எழுத்தாளரும், ஜீவசஞ்சிகை ஆசிரியரும், பதிப்பாளருமான  க.பரணீதரன் யாழ் நகரிலுள்ள ஒரு புகழ்பெற்ற புத்தகக் கடையில் தனக்கேற்பட்ட அனுபவத்தை விபரித்திருந்தார். மிகுந்த அதிர்ச்சியைத் தந்த அனுபவமாக அதனை  வாசிக்கையில் நானும் உணர்ந்தேன். அவர் அங்கு எழுத்தாளர்களின் நூல்களை விற்பனைக்காகப் பத்துப் பிரதிகள் கொடுப்பது வழக்கம். பின்னர் ஒரு வருடம் கழித்துச் சென்று விற்கும் நூல்களின் பணத்தைப் பெறுவது வழக்கம். விற்காதவற்றை அங்கு தொடர்ந்து விற்க வைப்பது வழக்கம். வழக்கம் போல் இவ்விதம் அங்கு விற்பனைக்கு வைத்து அவர் , மூன்று வருடங்கள் பின்னர் அங்கு சென்றபோது அங்கு அவர் கொடுத்திருந்த நூல்களின் நிலைகண்டு அதிர்ச்சி அடைந்தார். நூல்கள் மீண்டும் பாவிக்கவே முடியாத அளவுக்கு அழுக்கான சூழலில் வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் அப்புத்தக்கடையில் விற்கப்படும் நூல்களுக்கான பணத்தைப்  பெறுவதிலுள்ள சிரமங்களையும், அங்கு பணியாற்றுபவர்கள் நடந்துகொள்ளும் முறையினையும் கவலையுடன் விபரித்திருந்தார். தான் இவ்விதம் இப்பிரச்சினையை வெளிப்படுத்துவதற்குக் காரணம் அப்புத்தக்கடை நல்ல முறையில் தவறுகளைக் களைந்து இயங்க வேண்டும் என்பதற்காகவே என்றும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜீவநதி ஆசிரியர் பரணீதரனுக்கு ஒரு தாழ்வான வேண்டுகோள். இப்புத்தக்கடை தன்னைச் சீரமைத்துக்கொள்ளாதவரை, எதிர்காலத்தில், உங்கள் பதிப்பகம் மூலம் என் நூல்கள் வெளியிடும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், என் நூல்களை அப்புத்தக்கடைக்குக் கொடுக்காதீர்கள்.

பரணீதரன் தனது பதிவில் புத்தகக் கடையின் பெயரைக்குறிப்பிடவில்லை. ஆனால் வேம்படி சந்தியிலுள்ள கடை என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார். கூகுள் வரைப்படத்தின் 'வீதிப்பார்வை' மூலம் அச்சந்தியை அவதானித்தபோது அதிலிருந்த ஒரேயொரு புத்தக்கடை பூபாலசிங்கம் புத்தகக் கடை என்பதை அறிந்து உண்மையில் அதிர்ச்சியடைந்தேன். பரணீதரனின் அக்கடையின் படத்தைக்காட்டி அதுவா கடை என்று கேட்டபோது அவர் ஆமென்றார்.

பூபாலசிங்கம் புத்தக்கடைக்கு இலங்கைத் தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமானதோர் இடமுண்டு. குறிப்பாக எழுத்தாளர்கள் சந்திக்கும் இடமாக, நூல்கள் வாங்கும் இடமாக அது விளங்கியுள்ளது. குறிப்பாக இலங்கை முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நனவிடை தோய்தல்களில் அது  நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அண்மையில் கனடாவில் மறைந்த எழுத்தாளர் இராஜகோபாலன் மாஸ்டர் கூட அங்குதான் பலரை எஸ்.பொ. , டொமினிக் ஜீவா என்று சந்தித்திருக்கின்றார். அது பற்றி டொமினிக் ஜீவா நனவிடை தோய்ந்திருக்கின்றார். வாசித்திருக்கின்றேன். இவ்விதமானதொரு முக்கியமான புத்தகக் கடையில் புத்தகங்கள் இவ்விதம் அழுக்கான சூழலில், மீள்பாவனைக்குரியதல்லாத நிலையில் பேணப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்றல்ல.  விற்பனையான நூல்களுக்கான பணத்தைப் பெறுவதில் இவ்வளவு சிரமங்களைப் பதிப்பாளர்கள் எதிர்கொள்வதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. பூபாலசிங்கம் பதிப்பகத்தார் இது விடயத்தில் கவனம் எடுப்பார்களென்று நிச்சயம் நம்புகின்றேன்.

பரணீதரனின் முகநூற் பதிவு கீழே;

இந்த குறிப்பு யாரையும் தனிப்பட தாக்க வேண்டும் என்பதுக்காக அல்ல. குறித்த புத்தக கடையின் வியாபாரத்தை பாதிக்க வேண்டும் என்றும் எழுத படவில்லை. இனியாவது திருந்த வேண்டும் என்பதுக்காக....  பூனைக்கு மணி கட்ட நினைத்தும் பலர் செய்யாமல் இருப்பதால் ஆத்திரக்காரனான நானே பூனைக்கு மணி கட்டி விட எண்ணுகிறேன்.

உண்மையை சொல்ல போனால் ஈழத்தில் 200- 500 பிரதிகளை தான் எழுத்தாளர்கள்  அச்சு செய்கிறார்கள். நான் அறிந்த வரையில் தற்போது பெரிய எழுத்தாளர்களே 200 பிரதி போதும் என்ற அளவுக்கு வந்து விட்டார்கள். வெளியீட்டு விழா வைத்தால் உறவுகளுடன் சேர்த்து என்றால் ஒரு 60 - 80 பிரதிகள் விற்பனையாகும். எழுத்தாளர்கள், நண்பர்களுடன் என்றால் 30 -40 பிரதி விற்கப்படும். மிகுதி புத்தகங்கள் வீடுகளில் தான் தேங்கி கிடக்கின்றன.  தேங்கி கிடக்கும் புத்தகங்களை கண்டு ஏங்கி ஏங்கி எழுத்தாளர் பலர் நூல் போடும் எண்ணத்தை கைவிட்டு இந்த பிழைப்பே வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் சம்பவங்களும் இருக்கிறது... சில கடைகளுக்கு புத்தகங்களை கொடுத்து விட்டு பணத்தை பெற படும் அவலத்தை விட இலவச பிரதியாக கொடுத்து விடுகிற படைப்பாளிகளும் உண்டு.

ஜீவநதி ஆரம்பித்த காலம் முதல் குறித்த கடைக்கு 10 பிரதிகள் வரை கொடுத்து வருகிறேன். ஒவ்வொரு முறை பணம் பெற செல்லும் போதும் ஏற்படும் அனுபவம் மிக கசப்பானது... நாயை விட கேவலமானது... இருந்தாலும் 7-8 பிரதி விற்க படுகிறது என்ற நன்மை கருதி பொறுத்து கொண்டு வருகிறேன்... 'பிரதிகளை வாங்க கேட்டால் இல்லை" அங்கு வேலை செய்யும் பெண்  பிள்ளைகள் இல்லை எனச்  சொல்லுவதாக பல தடவை எழுத்தாளர்கள், வாசகர்கள் கூறுவார்கள்... ஆனால் return பலதடவை 3-4 வரும்... அப்ப என்ன நடக்குது அங்கே... இந்த ஆண்டு மிக கசப்பான அனுபவங்கள் 4 மாத இதழ்கள் அப்படியே 9 -8 இதழ்கள் return தரப்பட்டது... காரணம் புத்தகங்களுக்கு அடியில் வைத்து விட்டு.... அங்கு நிற்கும் பிள்ளைகள் ஜீவநதி வரவில்லை என கூறி வந்துள்ளார்கள்.  இது ஒரு புறம் போக ....

நூல்களை கொடுத்து அதற்கான பணத்தை பெறுவது என்பது அப்பப்பா .....

எதிர்குரல்கள் - 10 பிரதி (2021)
லவ் இன் த - 10 பிரதி (2021)
தேன்மொழி - 5 பிரதி (2020)
ஒரு வீணை அழுகிறதே - 25 பிரதி(2017)
மஹாகவி கவிதை - 10 பிரதி (2021)
மஹாகவி காவியம் - 10பிரதி(2021)
மஹாகவி நாடகம் (10 பிரதி (2021)
கட்டட காட்டு முயல்கள் - 10 பிரதி (2021)
கதை தொகுப்பின் கதை - 10 பிரதி (2021)
எல்லை அற்ற பெருவெளி 10 பிரதி (2019)

இந்த பிரதிகளுக்கான பணத்துக்காக 10 தடவைக்கு மேல் சென்று விட்டேன் பணம் வந்த பாடில்லை... கடைசியாக நானாக சென்று திருப்பி எடுத்து கொடுத்து விட்டு வந்தேன். முதலாளியிடம் கதைத்து மிகுதியான புத்தகக்கங்களுக்கு பணத்தை தாருங்கள் என கூறி... அதன் பிறகு இருதடவை சென்றும் பலன் இல்லை... நேற்றும் சென்றேன்... எதுவும் நடக்கவில்லை.

எல்லாவற்றையும் விட மிக கசப்பான விடயம் அங்கு திருப்பி எடுக்கும் மிகுதி நூல்களைப் பயன்படுத்த முடியாத மாதிரி மூன்று ஆண்டுகளில் புத்தகங்கள்  பழுதடைந்து போய் உள்ளன... அங்கு நின்ற பிள்ளையிடம் நேற்று கேட்டேன் : "தங்கச்சி இந்த புத்தகங்களை இனி யாருக்கும் விற்கலாமா நான்" என இல்லை அண்ணா என்று சொன்னார்... ஒரு புத்தகத்தைச் சரியாக வைத்து பராமரிக்கத் தெரியாத உங்களுக்கு ஏன் புத்தக கடை... நீங்கள் பயிறசி புத்தகங்களை வில்லுங்கள் இனி படைப்பாளிகளிடம் இருந்து நூல்களை பெறாதீர்கள்... பாவம் நீ.பீ.அருளானந்தம், தெணியான், செங்கை ஆழியான், சட்டநாதன், என பல நூறு எழுத்தாளர்கள் நூல்கள் அங்கு உள்ளன... ஆனால் அவற்றில் 60 வீதமான நூல்கள் வாங்க கூடிய நிலையில் இல்லை... பாவம் குறித்த வயதான எழுத்தாளர்கள்... அவர்கள் நிலையை நினைத்து வருந்துகிறேன்.  அங்கு உள்ள புத்தகங்களை வாங்குவதால் 'வீசிங்' கூட வரலாம்... கடி- சொறியும் வரலாம். நான் சொல்வது பொய் என்றால் வேம்படியில் சந்தியில் உள்ள அந்த கடைக்கு போய்ப் பாருங்கள்... அங்கு வேலை செய்யும் பிள்ளைகள்  எங்களை நடாத்தும் விதம்... கதைக்கும் விதம்... மிக அவமானமாக இருக்கும்.... எங்களை ஆராத்தி எடுக்க சொல்லவில்லை... கதைப்பதை ஒழுங்காக கதைக்கலாமே... 'வவுச்சர்' போடுபவர்கள் காட்டும் 'பில்ட் அப்'  அப்பப்பா...

வெண்பா, புக் லாப் (booklap) போன்ற கடைகள் புத்தகங்களை மிக நேர்த்தியாக வைத்து இருக்கின்றன.  எப்படி கொடுத்தோமா அப்படியே 'ரிடேர்ன்' செய்வார்கள். பனுவல், எங்கட புத்தகங்கள் மிக நேர்த்தியாக புத்தங்களை பேணியும் எழுத்தாளர்கள் பணத்தை சரியாக கொடுத்தும் வருவதில் முதன்மை வகிக்கின்றன. முக்கிய குறிப்பு - நாங்கள் புத்தகங்கள் உங்கள் கடையில் போட்டு அதனை  விற்று வாழ்க்கை நடத்தவில்லை. எங்கள் நூல்கள் பரவலாக்கம் அடைய வேண்டும் என்பதுக்காக தான் உங்களை கடையில் எங்கள் நூல்களைப் போடுகிறோம்.

பிரதான குறிப்பு  - எழுத்தாளர்கள் பலருக்கு நினைப்பு தங்கள் புத்தகம் வந்தவுடன் எல்லோரும் ஓடிப் பொய் வாங்கினம் எண்டு... ஆனால் நிலமை அதுவல்ல.... இதனால் பதிப்பாளர்களுடன் முரண்படுபவர்கள் பலரும் உள்ளனர். எங்கட எழுத்தாளர்களுக்கு விமோசனம் இல்லையா இறைவா. எனது தொலைபேசிக் கமெரா தெளிவு குறைவு. இருந்தாலும் அங்கு 'ரிடேர்ன்' எடுக்க வைத்த புத்தகங்களின் சில படங்களை பகிர்கிறேன். உண்மை நிலையைப் பாருங்கள்.

குறித்த கடையின் வியாபாரத்தை பாதிக்க இந்த பதிவு அல்ல,  திருந்த வேண்டும் என்பதுக்காக.  இது எனது அனுபவம் மட்டும் அல்ல பலரின் அனுபவங்களும் கூட.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R