நூல் விபரம்: பதிப்பு: வசந்தா பதிப்பகம், சென்னை, பக்கம்: 344, ஆசிரியர்: கௌசி, ஜெர்மனி, விலை: 400 இந்திய ரூபாய்
மொழி மனிதனால் உருவாக்கப்பட்டதாயினும் அம்மொழியாலே தான் மனிதன் உயர்வடைகின்றான்.எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் உண்டு. ஆனால், தமிழ்மொழிக்கு மட்டுமே இவற்றோடு பொருளுக்கும் இலக்கணம் உண்டு. ஒரு மொழியின் உயர்வுக்குக் காரணம் இதன் கண் காணப்படுகின்ற இலக்கியமே. இவ் இலக்கியத்திற்கு இலக்கணம் அமைத்து மொழி செம்மைப்படுத்தப்படுகிறது. அவ்வாறு செம்மைப்படுத்தப்பட்ட ஒரு இலக்கியப் படைப்பாக மிளிர்கிறது இந்த குருவிக்கூடு என்னும் நாவல்.
ஒரு எழுத்தாளன் என்றால் எழுத்துக்களை எழுதிவிடுவது மட்டுமல்ல, அவரின் எழுத்துக்கள் ஆளுமையுடன் நடைபயில வேண்டும். அதனால் தான் வாசிப்பு அறிவைப் பெருக்கும், எழுத்து திறமையை வெளிப்படுத்தும் என்பார்கள். இவையிரண்டும் கௌசி அவர்களுக்கு நிறையவே இருப்பதனால் தான் இக்குருவிக்கூட்டை இவ்வளவு இலக்கியச்சுவை சொட்டச் சொட்ட அவரால் படைக்கமுடிந்திருக்கிறது என்றுகூறின் மிகையாகாது. வாசித்துப்பாருங்கள் மண்வாசனை முதல் விண்னைத்தொடும் அறிவியல்வரை அவர் கற்பனைவளமும் செழுமை மாறாச் சொல்வளமும் இலக்கிய இலகுநடையுடன் உணர்வுகளுக்கு உயிரூட்டி எழுத்துக்களால் வாசகர்களை கைபிடித்துக்கூட்டிச்சென்று நேரில்காண்பிப்பது போன்று காட்சிப்படுத்தியிருக்கின்றார். அது நன்கு சிறப்பாகவே இப்புத்தகத்தில் சில இடங்களில் துல்லியமாக காணமுடிகிறது.
இப்புத்தகமானது பல்வேறு விடயங்களை உள்ளடக்கியுள்ளபோதிலும் கிழக்கிலங்கை மக்களிடையே காணப்படுகின்ற குறிப்பாக மட்டக்களப்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் வாழுகின்ற மக்களது பழக்கவழக்கம்
பண்பாட்டு விழுமியங்கள், பண்டிகை விழாக்கள், சடங்குமுறைகள், பாரம்பரியவைத்தியம், அரசியல், ஆன்மீகம், விருந்தோம்பல், அறிவியல், வரலாற்று உண்மைகள், அறிஞர்களின் கருத்துக்கள், பழமொழிகள்; கருத்துரைகள், என்பவற்றுடன் வாழ்விடக்கலாச்சாரம் பற்றிய தகவல்கள், சட்டஒழுங்குகள் எனப் பலதரப்பட்ட விடயங்களையும் அவற்றை வெளிப்படுத்துவதற்கான சூழலை அனுபவத்தினுடாக ஏற்படுத்தி அதனை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக அவரது உறவுகள், நண்பர்கள், பழகியவர்கள், சந்தித்தவர்கள் என்று பலரையும் நன்றியுணர்வுடன் கதைக்குப் பாத்திரங்களாகப் புனைபெயர்களுடன் புனைந்து கதைகளை நகர்த்திச்செல்கின்றார்.
தான் அனுபவித்த மறக்கமுடியாத சில சுவாரஷ்யமான அனுபவங்களான பள்ளிச்சீருடையில் பட்டாம்பூச்சியாய்ப் பறந்த அந்தப் பாடசாலைப் பருவத்தையும், பல்கலையும் கற்றுதரும் கூடமான (காதலும்கூட) அந்த பல்கலைக்கழக வாழ்க்கைக்கால அனுபவங்களையும் இரசனையோடு வெளிப்படுத்தியிருப்பது மட்டுமன்றி உணர்வின் உச்சநிலைக்கு வாசகர்களை அழைத்துச் சென்றிருப்பது பாராட்டுக்குரியது. குறிஞ்சி நிலமான பேராதனை பல்கலைக்கழக வளாகத்தின் அகம் புறமாகிய ஒழுக்கங்களும், ஒருதலைக் காதல்களுமாக எத்தனை சங்ககால ஒழுக்கங்கள். அத்தனை உணர்வுகளுக்கு மத்தியிலும் தன் இலக்கை நோக்கி பயணிப்பவளாக சிநேகா. எதுவும் எம்மைக் கடந்து செல்லும் என்ற உயரிய நோக்கோடு தன் இலக்கில் கண்ணும் கருத்துமாக பயணித்து இலக்கையும் அடைகின்றாள்.
இவ்வாறு உணர்வுகளில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதலில் தான் இலக்கிய வடிவங்கள் உருவாகின்றன. இலக்கியமானது வாழ்க்கை அனுபவங்களினின்று பிறப்பது ஒரு படைப்பாளி (கலைஞன்) தன் யதார்த்தத்தை தன் அகநிலையினூடாகப் பிரதிபடுத்தி அதன்மீது தன்கலைப்படைப்பைத் தருகிறான். அப்படி எழுந்த ஒருபடைப்பாகவே இக் குருவிக்கூடு என்னும் நாவலையும் கருதுகிறேன்.
மிக எளிமையான கருத்தமைதிக்கேற்ப தாவிச்செல்லும் நடையாக, மொழிநடை இதனை அங்கதபாணி நடை எனக்கூறுவர். நகைச்சுவை, கிண்டல், கேலி போன்ற விடயங்களை உள்ளடக்கிய அதேசமயம் நாசுக்கான வெளிப்பாடுகளையும் விரவிய ஒரு நடையாக இது காணப்படுகிறது. பேச்சுவழக்கு, பிரதேசவழக்கு, இலக்கண வழக்கான இயல்புவழக்;கு, தகுதிவழக்குச் சொற்பிரயோகங்கள் ஆங்காங்கு காணக்கூடியதாயும் பாத்திரப் படைப்புக்கள் இயல்பானதாகக் காணப்படுவதுடன் உயிர்த்துடிப்புடையனவாகவும் அமைந்த குறியீட்;டுப் பாங்குடைய படைப்பாகவும் வித்தியாசமான பன்முகப்படைப்பான பாத்திரமாக சிநேகா படைக்கப்பட்டிருப்பதும் பெண்மைக்கு உரித்தான பெண்மை காணப்பட்டாலும், அவரின் மனப் போராட்டங்களும் தன்வாழ்வை தானே தீர்மானித்தல், பயமற்ற அதிகார மனோபாவமும் குடும்பப்பாரத்தைச் சுமக்கும் பொறுப்புடைய வைரமான மனநிலையுடைய படைப்பாகவும் வைரவள்ளி என்னும் பாத்திரப் படைப்பும் இந் நாவலின் சிறப்புக்கு ஒரு காரணமாகும்.
அடுத்து, ஆன்மீகம் பற்றிய கருத்தாக ஆழ்மனதில் பயணம் செய்து நம்மை நாமே புதிய மனிதனாக உருவாக்கி நமக்கு நாமே கட்டளையிட்டு செயற்பாடுகளை மேற்கொண்டால் அதுவே ஆன்மீகத்தின் வழியில் நாம் செயற்படுகின்றோம் என்ற நிலைப்பாட்டை அடைந்துவிடுகின்றோம் என்ற கருத்தமைந்த தியானம் பற்றிய கருத்தையும் இங்கு காணமுடிகிறது.
கௌசி அவர்கள் எதை எடுத்தாலும் அல்லது எதைப் பார்த்தாலும் அதனை ஏதோ ஒரு துறைக்குள் அடக்கி அதனைக் கருவாக்கி கற்பனை வளத்துடன் படைப்பாய் உருவாக்கி விடுவார். அவ்வாறாகவே தந்தையின் நினைவலைகளை மீட்டிப் பார்க்கவேண்டும் என்ற ஏக்கமும் தவிப்பும் தான், இந்நாவல் உருவாவதற்கு காரணமாக இருந்தது. அதற்காக அறிவியல் என்னும் நவீனத்துறையை தேர்வு செய்து அதனூடாக தன் தந்தையாகிய பரமசிவம் அவர்களின் மூளைப்பதிவுகளை பதிவிறக்கம் செய்து நினைவலைகளை பதிவாக்கும் ஒரு புது முயற்சியை மேற்கொள்கிறார். அந்தமுயற்சியில் வெற்றியும் அடைந்து எதிர்காலத்தில் அறிவியலில் இப்படியும் ஒரு புதுமுயற்சியினை மேற்கொள்ள முடியுமென்ற கற்பனை உருவாக்கத்திற்கு வழிவகுத்துக்காட்டியது மட்டுமன்றி தந்தையின் சுயசரிதையை இன்னும் வாழ்கின்றேன் எனத் தலைப்பிடப்பட்ட ஒருபுத்தகமாக இக்குருவிக்கூடு என்னும் புத்தகத்திற்குள்ளே தந்தையின் புத்தகத்தை வைத்து தன் நீண்டநாள் கனவுச்சுமையை இப்புத்தகத்தினூடாக இறக்கிவைக்கின்றார. புத்தகத்துக்குள்ளே புத்தகத்தை வைத்த ஒரு புத்தகம் தான் இக் குருவிக்கூடு என்னும் நாவல். எதிர் காலத்தில் தந்தைக்காக தனியே ஒரு படைப்பைத் தருவார் என எதிர்பார்க்கின்றேன்.
விதந்துரைக்கக்கூடிய விடயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. குறிப்பாக கிழக்கிலங்கை மக்களை அடையாளப்படுத்தும் பண்பாகக் காணப்படும் விருந்தோம்பல் பற்றிய விரிவான தகவல்கள், பாரம்பரியவைத்திய முறைகள் பற்றிய விளக்கங்கள், ஜெர்மனி நாட்டின் பண்புகள், ஞாபக மறதி நோயாளிகளின் நடத்தைகள் போன்ற பலவற்றைக்கூறலாம். இருப்பினும் வாசகர்களுக்கு வழிவிட்டு நகர்கிறது என் பேனா. வாசியுங்கள் வாசிப்பு என்பதுவும் ஒருகலைதான் என்பதை தலைமுறைக்குக் கடத்துங்கள். ஏனெனில் தலைமுறைகளுக்கு மொழி புரிவதில்லை இனத்தின் அடையாளமே மொழி என்பதை வலியுறுத்துங்கள் அதுவே வரலாறும் கூட. ஒற்றைகளை புரட்டிப் புரட்டிப் படிக்கும் புத்தகங்கத்தை வாசிப்பதை நிறுத்திவிட்டு உங்களை எப்புத்தகம் புரட்டிப்போடுகின்றதோ அப்புத்தகத்தை வாசியுங்கள். அவ்வாறு என்னையும் புரட்டிப்போட்ட புத்தகங்களுக்குள் இக் குருவிக்கூடும் ஒன்றாகும். புலத்தில் வாழ்ந்தாலும் நிலத்தின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாளி கௌசி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்தும், நன்றியும் உரித்தாகட்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.