முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி: கிடைத்தது பார்த்திபனின் சிறுகதைத்தொகுப்பு 'கதை'! புகலிட, புலம்பெயர் தமிழ்ப்படைப்பாளிகளில் மிகுந்த சிறப்பானதோரிடத்திலிருப்பவர் எழுத்தாளர் பார்த்திபன், சிறுகதை, நாவல் என வெளியான அவரது படைப்புகள் மிகவும் முக்கியமானவை. அவரது படைப்புகளில் பிறந்த மண்ணில் நிலவிய சூழல்கள், புகலிடம் நாடிப்புகுந்த மண்ணில் நிலவிய, நிலவிடும் சூழல்கள், நவீன உலகமயப்படுத்தப்பட்ட மானுட சமுதாயச் சூழலில் மானுடர் நிலை எனப்பல்வகைச் சூழல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். முக்கியமான படைப்பாளி. அவரது சிறுகதைகளில் 25 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து 'கதை' என்னும் பெயரில் தொகுப்பொன்றினை அவரது நண்பர்கள் 'தமிழச்சு' (சுவிஸ்) பதிப்பக வெளியீடாக வெளியிட்டுள்ளார்கள். இதற்காக அந்நண்பர்களை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.
பார்த்திபனின் சிறுகதைத் தொகுதியான 'கதை'யின் முதல் ஐந்து சிறுகதைகளை வாசித்து விட்டேன். அவை பற்றிய கருத்துகளிவை. இவற்றைத்தாம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் 'புள் ஷிட்' குப்பைகள் என்று தனது முகநூற் பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். அதற்கு எதிர்வினையாற்றிய எழுத்தாளர் சுமதி ரூபன் முதல் மூன்று கதைகளுக்கு மேல் தன்னால் வாசிக்க முடியவில்லையென்று குறிப்பிட்டிருக்கின்றார். எனவே இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் வாசிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றேன். அவ்வப்போது வாசித்து முடிந்ததும் அவை பற்றிய குறிப்புகளை எழுதுவதற்கும் தீர்மானித்திருக்கின்றேன்.
தொகுப்பிலுள்ள முதல் ஐந்து கதைகளின் தலைப்புகள் வருமாறு: 'ஒரே ஒரு ஊரிலே..', (1986), 'பாதியில் முடிந்த கதை' (1987), 'காதல்' (1988), 'பசி' (1988) & 'மனைவி இறக்குமதி' (1988).
மானுட வாழ்வானது அதன் முடிவு தெரியாத நிலையில் இறுஹி வரையில் ஆசாபாசங்களுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது. முகநூலில் முடிவு வரைப் பல்வேறு விடயங்களைப்பற்றிப் பதிவுகளிட்ட பலரின் முடிவுகளை அடுத்த நாள் அறிந்திருக்கின்றோம். கனவுகளுடன், கற்பனைகளுடன், வருங்காலத்திட்டங்களுடன் , பல்வகையான உணர்வுகளுடன் இயங்கிக்கொண்டிருக்கும் மானுட இருப்பானது பல சமயங்களில் எதிர்பாராத விபத்துகளில், இயற்கை, செயற்கை நிகழ்வுகளின் கோரப்பிடிக்குள் சிக்கி, வாழும் மண்ணில் நிலவும் சமூக, அரசியற் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் காரணமாக முற்றுப்பெறுவதை அன்றாடம் வெளியாகும் செய்திகள் மூலமறிந்திருக்கின்றோம். பார்த்திபனின் 'கதை' தொகுதியிலுள்ள கதைகளான 'ஒரே ஒரு ஊரிலே', 'பாதியில் முடிந்த கதை' மற்றும் 'பசி' இதனை மையமாக வைத்துப் புனையப்பட்டிருக்கின்றன.
'ஒரே ஒரு ஊரிலே' கதையில் இலங்கையின் வடக்கில் , யாழ் மாவட்டத்திலுள்ள ஊரொன்றின் குறுக்கு வெட்டு சித்திரிக்கப்பட்டுள்ளது. கதையில் எங்கும் யாழ் மாவட்டக்கிராமமென்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதைக் கதாபாத்திரங்கள்தம் யாழ் மாவட்டப் பேச்சுத்தமிழை உள்ளடக்கிய உரையாடல்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. கிராமத்தின் பல்வகை மானுடர்களின் வாழ்வியற் பிரச்சினைகள் விபரிக்கப்படுகின்றன. அம்மண்ணில் நிலவும் சமூகச்சீர்கேடுகளில் ஒன்றான சீதனப்பிரச்சினை எவ்விதம் காதலுக்கு இடையூறாகவிருக்கின்றது, மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறிப்பணம் வாங்கி ஏமாற்ற முனையும் முகவனொருவனிடம் அகப்பட்டுக்கொண்ட குடும்பச்சுமைகளைத்தாங்கும் இளைஞனொருவரின் நிலை எவ்விதம் பாதிக்கப்படுகின்றது, காணியொன்றில் நீண்ட காலமாகக் குடிசை கட்டி வாழும் ஏழைக்குடும்பமொன்றைத் திடீரெனக் காணிச்சொந்தக்காரர் அக்குடிசை அமைந்துள்ள காணியை மகளுக்குச் சீதனமாகக் கொடுத்த காரணத்தால் வெளியேறச்சொல்வதால் எவ்விதமான சூழலுக்கு உள்ளாகின்றது, இராணுவத்தினரின் அடக்குமுறைகள் உச்சநிலையிலிருக்கும் சூழலிலும், குடும்பத்துக்காக வேலை செய்யச்செல்லும் தபாற்காரர் ஒருவரின் இருப்பு எவ்விதம் சிதைக்கப்படுகின்றது என்பது பற்றியும், இவ்விதம் அக்கிராம மக்களின் பல்வேறு வாழ்வியற் பிரச்சினைகள் இச்சிறுகதையில் சித்திரிக்கப்பட்டுள்ளன.
இவ்விதமாகப்பல்வேறு கனவுகளுடன், உணர்வுகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் அவ்வூர் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் இறுதியில் தீர்க்கப்படுகின்றன். எப்படி? இப்படி?:
"ஒரு மாலைப்பொழுது. நான்கு மணியிருக்கலாம். ஊரவர் தத்தமது கடமைகளில் இருந்தனர். கிடைத்த தகவல் ஒன்றையடுத்து இராணுவம் அந்த ஊரைச்சுற்றி வளைத்தது. வீடுகள் கொளுத்தப்பட்டன. பச்சிளம் குழந்தை முதல் படுகிழம் வரை உயிர்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டன. உடமைகள் சூறையாடப்பட்டன. பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகினர். கொஞ்ச நேரத்திலேயே கொழுந்து விட்டெரியும் நெருப்பில், தீனமான் அழுகை ஓலங்களுடன் அந்த ஊரில் அவரவருக்கிருந்த பிரச்சினைகளுக்குச் சுமுகமான முடிவு காணப்பட்டுக்கொண்டிருந்தது~ (பக்கங்கள் 22 & 23)
'பாதியில் முடிந்த கதை' கதையும் இவ்விதமானதே. தன் குடும்பத்துச் சுமைகளைத்தாங்குமோர் இளைஞன் மத்தியக் கிழக்கு நாடொன்றுக்குச் செல்வதற்காக தொழில் வாய்ப்பு பெற்றுத்தர உதவும் முகவனொருவனைச் சந்தித்துவிட்டு வீடு திரும்புகையில், மனித நடமாட்டமற்ற பிரதேசமொன்றில் எதிர்ப்பட்ட இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதை விபரிக்கும் கதையிது.
நாட்டில் நிலவிய அரசியற் சூழல் காரணமாகப் பாதிப்படையும் கடற்றொழிலாளி ஒருவன் , குழந்தை, மனைவி ஆகியோர் பசிக்கொடுமையால் வாடுவதைப் பொறுக்க முடியாமல், மீன்பிடித்தடை உத்தரவினையும் மீறி மீன்பிடிக்கச் சென்று, கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதைத் தொகுதியின் நான்காவது கதையான 'பசி' சித்திரிக்கின்றது.
'காதல்' ஒருவகையில் நீதிக்கதை. டொச் பெண்ணொருத்தியின் மீது காதல் கொள்ளும் ஈழத்தமிழன் ஒருவனின் தோல்வியுற்ற காதல் கதை இது. ஒரு வகையில் அவனுக்கு நீதி போதிக்கும் நீதிக்கதை. இருவரும் ஒரே கல்வி நிலைய மாணவர்கள். நன்கு டொச் மொழி கதைக்கத்தெரிந்த அவன் அவளுடன் பழகத்தொடங்குகின்றான். அவளுக்குக் காதல் கடிதமும் கொடுக்கின்றான். ஆனால் அவளோ அவனை நிராகரித்து விடுகின்றாள். காரணம் அவள் ஒருமுறை இன்னுமொரு மாணவனுடன் ஒட்டி உறவாடிச் செல்வதையே அவனால் தாங்க முடியவில்லை. ஆனால் அவளோ தான் காதலிக்கின்றேன் என்று கூடக்கூறாத நிலையிலேயே அவள் தனக்கு மட்டுமே உடமையாகவேண்டுமென்று நினைக்கும் அவனது ஆணாதிக்க மனப்பான்மையினைச் சுட்டிக் காட்டி, ஈழத்தமிழர்களின் ஆணாதிக்கச் சிந்தனைகளைக்குறிப்பிட்டு அவனை நிராகரித்து விடுகின்றாள்.
தொகுதியின் ஐந்தாவது கதை 'மனைவி இறக்குமதி'. கொழுத்த சீதனத்துடன் ஊரில் பெண் பார்த்த ஈழத்தமிழன் ஒருவன், அவளை ஜேர்மனிக்கு அழைக்கின்றான். அவ்விதம் ஜேர்மனிக்கு அழைக்கும் செலவினையும் பெண் வீட்டாரே பொறுப்பெடுக்க வேண்டுமெனவும் கூறுகின்றான். இந்நிலையில் இவ்விதம் சொந்தக் காசைச்செலவழித்து ஜேர்மனிக்கு வரும் வருங்கால மனைவியை வரவேற்பதற்காக விமான நிலையம் செல்கின்றான் அத்தமிழன். அவளோ முகத்தில் அறைந்தது மாதிரி அவனை நிராகரித்துவிட்டு அகதி அடைக்கலம் கோரச்சென்று விடுகின்றாள். அச்சமயம் அவள் பின்வருமாறு கூறுவாள்: - ஒரு பொருளை இறக்குமதி செய்தா, அதுக்குரிய கட்டணத்தையும் , கொண்டு வாற கூலியையும் பொருளைப்பெறப்போகிறவனே கட்ட வேணும். ஆனா நீங்க என்னை ஒரு பொருளாகக் கூட மதிக்கேலை. உங்களைக் கலியாணம் செய்யிறதுக்கும், ஜேர்மனி வாறதுக்கும் நாங்கதான் செலவழிக்க வேணும் என்டு சொன்னியள் -
இதுவும் ஒருவகை நீதிக்கதை 'காதல்' சிறுகதையை போல. 'காத'லில் உள்ளூரிலேயே மனைவியை அடைய முயற்சி செய்து தோல்வியுறுகின்றான் ஓர் ஈழத்தமிழன். 'மனைவி இறக்குமதி'யிலோ ஊரிலிருந்து மனைவியை இறக்குமதி செய்து தோலிவுறுகின்றான் இன்னுமோர் ஈழத்தமிழன். இரு கதைகளிலும் அவர்களை நிராகரிக்கும் பெண்கள் சாட்டும் முக்கியக் குற்றச்சாட்டு பெண்களை உடமைகளாகக் கருதும் அத்தமிழர்களிருவரின் ஆணாதிக்க மனப்பான்மையினைத்தான்.
இவ்வைந்து கதைகளிலிருந்தும் என்னால் ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பதற்கொப்ப , பார்த்திபனின் 'கதை' என்னும் இத்தொகுதி பற்றி ஒரு பொதுவான கருத்துகள் சிலவற்றினை முன் வைக்க முடியும். பார்த்திபனின் கதைகள் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையானது அவர்கள் பிறந்த மண்ணில் நிலவும் சமூக,அரசியற் சூழல்களினால் எவ்விதம் பாதிக்கப்படுகின்றன என்பது பற்றிக் கூறுகின்றன. அவ்விதம் அவ் வாழ்வானது விபரிக்கப்படுகையில் இலங்கைப்படையினரின் மனித உரிமை மீறல்கள் மிகுந்த அடக்குமுறைகளினால் அவர்கள்தம் இருப்பு எவ்விதம் பாதிப்புக்குள்ளாகின்றது என்பதை வெளிப்படுத்துகின்றன. அதே சமயம் அம்மனிதர்களின் வாழ்வானது தொழில் முகவர்கள், பேராசை பிடித்த காணிச்சொந்தக்காரர்கள் போன்றோரின் நடவடிக்கைகளினால் எவ்விதம் பாதிப்புறுகின்றன என்பதையும் வெளிப்படுத்துகின்றன. பிறந்த மண்ணில் நிலவும் சூழலினால் பாதிப்புறும் மக்களின் வாழ்வை விபரிக்கும் கதைகள் அதே சமயம் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்களின் புலன் பெயராத நிலை காரணமாக எவ்விதம் தோல்வியுறுகின்றன என்பதையும் விபரிக்கின்றன. மனைவியை இறக்குமதி செய்ய முயற்சி செய்கின்றான் ஒரு தமிழன். பொருளை இறக்குமதி செய்பவன் கூட அதற்காகக் கட்டணம் செலுத்துகின்றான். இவனோ இறக்குமதிச் செலவையும் சீதனச்செலவுகளில் ஒன்றாக்கி விடுகின்றான். புலம் பெயர்ந்தும் அவனால் சீதனச் சுரண்டலிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. 'காதல்' சிறுகதை வெளிப்படுத்துவது போல் தன் ஆணாதிக்கச் சிந்தனைகளிலிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியவில்லை.
கனவுகள், கற்பனைகள் மற்றும் பல்வேறு உணர்வுகளுடன் இயங்கும் மானுடர்தம் இருப்பானது எவ்விதம் அவர்கள் வாழும் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் சூழல்களினால் நிர்ணயிக்கப்பட்டுவிடுகின்றன. எவ்விதம் மானுடர் தாம் வாழும் அமைப்புகளில் தம் செயற்பாடுகளினால் சக மானுடர்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்குகின்றார்கள் என்பதை, எவ்விதம் மானுடர் தாம் வாழும் சூழல்களுக்குள் சிக்கி பல்வேறு வகையான ஆதிக்க உணர்வுகளுக்குள் சிக்கிச் சீரழிகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் பார்த்திபனின் கதைகளை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவாக வைத்துப் பார்க்க முடியும்.
பார்த்திபனின் மேற்படி சிறுகதைகளில் காணப்படும் இன்னுமொர் விடயத்தையும் கவனித்தேன். ஓரிடத்திலாவது சிங்களப்படையினர், சிங்கள இராணுவம் என்று இனரீதியாக, வாசகர்களை உணர்ச்சியேற்றும் வகையில் குறிப்பிடப்படவில்லை. மாறாக இராணுவம், படையினர் என்று மட்டுமெ குறிப்பிடப்பட்டுள்ளன. இது எழுத்தாளர் பார்த்திபனின் முதிர்ச்சியுற்ற உளப்பண்பினை வெளிப்படுத்துகின்றது. மானுடரின் பிரச்சினைகளாக படையினரின் மனித உரிமை மீறல்கள் மிகுந்த அடக்குமுறைகள் விபரிக்கபட்டுள்ளன.
புனைகதைகளின் சிறப்பை அவற்றில் பாவிக்கப்பட்டிருக்கும் மொழி நடை மட்டும் தீர்மானித்து விடுவதில்லை. அதுவோர் சிறப்பினைத்தீர்மானிக்கும் முக்கியமான அம்சங்களிலொன்று மட்டுமே. அவை கூறும் பொருள், பாத்திரப்படைப்புகள், பாவிக்கப்பட்டிருக்கும் உரையாடல்கள், கதைப்பின்னல்கள் எனப் பல அம்சங்களுள்ளன அப்படைப்புகளின் தரத்தினை நிர்ணயிப்பதற்கு. நிச்சயமாகப் பார்த்திபனின் இச்சிறுகதைகள் குப்பைகளோ, புள் ஷிட் கதைகளோ அல்ல.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.