ஈழத்தமிழர்களின் வரலாற்றில் 1958, 1977, 1983 இனக்கலவரங்கள், 2009 நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரழிவுகள் எல்லாம் இரத்தக் கரை படிந்த அத்தியாயங்கள். இவற்றுகிடையிலும் அவ்வப்போது தமிழ் மக்கள் மீது இனரீதியிலான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. படையினரின் தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. புகழ்பெற்ற யாழ் பொதுசன நூலகம் எரிபட்டிருக்கின்றது. இவற்றில் 1983 யூலையில் நடைபெற்ற இனக்கலவரமும், சிறைச்சாலைப் படுகொலைகளும் அதுவரை உள்நாட்டுப்பிரச்சினையாகக் கருதப்பட்ட ஈழத்தமிழர்களின் பிரச்சினையை உபகண்டப்பிரச்சினையாக, சர்வதேசப்பிரச்சினையாக மாற்றி வைத்தன. ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை வீறுகொள்ள வைத்தன. இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களை அகதிகளாக உலகின் பல நாடுகளையும் நோக்கிப்படையெடுக்க வைத்தன.
இக்கலவரத்தின் குறியீடாக இருக்கும் இந்தப்புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சில் நெஞ்சில் இனம் புரியாத வேதனை பரவும். கூனிக்குறுகி அடிபணிந்து மரணத்தின் முன்னால் ஒடுங்கி நிற்கும் அந்தத்தமிழரின் நிலை ஓரினத்தின் நிலையினை வெளிப்படுத்தும் குறியீடு. கறுப்பு ஜூலையின் கோர முகத்தின் வெளிப்பாடு. இந்தப் புகைப்படத்தினை எடுத்தவர் ஒரு சிங்களவர். சந்திரகுப்த அமரசிங்க என்னும் பெயரினைக்கொண்ட அவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'அத்த' நாளிதழில் பணியாற்றிய பத்திரிகையாளர்களில் ஒருவர். 24.07.1983 அதிகாலையில் பொரளை சந்திக்கண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. மைக்கல் றொபேர்ட்ஸ் (Michael Roberts) எழுதிய கட்டுரைகள் மூலம் இந்த உண்மை தெரிய வந்தது.
1983 இனப்படுகொலையைப்பற்றி 'Visual Evidence I: Vitality, Value and Pitfall – Borella Junction, 24/25 July 1983' என்னும் கட்டுரையொன்றினை எழுதியிருக்கின்றார் மைக்கல் றொபேர்ட்ஸ் (Michael Roberts). இவர் 'துப்பாகி' என்னும் புகழ் மிக்க வலைப்பதிவொன்றினையும் வைத்துள்ளார். அதன் இணையத்தள முகவரி: https://thuppahi.wordpress.com/ இவரது கறுப்பு ஜூலை 1983 பற்றிய கட்டுரையொன்று 'எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை' என்னும் பெயரில் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுக் காலச்சுவடு இதழில் வெளியானது. இதனை மொழிபெயர்த்தவர் கவிஞர் சேரன். இந்தக்கட்டுரையில் சிங்கள வழக்கறிஞரான பாஸில் பெர்ணாண்டோவின் ஜூலைப்படுகொலை பற்றிய 'ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்' கவிதையினையும் கட்டுரையாளர் உள்ளடக்கியிருக்கின்றார். 83 ஜூலைப்படுகொலைபற்றி வெளிவந்த கவிதைகளில் மிகவும் முக்கியமான கவிதையாக இதனையே நான் கருதுகின்றேன். வாசிக்கும்போது நெஞ்சினை அதிர வைக்கும் கவிதை. இது பற்றிக் கட்டுரையாளர் பின்வருமாறு குறிப்பிடுவார்:
"1985இல் இந்தக் கவிதையை முதல்முறை வாசித்தபோது என்னுடைய எலும்புகள் உறைந்தன. கவிதையில் இடம்பெற்ற சம்பவங்கள் கற்பனையானவை என நான் நினைக்கவில்லை. கவிதை தருகிற துல்லியமான வர்ணனையும் விவரங்களும் நேரடிச் சாட்சியம் இன்றிச் சாத்தியப்பட்டிருக்காது. நேரில் பார்த்த ஒரு சிங்களவரின் சாட்சியம். வலியுடன் ஆனால், சிங்களவர் என்ற வகையில் பாதுகாப்பான நிலையிலிருந்து பார்த்த ஒரு நேரடிச் சாட்சியம். இந்தச் சம்பவத்தை பாஸில் ஃபெர்னாண்டோ நேரடியாகப் பார்க்கவில்லை. நேரில் பார்த்தவர் பாஸிலின் நண்பர் ஒருவர். நாரஹேன்பிட்டியாவில் இருக்கும் தொழில் திணைக்களத்துக்கு அருகே சம்பவம் நடந்தது. வேறு பல வன்முறைச் சம்பவங்களை அந்த வாரம் நேரடியாகப் பார்த்திருந்தமையால், உயிருடன் கொளுத்திய சம்பவங்கள் வெகு சாதாரணமாக இடம்பெற்றன என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ"
இக்கட்டுரையை எழுதியதற்காக ஈழத்தமிழர்கள் இவருக்கு நன்றி கூற வேண்டியது அவசியம். கறுப்பு ஜூலை 1983 பற்றிய சாட்சியமாகவும் இக்கட்டுரையினைக் கூறலாம்.
ஈழத்தமிழர்களின் மீது கட்டவிழ்க்கப்பட்ட இனரீதியான படுகொலைகளின் களமாக விளங்கிய கறுப்பு ஜூலை 83 கலவரத்தின் குறியீட்டுப்புகைப்படத்தையும், கவிதையினையும் மேற்படி கட்டுரைகளையும் நமக்குத்தந்தவர்கள் அவ்வினத்தின் மனிதாபிமானம் மிக்க மானுடர்கள் என்பதையும் இத்தருணத்தில் நினைவு கொள்வது நல்லது.
ஜூலை இனப் படுகொலை நினைவாக ஓவியர் புகழேந்தி அவர்கள் வரைந்த ஓவியமும் அக்கலவரம் பற்றியதொரு குறியீடே. அவரது 'போர் முகங்கள்' என்னும் தொகுப்பிலுள்ள "உயிராயும் பிணமாயும்" என்னும் தலைப்பைக்கொண்ட ஓவியமது.
இலங்கையின் மக்கள் அனைவரும் கடந்த காலத்தவறுகளிலிருந்து பாடங்கள் கற்க வேண்டும். அவ்வறிவின் அடிப்படையில் அனைத்தின , மொழி, மத மக்களும் , சட்டரீதியாகச் சகல உரிமைகளும் பெற்று வாழுமொரு சூழலை உருவாக்கிட வேண்டும். குறுகிய சுய, அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தை, மொழிவாதத்தை, மதவாதத்தை ஊதிப்பெருக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதை அனைவரும், குறிப்பாக ஆட்சிக்கட்டிலிருக்கும் அரசுகள் , கட்சிகள் நிறுத்த வேண்டும்.
கடந்த காலத்தவறுகளிலிருந்து பாடங்கள் படிக்காவிட்டால், மீண்டும் அதே தவறுகளையே செய்து கொண்டிருந்தால், இலங்கைத்தீவு மீண்டும் கண்ணீர்த்தீவாக மாறுவதை யாராலுமே தடுக்க முடியாது.
பாஸில் ஃபெர்னாண்டோவின் கவீதை கீழே:
ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்
இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்:
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது
எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை
எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்
காருக்குள் நாலு பேர்
பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்
ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் இந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்
எந்த வேறுபாடும் இல்லை
குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்
ஒரு சில கேள்விகள் செய்வதைப்
பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்
பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல
பெட்ரோல் ஊற்றுவது, பற்றவைப்பது போன்ற விடயங்கள்
ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்
காரின் கதவுகளைத் திறந்தான்
அழுது அடம்பிடித்துப் பெற்றோரைவிட்டு விலக மறுத்த
இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்
குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் இருப்பது
சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என
அவன் எண்ணியிருக்கக்கூடும்
துரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்
சூழவர எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு
இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது
அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்
பேச ஆரம்பித்தனர் கொஞ்சப் பேர்
கலைந்து போனார்கள் ஒரு சிலர்
காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்
என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்
சமாதான விரும்பிகளாக மக்கள்
தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்
அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்
கார்க் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்
சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீ பற்றிவிட்டிருந்தது
குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்
தனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன்
எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது
ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில்
மாநகர சபை அதனை அகற்றக்கூடும்
தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி.
*மைக்கல் றொபேர்ட்ஸ் எழுதிய ஆங்கிலக் கட்டுரை - https://thuppahi.wordpress.com/2011/10/29/visual-evidence-i-vitality-value-and-pitfall-%E2%80%93-borella-junction-2425-july-1983/
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.