நண்பர் லெஸ்லி ரவிச்சந்திராவை பல வருடங்களுக்குப் பின்னர் அண்மையில்தான் 'டொராண்டோ'வில் நடைபெற்ற 'யுகதர்மம்' நூல் வெளியீட்டின்போது கண்டேன். இவர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகக் கட்டடக்கலைத்துறையில் கற்றவர். இலங்கையிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் பணியாற்றிப்பின் கனடா வந்திருந்தார். இங்கும் அத்துறையிலேயே வேலை பார்ப்பவர். இவர் பல்கலைக்கழகக்காலத்தில் நான் நன்கு பழகிய நண்பர்களிலொருவர். மட்டக்களப்பைச்சேர்ந்தவர். இவரைப்பாடச்சொல்லிக்கேட்டு இரசிப்பது எம் வழக்கம். இன்னுமொருவர் மோகன் அருளானந்தம். அவரும் மட்டக்களப்பைச்சேர்ந்தவர்தான். இருவருமே மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி முன்னாள் மாணவர்கள். மோகன் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றார். அவரும் நன்கு பாடுவார். இவர்களிருவருடன் இன்னுமொருவரும் நன்கு பாடுவார். அவர் எம்முடன் ஒன்றாகப் படித்த அமரர் சாந்தி சச்சிதானந்தன். எம்முடன் படித்த ஒரேயொரு தமிழ் மாணவி அவர். இவர்கள் மூவரையும் பாடங்களுக்கிடையில் ஓய்வாகவிருக்கும் சமயங்களில் பாடச்சொல்லிக்கேட்டு சுற்றியிருந்து இரசிப்போம்.
இவர் பாடும்போது அவ்வப்போது பாடல்களின் வசனங்களை ஆங்கிலத்துக்கு மாற்றிப்பாடிக் கலகலப்பூட்டுவார். உதாரணத்துக்கு நானூறு பூக்கள் என்று வந்தால் four hundred flowers என்று திடீரென மாற்றிப்பாடுவார். இவர் திறமையான விளையாட்டு வீரர் கூட. குறிப்பாக 100 மீற்றர் ஓட்டப் போட்டியென்றால் முதலில் வருவார்.
இவர் மிகவும் திறமையான நடிகர். பாலேந்திராவின் இயக்கத்தில் பல தடவைகள் மேடையேற்றப்பட்ட 'யுகதர்மம்' நாடகத்தின் பிரதான பாத்திரமான வியாபாரி வேடத்தில் நடித்தவர் இவரே. அக்காலகட்டத்தில் அந்நாடகம் பற்றி வெளியான 'யுகதர்மம்' பற்றிய நாடக விமர்சனங்களில் இவரது நடிப்பைப்பாராட்டி வெளிவந்த குறிப்புகள் இவரது நடிப்புத்திறமைக்குச் சான்று. 'யுகதர்மம்' நூலிலும் அவ்விமர்சனங்களில் சில வெளியாகியுள்ளன.
"வியாபாரியாக நடித்த ரவிச்சந்திரா, கூலியாக நடித்த பாஸ்கரன் இருவருமே நடிப்பில் சிறந்து நிற்கின்றார்கள்" என்று நிகழ்வில் பங்கு பற்றி உரையாற்றிய எழுத்தாளர் தெளிவத்தை யோசப் குறிப்பிட்டதாக வீரகேசரியில் 10.01.1980 அன்று வெளியான விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூலியாக நடித்த பாஸ்கரனும் (திருகோணமலை) எம்முடன் ஒன்றாகக் கட்டடக்கலை பயின்றவர்.
27.01.1980 அன்று வெளியான தினகரன் பத்திரிகையில் யுகதர்மம் நாடகம் பற்றிய எழுத்தாளர் தெளிவத்தை யோசப்பின் விமர்சனம் வெளியாகியுள்ளது. அதிலவர் 'வியாபாரியாக நடித்த இரா.லெ.ரவிச்சந்திரா மிகத்திறமையாகச் செய்தார். பார்வையாளர்களுக்குக் கதை சொல்லும் போதும், தானாகவே பேசிக்கொள்ளும் போதும், மேடையில் பாடல் இடம் பெறும் போதும் மிக இயல்பாகச் செய்தார். வியாபாரி நம் மனதில் இன்னும் நிற்கின்றான்." என்று குறிப்பிடுவார்.
23.12.1979 அன்று வெளியான 'ஈழநாடு' பத்திரிகையில் 'யுகதர்மம்' பற்றி விமர்சனம் எழுதிய எழுத்தாளர் ஐ. சண்முகலிங்கம் "வியாபாரியாக வந்த ரவிச்சந்திரனின் பெருந்தோற்றமும், கூலியாக பாஸ்கரனின் உருவமும் பாத்திரத் தெரிவுச்சிறப்புக்கு உதாரணம். நல்ல குரல், நடிப்புத்திறன் வியாபாரியிடமும், கூனிக்குறுகிப்போய் கூலியாகிவிட்ட தனிச்சிறப்பை பாஸ்கரனிடமும் கண்டதனை மறக்க முடியுமா?" என்று வியப்படைவார்.
6.1.1980 வெளியான வீரகேசரியில் 'யுகதர்மம்' பற்றி விமர்சனம் எழுதிய எழுத்தாளர் அமரர் நெல்லை க.பேரன் "வியாபாரியாக நடித்த இரா.லெ.ரவிச்சந்திராவின் வேஷப்பொருத்தமும் ,துடுக்கு நடையும் நளினமான பாஷையும் இவரது பாத்திரத்தை இயல்படையச்செய்தன' என்பார். 1991 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 அன்று இலங்கை இராணுவம் ஏவிய எறிகணையொன்று நெல்லை க.பேரனுடன் அவர் மனைவி உமாதேவி, மகன் உமாசங்கர் (14 வயது), மகள் சர்மிளா (7 வயது) ஆகியோரையும் பலி கொண்டது யுத்தத்தின் கோர முகத்தினை வெளிக்காட்டி நிற்குமொரு துயர் மிகுந்த சம்பவம்.
'டொராண்டோ'வில் நாடகங்கள் நடத்தும் நாடகவியலாளர்களே! மிகத்திறமையான நடிகர் ஒருவர் இங்கு நம்மிடையே வாழ்கின்றார். அவரது திறமையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அண்மைய 'யுகதர்மம்' நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் ரவிச்சந்திராவைப் பல வருடங்களின் பின்பு சந்தித்தபோது அவருடன் கழிந்த பல்கலைக்கழகக் காலகட்டத்தை நோக்கி நினைவுகள் சிறகடித்தன. பறவைகளாகப் பாடிப்பறந்த பசுமை நிறைந்த நினைவுகள் அவை.