என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களில் ராணிமுத்துப் பிரசுரங்களுக்கு முக்கியமானதோரிடமுண்டு. நான் ஆர்வமாக வாசிக்கத்தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் ராணிமுத்து மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் அடிப்படையில் அக்காலகட்டத்தில் பிரபலமாக விளங்கிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தது. அவ்வகையில் வெளியான முதலாவது நாவல் அகிலனின் 'பொன்மலர்'. ஆனால் அப்புத்தகத்தை அப்பா வாங்கவில்லை. அப்பா வாங்கத்தொடங்கியது ராணிமுத்து பிரசுரத்தின் இரண்டாவது வெளியீட்டில் இருந்துதான். இரண்டாவதாக வெளியான நாவல் அறிஞர் அண்ணாவின் 'பார்வதி பி.ஏ' இவ்விரண்டு நாவல்களும் முதலும் இரண்டும் என்று ஞாபகத்திலுள்ளது. இதன் பின் வெளியான நாவல்களில் எங்களிடம் இருந்ததாக இன்னும் என் நினைவிலுள்ளவை:
ஜெயகாந்தனின் 'காவல் தெய்வம்'.
ஜெயகாந்தனின் 'வாழ்க்கை அழைக்கிறது'.
மாயாவியின் 'வாடாமலர்'
ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'
சாண்டில்யனின் 'ஜீவபூமி'
சாண்டில்யனின் 'உதயபானு' & இளையராணி
நாரண துரைக்கண்ணனின் 'உயிரோவியம்'
அகிலனின் 'சிநேகிதி'
பானுமதி ராமகிருஷ்ணாவின் 'மாமியார் கதைகள்'
விந்தனின் 'பாலும் பாவையும்'
கலைஞர் கருணாநிதியின் 'வெள்ளிக்கிழமை'
அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா'
மு.வ.வின் 'அந்த நாள்'
சி.ஏ.பாலனின் 'தூக்குமர நிழலில்'
குரும்பூர் குப்புசாமியின் 'பார் பார் பட்டணம் பார்'
மாயாவியின் 'வாடாமலர்'
லக்சுமியின் 'காஞ்சனையின் கனவு' & 'பெண்மனம்'
இவை இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. ஜெயராஜின் அட்டைப்படத்துடன் , நூலின் உள்ளேயும் நாலைந்து ஓவியங்கள் அவர் வரைந்திருப்பார்.
அக்காலகட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பிரசுரங்களாக ராணி முத்துப் பிரசுரங்கள் விளங்கின. என்னிடமிருந்தவற்றைப் பத்திரமாக ஏனைய நூல்களுடன் வைத்திருந்தேன். அவை அனைத்தையுமே நாட்டுச் சூழலில் தொலைத்து விட்டேன்.
ராணிமுத்து பிரசுரங்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களாக ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'யும், சாண்டில்யனின் 'ஜீவபூமி'யும் விளங்கின.
ஒரு காலகட்ட நினைவுச்சின்னங்களாக விளங்குபவை இவ்வகையான நூல்களே. இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் தேடிக்கொண்டிருக்கின்றேன். அவை என் வாசிப்பனுபவத்தின் படிக்கட்டுகள் என்பதால், அக்காலகட்ட இன்பகரமான நினைவுகளை மீண்டும் நெஞ்சில் பரவ விடும் அழியாத கோலங்கள் என்பதால் அவற்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். அவ்வகையில் என் அவ்வாசை அண்மைக்காலமாக படிப்படியாகத் தீர்ந்துகொண்டு வருகின்றது. கல்கியில் வெளியான பல தொடர்கதைகளை (அழகான ஓவியங்களுடன் பைண்டு செய்து வைத்திருந்தவை) மீண்டும் கல்கியின் இணையத்தளத்தில் பெற முடிந்தது. அந்த ஆசை அவ்வகையில் தீர்ந்து போனாலும், ராணிமுத்துகளை மட்டும் மீண்டும் பெறவே முடிந்ததில்லை. ஆனால் அந்த விடயத்திலும் சிறிது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வசிக்கும் என் பால்ய காலத்து நண்பர் வவுனியா விக்கியிடம் இதுபற்றிக் கூறியிருந்தேன். எங்காவது பழைய புத்தகக் கடைகளில் இவ்வகையான புத்தகங்களைக் கண்டால் அறியத்தரவும் என்று கூறியிருந்தேன். அவர் குறுகிய காலத்திலேயே பழைய புத்தகக் கடையொன்றில் ராணிமுத்து பிரசுரமாக வெளியான நந்திவர்மன் காதலி நாவலினைக் கண்டு பிடித்துக் காணொளி அனுப்பியிருந்தார்.
சிறு குறை: அட்டைப்படத்தைக் காணவில்லை. ஆனால் அட்டைப்படம் தவிர நூல் முழுமையாகக் கிடைத்தது. நன்றி விக்கி
அந்நூலிலுள்ள ஜெயராஜின் ஓவியங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
அவ்வோவியங்களைப்பார்த்தபோது நான் அக்காலகட்டத்துக்கே பறந்து சென்று விட்டேன். இவையெல்லாம் காலத்தைத் தாண்டி எம்மைக்கூட்டிச் செல்லும் காலக்கப்பல்கள்.
மேலும் சில ஓவியங்கள்:
முகநூல் எதிர்வினைகள்: ராணிமுத்துப் பிரசுரங்கள்...
Venkatesan புத்தக பிரியரான உங்களுக்கு.. காலை வணக்கம்....
Giritharan Navaratnam உங்களுக்கும் நண்பரே!
முனைவர் துரை. மணிகண்டன்: நந்திவர்மனின் நண்பரா நீங்கள். அந்தக் கால இதழ்கள் இன்று இல்லை. அந்தக் கால மனிதர்களும் இன்று இல்லை. ராணி முத்து வரலாற்று முத்து.
Giritharan Navaratnam நந்திவர்மன் காதலி வானதி பதிப்பக வெளியீடாக வெளிவந்த பிரதி என்னிடமுள்ளது. சிறுநாவலென்றாலும் காதல், வீரம், தியாகம், தமிழ் மொழிப்பற்று, சூழ்ச்சி, நட்பு, மர்மம் என்று சுவையாக், விறுவிறுப்பாகக் கதையினைப்புனைந்திருப்பார் ஜெகசிற்பியன். அவரது வர்ணனைகள் எனக்குப் பிடித்தமானவை.
Vadakovy Varatha Rajan என்னமாய் எல்லாவற்ரையும் ஞாபகம் வைத்துள்ளீர்கள் .! என்னக்கு படித்தது எல்லாம் மறந்து போய் விடடது
Giritharan Navaratnam எனக்கு அன்று படித்தது, அனுபவித்தது எல்லாமே பசுமையாக இன்னும் ஞாபகத்திலுள்ளன. அழியாத கோலங்களல்லவா வடகோவையாரே..
Pena Manoharan 1975/76 இல் ரூ.1= விலையில் வாங்கியதாக ஞாபகம்...
Jawad Maraikar என்னிடமும் ராணி முத்து நாவல்கள் பல உள்ளன. பிற்காலத்தில் மூல நாவல்கள் சிலவற்றோடு ஒப்பிட்டு நோக்கியபோதுதான் ராணிமுத்து வெளியீட்டாளர்களின் கத்திரிக்கோல் எந்த அளவுக்குப் புகுந்து விளையாடியுள்ளது அறிய முடிந்தது.
Slm Hanifa வீரகேசரியும் அந்தப்புண்ணிய பணியைச்செய்தது..
Giritharan Navaratnam //என்னிடமும் ராணி முத்து நாவல்கள் பல உள்ளன. // நான் பதிவில் குறிப்பிட்டுள்ள ராணிமுத்துகள் உள்ளனவா? அவை ராணிமுத்துவின் ஆரம்பகால நாவல்கள். ராணிமுத்துகள் சிறிது சுருக்கப்பட்ட மூல நாவலின் வடிவங்களே.. ஆனால் அக்காலகட்டத்தில் முக்கியமான எழுத்தாளர்கள் பலரைச் சாதாரண வாசகர்களும் அறிந்துகொள்ள மிகவும் உதவியாக அமைந்த மாதாந்த நூல் திட்டமாக அது அமைந்திருந்தது. அவ்வகையில் ஆரம்பகால ராணிமுத்துகள் ஆரோக்கியமான வளர்ச்சியை ஆற்றின என்பேன். ஜெயகாந்தனின் நாவல்கள், நாரண துரைக்கண்ணைன் (ஜீவா) உயிரோவியம் போன்றவை முக்கியமான படைப்புகள். நாரண துரைக்கண்ணன் உயிரோவியத்தை நாடகாக எழுதியதாகவே அறிகின்றேன். அவரைப்பற்றிய கூகுள் தேடலிலும் அவ்விதமே காண முடிகின்றது. ஆனால் நான் 'உயிரோவிய'த்தை நாவலாக ராணிமுத்துப் பிரசுரமாக வாசித்துள்ளேன். இதே கருத்தை அடியொற்றி அகிலனின் 'சிநேகிதி' நாவலும் வெளியாகியிருந்ததும் , அதுவும் ராணிமுத்து பிரசுரமாக வெளியானதும் பசுமையாக இன்னும் நினைவிலுள்ளன.
Jawad Maraikar Giritharan Navaratnam , நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் உள்ளன - பானுமதியின் ' மாமியார் கதைகள் ' தவிர. ஆனால் , அவருடைய மற்றொரு நாவல் ( பெயர் நினைவிலில்லை ) உள்ளது. நாரண. துரைக்கண்ணனின் உயிரோவியம் ( ராணிமுத்து ) , மற்றும் மூல நூல் ( நாடகம் ) ஆகியவையும் உள்ளன.
Giritharan Navaratnam Jawad Maraikar நன்றி.ஜீவபூமி, நந்திவர்மன் காதலி, உயிரோவியம், வாடாமல்லி போன்றவற்றின் அட்டைப்படங்களை முடியுமானால் இங்கு பதிவிடுங்கள்.. இவற்றையெல்லாம் இக்காலகட்டத்தில் எங்குமே பார்க்க முடியாது. அவ்வகையில் ஒரு காலகட்ட ஆவணங்களாக விளங்குபவை.
Giritharan Navaratnam //பானுமதியின் ' மாமியார் கதைகள்// பானுமதி ராமகிருஷ்ணாவின் நகைச்சுவைக் கதைகளை வாசித்து விழுந்து விழுந்து சிரித்ததுண்டு. மாமியாரும் ஆவக்காய் ஊறுகாயும் என்றெல்லாம் தலைப்புகளிருக்கும். அக்காலகட்ட கல்கி, விகடன் தீபாவளி ,மலர்களில் அவரது நகைச்சுவைக் கதைகள் வெளியானது நினைவிலுள்ளது. ஒரு கதையில் பல்லியைக் கண்டு பயப்படும் பாத்திரத்தின் நிலையினை மிகவும் நகைச்சுவை ததும்ப எழுதியிருப்பார்...
Jawad Maraikar Giritharan Navaratnam , என்னிடமிருப்பதும் ' மாமியார் கதைகள் ' என்றே நினைக்கின்றேன். அது ' மாமியார் ' என்ற பெயரில் வந்ததாக நினைவு .அதனால்தான் பெயரில் தடுமாற்றம். :) .. நடிகை பானுமதிதான் இந்த பானுமதி ராமகிருஷ்ணா .
Giritharan Navaratnam Jawad Maraikar //நடிகை பானுமதிதான் இந்த பானுமதி ராமகிருஷ்ணா .// நடிகை பானுமதியின் இன்னுமொரு பரிமாணம். தெலுங்கில் சாகித்திய விருது (மாநில) இவரது படைப்புகள் பெற்றதாக நினைவு... பொதுவாகவே அவர் வெட்டொன்று துண்டொன்று என்று நறுக்குத்தெறித்தாற் போன்று பேசுபவர். நகைச்சுவை எழுத்து அவருக்கு இயல்பாகவே அமைந்துள்ள கொடைகளிலொன்று...
Jawad Maraikar உயிரோவியம் இரண்டாம் பதிப்பு ( 1946 ) என்னிடமுள்ளது. அது நாடகமாக அன்றி நாவலாகவே எழுதப்பட்டுள்ளது. அட்டைப்படமின்றி அது உள்ளது :(
நீங்கள் குறிப்பிட்டுள்ள நூல்களை அவசரமாகத் தேடிப் பதிவிட முடியவில்லை. அவை எங்கோ இடம் மாறிக் கிடக்கின்றன போலும். இப்போதைக்குக் கையில் கிடைத்தவற்றுள் முக்கியமான சிலவற்றை ( 12 ) இங்கு பதிவேற்றியுள்ளேன்.
Giritharan Navaratnam நன்றி நண்பரே! வார்த்தைகளில்லை அடைந்த பூரிப்பினை விபரிப்பதற்கு. நான் இப்பொழுது என் பால்ய காலத்துக்கே சென்று விட்டேன். எவ்விதக் கவலைகளுமற்று, அப்பா, அம்மாவுடன் , வாசிப்பதில் ஆர்வம் கொண்டு , பொழுதுகளைச் சுகித்த அற்புதமான பால்ய காலகட்டம். நன்றி. நன்றி.
Giritharan Navaratnam சிறந்த எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளைச் சுருக்கமாக வெளியிட்டுச் சாதாரண வாசகர்களுக்கும் அவர்களை அறிமுகப்படுத்தும் ஆரோக்கியமான சேவையாகவே ராணிமுத்துவின் ஆரம்ப காலப்பிரசுரங்கள் அமைந்திருந்தன
Slm Hanifa எஸ் பொவின் சடங்கு. வெளிவந்தது
Giritharan Navaratnam ராணி முத்துப் பிரசுரங்கள் பொதுவாகவே இலட்சக்கணக்கில் விற்பனையாவது வழக்கம். எஸ்.பொ.வின் சடங்கும் அவ்வகையில் இலட்சக்கணக்கில் விற்பனையான ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நூலாக அமைந்துள்ளது...
K S Sivakumaran ஜெகசிட்பியனின் படைப்புகளில் எனக்குப் பிடித்தது-" திருச்சித்திறம்பலம்" பெரியபுராணத்தைத் தழுவி அவர் படைத்த அற்புதமான படைப்பு. அவர் ஓர் கிறிஸ்தவர்.பெயர் ஜோசப் தலியத் என்று நினைக்கிறேன்.
Giritharan Navaratnam அவர் கிறிஸ்தவராகப் பிறந்தவர். இயற்பெயர் பாலையா.
Giritharan Navaratnam அக்காலகட்டத்தில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களிலொருவர் இவர். கல்கியில் தொடராக வெளியான கிளிஞ்சல் கோபுரம், ஜீவகீதம் ஆகியவை என் பிரியத்துக்குரிய நாவல்கள். தொடராக வெளியான அவை அழகாக 'பைண்டு செய்யப்பட்ட நிலையில் என்னிடமிருந்தன. இவரது பத்தினிக்கோட்டம் சரித்திர நாவலும் , கல்கியில் வினுவின் ஓவியங்களுடன் தொடராக வெளியானது, பைண்டு செய்யப்பட்ட நிலையில் என்னிடமிருந்தன.
*திரு.ஜவாத் மரைக்கார் அவர்கள் தன்னிடமுள்ள ராணிமுத்துப்பிரசுரங்களில் சிலவற்றைப் புகைப்படமாக்கி அனுப்பியிருந்தார். அவற்றையே இப்பதிவில் பாவித்துள்ளேன். அதற்காக அவருக்கு நன்றி கோடி. அவர் அனுப்பிய ஆவணச்சிறப்புள்ள ராணிமுத்துப் பிரசுரத்தின் ஆரம்ப காலப்படைப்புகள் சிலவற்றின் அட்டைப்படங்கள் சில...
* நன்றி: ஜவாத் மரைக்கார் - ராணிமுத்து அட்டைப்படங்களுக்காக...
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.