தீர்த்தக்கரை எண்பதுகளின் ஆரம்பத்தில் கண்டியிலிருந்து வெளியான சஞ்சிகை. எல்.சாந்திகுமாரை ஆசிரியராகக்கொண்டு காலாண்டிதழாக வெளியான பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் எஸ்.நோபேட் (இவர்தான் 'புதியதோர் உலகம்' எழுதிய 'கோவிந்தன்'. ஏனைய புனைபெயர்கள்: ஜீவன், கேசவன். இயற்பெயர் சூசைப்பிள்ளை நோபேட். திருகோணமலையைச் சேர்ந்தவர்). . எம்.தியாகராம் & எல்.ஜோதிகுமார் ஆகியோர் அடங்கியிருந்தனர். நூலகம் தளத்தில் 1980-1982 காலகட்டத்தில் வெளியான 'தீர்த்தக்கரை'யின் ஐந்து இதழ்களுள்ளன. தீர்த்தக்கரை சஞ்சிகை மொத்தம் ஐந்து இதழ்களே வெளிவந்ததாக அறிகின்றேன். இதன் பின்னர் 1992 தொடக்கம் 2014 காலப்பகுதியில் அவ்வப்பொது தடை பட்ட நிலையில் 'நந்தலாலா' சஞ்சிகை காலாண்டிதழாக வெளியானது. 'நந்தலாலா'வை வெளியிட்டது நந்தலாலா இலக்கிய வட்டம். ஆனால் தீர்த்தக்கரையில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதுபோல் நந்தலாலா சஞ்சிகையில் நந்தலாலா இலக்கிய வட்டத்தில் உள்ளவர்கள் யார் யார், நந்தலாலாவின் ஆசிரியர், ஆசிரியர் குழுவினர் யார் யார் என்பவை போன்ற விபரங்களைச் சஞ்சிகையில் காண முடியவில்லை. ஆனால் தீர்த்தக்கரை குழுவினரே நந்தலாலாவையும் வெளியிட்டனர் என்பதை ஊகிக்க முடிகின்றது.
தீர்த்தக்கரை, நந்தலாவா இரண்டுமே இலங்கைத்தமிழ் இலக்கியப்பரப்பில் வெளியான சஞ்சிகைளில் முக்கியமானவை. இவற்றைக் கலை, இலக்கிய சஞ்சிகைகள் என்று மேலோட்டமாகக் கூறிக் கடந்து விடமுடியாது. சமூக, அரசியல் விடயங்களைத் தாங்கி வெளியான கலை, இலக்கிய சஞ்சிகைகள் இவை. இவற்றை வெளியிட்டவர்களுக்குக் குறிப்பிட்ட அரசியல் பார்வை இருந்தது. மார்க்சியக் கண்ணோட்டத்தில் மக்களின் பிரச்சினையை அணுகினார்கள். அவ்வணுகளில் அவர்களுக்குத் தெளிவான பார்வையிருந்தது. இலங்கையின் மலையக மக்களின் சமூக, அரசியல் பிரச்சினைகள், இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம், உலக அரசியல் இவை அனைத்தையுமே இவரகள் அணுகுவதில் இவர்கள் கொண்டிருந்த தெளிவான பார்வை சஞ்சிகைகளில் வெளியான படைப்புகள் எல்லாவற்றிலுமே புலப்படுகின்றன.
மலையகத்திலிருந்து வெளியானாலும், மலையக மக்களின் சமூக, அரசியல் பிரச்சினைகளில் முக்கிய கவனத்தைச் செலுத்தினாலும், அவர்கள் வட,கிழக்குத் தமிழர்களின் சமூக, அரசியல் பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் ஒதுங்கி விடவில்லை. மலையகத் தமிழர்கள், வடக்குக் கிழக்குத் தமிழர்கள் அனைவரின் சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அம்மக்களின் குரல்களாகவே வெளிவந்தவை தீர்த்தக்கரை, நந்தலாலா சஞ்சிகைகள். ராமையா முருகவேள், கேகாலை கைலைநாதன், சி.வி.வேலுப்பிள்ளை போன்ற மலையகத்தமிழர்களின் படைப்புகளுடன் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், கவிஞர் சிவசேகரம், கவிஞர் சாருமதி, கவிஞர் மேமன்கவி போன்றோரின் படைப்புகளையும் தாங்கி வெளியானவை இச்சஞ்சிகைகள்.
நந்தலாலா வட்டத்தினர் இன்னுமொரு வகையிலும் இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர். நந்தலாலாக் குழுவினர் வெளியிட்ட 'தீர்த்தக்கரைக் கதைகள்' முக்கியமானதொரு சிறுகதைத்தொகுப்பு. அதுபோல் அவர்கள் வெளியிட்ட நமது கலை, இலக்கிய விமர்சகர்களாலும், இலக்கியக்குழுக்களாலும் இருட்டடிப்புச் செய்யப்பட்ட கவிஞர் சாருமதி (இயற்பெயர் : யோகநாதன். அச்சுவேலியைச் சேர்ந்தவர்) எழுதிய கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பொன்றை 'அறியப்படாத மூங்கில் சோலை' என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளனர். அத்தொகுப்பு பற்றி நல்லதொரு திறனாய்வுக் கட்டுரையினைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் 'கவனிக்கப்படாது போய்விட்ட கவிஞனொருவன் - கவிஞர் சாருமதியின் (1947 -1998) கவித்துவம் பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பு' என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். கவிஞர் சாருமதியைப் பற்றி எண்ணியதும் உடனடியாக நினைவுக்கு வருவது எழுத்தாளர் செ.கணேசலிங்கன் வெளியிட்ட குமரன் சஞ்சிகைதான். குமரன் சஞ்சிகையில் சாருமதியின் கவிதைகள் பல வெளியாகியுள்ளன.
தீர்த்தக்கரை, நந்தலாலா சஞ்சிகைகளைப்பற்றி எண்ணியதும் என் நினைவுக்கு வருமொருவர் இக்குழுவினருள் ஒருவரான எழுத்தாளர் ஜோதிகுமார். ஹட்டனில் வழக்கறிஞர். இவரது தற்போதையச் செயற்பாடுகள் பற்றி எதுவும் தெரியவில்லை. இவரை ஓரிரு தடவைகள் இவரது டொராண்டோ விஜயத்தின்போது சந்தித்திருக்கின்றேன். தான் நம்பும் அரசியல் சித்தாந்ததில் தெளிவான பார்வை கொண்ட ஒருவராக, அப்பார்வையினூடு கலை, இலக்கியப்படைப்புகளை அணுகும் ஒருவராக, அவ்விடயத்தில் எவ்விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாத ஒருவராக இவரை அறிந்துள்ளேன். தேடகம் (கனடா) அமைப்பைச் சார்ந்த நண்பர் குமரனே நான் இவரைச் சந்திப்பதற்கு முக்கிய காரணம். இவர், அப்பொழுது ஸ்கார்பரோவில் இயங்கிக்கொண்டிருந்த டொராண்டோ மொக்கன் கடையிலும் , பின்னர் பார்ளிமெண்ட் / வெலஸ்லி சந்திப்புக்கண்மையிலிருந்த 'கோப்பி'கடையிலும் இவரைச் சந்த்துக் கலந்துரையாடும் சந்தர்ப்பமேற்பட்டது. இரண்டாவது சந்திப்பு டொராண்டோவில் வசித்து வந்த எழுத்தாளர்களும் கலந்து கொண்ட சந்திப்பாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து ஜோதிகுமார் அவர்களுடன் தேடல் சஞ்சிகைக்காக ஒரு நீண்ட நேர்காணலொன்றினையும் செய்திருந்தேன். அது தேடல் சஞ்சிகையிலும் வெளியாகியிருந்தது.
தீர்த்தக்கரை, நந்தலா சஞ்சிகைகளை எண்ணிம நூலகமான நூலகத்தில் வாசிக்கலாம். அவற்றுக்கான இணைய இணைப்புகள்:
தீர்த்தக்கரை: http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88
நந்தலாலா: http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE
தேடல் சஞ்சிகையில் வெளியான ஜோதிகுமாருடனான நேர்காணல் (தேடல் சஞ்சிகையில் வெளியான இந்நேர்காணல், பதிவுகள் மற்றும் நமது மலையகம் இணைய இதழ்களிலும் மீள்பிரசுரமானது). - https://www.namathumalayagam.com/2014/05/blog-post_21.html
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.