திரன் வாரமலரில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
11. புனைகதை சம்பந்தமாக இலங்கை வானொலியின் கலைக்கோலம் பகுதியில் கட்டுரைகள் வாசித்துள்ளார்.
12. பல்துறை சார்ந்த நூல்களைப்பற்றிய விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
'அறவடை' தொகுப்பில் எழுத்தாளர் அந்தனி ஜீவா தினகரனில் 16 ஆகஸ்ட் 1979 அன்று எழுதிய 'புதிய வார்ப்பு' என்னும் சிறு குறிப்பும் இடம் பெற்றுள்ளது. அதில் அவர் காவலூர் எஸ்.ஜெகநாதன் பற்றி எழுதிய ஆவணச்சிறப்புள்ள தகவல்கள் சில:
மூன்றாண்டு காலத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட சிருஷ்டிகளைப் படைத்திருக்கின்றார். பத்து சிறுகதைப்போட்டிகளில் முதற் பரிசு பெற்றுள்ளார். நான்கு சிறுகதைப்போட்டிகளில் தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளார். அகில இலங்கைரீதியில் நடத்தப்பட்ட பதினாறு சிறுகதைப்போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றதால் 'பரிசு எழுத்தாளர்' என்று அழைக்கப்பட்டிருக்கின்றார்.
இலக்கிய உலகில் இவர் பிரவேசித்த ஆண்டு 1976. 'சொந்தங்கள் தொடர்கின்றன' என்னும் சிறுகதைத்தொகுதியையும், 'கலட்டுத்தரை' என்னும் குறுநாவலையும் , எழுத்தாளர்கள் இருவருடன் இணைந்து 'காலநதி' என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார்.
கண்டியில் கண்ணொருவௌயிலுள்ள விவசாயத்திணைக்களத்தில் தாவர நோய்ப்பகுதியில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றுகின்றார் 1979இல். 'எழுத்தில் மட்டுமல்ல எழுத்தில் இருக்கும் சத்தியம்' எழுத்தாளர்கள் வாழ்க்கையிலும் இருக்கவேண்டும்' என்று கூறுவார்.
'கண்டோம் கருத்தறிந்தோம்' என்னும் தலைப்பில் சுடர் சஞ்சிகையில் வெளியான காவலூர் ஜெகநாதனுடான நேர்காணலும் 'அறுவடை' தொகுப்பிலுள்ளது. நேர்காணலில் அறிமுகத்தில் அவரது வெளிவந்த நூல்களாக 'கலட்டுத்தரை', 'சொந்தங்கள் தொடர்கின்றன', 'காலநதி' என்பன இவரது வெளிவந்த நூல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருபது சிறுகதைகளைக் கொண்ட 'வானத்து நிலவு' அண்மையில் வெளிவந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த மூன்றாண்டுகளில் ஜெகநாதன் நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான சிறுகதைகளையும், உருவகக் கதைகளையும், இலக்கிய விமர்சனக் கட்டுரைகளையும் , மரபு, புதுக்கவிதைகளையும் எழுதியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் அவர் இலக்கியம் பற்றி இவ்விதம் கூறுகின்றார்: "சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண எழுத்தாளன் சிந்திக்கவில்லையானால் , ஒரு படைப்பிலே சிந்தனையின் பங்கு தங்கு தாழ்ந்து விடுமானால், அதை அரை குறையாகவே கருதுகிறேன் என்கின்றபோது அந்த தீர்வுகள் வெளிப்படையாகவோ செயற்கைத்தன்மையுடையதாகவோ இருக்கக்கூடாது என்பதைக் கவனிக்க வேண்டும். "
வெளியான நூல்கள் - இணையத்தில் காணப்பட்ட இவரைப்பற்றி வெளியான கட்டுரைகள், தகவல்களிலிருந்து நான் தொகுத்தது. இவை மேலும் உறுதி செய்யப்பட வேண்டும்.
1. காலநதி - காவலூர் எஸ். ஜெகநாதன் (1978) - சிறுகதைத்தொகுதி
2. யுகப்பிரவேசம் - காவலூர் எஸ். ஜெகநாதன் (1980) - சிறுகதைத்தொகுதி
3. கலட்டுத் தரை - காவலூர் எஸ். ஜெகநாதன். கொழும்பு: குங்குமம் வெளியீடு (2011) - சிறுகதைத்தொகுதி
4. வானத்து நிலவு
5. உடைவுகள் (குறுநாவல்)
6. அறுவடை (கலாவல்லி ஆசிரியர் எழுத்தாளர் கலா. குமரிநாதன் தொகுத்த காவலூர் எஸ்.ஜெகநாதனின் அபுனைவுகள் சிலவற்றின் தொகுப்பு. இவரைப்பற்றிய ஏனைய எழுத்தாளர்களின் குறிப்புகள் சிலவும் இடம்பெற்றுள்ளன.)
7. எரிசரங்கள் (சிறுகதைத்தொகுப்பு. ரஜனி பதிப்பக வெளியீடு)
*இவர் தொகுத்த நூல்: காலத்தின் யுத்தங்கள் (1982) - காலத்தின் யுத்தங்கள்(1982) - சிறுகதை மஞ்சரி (இளம் எழுத்தார்கள் பதினொரு பேரின் கதைகளின் தொகுப்பு. தொகுத்திருப்பவர்: காவலூர் எஸ்.ஜெகநாதன்) . இதில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர்கள் - அனலை ஆறு இராசேந்திரம், ச.முருகானந்தன், கணபதி கணேசன், அகளங்கன், கோகிலா மகேந்திரன், ஏ.எஸ்.உபைத்துல்லா, சுதாராஜ், கலா. குமரிநாதன் (கலாவல்லி சஞ்சிகை ஆசிரியர்), செ.குணரத்தினம், தலவின்னையூர் புன்னியாமீன் & புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்
மேலதிகத்தகவல்கள்:
காவலூர் ஜெகநாதன் அறக்கொடை நிலையம் என்றொரு அமைப்பு இயங்கிக்கொண்டிருக்கின்றது. எழுத்தாளர் முருகபூபதி காவலூர் ஜெகநாதனைப்பற்றி நினைவுகூர்ந்து கட்டுரையொன்றினை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் நடேசன் (ஆஸ்திரேலியா) 'நினைவில் வாழும் காவலூர் ஜெகநாதன்.' என்னுமொரு கட்டுரையினைத் தனது வலைப்பதிவினில் பிரசுரித்துள்ளார்.
காவலூர் ஜெகநாதனின் 'எரிசரங்கள்' தொகுப்புக்கு எழுத்தாளர் அகஸ்தியர் எழுதிய தன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுவார்:
" தனிமனித மென்னுணர்வுகளையும் ஒரு 'சமூக விதி'க்குள்ளாக நோக்கும் விரிந்த அழகியற் பார்வை அவர் இலக்கியத்தின் சிறப்புக்குக் காரணம். மானிட நேயம் அவர் இலக்கியத்தில் இழையோடும்.. சிறுகதை, நாவல் மட்டிலுமல்ல, அவர் கட்டுரைகளிலும் இதனைப்பார்க்கலாம். மக்களின் கெந்தக வாழ்க்கைக்கான விடிவு அவர் இலக்கியக் கருவூலமாக அமையும். இதன் பேறாக அவர் படைப்புகள் உருவத்திலும் , உள்ளடக்கத்திலும் செப்பமான இலக்கியப் பதிவுகளாயின. இதனால் ஜெகநாதன் ஒரு 'சமுதாயச் சிந்தனாவாதி'யாகத் திகழ்கின்றார். அவர் படைப்பின் சித்திரிப்பு வெறுமனே நடப்பியல்வாதமாக மட்டுமின்றி வழி மார்க்கத்தையும் தொட்டு நிற்பதால் அவர் படைப்புகள் ஈழத்து இலக்கியக் களத்திலும் தக்க இடம் பெறுகின்றன."
இவற்றிலிருந்து ஒரு முடிவுக்கு வர முடிகின்றது. எழுத்தாளர் காவலூர் எஸ்.ஜெகநாதன் சிறுகதைகளை மட்டுமே எழுதி மறைந்த எழுத்தாளரல்லர். அவரது இலக்கியப்பங்களிப்பு பரந்தது. மக்களுக்காக இலக்கியம் படைத்தவர் அவர். குறுகிய காலத்தில் அவர் படைத்தவற்றைப்பார்க்கையில் வியப்பே ஏற்படுகின்றது. அவர்மேல் மிகுந்த மதிப்பும் ஏற்படுகின்றது. இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு அவர் படைத்திருப்பார் என்னும் எண்ணமே ஏற்படுகின்றது. அவர் மேல் வீணாகப்பழி சுமத்தி அவரைக்கொன்றிருக்கின்றார்கள் என்பது புரிகின்றது. அந்தக் களங்கத்தை அவர்களால் ஒருபோதுமே நீக்க முடியாது. அவ்விதம் செய்ததன்மூலம் தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் தீங்கினை அவர்கள் புரிந்துள்ளார்கள். வரலாறு ஒருபோதுமே இதனை மறக்கப் போவதில்லை. காவலூர் எஸ்.ஜெகநாதனின் படைப்புகள் அனைத்துமே தொகுப்புகளாக வெளிவரவேண்டும். அதன் மூலமே அவரது பன்முக இலக்கியப்பங்களிப்பை அனைவரும் புரிந்துகொள்வர். அதுவே அவரைப் பலியெடுத்த தமிழ்ச் சமுதாயம் அவருக்குச் செய்யும் கைம்மாறாகவிருக்க முடியும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.