தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் ஒரு மாவட்ட தலைநகரில் உலகத் திரைப்பட விழாவை நடத்துகிறது இவ்வாண்டு கோவையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தாமதமாக திருவாரூரில் செப்டம்பர் மாதம் நடந்தது.. 15 நாடுகளைச் சேர்ந்த 22 படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் இந்தியப் படங்களும் இருந்தன
இந்த வருட உலகத் திரைப்பட விழாவில் பல்வேறு மையங்கள் இருந்தாலும் பாலஸ்தீனம் நாட்டுப் படங்கள் அதிகம் இடம் பெற்று கவனம் பெற்றன.. ஒவ்வொரு ஆண்டும் சிறப்புத் திரைப்படங்களாய் சிலவை கவனம் பெறும் . இந்தாண்டு பாலஸ்தீனப்படங்கள்.
இன்றைக்கு இஸ்ரேல் பாலஸ்தீனமும் சார்ந்து நடைபெறும் போர் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது இஸ்ரேல் பாலஸ்தீனமும் எல்லையில் அதன் நிலம் சார்ந்த எதிர்ப்பு வெளிப்பாடாகும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் குடியேற்றங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டதிலிருந்து இந்த மோதல் வெறிபிடித்துக் கொண்டிருக்கிறது. பல சமயங்களில் பல்வேறு நாடுகளும் இந்த மோதலில் கருத்து தெரிவிக்கின்றன. போரில் இறங்குகின்றன இஸ்ரேலை படைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் வெளியேற்றம் போன்றவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நீண்ட காலம் இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பில் பாலஸ்தீனம் இருந்து கொண்டிருக்கிறது. இது சார்ந்த மனித உரிமைகள் பல கேள்விகளை எழுப்புகிறது. அதற்கானத் தீர்வுகள் அவ்வப்போது பேசப்பட்டு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. பாலஸ்தீனத்தை தனிமைப்படுத்தும் முயற்சிகளும் அதன் பலவீனங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறன.
பாலஸ்தீனத் திரைப்படங்கள் என்பது அந்த நாட்டில் உள்ள தயாரிப்பாளர்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதும் அந்த நாடுகள் பற்றிய படங்களையும் சொல்லலாம். அவை பெரும்பாலும் பிரதேச அரபு மொழியில் தயாரிக்கப்படவில்லை. ஆங்கிலம் மற்றும் பிரஞ்ச் மொழிகளில் தயாரிக்கப்படுகின்றன. பல சமயங்களில்.
இந்த டெல்டா திரைப்பட விழாவில் பாலஸ்தீன நாட்டை அடிப்படையாகக் கொண்ட எட்டு படங்கள் திரையிடப்பட்டன,இவ்விழாவின் சிறப்புப்பிரிவாக இது அமைக்கப்பட்டிருந்தது.
”பேரடைஸ் நவ் “ (Paradise Now) என்பது இரண்டு பாலஸ்தீன இளைஞர்களின் மனப்போக்குகளைப் பற்றி சொல்கிறது. இஸ்ரேலில் ஒரு தற்கொலை படைத் தாக்குதலுக்கு அவர்கள் தயாராகிறார்கள். அவர்களின் தற்கொலை படை தாக்குதல் முயற்சிகளும் அரசியல் நிலைப்பாடுகளும் இந்த படத்தில் விரிவாகப் கூறப்பட்டிருக்கின்றன. இரண்டு பேரும் குழந்தை பருவம் முதல் நண்பர்களாக இருந்தவர்கள். இந்த தற்கொலை தாக்குதலுக்கு தயார் செய்யப்படுகிறார்கள்.. அவர்கள் இதற்க்காக பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்கள் உடம்பில் வெடிகுண்டுகள் மாட்டப்படுகின்றன. அவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடுகள் வீடியோ மூலம் தயார் செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட நாளில் இருவரும் இஸ்ரேலிய பகுதிக்குள் அனுப்பப்படுகிறார்கள் அதில் ஒருவர் திரும்ப வேண்டியதாக இருக்கிறது. திரும்பாதவர் அகப்பட்டுவிட்டதாக பயம். அந்த இன்னொருவரைத் தேடும் நடவடிக்கையில் பல்வேறு இடங்களுக்கு தேடிப் போகிறார்கள் அவர்களின் காதல் நடவடிக்கைகளும் குடும்பங்களும் பல அனுபவங்களாக சொல்லப்படுகின்றன. ஆனால் அந்த தாக்குதலை அவர்கள் கைவிடவில்லை என்று திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது வெடிகுண்டு உடம்பில் கட்டி இருக்கும் ஒருவர் இஸ்ரேலியப் பகுதிக்குள் எங்கு வெடிக்க செய்வார் என்ற பதற்றம் படத்தில் மூலமாக இருக்கிறது.. கடைசிக் காட்சியில் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் பயணம் செய்யும் ஒரு பேருந்தில் அவர் பயணம் செய்வதில் திகில் இருக்கிறது.
”பர்ஹா” (Farha) என்ற படம் 14 வயது பாலஸ்தீனப் பெண் சில நாட்கள் வீட்டுக்குள் அடைபெற்ற அனுபவத்தையும் அவள் பூப்பெய்தியையும் சொன்னது. அவள் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் ஆனால் அவளின் அப்பாவும் மற்றவர்களும் மற்ற பெண்களைப் போலவே அவளும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் தொடர்ந்த வற்புறுத்தலால் அவளுக்கு படிப்புத் தொடர அனுமதி கிடைக்கிற போது அவள் மகிழ்ந்து போகிறாள். ஆனால் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் அந்த கிராமத்தை சுற்றி வளைத்து தங்களுடைய கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள். அந்த பெண்ணின் தகப்பனார் அந்த கிராமத்தின் முக்கியஸ்தர் என்ற வகையில் அந்த கிராமத்தை காப்பாற்றுவது தான் தன்னுடைய வேலை என்றும் கிளர்ச்சி குழுவுக்கு இரண்டாம் பட்ச ஆதரவு என்றும் சொல்கிறார் அப்பெண்ணீன் தந்தை. . அந்தப் பெண்ணை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு தனக்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார். கிளர்ச்சியாளர்கள் அந்த கிராமத்து மனிதர்களை வெளியே போகுமாறு வற்புறுத்துகிறார்கள் மற்றவர்கள் வெளியேறிவிட அந்த இளம் பெண் தங்கி விடுகிறாள். அங்கு வந்து சேரும் ஒரு பாலஸ்தீனக் குடும்பம் பலரின் பார்வையில் படுகிறது. அதில் இருக்கும் இளம் பெண் பிரசவத்திற்கு துடிக்கிறாள். குழந்தை பெற்றுக் கொள்கிறாள். ஆனால் கிளர்ச்சியாளர்கள் அவர்களையெல்லாம் துன்புறுத்துகிறார்கள் பிறந்த குழந்தையைக் கூட சாகடிக்க முயல்கிறார்கள். கொஞ்சம் தண்ணீருக்காக அந்த குடும்பம் நிறைய சிரமப்பட வேண்டி இருக்கிறது. இந்த சூழலில் வீட்டுக்குள் அடைபட்ட அந்தப் பெண் சிறு துவாரங்கள் வழியாக வெளியே நடப்பதை பார்க்கிறாள் வீட்டில் தேடிய போது கிடைக்கிற உணவுப் பொருட்களை சாப்பிடுகிறாள். தேடிய போது வீட்டில் கிடைக்கிற துப்பாக்கியைக் கொண்டு அந்த வீட்டு கதவை தகர்த்து வெளியே வருகிறாள் அவள் பூப்பெய்தி இருக்கிறாள் இந்த சூழல் அவள் இன்னும் பின்னடைந்து வீட்டுக்குள்ளே இருக்கச் செய்கிறது.
”மெடிட்டேரியன் பீவர்“ (Mediterranean Fever) இந்த படத்தில் இரண்டு நபர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அதில் ஒருவர் எழுத்து நடவடிக்கையில் ஈடுபடுகிறார். ஆனால் பரம்பரையான சோர்வும் உளவியல் ரீதியான பின்னடைவும் அவரை பல துன்புறுத்தவர்களுக்கு கொண்டு செல்கிறது.. இரண்டாம் நபர் சின்ன சின்ன வேலைகள் செய்து வாழ்க்கையை ஓட்டுகிறார் ஆனால் அவருக்கு பின்னால் இருக்கிற சில சதி வேலைகளும் குரூரமும் இளைஞர்களை பாதிக்கிறது.. அவர்கள் மத்தியில் ஏற்படுகிற பிணக்குகள் அவர்களை ஒவ்வொருவரும் ஒருவர் சந்தேகப்பட வைக்கிறது. கொலை செய்ய தோன்றுகிறது இளைஞர்களை உருவப்படுத்துகிற பல கதாபாத்திரங்களும் அவர்களின் உறவினர்களின் சோர்வுகளும் இந்த படத்தில் சிறப்பாக சொல்லப்பட்டிருக்றது. அவர்கள் மனதில் கொண்டிருக்கின்ற நகைச்சுவை உணர்வும் லேசான நம்பிக்கையும் வாழ்க்கையும் அவர்களை கொஞ்சம் நடத்திக் கொண்டு போகிறது. பல்வேறு கூலிப் படைகளால் கொல்லப்பட்ட மனிதர்கள் பற்றிய பல சித்திரங்கள் வந்து போகின்றன. எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்பவன் தன்னை கொல்லும்படி இன்னொருவனைக் கேட்டுக்கொண்டே இருக்கிறான். ஆனால் அவன்தான் இன்னொருவனைக் கொல்கிறான். .அந்தத் துயரம் நடந்தேறி விடுகிறது. மனப்பதட்டங்களால் எதுவும் நிகழலாம்..
”இட் மஸ்ட் பி ஹெவன்' (It Must Be Heaven) என்ற இலையா சுலைமானின் படம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாகும். ஒரு வேலையைச் சரியாகச் செய்ய மனிதன் தவிக்கிறான். அவன் இஸ்ரேல் பாரிஸ் என்று பல இடங்களுக்கு சென்று தன் அனுபவங்களை எல்லாம் திரட்டி கொள்வதை இந்த படம் சொல்கிறது. திரைப்படம் என்பது உலகம் முழுவதும் காண புது உருவம் என்பதில் அக்கறை கொண்டவர் இலையா சுலைமான். மக்கள் மீதான எழுச்சியும் அக்கறையும் அவருடைய படங்களில் வெளிப்படுகின்றன உலகளவிய மையங்கள் தான் எல்லா படத்துக்கும் எப்படியோ பொருந்தி வரும் என்று நம்புகிறார். அவரின் இஸ்ரேலியா அனுபவங்களும் பாரீஸ் அலைதலும் அவருக்கு உவப்பாகவே இருக்கிறது . பாரீசில் அவர் தன் படத்திற்கு நிதி திரட்ட முயல்வதும் என்று அவரின் பொழுது கழிகிறது.
அவர் வீட்டு முற்றத்தில் இருக்கும் செடிகளும் மரங்களும் பக்கத்தில் இருக்கும் எலுமிச்சை மரங்களும் அவரை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவர் பாரிஸிலிருந்து திரும்பிய பிறகு கூட அவை ஆசுவாசம் தருகின்றன. அவர் வளர்த்த அந்த எலுமிச்சை மரங்கள் பூத்துக் குலுங்குவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். சினிமாவை கற்றுக் கொண்டவர் இல்லை ஆனாலும் சினிமாவை எடுக்கிற அனுபவங்கள் அவருக்கு பெரும் வாய்ப்பாய் அதை உலகளாவிய அனுபவங்களாக சமூக மூலதனங்களையும் போராளி வாழ்க்கையையும் பெற்று புதுப் பார்வை கொண்டு பார்க்கிற தன்மையை பல காட்சிகளை கொண்டு வந்து விடுகிறது
”200 மீட்டர்கள்“ (200 Meters) என்ற படம் 77வது வெனிஸ் திரைப்பட விழாவில் முக்கிய படமாக அமைந்தது. பாரீஸ் நகரம் ஒன்றில் வாழும் ஒரு குடும்பமும் அவர்களைப் பிரிக்க இஸ்ரேலிய எல்லைச் சுவர்கள் இயல்பாக அமைந்து இருப்பதும் மையமாகின்றன அந்த படத்தின் கதாநாயகன் பாலஸ்தீன்னாக இருந்தாலும் வேலை வாய்ப்புக்காக இஸ்ரேல் பகுதிக்கு போக வேண்டி இருக்கிறது. வெறும் 200 மீட்டர்கள் தான் தங்களுக்கான இடைவெளி. ஆனால் அதில் எல்லையாய் சுவர் இருக்கிறது.. இஸ்ரேலியப் பகுதிக்கு போவதற்காக பயணப்படுகிறவர்கள், கூட வருகிற இளைஞர்கள் அவர்களின் சார்பாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில் உள்ள சிக்கல்கள், தாங்கள் இஸ்ரேலியர்களா அல்லது பாலஸ்தீனர்களா என்று அடையாளம் காட்டிக் கொள்வதில் உள்ள சிக்கல்கள் தொடர்கின்றன. அவர்களுடன் பயணம் செய்து படம் பிடிக்கிற ஜெர்மனிய பெண்ணுக்கு ஏற்படுகிற அவஸ்தைகள் போன்றவற்றையெல்லாம் இந்த படம் சொல்கிறது. அந்த கதாநாயகனுக்கு வேலைவாய்ப்பு இஸ்ரேல் பகுதியில் தான் இருக்கிறது. இஸ்ரேல் பகுதியில் வேலை செய்து கொண்டு தூரமிருந்து தன் குடும்பத்தினர் அவரவர் நடவடிக்கைகளில் இருப்பதை பார்த்து ஆறுதல் அடைகிறார்.. இந்த ஆறுதல் நல்ல வேலை அமையாததில் சிதைந்து போகிறது. குடும்பத்து உறுப்பினர்கள் சிக்கலில் மாட்டுகிற போது இன்னும் சோர்ந்து போகிறார்கள்.
பாலஸ்தீனத்துப் பெண்களின் நிலையை, தீவிரவாதத்துக்குள் மாட்டிக் கொண்ட இளைஞர்களின் நிலையை, வேலை வாய்ப்புகளுக்காக இன்னொரு பகுதிக்கு போக வேண்டிய சிக்கலை, தங்கள் விரோதிகளாக நினைத்துக் கொண்டு அவர்களை கொல்ல துடிக்கும் வெவ்வேறு மனங்களை இந்த படங்கள் சொல்கின்றன. இவற்றின் மூலம் பாலஸ்தீன மக்களின் கொதித்த நிலையில் இருக்கும் மனம், அவர்களை ஆற்றுப்படுத்த முடியாமல் இருக்கிற சமூகம் இவற்றை சரியாகக் கண்டு கொள்கிறோம்.
0
இஸ்ரேல் கொடுத்த தாக்குதல் காரணமாக இன்று சுமார் 10 லட்சத்துக்கு மேலான பாலஸ்தீன மக்கள் உணவின்றி தவித்து வருவதாக சொல்லப்படுகிறது. ராணுவக் கட்டுப்பாட்டுகள் பல பகுதிகளில் இருந்து வருகின்றன. சுமார் 50,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் பாலஸ்தீன பகுதி நோய்களின் தொற்றுக் கூடாரமாக இருக்கிறது.. இது மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் உள்ள நோய் குறைபாடுகளும் அவர்களையெல்லாம் முடக்கி இருக்கின்றன. பட்டினியிலிருந்து மக்களை காப்பாற்றுவதும் அவர்களின் நோய்களிலிருந்து நீக்கி குணம் பெற வைப்பதும் இன்றைக்கு உலக அறச் சமூகங்களின் கடமை என்பது போல் சில கோரிக்கைகள் இருக்கின்றன. அடுத்து வரும் அரசியல படங்கள் இந்த பிரச்சனைகளை மையமாகக் கொண்டிருக்கும். ஆனால் இவற்றை சொல்வதால் மட்டுமே அந்த பிரச்சனைகள் பற்றிய பொதுத்தன்மை பரவலாகி அவர்களின் நல்வாழ்வு எண்ணங்கள் ஏதோவொருவகையில் பிறக்கக்கூடும். போர் நீங்கும் காலம் அவர்களுக்கான நல்ல காலமாக மட்டும் இல்லாமல் உலக மக்களின் பெருமூச்சு காலமாகவும் அமையும். அந்த பெருமூச்சினை சரியாக வெளிப்படுத்தும் இந்த படங்கள் அதன் அளவில் தங்கள் பங்கை போருக்கு எதிராகவும் தீவிரவாதத்துக்கு எதிராகவும் காட்டியுள்ளன என்று சொல்லலாம். அவை நேரடியாக இல்லாமல் சூசகங்களும் வாழ்க்கை அனுபவங்களும் என்று வெவ்வேறு அடுக்குகளாக உள்ளன.
0
இந்தத் திரைப்படவிழாவில் ஆவணப்படங்களைக் கொண்டாடுதல், ஸ்டீபன் ஸ்பீல்பர்க் திரைப்படங்கள் அஞ்சலி பிரிவில் உலக திரைப்படங்கள் என்ற அளவில் 15 நாடுகளின் படங்கள் இடம்பெற்றன.
0
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் அமைப்பில் - திரை இயக்கம் என்றொரு பிரிவு இருக்கிறது. எடிட்டர் லெனின், நடிகை ரோகிணி, பேரா. சிவகுமார் போன்றோர் அதன் முக்கியத் தூண்களாக இருக்கிறார்கள். அவர்கள் திரைப்படம் சார்ந்த பயிற்சிகள், குறும்படங்கள் தயாரிப்பில் அக்கறை கொண்டிருக்கிற இளைஞர்களை உருவாக்குவதை திருவாரூர் திரைப்பட விழாவில் பங்கு பெற்ற இளைஞர்கள் கூட்டம் தெரிவித்தது.
மாற்றுத்திரைப்பட முயற்சிகளுக்கு அடைபாளமாகவும், நல்லத் திரைப்படங்களை அடையாளம் காணவும் மாவட்டங்களில் இந்தத் திரைப்பட விழாக்கள் நடத்தப்படுவது ஆரோக்யமானது. மெகா திரைப்படங்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழ் திரைப்பட உலகம் விடுபட இது போன்ற முயற்சிகள் பெருமளவில் உதவும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.